புதன், 13 ஜூலை, 2016

அடையாளம் கரைந்த அவமானம். . . ! ( 7 )

அடையாளம் கரைந்த அவமானம். . . ! ( 7 )
அப்துல் வஹாப் ஜானி சாஹிபிற்கு அடுத்து ஆ.கா.அ. அப்துஸ் ஸமது சாஹிப் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அப்துஸ் ஸமது சாஹிப் தலைமையில் முஸ்லிம் லீக் தமிழகத்தில் இயங்கும் வேளையில் லீகிற்கு அதிகப் படியாக வசீகரம் கூடியது. இது சரியான உணமையும் கூடத்தான்.
தமிழகத்தின் மகத்தான மேடைப் பேச்சாளர்களில் அப்துஸ் ஸமது சாஹிபிற்கு உச்ச இடமிருந்து. அரசியல் மேடையானாலும், மீலாது போன்ற மார்க்க மேடையானாலும் அப்துஸ் ஸமது சாஹிப் சொற்பொழிவுதான் மணிமகுடம் சூடும்.
முஸ்லிம் லீகில் பேச்சாற்றல் கொண்டவர்கள் இல்லாமல் இல்லை. ஏராளம் ஏராளம் ஏராளம் நபர்கள் இருந்தார்கள். திருப்பூர் மைதீன் அண்ணன், இரவண சமுத்திரம் எம்.எம். பீர் முஹமது அண்ணன். திருச்சி நாவலர் ஏ.எம்.யூசுப் அண்ணன், வடகரை பக்கர் அண்ணன், எம்.ஏ. லத்தீப் சாஹிப், மதுரை ஷரீப் அண்ணன், திருவண்ணாமலை டாக்டர் ஷம்சுத்தீன் அண்ணன், கவிஞர் தா.காசிம், இப்படி பெரும் பட்டாளமே லீகின் கைவசம் நிரம்பி இருந்தது. இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் பெயர்களை இங்கே நான் குறிக்க வில்லை.
தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன், ஒருமுறை காரைக்குடி கம்பன் விழாவில் பேசினார். இந்த விழா அக்காலத்தில் உன்னதமாகப் பேசப்படும் விழா. கம்பன் அடிப்பொடி சா. கணேசன் நடத்தும் விழா. தமிழகத்தின் மிகப் பெரும் பெயர் பெற்ற பேச்சாளர்களே இந்த விழா மேடையில் தோன்ற முடியும்.
அந்தக் கம்பன் விழாவில் சுமார் 1/12 மணி நேரம் தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன் இலக்கியச் சொற்பொழிவாறறினார். இவ்வளவு மணி நேரம் அதுவரை வேறு எவரும் பேசியதில்லை..
திருச்சி பெரம்பலூருக்கு அருகாமையில் உள்ள ஒரு ஊரில் ஒரு மீலாது விழா. நாவலர் ஏ.எம். யூசுப் அண்ணன் சொற்பொழிவு. இவ்வூருக்குப் பேசுவதற்குச் சிலமணி நேரங்களுக்கு முன்னால் , ஒரு தகவல் யூசுப் அண்ணனுக்கு வருகிறது. அந்தத் தகவல் அவ்வூர் மக்களின் சமீபத்திய ஒரு செயல்பாட்டைக் குறித்தது.
அந்தத் தகவல் லீகிற்கும், இஸ்லாமியர் நடைமுறைக்கும் கொஞ்சம் நெருடலானது.
யூசுப் சாஹிப் மீலாது மேடையில் ஏறி அமர்ந்து பேசத் தொடங்கி விட்டார்.
தப்பு இப்படிச் சொல்லக் கூடாது ஏசத் தொடங்கிவிட்டார்.
வரலாற்று ஆதரங்களை அடுக்கி அடுக்கி அந்நகரத்து வாசிகளை ஏசுகிறார்.
இந்த ஏசல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு இடைவேளை விடுகிறார். மீண்டும் ஏசல் தொடர்கிறது. அடுத்தொரு இடைவேளை. அடுத்தும் நீளுகிறது. பஜ்ர் தொழுகைக்குப் பாங்கு சொல்லப்படுகிறது. பேச்சு நிறுத்தப்படுகிறது. ஊர் மக்கள் அப்படியே அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள்
இப்படியொரு மேடையைத் தமிழகம் கண்டதே இல்லை. இவ்விதம் சொற்பொழிவு ஆற்றலாளர்கள் லீகில் நிரம்பி இருந்தாலும் அப்துஸ் ஸமது சாஹிபின் பேச்சாற்றல் தனியொரு மைல்கல்தான். இவர்கள் அனைவரின் பேச்சாற்றலை அப்துஸ் ஸமது சாஹிப் பாணி மிகைத்து நின்றது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தமிழகத்தில் எழுப்பப் பட்ட புதிய மஸ்ஜித் கட்டிடத் திறப்பு விழாக்களில் தலைமை ஏற்கும் பொறுப்பு, அப்துஸ் ஸமது சாஹிப் அளவிற்கு வேறு எந்த முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் வாய்க்க வில்லை. இதற்குக் காரணம் அவருடைய சொற்பொழிவாற்றல்தான்.
தி.மு.க. மேடைகள் கணடெடுத்த அண்ணா உள்ளிட்ட பேசசாற்றல் மிக்கவர்களின் பட்டியல்களில் ,அண்ணா, கருணாநிதி, சம்பத், நாஞ்சில்
கி. மனோகரன் போன்ற இவர்களுக்கு இணையாக, சமயத்தில் மிகையாக அப்துஸ் ஸமது சாஹிப் பேச்சாற்றல் தமிழக மேடைகளில் வலம் வந்தது.
மிகச் சிறந்த எழுத்தாளர். தமிழகத்தில் ஒரு தனியார் கூட்டு நிர்வாகம் (மெட்ராஸ் மூடியா ) நடத்திய மணிச்சுடரின் ஆசிரியராக இருந்தார்.
இப்பத்திரிகை தொடங்கிய போது ஒரு கண்டிசன் போட்டார். இது நாளிதழ்.
இதில் தினம் தினம் ஒரு அற்புதமான கட்டுரை வந்தாக வேண்டும.அதற்குத் தகுதியனவர் ஒருவர் இருக்கிறார்.அவர்தான் ஏ.கே. ரிபாய் அண்ணன். அவரை இதற்கு ஒப்புக் கொள்ள வைத்தால் நான் ஆசிரியராக வருகிறேன் என ஸமது சாஹிப் கூறினார்.
அப்போது ஏ.கே.ரிபாய் சாஹிப் அவரின் சொந்த ஊரான வாவா நகரத்தில் உடலநலக் குறைவு காரணமாகக் குடும்பத்தோடு தங்கி இருந்தார்.
அங்கே ஆப்பனூர் காசிம் அண்ணன் புறப்பட்டுச் சென்றார். ஏ.கே.ரிபாய் சாஹிபைச் சம்மதிக்க வைத்து விட்டார்.
சென்னையில் தங்குவதற்கு எங்கே இடம் வேண்டும்.? மாதச் சன்மானம் எவ்வளவு வேண்டும்.? இதை நாங்கள் தீர்மானிக்க மாட்டோம். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என ஆப்பனூர் காசிம் அண்ணன் ரிபாய் சாஹிபிடம் கூறினார்.
"எனக்குப் பணம் வேண்டாம்.தங்கும் இடம் நீங்கள் தயார் செய்யத் தேவையில்லை. முக்கியமான விஷயம் நான் ஆறு மாதங்கள் அங்கு இருப்பேன். தினம் தினம் எழுதித் தருவேன்.இதுதற்கு ஒப்புக் கொண்டால் வருகிறேன்" என
ரிபாய் சாஹிப் ஒப்புக் கொண்டு வந்தார்.அற்புதமான கட்டுரை தினம் தினம்
வந்தது. சரியாக ஆறாவது மாதத்தில் யார் தடுத்தாலும் ஒப்புக் கொள்ளாமல்
சொந்த ஊர் சென்று விட்டார். ஒரு பைசாக் கூடப் பெறாமல் பணி பரிந்தார்.
அப்துஸ் ஸமது சாஹிப் சிறந்த எழுத்தாளர். மிகச் சிறந்த பேச்சிற்றலாளர்.
ஆனால் அவரின் எழுத்துகளும் பேச்சுகளும் சரியாகத் தொகுக்கப் பெறவே இல்லை. எவ்வளவோ எழுதினார். அவைகள் பதிப்பாக வில்லை.எவ்வளவோ பேசினார் அவைகள் முழுவதும் பதிவாக வில்லை.
ஹஜ் வழிகாட்டி மாதிரி "புனித ஹஜ்ஜின் இனிய நினைவுகள்" என் ஒரே ஒரு நூல் அவர் பெயரில் வெளி வந்தது.
அப்துல் வஹாப் ஜானி சாஹிப் காலத்தை விட இயக்கப் பணி விசாலமானது. ஆனாலும் இதுவரைக் கூட்டணி கட்சிகளில் லீகிற்குக்
கிடைத்து வந்த இடங்கள் சுருங்கி விட்டன. பிரபல்யம் பெற்ற அளவு இயக்கம் பெருக்கம் காணவில்லை. இதையும் மறந்துவிடக் கூடாது.
இன்னொரு பக்கமும் இதனால் லீக் சேதாரமானது. இந்தப் பேச்சாற்றல் வசீகரம், இயக்கத்திற்கு நன்மை தந்ததை விடவும் பிரச்சினையைத்தான்
பூதகரமாக்கியது. தி.மு.க. பாணி முறைகள் முஸ்லிம் லீகில் வலுப் பெற ஆரம்பித்தன.
இந்த மனப் போக்கை , இந்த அந்தரங்க உணர்ச்சியை அப்துஸ் ஸமது சாஹிப் தெளிவாகக் கணித்து வைத்திருந்தார். ஒருவகையில் இதைக் கண்டும் காணாமலும் கட்சியை வழி நடத்தினார். இதில் ஒரு வகையான சாதகத் தன்மையைத் தனக்காக்கிக் கொண்டார்.
தனக்குத் தேவைப்படும் பொழுது தி.மு.க.வைக் கை கழுவி விட்டு, அ.இ.அ.தி.மு.க.வை அரவணைத்துக் கொள்வார்.
ஒருநாள், மணிச்சுடரில கருணாநிதி செய்தி ஒன்று வழக்கம் போல் பிரமாதமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் குழு தீவிரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணிச்சுடர் பொறுப்பில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஆசிரியர்குழு தி.மு.க.சார்பானதுதான்.
மதியம் சரியாக 12 - மணிக்கு பக்கங்கள் அச்சாக வேண்டும்.
அப்போது, அப்துஸ் ஸமது சாஹிபிடமிருந்து தொலை பேசி அழைப்பு வருகிறது. "பத்திரிகையை அச்சிட வேண்டாம்.உடனே நான் வருகிறேன். வேறு மேட்டர் பேட வேண்டும்."என்பதுதான் அந்தத் தொலை பேசிச் செய்தி.
அலுவலகம் வந்தார். ஒரு மேட்டரைத் தயார் செய்து கொண்டு வந்தார்.
கருணாநிதி கிழி கிழியெனக் கிழிக்கப் பட்டிருந்தார், அந்த மேட்டரில்.
மணிச்சுடர் ஆசிரியர் குழு திக்பிரேமையில் விழுந்தது. அச்சாகிப் பத்திரிகை வெளி வந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி. மறுநாளில் இருந்து லீக் , அ.இ.அ,தி.மு.கவுடன் நெருக்கம். தொடர்ந்து லீக் செயற்குழுவும் புதிய கூட்டிற்குப் பின்னர் அனுமதி வழங்கியது.
டெல்லியில் இருந்து ஒரு போன். தனிப்பட்ட பாதிப்பு வரப் போவதாக ஒரு மிரட்டல். அவ்வளவுதான் கூட்டணி மாறி விட்டது. செயற்குழுவும் ஒப்புக் கொண்டது. இதுதான் அப்துஸ் ஸமது.
" என் கெழுதகைய நண்பர் கலைஞர் ." என்றொரு சொல்லாடலைக் கையாண்டு அடுத்து கருணாநிதியுடனும் கூட்டணி வைத்தார்.
அ. இ.அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதாவை, தமிழக அரசியல் தலைவர்கள் வரலாற்றிலேயே " எங்கள் அன்புச் சகோதரி" என்ற அடைமொழியைத் தவிர வேறு சொற்களைப் பயன்படுத்தாத தலைவர் இவர் ஒருவர்தான். ( அண்மையில் தன் ஆதரவை ஜெயலலிதாவக்குத் தெரிவிக்கச் சென்ற, அப்துஸ் ஸமது சாஹிப் மகளார் முசபர் பாத்திமா ,
ஜெயலலிதாவைக் கட்டி அணைத்து முசாபா செய்தார்.இது தந்தை வழி வந்த துணிச்சல்.
எந்தப் பெண்மணி யானாலும் ஜெயலலிதாவை விட்டு, 5 அடி தூரம் தள்ளிக் குனிந்து நிற்கும் தீய கலாச்சாரத்தைத் தகர்த்து விட்டார். முசபர் பாத்திமா இப்போது தன் கைவசம் ஒரு துக்கடா லீகை வைத்திருக்கிறார். என் போன்றவர்களுக்குத் துளி அளவு கூட இதில் உடன்பாடு கிடையாது. )
காயிதெ மில்லத்துக்கு முற்றிலும் மாறுபட்ட ," பிற கட்சிச் சின்னத்தில் தேர்தலில் நிற்பவர்கள் லீகில் தொடர வேண்டாம். அவர்கள் அந்தச் சின்னக் கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளட்டும். " என்ற கோட்பாட்டை முதன்முதல் உடைத் தெறிந்தவரும் அப்துஸ் ஸமது சாஹிப்தான்.
அந்த அடிப்படையில் அவர்தான் முஸ்லிம் லீகில் முதல் தி.மு.க.காரர்.
தமிழகத்தில் தேர்தல் நேரம் சூழ்ந்தது. தி.மு.க. கூட்டணி தொடர்ந்தது.
கூட்டணி களுக்கு இடையில் தொகுதி பங்கீடும் முடிந்து விட்டது.
சென்னை மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள 8-ஆம் எண் K.T.M.அஹமது இப்றாஹிம் மன்ஜிலில் முஸ்லிம் லீக் செயற்குழு அப்துஸ் ஸமது சாஹிப் தலைமையில் கூடியது. அதைத் தொட்ந்து,
அடுத்த அறையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவும் கூடியது.
அந்தப் தனி அறையில் , அப்துஸ் ஸமது சாஹிப், ஏ.கே. ரிபாய் சாஹிப், அப்துல் ஜப்பார் சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், எஸ்.ஏ.காஜா முஹையதீன் சாஹிப், வந்தவாசி அப்துல் வஹாப் சாஹிப் முதலிய தலைவர்களும், இவர்களுக்கு உதவியாளர்களாக , வடசென்னை மாவட்டச் செயலாளரான நானும் , தென்சென்னை மாவட்டச் செயலாளரான தாஜ் ஷரீப் அண்ணனும், நாகூர் கவிஞர் ஜபருல்லாஹ்வும்
இருந்தோம்.
ஒவ்வொரு தொகுதிகளை விரும்பிக் கேட்ட வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் அழைக்கப் பட்டு உறுதி செய்யப் பட்டார்கள்.
ராணிப்பேட்டை இத் தேர்தலில் லீகிற்குத் தரப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ராணிப்பேட்டை தொகுதியை எவரும் கேட்க வில்லை.
முடிவாக , அப்துஸ் ஸமது சாஹிப் அத் தொகுதியில் பள்ளப்பட்டி அப்துல் ஜப்பார் சாஹிபை அங்கு நிற்கச் சொல்லி வற்புறுத்தினார். ஏற்கனவே ஒரு முறை அங்கே நின்று வென்றவர் அப்துல் ஜப்பார் சாஹிப்.
ஆனால் அப்துல் ஜப்பார் சாஹிப் மறுத்து விட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் கேட்க வில்லை. தொகுதியைத் திரும்ப ஒப்படைத்தால் இயக்கத்திற்கு அவமானம் எனக் கூறியும் அப்துல் ஜப்பார் சாஹிப் மறுத்தே விட்டார்.
இந்தக் கட்டத்தில், அப்துஸ்ஸமது சாஹிப் ஒரு சூட்சமத்தை மெதுவாக அவிழ்த்தார். " இந்த முறை நம் தோழமைக் கட்சியானது. தி.மு.க.வின்
உதய சூரியன் சின்னத்தில் நின்று இந்தத் தேர்தலைச் சந்திக்கலாம் எனக் கருதுகிறேன்."என்பதே அந்த சூட்சமம்.
அப்துஸ் ஸமது சாஹிப் சொல்லி வாயை மூடவில்லை. "ராணிப்பேட்டையில்" நான் நிற்கிறேன். எனக்குத் தொகுதியை ஒதுக்கி விடுங்கள் என உரத்த குரலில், அதுவரை மறுத்து வந்த மாநில லீகின் துணைத் தலைவர் அப்துல் ஜப்பார் சாஹிப் உற்சாகத்துடன் கேட்டார்.
அந்த அறைக்குள் இருந்த மற்ற மேல் மட்டத் தலைவர்கள் எவரும் இதை எதிர்க்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை.
ஆனால் ஒரு உண்மை ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. முஸ்லிம் லீக் செயற்குழுவில் சம்மதம் பெறுவதற்கு முன்பே உதய சூரியன் கேட்கப் பட்டு விட்டது. முதலில் அன்றுதான் லீகின் பிற தலைவர்களுக்கே இது தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனே செயற்குழுவிலும் ஏற்கப்பட்டது.
இன்னொரு நிகழ்ச்சியும் ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. தி.மு.க.. தலைவர் கருணாநிதியுடன், பொதுச் செயலாளர் அன்பழகனுடன் பேசி அவர்களது உதயசூரியன் சின்னத்தை லீக் வேட்பாளர்களுக்குத் தரக் கோரி,
சம்மதமும் அப்துஸ் ஸமது சாஹிப் பெற்றிருந்தார்.
உதய சூரியன் சின்னம் லீகிற்குத் தரக் கேட்டுத் தேர்தல் கமிஷனுக்குத் தி.மு.க. லெட்டர் பேடில் அன்பழகன் கடிதம் கொடுத்திருந்தார்.
சென்னை திருவல்லிக்கேணி சட்ட மன்றத் தொகுதியில் அப்துஸ் ஸமது சாஹிப் நின்றார். வென்றார். தமிழகச் சட்ட மன்றத்தில் முதன் முதலாக நுழைந்தார். சின்னம் பற்றி இப்போதுள்ள தடைச் சட்டம் அப்போது இல்லை.
ஆனாலும் சட்டம் மன்றம் சென்ற உடனே ,அன்பழகனிடம் மறுகடிதம் வாங்கினார்.
" சின்னம்தான் உதய சூரியன் எனினும் அப்துஸ் ஸமது சாஹிபும் ,சம்ஷுல்
ஆலமும் எங்கள் கட்சி உறுப்பினர் இல்லை. அவர்கள் முஸ்லிம் லீக் உறுப்பினரகள்தாம் " எனக் கடிதம் வாங்கிச் சட்ட மன்றச் சபாநாயகரிடம் அப்துஸ் ஸமது சாஹிப் கொடுத்து விட்டார்.
இந்திய கம்யூனிஸ்டில் இருந்து வெளியேறித் தனி கம்யூனிஸ்ட் கட்சி கண்டிருந்த தோழர் தா. பாண்டியனும் உதய சூரியன் சின்னத்தில்தான் நின்றார், வடசென்னைப் பாராளு மன்றத்தில் தொகுதியில்.
அவரும் இப்படி இரு கடிதங்கள் பெற்று அப்துஸ் ஸமது சாஹிப் மாதிரியே நடந்து கொண்டார்.
முஸ்லிம் லீக் அதுவரைக் காத்து வந்த சுய அடையாளம் முதன் முதலாகப்
படு வேகமாகக் கரைய ஆரம்பித்தது.
அப்துஸ் ஸமது சாஹிப் கட்சித் தலைமை ஏற்றிருந்த காலததில் லீகில் ஏராளம் ஏராளம் ஏராளம் இளைஞர் பட்டாளம் நிரம்பி இருந்தது. இந்த இளைய பட்டாளம், அப்துஸ் ஸமது சாஹிப்தான் முஸ்லிம் லீக் என்ற தீவிர நம்பிக்கை கொண்டிருந்தது.
அப்துஸ் ஸமது சாஹிப் காலத்தில் இருந்த பிற தலைவர்கள் அந்த இளைஞர்களுக்கு முஸ்லிம் லீக் வரலாற்றை முறைப்படிக் கற்றுத் தரவில்லை. இதுதான் மகத்தான பிழை.
இந்த இளைய பட்டாளத்தின் வேகம் கண்டு, அப்துஸ் ஸமது சாஹிபிற்கு
எதிர்க் கருத்து எவரும் கூறத் துணியவில்லை.
தி.மு. க.வில் எப்படி , கருணாநிதி தலைமை ஏற்ற பின் ஒரு இளைய பட்டாளத்தைக் கைவசம் வைத்துக் கொண்டு முன்னேறி வந்தாரோ, அப்படி ஒரு தோற்றம் முஸ்லிம் லீக் இயக்கத்துக்குள்ளும் அப்துஸ் ஸமது சாஹிபால் உருவாக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக