இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின்கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசு தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன. எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர். இந்திய அரசு, விஞ்ஞானிகளின்சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர்கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர். நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரணமாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய v2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். மாவீரன் திப்பு துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது. டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவராய் இருந்த விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவராய் இருந்த விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு நன்றி கூறிய சிவதாணு பிள்ளை, விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் குழுவின் ஆய்வின் விவரங்களை தெரிவிக்கப் போவதாகக் கூறினார். இன்னும் இரண்டொரு மாதத்தில் தனது முழு ஆய்வறிக்கையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது. நாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக்பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் விவரித்துள்ளார். ''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.'' சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவதுபொருத்தமானது தானே? |
சனி, 5 மே, 2012
ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக