உஹதுப் போர்க்களம்
குருதிக் களமாக காட்சியளித்தது !
நபிகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி
மதினா நகரில் காட்டுத் தீயாக பரவியது.
வீடுகளில் இருந்த பெண்களெல்லாம் உஹது களத்தை நோக்கி ஓடோடி வந்தார்கள்.
அருமை மகள் ஃபாத்திமா
அன்னை ஆயிஷா
நபிகளாரின் மனைவிமார்கள்
அன்சாரிகளின் வீட்டுப் பெண்கள் என
அத்தனை பேரும் கண்களில் கண்ணீர் சிந்த நெஞ்சினில் செந்நீர் சிந்த விரைந்து வந்தார்கள்.
தாயொருத்தி ஓடி வரும்போது
ஒருவர் சொன்னார் ...
" உன் கணவர் இறந்து விட்டார் "
" இன்னா லில்லாஹி ... நபிகள் எப்படி இருக்கிறார்கள் ? "
" உன் மகனும் இறந்து விட்டார் "
" அல்லாஹ் போதுமானவன். நபிகள் எப்படி இருக்கிறார்கள் ?"
" ஹயாத்தோடு இருக்கிறார்கள் "
" அல்ஹம்துலில்லாஹ். அதுபோதும் "
என்றார் அந்தத் தாய்.
உஹது களத்தில் ...
அபு சுப்யானும் அவர் மனைவி ஹிந்தாவும்
ஹாஷிம் குடும்பத்தின் வீரப் புதல்வன்
ஹம்சாவைக் கொல்வதற்கென்றே
தங்களோடு ஒருவனை கூட்டி வந்திருந்தார்கள்.
அபு சுப்யானின் கறுப்பு அடிமை.
குறி தவறாமல் ஈட்டி எறிவதில் அபாரன் .
ஹம்சாவுக்கு
அஸதுல்லாஹ் ...
#அல்லாஹ்வின்_சிங்கம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
போர்களத்தில் எதிரிகளின் தலைகளை
முழு வீச்சில் அவர் அறுவடை செய்து கொண்டிருந்தார்.
அவர் முன்னால் வந்த எதிரி எவனுக்கும்
இன்னொரு முறை மூச்சு விடும் வாய்ப்பை
ஹம்சா வழங்கவேயில்லை.
திடீரென்று ஏற்பட்ட குழப்பத்தில்
உஹதுக் களம் நிலை தடுமாறி
கவிழ்ந்ததில் மின்னல் வேகத்தில்
காட்சிகள் மாறிப் போயின .
******
அல்லாஹ்வின் சிங்கம்
தரையில் சாய்ந்து கிடந்தது !
சிங்கத்தின் அடிவயிற்றை
கிழித்துச் சென்ற ஈட்டி
அதன் முதுகையும் துளைத்து
மண்ணுக்குள் முளையடித்து நின்றது !
அதன் வயிற்றிலிருந்து
வழிந்து ஓடிய
ரத்தத்தை எடுத்து
பழுப்பேறிப்போன தனது
வறண்ட உடலுக்கு
சிவப்பு கம்பளம் விரித்து
சிங்கத்தின் வரவுக்கு
வரவேற்பு கவிதை ஒன்றை
எழுதி வைத்தது
உஹது மலையடிவாரம் !
" சிங்கத்தைக் கொல்
விடுதலை பெற்றுச் செல் "
உமையா வம்சத்தின் எஜமானன்
அபு சுப்யான் வீசி எறிந்த
வசீகர வார்த்தைக்கு வசியப்பட்ட
அடிமை வஹ்ஷி
வஞ்சகமாய் வீசி எறிந்த ஈட்டி
அரபுலகத்தின் அரிமாவை
சடலமாய் சரிய வைத்து விட்டது !
அல்லாஹ்வுக்காக நடந்த போரில்
அஸதுல்லா
அல்லாஹ்விடமே
போய் சேர்ந்து விட்டது !
சிங்கத்தின் கர்ஜனைக்கே
சீவனை விட்டு விடக் கூடிய
சிறு எலி வஹ்ஷி
இப்போது
அச்சமே இல்லாமல்
சிங்கத்தின் பக்கத்தில் வந்தான் !
அதன் உடலில்
ஊடுருவி இருந்த ஈட்டியை
உருவ முடியாமல் உருவி எடுத்தான் !
காதலியை அணைப்பது போல்
மார்போடு அதை கட்டி அணைத்து
தன் தடித்த உதடுகளால்
அதற்கொரு முத்தமும் கொடுத்தான் !
சிங்கத்தின் உடலை
தலைவனின் காலடியில் போட்டுவிட்டு விடுதலையின் சுவாசத்தை
விலையாகப் பெற்றுச் சென்றான் !
குறைஷிக் கிழவன் அபு சுப்யானின்
அடங்காத மனைவி ஹிந்தா
ஒரு பேயை போலப் பாய்ந்து வந்தாள் !
சீற்றமிகு சிங்கத்தின்
கம்பீர முகத்தை
தன் வெஞ்சின விழிகளால்
வெறித்தாள் !
குறுவாளை கையில் எடுத்து
உரம் ஏறிய சிங்கத்தின்
நெஞ்சுக் கூட்டை
இரு கூறாகத் தரித்தாள் !
ஈமானின் ஈரமும்
இணையற்ற வீரமும்
பூத்துக் கிடந்த சிங்கத்தின்
ஈரக்குலையை
தன் பேய் கரங்களால்
பிடுங்கிப் பறித்தாள் !
வெறி தலைக்கேறிய
தெரு நாயைப் போல
தன் கோரப் பற்களால்
அதைக் குதறிக் கடித்தாள் !
குருதியை குடித்தாள்
மென்று விழுங்க முடியாத
கோபத்தோடு
மீதி ஈரலை காறி உமிழ்ந்தாள் !
அடங்கவே அடங்காத
ஆவேசத்தின் உச்சத்தில்
சிங்கத்தின்
காதுகளை
மூக்கை
ஆண்மையை
அவையங்களை
துண்டு துண்டாக அறுத்து
மாலையாகத் தொடுத்து
கழுத்திலே அணிந்து
அகோரமாய் ஆட்டம் போட்டாள் !
ஊழிக்காற்றைப்போல்
மூளியவள்
ஊளையிட்ட சத்தம் கேட்டு
போர்க்களம்
பேய்க்களமானது !
எழுபது முஸ்லிம் உயிர்களை
சுவனத்திற்கு
வழி அனுப்பி வைத்துவிட்டு
உடல்களை மட்டும்
தன் கருவறைக்குள்
வித்தாக விதைத்துக் கொண்டு
வீரத்தின் விளைநிலமானது உஹது !
ஆழிப் பெருங்கடல்
சுனாமி பெருங்கடலாகி
பொங்கி ஓய்ந்தது போல்
உஹதுக் களம்
உயிரழிந்து கிடந்தது !
சிங்கத்தின் உடல்
சிதைந்து கிடந்தது !
குறைஷிக் கிழவன் அபு சுப்யான்
நீண்ட ஈட்டியை எடுத்து
சிங்கத்தின் தொண்டையில் சொருகி
சந்தோஷப்பட்டான்.
அருள் வெள்ளம் மட்டுமே
ஆனந்த அலையாடுகின்ற
அண்ணலாரின் அழகிய நயனங்களில் அணை கட்ட முடியாத
ஆற்று வெள்ளமாய்
துயரக் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது !
மக்கத்து எதிரிகள் தந்த
மரண அடிகளையும்
தாயிப் வாசிகளின்
கொலை வெறி கல்லெறிகளையும் பொறுமையோடு தாங்கிக் கொண்ட
தயாள நபிகளின் தாயுள்ளம்
சிங்கத்தின் சேதத்தைக் கண்டு
சினந்து பொங்கியது !
அகிலத்தின் அருட்கொடையே
அழுது சிணந்தால்
அகிலமே அழிந்து போகாதா ?
அருளாளன் ஆற்றுப்படுத்தினான்
தன் வேத வரிகளால்
ஆறுதல் படுத்தினான் !
ஆனாலும் ...
அண்ணலாரின் இரக்க இதயம்
ஆயுள் உள்ளவரை
அசதுல்லாஹ்வை எண்ணி
ஜம்ஜம் கிணறைப் போல்
சுரந்து கொண்டே தான் இருந்தது !
ஹம்சா
ஈரம் தொலைந்து போன
அரபு மண்ணில்
வீரம் தொலைந்து போகாத
வரலாற்றுச் சுனை !
சீமான் நபியுல்லாஹ்வைச்
சீண்டிப் பார்த்த
சிறு நரிகளின் தலைவன்
அபு ஜஹல்
நெற்றியைத் தோண்டிப் பார்த்து
செந்நீர் சிந்த வைத்த
வாளின் முனை !
புண்ணிய நபிகளை
புண்ணாக்க வந்த
பாவிகள் பலபேரை
பரலோக வாசிகளாகிய
வீரத்தின் திணை !
எம்பெருமான் கட்டியெழுப்பிய
ஏகத்துவ மாளிகையின்
ஏற்றமிகு
வாசல் துணை !
ஹம்சா
ஹாஷிம் குடும்பத்து
அகன்ற வானத்தின்
அழகான நட்சத்திரம் !
அல்லாஹ்வுக்காக வாளெடுத்து
அண்ணல் நபி எதிரிகளின்
தலையெடுத்து
இஸ்லாத்தின் வெற்றிக்காக
தன்னையே கொடுத்து
உமையாக்களின் வஞ்சகத்தால்
இன்னுயிரையும் இழந்து
தமக்குவமையிலா தியாகத்தால்
சாதனையாகி
நிலைந்து வாழும் சரித்திரம் !
அனைத்துக்கும் மேலாக
அஹமது நபியின்
அகமதில் நிறைந்து
முகமதில் மலர்ந்து
சிந்தையில் இனிக்கும் விந்தை பெருமானாரின்
போற்றுதலுக்குரிய
சிறிய தந்தை !
உமையாவின் வாரிசான
அபு சுப்யானின் பகை உணர்வுக்கு
முதல் பலியான ஹாஷிம் குடும்பத்தின்
முதல் மனிதர் ஹம்சா !
உஹதுப் போர் முடிவுக்கு வந்து
குறைஷிகள் மக்காவுக்குத் திரும்பும் போது
அபு சுப்யான் சொன்னான் ....
" அடுத்த போரில் சந்திப்போம் "
* இன்ஷா அல்லாஹ்
நாளை தொடரும்