மஹான் முஹம்மது தாஹிர் பாவா ஹசனி ரஹமத்துல்லாஹி அலைஹி, வழுத்தூர், தஞ்சை மாவட்டம் |
"ஓ. மனிதனே! உனக்கு உடலில்லை, உயிரில்லை நாமமில்லை, ரூபமில்லை. நீ ஆகாயமுமல்ல, ஆத்மாவுமல்ல! நீ யார் என்று பார்? உன் தத்துவங்களை ஞாபகம் செய்! நாம் விக்கிரஹத்தை நிக்ஹிரகம் செய்தால் (துவைதத்தை கைவிட்டு அத்துவைதத்தை கைகொண்டால் எல்லாம் நம்மையே வணங்கும்."
குருமகான் அவ்லாதுர் ரசூல், ஆரிஃபு பில்லாஹ், மஷாயிஹ், மவ்லான, மௌலவீ ஏ.முகம்மது தாஹிர் ஹஸனீ காதிரி (கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஜீஸ் (படத்தில்) அவர்களின் போதனைகளை தொகுத்து எழுதி 1994ம் ஆண்டு இந்தியாவின் மதுக்கூரில் தெளிவகம் வெளியிடப்பட்ட சம்பூரண சுயம் பிரகாசம் (Complete Self-Illumination) நூலிலிருந்து.
ஆண்டவன் ஒவ்வொரு வஸ்திலும் ஒரு இன்பத்தைப் படைத்திருக்கிறான். இன்பமில்லாதது ஒன்றுமே இல்லை. ஒரு ஜீவனுக்குப் பிடிக்காதது மற்றொரு ஜீவனுக்கு ப்ரியமானதாயிருக்கும். இப்படியே இந்திரியங்களாலடையும் சுகத்தையும் உத்தேசித்துக் கொள்க.
சரீர சுகத்தைப் பார்க்கிலும் இந்திரிய (புலன்கள்) சுகமே அதிக மேலானது. சரீரம் மட்டும் தனியே யாதொரு சுகத்தையும் அடையாது. இதற்கு இந்திரியமும் அவசியம் சம்பந்தப் பட்டேயிருக்க வேண்டும். ஆக எல்லா வஸ்திலும் இன்பமுண்டாயிருக்கிறது.
எல்லா வஸ்துவுமே இன்ப வடிவு, சர்வமுமே சுக வடிவு. இப்படியாக எல்லா வஸ்துக்களையும் இன்ப ரூபமாய் அமைத்தவன் மனிதனை எதற்காகப் படைத்தானோ அதிலும் விஷேஷமான இன்பமிருக்க வேண்டும். எதற்காகப் படைத்தது ஆண்டவனை வணங்குவதற்கு! அப்படியாயின் ஆண்டவனை வணங்குவதில் அல்லது தொழுவதில் இருக்கும் இன்பம் எல்லாவற்றையும் விட அதிக மேலானதாயிருக்கும் மனிதன் காரணம், அசல் மற்றவை நிமித்த காரணம்.ஆகவே மனிதனுடைய இன்பம் வேறெந்த வஸ்த்துவுக்குமில்லை. மனிதனே மேலான இன்பத்தை அறிவான்.
ஜுர நோய்காரனுக்கு தேன் கசப்பாயிருக்கும். ஆனால் தேன் கசப்பல்ல அது வியாதியின் சேஷ்டை. அப்படியே தொழுகையில் இன்பம் இல்லாது போனால், உடனே அந்த வியாதிக்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது ஆன்மா சம்பந்தமான சங்கடம் (பிணி) அனேகமாக ஞானம் இல்லாததால் உண்டாகும். சிகிச்சை ஆன்மீக வைத்தியர்களால் செய்யச் சாத்தியப்படும்.
உதாரணமாக ஸ்திரியின் இன்பத்தை அடையச் சக்தியில்லாது போனால் அனேக பொருட்களை செலவு செய்து சிகிச்சை செய்கிறான். அது குணமாகாது விடில் விசனிக்கிறான். இன்னும் அனேக இடங்களில் ரோசத்தினால் மாண்டும் இருக்கிறார்கள். இவ்வித மரணம் சில விடயங்களில் நடந்திருக்கலாம்.
கேவலம், “ஆகாயத்தில் பச்சி பறக்க அதன் நிழலை வேட்டையாடுவது போலும்” “எறிந்த கல்லை எழும்பென்றென்னி வாலையாட்டிக் கொண்டோடும் நாயைப் போலும்” “கஸ்தூரிக்காய் முற்றியவுடன் அதன் வாசத்தை சுவாசத்தில் எட்டிக் கொண்ட மானானது அதைத் தேடி அலைந்ததுபோலுமிருக்கிறது. எது சத்தோ அது அசத்தியத்திலிருக்காது. ஸ்திரியின் சுகம் ஆன்ம சுகத்திற்கீடாகாது என்றாலும், அதை அடுத்திருந்த போதிலும் சூரியனுக்கும் அதன் விம்பத்திற்கும் வித்தியாசமுண்டு.
காமத்திலுண்டாகும் சுகம் நீங்கிவிடும், கடவுள் அன்பினால் உண்டாகின்ற சுகம் நீங்கிவிடாது. ஆன்மாவுக்கு இன்பமே கடவுளின் அன்பு. ஆன்மாவுக்கு ஸ்திரி சரியான ஜோடியல்ல. கடவுளே சரியான ஜோடி. ஆன்மாவுக்கு கடவுளுடன் அனுபவிக்கும் ஆனந்தம் அபாரசக்தியுள்ளது.
இதற்கு சரியான உவமானம் சொல்ல தரிபடாததால் விளக்கத்திற்காக ஸ்திரியின் சம்பவத்தை எடுத்துக் காட்டப்பட்டது. அனுபோகிகளுக்கு நன்றாய் விளங்கியிருக்கும்.
ஆன்ம சுகம் தெரியாத பேடிகள், ஆண்டவனோடு சுகிக்க, ஆரோக்கியம் பெற, ஆனந்திக்க இன்பமடைய வேண்டுமானால், தங்கள் பேடித்தனம் நீங்கத்தக்க பரிகாரம் செய்யவேண்டும். தன் மனைவியுடன் கூடச் சக்தியில்லாவிட்டால் எவ்வளவு அவமானம்! நம்மையாளும் கர்த்தா தன்னுடன் கூடி ஆனந்திக்க சக்தியில்லாமல் போனால் அதிலும் கொடிய மானக்கேடு! இந்த ஆன்ம சம்பந்தமான பிணி அல்லது பேடித்தனம் நீங்க ஏன் கவலையில்லை? அதில் நாம் அதிகம் கவலையெடுக்க வேண்டும். ஒருவன் மனைவி வேறொருவனை இச்சிக்க அவனுக்கு இஷ்டமிருக்குமா? இருக்காது. அப்படியே ஆண்டவனை விட்டு வேறொரு வஸ்துவை இச்சிக்க ஆண்டவனுக்கு பொருத்தமிருக்காது.
ஆண்டவனை விட்டு வேறொரு வஸ்துக்கு நாம் அச்சப்படவும், ஆண்டவனைத் தவிர வேறொரு வஸ்துவின் பேரில் நம்பிக்கை வைக்கவும் அவனுக்கு இஷ்டமில்லை.
நமது இன்பத்திற்கு ஊற்றுக்கண் ஆண்டவன். சகல இன்பத்தையும் நாம் அங்கிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். சகலதையும் அவனிடம் ஒப்புவித்துவிட வேண்டும். பாவத்தைவிட வேண்டும். அவனிடம் அடி எடுத்துவைத்துப் பின்வாங்கக் கூடாது. எல்லாக் கஷ்டத்தையும் சகிக்க வேண்டும். இந்திரியங்களை அடக்க வேண்டும். ஆங்காரத்தை நாசம் செய்ய வேண்டும். அப்படியிருந்தால் மின்னலைப் போன்று ஒரு ஒளி பிரகாசித்து வீசும்!
அந்த ஆன்மாவில் ஆழமாக குணம் செய்கின்றன. அப்படியே ஆன்மாவின் சுகம் சரீரத்திலும் தாவுகின்றன. நமக்கு சிரிப்பு உண்டானால் சந்தோசமும், அழுகையுண்டானால் துக்கமும் உண்டாகின்றது. ஆகவே தொழுகையில் சாஷ்டாங்கம் முதலானது வீணல்ல. நமது உறுப்புக்கள் ஓய்ந்து நமது எண்ணங்கள் அசைவற்று ஒற்றுமைப்பாட்டை அதிகப்படுத்தும். இப்படித் தொழுவதால் இன்பமில்லாமல் போகாது.
சாராயம் குடிகத்துவங்கிறவன் ஆரம்பத்தில் யாதொரு இன்பமுமில்லாமல்தான் குடிக்கிறான். வரவர குடிக்கக் குடிக்க ஒரு இன்பத்தைப் பெறுகிறான். பிறகு நிறுத்த அவனால் முடியவில்லை. விடமுடியாத காரணமென்ன? அதைப் போல் தொழுகையை விடாமல் தொழுது வந்தால் ஆரம்பத்தில் இன்பமில்லாவிட்டாலும் வரவர இன்பமுண்டாகும். தொழுகையை விட முடியாது.
“தலையில் இருக்கிற சுமையை இறக்கித் தள்ளுவதுபோல் தொழுவதும், ராஜனுக்கு வரி செலுத்துவதுபோல் செலுத்துவதும், இது மனமில்லாமல் தொழுகிற தொழுகையாயிருக்கும். ஆண்டவனுக்கு இது அவசியம் போலிருக்கிறது? அவன் தேவையற்றவன் இது நமக்குத்தான் அவசியம் அவன் கட்டளையினால் நாமே பயனடைகின்றோம். நம் நாட்டத்தை அவனிடம் பெற்றுக் கொள்கின்றோம்.
நம்மிடத்தில் ஞானமும், பக்தியும் ஒன்றுதான் வேறாகாது, அவரவர்கள் பதவிக்கேற்றபடி ஒரு லச்சியத்தின் பேரில் இருந்தாலும் சரி. தபம் கூடாதென்பதும், தபம் வேண்டுமென்பதும் இரண்டையும் வேறாகக் கூறுவதுதான். விளக்கத்திற்காக இரண்டையும் வேறாக கூறுவது சரியே. இவ்வளவு சன்னமான பேச்சுக்களை விளங்காதவர்கள் தொ ழுகிறவர்களை கண்டிப்பதும், தொழாதவர்களை நிர்பந்தம் செய்வதும் வழக்கம்.
ஜடப் பொருட்களில் எல்லாம் ஆன்மஒளி பரவியிருக்கிறது. ஜடபொருளில்லாமல் ஆன்மாவை தனியே காண தோதுயில்லை. கர்ப்பத்தில் அது இந்திரியத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் உணரலாதவிதமாக கர்பத்தை வளர்த்து வருகிறது. அப்படியே அப்படியே தொழுகையின் ஆரம்பத்தில் அப்வொளி பிரகாசிக்கிறது. பிண்டத்திலும் அவயங்கள் வளர வளர ஆன்ம ஒளி பிரகாசித்து உறுப்புகளை அசைய செய்து ஜடத்திற்கு வேறாக ஒரு பொருளிருப்பதாக காட்டி விடுகிறது.
அப்படியே நாம் தொழுகையிலும் மின்னலைப்போல் பிரகாசித்து அவ்வொளி அதிகத் துலக்கமாய், மேலே நமது அன்பினால் ஊர்த்துவ முகமாய் ஏறும். இதற்கு பகரமாக அதே முகமாய் கடவுள் அன்பினாலும் ஒர் ஒளி இறங்கும். இரண்டும் சந்திக்கும் இதுவே ஆண் பெண்னின் இரகசியம் என உவமை கூறப்பட்டது.
ஆண்டவன் அடிமைக்குள்ள சம்பந்தம், பேரானந்தம் மன வெளிச்சம், கடவுள் சம்பாஷணை, கேட்கப்பட்டது கிடைக்கும் அற்புதம், சொர்க்கத்தின் இன்பம், கடவுள் தரிசணம், எல்லாம் கிடைக்கும் இதற்கு மேல் சொல்வது வழக்கமில்லை தாமே அறிவார்கள்.
மனிதர்கள் சந்ததியை வெளிப்படுத்த வேண்டுமென்று, மனிதர்கள் இதில் ஹிம்சை கூடாதென்று கடவுள் ஆணுக்கும் பெண்னுக்கும் இன்பத்தை உண்டாக்குகின்றான். இல்லாவிட்டால் இந்தப் பெரிய காரியத்தை செய்வதற்கு இருவரும் அபிமானம் அல்லது வெட்கஸ்தளங்களை காட்டுவதற்கு அவர்களிடம் இருக்கும் வெட்கம் ஒருபோதும் இடம் கொடாது. மற்றப்படி சில புத்தியில்லாதவர்கள் இந்த இன்பத்தையே பெரிதாகக் காணுகிறார்கள். சிலர் தொழுகையின் அங்கங்களையெல்லாம் சேர்த்து வாதிக்கிறார்கள். (இலாஹீயத்து) பரஸ்பரம் எல்லோருக்கும் பொது.
மனிதனல்லாது எந்த ஜீவன் எப் பொருள்களுக்கும் பரஸ்பரம் பொதுவாயிருக்குமென்பது, அலியாயிருப்பவனுக்கும் கால் அல்லது கையில்லாதவனுக்கும் பரஸ்பரத்துக்கு வழியில்லாமல் போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக