பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர்.
இந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.
1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும். என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.
இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டாம் மாடுகளை வெட்டக்கூடாது" - என்று பிரகடனப் படுத்துகிறார்.
நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில்,
"என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்" - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.
பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது.
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிட நம்மால் முடியும்.
அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம். என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.
தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது.
அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.
இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.
ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக