புதன், 5 டிசம்பர், 2012

இணைய குற்றங்கள் (Cyber Crimes):

   1) சைபர் க்ரைம் - ஒரு பார்வை
       இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங்ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும்பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

2) இணைய குற்றங்கள் (Cyber Crimes):
       1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட்டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது
கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.


4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை
மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள்படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையாஎன்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால்சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]


7. இவற்றைவிட கொடியது
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரிபள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும்தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். 

3. பாதுகாப்பு வழிகள்:
    1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண்வீட்டு முகவரிபள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.


3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்
என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால்
உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள். 


7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு
, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.


10. குழந்தைகள்
பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-
ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https:://
 என்பது பாதுகாப்பான வழியாகும்.

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.


பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
        இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு

1. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 


2. இணைய பின்தொடர்தல் (
Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள்வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவதுமிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].

3. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 


4. கடன் அட்டை எண் திருட்டு

5. வலைத்தள ஹேக்கிங்
6. தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:

Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex, 
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate, 
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in


சென்னை:

Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex, 
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate, 
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

கவனிக்க: இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3
,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை.

நன்றி: இந்த பதிவு டெர்ரர் கும்மி விருதுகள் 2011-ல் விழிப்புணர்வு பகுதியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும்தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! 


(எனப்பகிரும் இக்கட்டுரை ஆசிரியருக்கு பதிவுத்தடாகம் நன்றியை சொல்லிக்கொள்ளுகிறது, பெயர் தெரியாததனால் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை)

செவ்வாய், 30 அக்டோபர், 2012

டூத் பேஸ்ட் பலன்கள் பற்றி முழுமையா ஆராய்ச்சி செய்தவங்க நம்ம ஆளுங்க தான்..

நம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் ந
 ம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று பட்டியிலிடுகின்றனர் ஒரு சிலர்.. படித்துப் பாருங்களேன்..

என்னமாதிரியான ஆராய்ச்சி? அடேங்கப்பா!! உலகத்துல வேற எந்த நாட்டுக்காரனாச்சும் இது போல செய்ய முடியுமா என்ன?

1. பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.

2. சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.

3. முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

4.பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.

5. பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.

6. துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

7. குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.

8. வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

9. சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

10. குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

11. வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.

12. நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.
 

புதன், 8 ஆகஸ்ட், 2012

"பழந்தமிழர் அளவைகள்"



ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

புதன், 11 ஜூலை, 2012

பழங்கால பழமொழிகள்

பழங்கால பழமொழிகள் இன்றும் நடை முறையில் !!!

அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
 
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
 
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
 
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
 
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
 
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளும்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
 
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
 
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
பேராசை பெருநட்டம்.
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

வேலிக்கு ஓணான் சாட்சி.

ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

வியாழன், 5 ஜூலை, 2012

ஏன் மைதீட்டவில்லை

கண்ணில் ஏன்
மைதீட்டவில்லை
என்கிறாயா தோழி
சொல்கிறேன் ;

கண்ணுக்குள் என்
காதலர்
அவர் முகத்தில்
கரிபூசலாமா.......

என் சூரியன் மீது
இருட்டை தடவுவதோ ?

வீட்டிற்குள்ளே அவர் ;
வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம் ?

அவனயே தீட்டி
அழகுபெற்ற கண்களுக்கு
மையலங்காரம் வேண்டுமா ?

கண்ணைவிட மென்மையானவர்
என் காதலர்
கைபட்டால் வலிக்காதா ?

அவரை வைத்த இடத்தில்
வேறொன்றை வைப்பது
என் கற்புக்கு இழுக்கல்லவா ?

- அபுதுல் ரகுமான்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்

இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்!


இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே
நேசிக்கிறேன்.
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.




அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.


நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.


நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே
புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.
உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.
நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.
இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.
நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு
வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்
சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.
நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

வீட்டில் பூச்சித்தொல்லையா

வீட்டில் நாம் குடியிருக்கிறோமோ, இல்லையோ, ஆனால் பூச்சிகள் மட்டும் ஆட்டம் பாட்டத்தோடு சந்தோஷமாக நன்கு வீட்டை உலாவிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் வருவது எறும்பு, பல்லி, கரப்பான்பூச்சி, கொசு போன்றவையே. அத்தகையவை வீட்டில் இருப்பதால் பெரும் தலைவலி ஏற்படுவதோடு, உண்ணும் உணவுப் பொருட்களில் ஏறி உண்டு, உடலுக்கு பல நோய்களை வர வைக்கின்றன. மேலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று எண்ணி, அதனை அழிக்க பூச்சி மருந்துகளை வாங்கி அடித்தால், நாம் வீட்டிலேயே இருக்க முடியாத அளவு மருந்து நாற்றமானது இருக்கிறது. இத்தகைய நாற்றத்தை தவிர்க்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.

1. எறும்புத் தொல்லையை நீக்க...

வீட்டில் கிச்சனில் இருக்கும் சர்க்கரை, சாக்லேட் மற்றும் கழுவ போட்டிருக்கும் டீ கப்பில் எறும்புகளாக இருக்கிறதா? ஏனெனில் எறும்புகளுக்கு இனிப்புகள் மற்றும் மிச்சம் வைத்திருக்கும் பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் அதுவே அதன் சொர்க்கம், உணவு என்றும் கூட சொல்லலாம். அத்தகைய உணவுப் பொருட்களை வெளியிலேயே வைத்தால் போதும், பின் வீடே எறும்பு மயமாகிவிடும். இத்தகைய எறும்பை வராமல் தடுக்க, வீட்டில் இருக்கும் கிச்சனை தினமும் படுக்கும் முன் சுத்தம் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும். அவ்வாறு செய்தும் எறும்புத் தொல்லை நீங்கவில்லை என்றால், மாதத்திற்கு ஒரு முறை கிச்சன் முழுவதையும் மண்ணெண்ணெய் வைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எங்கும் எறும்பு வருவதை தடுக்கலாம்.

2. பல்லி வராமல் தடுக்க...

வீட்டில் எந்த சுவற்றைப் பார்த்தாலும் ஒரு பல்லியாவது இல்லாமல் இருக்காது. அதற்கு நிறைய பேர் முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால் பல்லியானது வராது என்று நம்புகின்றனர். உண்மையில் அப்படி வைத்தால் வராது தான், ஏனெனில் அதில் இருந்து வரும் நாற்றத்தினால் பல்லியானது வராமல் தடுக்கலாம்.

3. கொசுக்களை அழிக்க...

கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் உணவைத் தான் உண்ணுகின்றன. ஆனால் கொசுக்களானது நமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன. பெரும்பாலும் கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் வராமல் கூட கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால் கொசுக்கள் வராமல் இருப்பதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்காக நிறைய வீட்டுப் பொருட்கள், அதனை அழிக்க இருக்கின்றன. அவை,

- கற்பூரம் மற்றும் மண்ணெண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை மின்சாரத்தில் இயங்கும் மெசினான ஆல்-அவுட், குட் நைட் பாட்டிலில் ஊற்றி பிளக்கில் மாற்றிவிட வேண்டும். இதனால் கொசுவை வராமல் தடுக்கலாம்.

- தேங்காய் ஓட்டை எரிக்கும் போது வரும் புகையால் கூட கொசுவை வராமல் தடுக்கலாம்.

4. கற்பூரத்தால் பூச்சிகளை தடுக்கலாம்...

கற்பூரமானது ஒரு சிறந்த பூச்சிக் கொல்லிப் பொருள் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் சல்பர் இருப்பதால், பூச்சிகள் அதன் வாசனையில் இறந்துவிடும். மேலும் கற்பூரமானது ஒரு ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் நிறைந்த பொருள். கொஞ்சம் கற்பூரத்தை எடுத்துக் கொண்டு, அதனை ஏற்றி வீடு முழுவதும் சுற்றி வந்தால், அந்த நாற்றத்திற்கு வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.