வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ரமளானின் மகிமை

( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )
  
  புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.
  ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறதுநரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.
  இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும்நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளைஅதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவதுகுடிப்பதுமனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.
  நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளனஎடுத்துக்காட்டாக:
’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’
’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’
’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’
’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’
  நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.
‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின்(நோன்பில்லாதவனின்இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’
 ‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’
‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’
  எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும்மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே  தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும்.இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!
           நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை
  நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன்ஹதீஸ்,இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.
  நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான்தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.
              நோன்பின் நிய்யத்
  நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லைஇன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.
  தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும்.நோன்பின் நிய்யத்:
  நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா
  இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.
  உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.
  நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை)அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றதுரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும்இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும்நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.
                ஸஹர் – நோன்புபிடிப்பது
  ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும்பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.
  ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.
             இஃப்தார் – நோன்பு திறப்பது
  சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும்நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.
  மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.
  நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும்.அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும்அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.
  இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி –பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும்அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
  இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும்.பேரீத்தம் பழம்தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம்சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர்அது தவறாகும்.
                நோன்பு திறக்கும் துஆ
  அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.
 ’’யா அல்லாஹ்உனக்காகவே நோன்பு வைத்தேன்உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன்உன் மீதே நம்பிக்கை வைத்தேன்,உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!
              நோன்பின் முறித்தல்கள்
1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல்மண்இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7)பீடிசிகரெட்குடிப்பதுவெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவதுபெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல.    10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும்வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும்ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.
  வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களாசெய்யவேண்டும்மேலும் கப்பாரா (பரிகாரமும்வாஜிபாகும்.
  நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.
  தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும்இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.
  நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும்.அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.
            நோன்பை முறிக்காதவைகள்
1)மறதியாக சாப்பிடுவதுகுடிப்பதுசேர்க்கை செய்வது.   2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசிபுளுதிகொசு தொண்டையினுள் செல்லுவது.      6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது,மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில்சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11)இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பதுஇவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.
              நோன்பின் மக்ருஹ்கள்
1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது.        3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது.        4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும்அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.
  இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும்நோன்பு முறிந்துவிடாது.
            நோன்பு வைக்காமலிருப்பதற்கு  
             அனுமதிக்கப்பட்டவர்கள்
1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டுபின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களாசெய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
  பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும்பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.
5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும்பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டுகுடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.
6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு.பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும்.
7) வியாதிபசிதாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன!கட்டாயக்கடமையுமாகும்பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும்.
8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும்.
               தராவீஹின் சட்டங்கள்
  புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும்தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.  
  எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும்ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.
  குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.
  இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாதுஎனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர்இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும்விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.
  வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம்எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.
  தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும்அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும்,ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.
  ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும்தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவுசுஜூதுஉடைய தஸ்பீஹ்கள்ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.
  குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் –மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும்.இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.
                இஃதிகாப்
  புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும்ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறதுஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.
  ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும்இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளுநிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும்இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.
  இஃதிகாபின்போது உடலுறவு கொள்வதுமுத்தமிடுவதுகட்டிபிடிப்பது கூடாது.
  இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது.தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும்இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.
  ஆம்தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.
  1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாகமலம்,ஜலம்கழிப்பதற்கு வெளியாகுவது.
  2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.
  அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும்இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது.இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல்            குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஒற்றைச்செறுப்பு - ஹஸனீ

إذا انْـقَطَعَ شِسْعُ نَعْلِ أحَدِكُمْ ، فلا يَمْشِ في الأخرى حَتّى يُصْلِحَها
 
 
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா
 
அவர்கள் அறிவிக்கிறார்கள்
 
“ உங்களில் ஒருவரின் செருப்பின் வார் அறுந்துவிட்டால் அதை சரி செய்யும் வரை மற்றொரு செருப்பில் மட்டும் நடக்கவேண்டாம்” (முஸ்லிம்)
 
 
ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது.
 
அப்படி இருக்கவும் கூடாது,
 
மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான்
 
சிறப்புற்றிருப்பார்கள்
 
ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்
 
ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும்
 
சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.
 
கிட்டதட்ட 1400 ஆண்டுகளுக்கு முன் செருப்பு அணிந்து நடப்பவர்களை தேடிப்பிடிக்கவேண்டிய காலத்தில்,
 
செருப்பு அணிந்து நடப்பது குறித்தும், ஒரு செருப்பு அணிந்து நடக்கவேண்டாம் என்று பேசுவது
 
எவ்வளவு பெரிய முன்னேற்றம்.
 
எவ்வளவு பெரிய கலாச்சார வார்த்தை.
 
பெருமானாரின் போதனைகள் எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்திருக்கும்.
 
இன்னும், உலகில் எப்பொருளானாலும் அநீதம் கூடாது என்று போதித்தவர்கள் நபியவர்கள்.
 
செறுப்பு போடுகிற விஷயத்திலும் இதுவே அளவுகோள் முன்னிறுத்தப்படுகிறது.
 
இதன் தொடராக இன்னொரு ஹதீஸிலே நபியவர்கள் கூறினார்கள்
 
உங்களில் ஒருவன் ஒரு செறுப்பு அணிந்து நடக்கவேண்டாம்,
 
அணிந்தால் முழுமையாக (இரண்டையும்) அணியட்டும் அல்லது முழுமையாக (இரண்டையும்) கழைந்துவிடட்டும்.
 
இன்னும் ஒரு ஹதீஸில் நின்று கொண்டு செறுப்பு அணிய வேண்டாம் அமர்ந்து கொண்டு அணியட்டும் என்றும் அறிவுறித்தியுள்ளார்கள்.
 
ஏனெனில் அந்த காலங்களில் அணிந்த செறுப்புகள் நம் இன்றும் அணியும் ஷு போன்ற நிலையில் உள்ளது.
 
ஆகையால், அதை அணியும் போது நின்று கொண்டு அணிந்தால் அணிபவருக்கு சிரமம் ஏற்படும்  என்ற அடிப்படையில் அறிவுறித்தினார்கள்.
 
இந்த தடை நாம் இன்று பயன்படுத்தும் செறுப்புக்கு அல்ல என்று மார்க்க அறிஞர்கள்  கூறுகிறார்கள்.
 
செறுப்பு அணியும் ஒழுக்கத்தை கூட நமக்கு சொல்லிக்கொடுத்த எப்பொருமான எத்துணை அற்புதமானவர்கள்.
 
நம்மீது எத்துணை அக்கறையோடு வழிகாட்டியுள்ளார்கள்.
 
ஆகையால், இறைவன் குறிப்படுவது போன்று நபியவர்கள் நம் உயிரை விட நமக்கு மேலானவர்கள்.
 
அவர்கள் மீது எவரும் கலங்கம் கற்பிக்க நினைத்தால் நம் உயிரைக்கொண்டு அந்த கலங்கத்தை ஒரு முஸ்லிம் துடைத்தெடுக்க தயங்கமாட்டான்.
 
 
- பேரா. இஸ்மாயில் ஹஸனீ

அன்புத் தம்பீ ! ---சிராஜுல் மில்லத்

அஸ்ஸலாமு அலைக்கும்

அருளாளன் உனக்கு எல்லா நலன்களும் அருள்வானாக !

  நம்முடைய தாய்ச்சபையாகிய முஸ்லிம் லீகின் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா அதற்குரிய கண்ணியத்துடனும், சிறப்புடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

  1988 மார்ச் 10-ம் தேதிக்கும் ஏப்ரல் 20-ம் தேதிக்கும் இடைப்பட்ட நாற்பது நாட்களில் தமிழகத்தில் மட்டும் நானூறு பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. நாலாயிரத்திற்கு மேல் எண்ணிக்கையுள்ள கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.

  தம்பீ ! ஓராயிரம் கொடிகளை ஏற்றி வைத்து ஒரு நூறு பொதுக்கூட்டங்களில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

  மிஃராஜ் தினவிழா சொற்பொழிவுகளில் கலந்துகொள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருந்த எனக்கு அபுதாபியில் அதிர்ச்சி தரும் மகிழ்ச்சி வைத்திருந்தது. அரபு இந்தியன் அஸோஸியேஷன் அளித்த வரவேற்புரையில் கலந்து உரையாற்றிய பிறகு இரவு பத்து மணி அளவில் கேரள முஸ்லிம் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தினர் நடத்திய விழாவுக்கு அழைத்துச் சென்றனர். அலைகடல் தாண்டி அரபு அமீரகத்தில் வாழும் அந்தத் தோழர்கள் நம் தாய்ச்சபையின் நாற்பதாவது ஆண்டு நிறைவுக்கு விழா எடுத்திருந்தனர். இரவின் பிந்திய நேரத்தில் அங்கே சென்று பார்த்தால், கேரள ராஜ்யம் மல்லப்புரத்தில் நடக்கும் முஸ்லிம் லீக் கூட்டம்போல் பிரம்மாண்டமான கூட்டம்.

  கேரள இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் தலைவர், அந்த ஸ்தாபனத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் 17,000 பேர் – கேரள முஸ்லிம்கள் அத்ல் உறுப்பினர்களாக இருப்பதாகவும், அபுதாபி கிளையில் மட்டும் 6000 பேர் உறுப்பினர்களாக விளங்குவதாகவும் குறிப்பிட்ட அவர், காதோடு காதாக – பெருமிதம் தொனிக்க அத்தனை பேரும் முஸ்லிம் லீகினர் என்று கூறியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அக்கரைச் சீமைகளிலே வாழும் நம்முடைய மக்களுக்கும், கேரள முஸ்லிம் சகோதரர்கள் நம் சமுதாய சபையில் காட்டும் அக்கரையைக் காட்ட வேண்டாமா என்ற ஏக்க உணர்ச்சியும் எனக்கு ஏற்பட்டது.
  சுதந்திரம் பெற்ற பாரதத்தில் 40 ஆண்டுகாலம் நற்சேவை புரிந்த ஒரு இயக்கத்திற்கு நாம் எடுக்கும் விழா வரலாற்றின் பேருண்மைகள் பலவற்றை வெளிக்கொணரும் வாய்ப்பாக ஆகிவிட்டிருந்தது.
  சரியாகச் சொல்வதானால் நம் இயக்கத்தின் வயது 82. அடிமை இந்தியாவிலே 40 ஆண்டுகள் சேவையாற்றி, சுதந்திர இந்தியாவிலும் 40 ஆண்டுகள் பணியை முடித்திருக்கிறது முஸ்லிம் லீக் உலக சரித்திரத்தில் அது ஆற்றியிருக்கிற அளப்பரிய சேவை நாள்தோறும் எழுதப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
  சில இயக்கங்களுக்கு வரலாறும் இல்லை. வழிவாறும் இல்லை. சில இயக்கங்களின் தோற்றங்களை நினைவுகூர்ந்தால் வேடிக்கையாகத் தென்படும். சில இயக்கங்கள் வரலாற்றின் சுவடுகளில் மறைந்து விட்டன. சில வரலாற்றின் வரிகளில் சிக்கிகொண்டு தவிக்கின்றன.
  ஆனால் முஸ்லிம் லீக் என ஒரு வரலாறு உண்டு என்பது மட்டுமல்ல, அதன் செயல்பாடுகள் எல்லாம் தனித்தனி வரலாறுகளாகப் பிரிந்துகொண்டு செல்கின்றன.
  தம்பீ ! இந்திய நாட்டு வரலாற்றோடு முஸ்லிம் லீகை எந்தக் காலத்திலும் பிரித்துவிட முடியாது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லிக் காட்டுகிறேன்.
  மறைமலைநகரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு சென்ற மாதம் 23-24 தேதிகளில் நடந்து முடிந்ததல்லவா? அதில் அடிக்கடி பாடப்பட்டு அதிகமாக விரும்பப்பட்ட பாடல் எது தெரியுமா?
  “ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா”
  அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்திய நாடே”
  தம்பீ ! இந்தப் பாடலை இசைக்கலைஞர்கள் பக்கவாத்தியங்களோடு பாடினார்கள். பாடக்கேட்ட பிரதிநிதிகள் சேர்ந்து பாடினார்கள். வந்திருந்த பொதுமக்களும் எல்லா மொழி பேசக்கூடியவர்களும் வாய்விட்டுப் பாடினார்கள். இசைக் கலைஞர்கள் பாடிக்கொண்டிருக்கும் போதே மேடையில் தலைவர் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து வந்தார். மைக்கை கையில் வாங்கி மிகவும் எடுப்பாக உருது மொழியிலான அந்தப் பாடலை அச்சா சுத்தமாக அழுத்தந்திருத்தமாக – முழுமையாகப் பாடி முடித்தார். மத்தியப் பிரதேச முதம் அமைச்சராகவும், பஞ்சாப் மாநில ஆளுநராகவும் பணியாற்றி இன்று மீண்டும் மத்திய அமைச்சரவையிலே இடம் பெற்றுள்ள அர்ஜுன் சிங் தான் அப்படிப் பாடினார்.
  தம்பீ ! இப்போது நடந்த காங்கிரஸ் மாநாட்டிலே மட்டுமல்ல, நம் நாடு விடுதலை பெற்ற அந்த நள்ளிரவில் 1947 ஆகஸ்ட் 15 பன்னிரண்டு மணி அடித்து ஓய்ந்த உடன் உலகமே துயில் கொண்டிருந்த அந்த வேளையில் – இந்தியா விழித்தெழுந்தது. ஒரு புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியது. அந்த நேரத்தில் – இருநூறு ஆண்டுகளின் அடிமைத்தளை அகன்ற அந்த நற்போதில் பொங்கி வந்த பெருமகிழ்ச்சியை கீதமாக இசைக்க, டெல்லி நாடாளுமன்ற மணிமண்டபத்தில் கூடியிருந்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களான நம் தேசத் தலைவர்கள் – விரும்பியபோது டாக்டர் சுசீலா நய்யார் அவர்களும், சுசேதா கிருபளானி அவர்களும் குரலெடுத்துப் பாடிய சுதந்திர கீதம், “ஸாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” என்பதாகும்.
  அது மாத்திரமல்ல, தம்பீ ! விண்ணை வலம் வந்த முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவிடம் அவர் விண்ணில் மேலே இருந்து இந்தியாவைப் பார்த்தபோது அது எப்படி இருந்தது என்ற பிரதமர் இந்திரா கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : “ஸாரே ஜஹான்ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” என்பதாகும்.
  அந்தப் பாடல், இன்று இந்தியாவில் உள்ள எல்லா வானொலி நிலையங்களில் இருந்தும் ஒலிபரப்பப்படுகிறது. எல்லா தொலைக்காட்சி நிலையங்களில் இருந்தும் ஒளிபரப்பப்படுகிறது.
  கோடானு கோடி இந்தியக் குழந்தைகள், தாம் பயிலும் இடங்களில் குரலெடுத்துப் பாடுகிறார்கள். அதைப் பாடும்போது தாங்கள் அனைவரும் இந்தியர், இந்தியா உலகிலேயே சிறந்த நாடு என்ற பெருமிதத்தைப் பெறுகிறார்கள்.
  தம்பீ அந்தப்பாட்டு சுதந்திர தினத்தில் எழுதப்பட்டது அல்ல. அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. ஆமாம், பாட்டு எழுதப்பட்டு 60 ஆண்டு பூர்த்தியாகிறது. அதை எழுதிய கவிஞர் இறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
  இது யார் எழுதிய பாட்டு என்று இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் தெரியும். 21-ம் தேதி அவர் நினைவைப் பசுமையாக்குவதற்கே இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு கண்ணியப்படுத்தியிருக்கிறது.
  அவர் பெயரை இன்னும் நான் எழுதிக் காட்டாமல் இருக்க முடியாது. அவர் பெயர் அல்லாமா முகம்மது இக்பால் ! கீழை நாட்டு தத்துவங்களில் ஊறித் திளைத்து, மேலை நாட்டு அறிவமுதத்தை மாத்தி – அற்புதமான தத்துவங்களைக் கவிதைகளாக்கித் தந்த உலக மகாகவி அல்லவா முகம்மது இக்பால்.
  அவருடைய தாய்மொழியாகிய பஞ்சாபிலும், இந்தியத் துணைக் கண்டத்து மொழிகளாகிய உர்துவிலும், உலக கவிதை மொழியாகிய ஃபார்ஹீயிலும் பல ஆயிரம் கவிதைகளை எழுதி மனித குலத்திற்குப் பரிசளித்த மேதை இக்பால். ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் அவர் எழுதிய நூற்கள் இன்றைய அறிஞர்களால் ஆய்ந்து எடுத்தாளப்படும் திறன் பெற்றவையாக விளங்கி வருகின்றன.
  பிரிக்கப்படாத இந்தியாவில் பிறந்து வாழ்ந்து இறந்த அவரை, பிரிக்கப்பட்ட பாகிஸ்தானின் பிதாமகன் என்று அந்த நாட்டு மக்கள் போற்றிப் புகழ்கிறார்கள். அவர் பூத உடலை பாகிஸ்தானத்து லாகூர் தாங்கி நிற்கிறது. ஆனால் அவர் புகழ்க்கீதமோ இந்தியாவின் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது.
  பாகிஸ்தான் அவரை உரிமை பாராட்டுகிறது என்பதற்காக, பாரதம் அவரைப் போற்றாமல் விடுவதில்லை என்று எடுத்துள்ள முடிவு நம் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லிக் காட்டலாம்.
  தம்பீ ! நீ நினைப்பது எனக்குப் புரிகிறது.
  நம் இயக்கத்தின் நாற்பதாவது ஆண்டு விழாவைப் பற்றிச் சொல்ல வந்த நான், இடையே இக்பாலையும், இக்பாலுடைய கீதத்தையும் பற்றி விரித்துரைப்பானேன் என்று தானே நினைக்கிறாய்.
  அந்த அமரகவி இக்பால், உன் தாய்ச்சபையாகிய முஸ்லிம் லீகின் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவரடா, தம்பீ 1929-வது ஆண்டு முஸ்லிம் லீகின் மாநாடு அவர் தலைமையில் தான் நடந்து சிறந்தது. அமரகவி இக்பாலைப் போன்ற சான்றோர்களால் கட்டி வளர்க்கப்பட்ட இயக்கம் தான் உன் தாய்ச்சபை. அதனால் தான் நான் அடிக்கடி உன் வரலாற்றையும், வழிவாற்றையும் வற்புறுத்தி வருகிறேன். உன் வரலாறு புனிதமானது. உன் வழிவாறு மேன்மையானது நீ கடந்து செல்லும் பாதை எல்லாம் சரித்திரத்தின் சுவடு பதிந்து செல்கிறது. இதெல்லாம் தெரியாதவர்கள் உன்னை நிழலாகக் காட்டுகிறார்கள். உன் குடை நிழலில் தான் உலகமே செழிப்புற்றது என்பதை சொல்லிக்காட்ட வேண்டாமா?
  தம்பீ ! எங்கெல்லாம், எப்போதெல்லாம் “ஸாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” என்ற கீதமிசைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நம் இயக்கத் தலைவரின் இதய ஒலி அது என்ற உணர்வைப் பெறுவாய் என்று நான் நம்புகிறேன்.
  நம் தாய்நாட்டைப் பற்றி இதைவிட சிறப்பாகப் பாடும் புலவன் இனி பிறக்கப்போவதில்லை.
  இந்தியாவின் நலவாழ்விலிருந்து நம்மைப் பிரிக்க முற்படுவோரின் முயற்சி வெற்றி பெறப் போவதுமில்லை !
                     
                                         உனதன்புள்ள “ஷிப்லீ”
                                 (1988-ம் ஆண்டு மே மணிவிளக்கு
                            மாத இதழிலிருந்து எடுத்து அனுப்பியவர்
                                          ஆலிமான் ஜியாவுதீன் )

நன்றி :
வெற்றி முரசு
ஏப்ரல் 4 – 10, 2006

பனாத்வாலாவும்...பதர்களும்...!

- வெ. ஜீவகிரிதரன்

""குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா’’. இவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். உயிரனைய ஷரிஅத் சட்டங்களுக்கு இந்திய அரசாலும், நீதிமன்றங்களாலும் துரும்பளவேனும் பாதிப்பு ஏற்பட இருந்த தருணங்களிலெல்லாம் சிலிர்த்தெழுந்து தம் சிம்ம கர்ஜனையால் இந்திய பாராளுமன்றத்தை அதிர வைத்தவர். இந்திய நாட்டின் சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மகுடம் சூட்டப்பட்டவர். தாய்ச் சபையின் மணிவிழா மாநாட்டில் இலட்சோப இலட்சம் லீகர்களின் அணிவகுப்பு மரியாதையை பெருமை பொங்க நெஞ்சு நிமிர்த்தி """"சலாம்’’ கூறி ஏற்றுக் கொண்டவர். 25.6.2008- ல் இம் மண்ணுலகை விட்டு மறைந்து 5 வருடங்கள் ஆகிறது.

பனாத்வாலா அவர்கள் குஜராத் மாநிலம் கட்ச் பகுதி மேமன் முஸ்லிம்கள் குடும்பத்தைச் சார்ந்தவர். 15.8.1933ல் மும்பையில் பிறந்தார். மெத்தப்படித்தவர் ஆசிரியராக தொண்டுகள் ஆற்றி வந்தவர். முழுநேர சமுதாய அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொள்வதற்காக ஆசிரியர் பணியை உதறியவர். 1960 ல் மும்பை முஸ்லிம் லீகின் பொதுச்செயலாளர் ஆனார். 1967ல் முதன் முதலாக மராட்டிய மாநில சட்டசபைக்கு முஸ்லிம் லீகின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1972ல் இரண்டாவது முறை சட்டசபை உறுப்பினரானார். தம் 10 வருட சட்டமன்ற பணியில் பல்வேறு விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து அதிசயத்தக்க விதத்தில் வாதங்களை முன்வைத்தார். இவர் பங்கு கொள்ளாத விவாதங்களே இல்லை. என்னும் அளவிற்கு அனைத்து துறைகளுக்கான விவாதங்களிலும், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரை பாதிக்கும் அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்தவர். மராட்டிய மாநில முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை பற்றிய தனிநபர் தீர்மானம், முஸ்லிம் தனியார் சட்டம் குறித்தான விவாதம், பசுவதை தடுப்புச்சட்ட விவாதம் - அவுரங்கபாத் மற்றும் நாக்பூர் மதக் கலவரங்களை பற்றிய விவாதம் - வந்தே மாதரம் பாடல் பற்றிய சர்ச்சைக்குள்ளான விவாதம் - குடும்ப கட்டுப்பாடு திட்டம் குறித்தான விவாதம் - கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்த விவாதம் ஆகியவை வரலாற்றின் பக்கங்களில் என்றும் அவர் புகழ் பாடும் விவாதங்களாகும். இது தவிர கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் தேவை, மக்களின் அடிப்படை தேவைகள் பற்றிய விவாதங்களிலும் பங்கெடுத்து ஆக்கப்பூர்வமான தன் விவாதங்களை அழகாக முன்னெடுத்து வைத்தவர்.

இவரின் வாத திறமையும், சமுதாயம் குறித்த பார்வையும், மராட்டிய மாநிலத்திற்கு மட்டுமே குடத்திலிட்ட விளக்கு போல் இருந்துவிட கூடாது என்பதற்காக இவரை குன்றின் மேல் ஏற்றிய விளக்காக 1977ல் முஸ்லிம் லீக் இவரை கேரள மாநிலம் பொன்னானி பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தது. தொடர்ந்து 7 முறை அதே தொகுதியிலிருந்து பாராளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மராட்டிய மாநில சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகளை விட பலமடங்கு அதிகமாக பாராளுமன்றத்தில் ஆற்றினார்.

இந்தியாவிலே பொது சிவில் சட்டம் கொண்டுவர வகை செய்யும் இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவை ரத்து செய்யகோரும் மசோதவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து இந்திய தேசத்தின் அடிப்படையான, வேற்றுமையில் ஒற்றுமை, சமயசார்பின்மை, சமய நல்லிணக்கம், ஆகியவற்றின் இலக்கணத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வகுப்பெடுத்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை தன்மையை காப்பாற்ற வாதாடி வென்றார். அஸ்ஸாம் கலவரங்களில் அப்பாவி முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டு மென கர்ஜனை புரிந்தார். பாபரி மஸ்ஜித் தகர்ப்பிலே பங்கு கொண்டு குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட திரு.எல்.கே. அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, குமாரி உமாபாரதி ஆகிய மூவரையும் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்ககோரி வீரச்சமர் புரிந்தார் - """"ராம ஜென்ம பூமி நியாஸ்’’ """"விஷ்வ இந்து பரிஷத்"" ஆகிய அமைப்புகளின் மதவாத பாஸிச நடவடிக்கை களை பாராளுமன்ற விவாதங்களில் தோலுரித்துக் காட்டினார். குறிப்பாக ஷாபானு வழக்கின் தீர்ப்பு மூலம் இந்தியாவில் உச்சநீதிமன்றம் ஷரிஅத் சட்டத்தினை கேள்விக்குள்ளாக்கிய போது ஷரிஅத் சட்டத்தை பாதுகாக்க தனிநபர் மசோதா கொண்டுவந்தார். இந்த மசோதா பாராளுமன்றத்தின் 4 கூட்டத்தொடர்களில் ஏழு அமர்வுகளில் கிட்டத்தட்ட 12 மணிநேரம் 21 நிமிடங்கள் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஒரு தனி நபர் மசோதா இவ்வளவு நேரம் விவாதத்திற்குள்ளானது பாராளுமன்ற வரலாறாகும். இந்த விவாதத்தின் போது மத்திய அரசு சார்பில் தாமே இந்த பொருள் குறித்து அரசு அலுவல் மசோதா கொண்டு வருவதாக வாக்களித்து பனாத்வாலா அவர்களின் தனிநபர் மசோதாவை திரும்ப பெற கோரியது. அதன் பின்னர் அன்றைய சட்ட அமைச்சர் திரு. ஏ.கே.சென் அவர்கள் பனாத்வாலா அவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து அதன் பின் முஸ்லிம் பெண்கள் (மணவிலக்குக்கு பின்னரான உரிமைப் பாதுகாப்பு) மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக்கினார்.

அன்றைக்கு ஷரீஅத் பாதுகாப்புக்காக பனாத்வாலா அவர்கள் பாராளுமன்றத்திலே தனிநபராக வாதாடிய போதும் இந்திய முஸ்லிம்கள் அனைவரின் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலித்ததன் பலனாகவே இன்று வரை இந்த நாட்டில் ஷரீஅத் சட்டத்திற்கான அபாயங்கள் தலைதூக்காமல் காப்பாற்ற முடிந்தது. இந்த நாட்டின் முஸ்லிம்கள் அனைவரின் ஒரே பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. ஷரீஅத் சட்ட பாதுகாவலர் பனாத்வாலா அவர்களின் ஐந்தாவது நினைவு நாளில் நாம் மீண்டும் ஒரு சோதனையை சந்திக்க தயாராக வேண்டும்.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன் றத்தில் திருமதி.பதர் சயீத் என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம் பெண்கள் நலன் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் என தன் மனுவில் தம்மைப் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம் பெண்களை பாதுகாக்க சரியான சட்டங்கள் இல்லை எனவும், பொது சிவில் சட்டம் கொண்டு வர வழிசெய்யும் அரசியல் சாசனம் பிரிவு 44 இருந்தும் பொதுவான சட்டங்கள் சட்டப்பாதுகாப்புகள் இதுவரை முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் குறை கூறுகிறார். முஸ்லிம் மணவிலக்கு குறித்து காஜிகள் வழங்கும் சான்றிதழ்கள் செல்லாது என அறிவிக்க கோரியும். காஜிகளுக்கான அதிகாரமும், தகுதியும் செல்லாது என அறிவிக்க கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. ஷரீஅத் சட்டங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை மதிப்புகள் மற்றும் உயரிய சிறப்புகளை கொண்டவை. அவற்றின் எல்லைகளை எந்த ஒரு முஸ்லிமும் மீற முடியாது. இந்த சட்டங்கள் முஸ்லிம்களின் மார்க்க கடமை-முஸ்லிமாக இருப்பதன் அடிப்படை நிபந்தனை.

""""இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகள். அவற்றை நீங்கள் மீற வேண்டாம். எவர் அல்லாஹ்வின் சட்டவரம்புகளை மீறுகிறார்களோ அத்தகையோர் தான் அநியாயக்காரர்கள் ( 2 : 229 )

""""உங்கள் மீது அல்லாஹ்வின் கட்டளையாக ( இது விதியாக்கப்பட்டுள்ளது) (4 : 24)

இவை திருமணம் மணவிலக்கு குறித்த சட்டங்களை வகுத்துள்ள புனித குர்ஆனின் ஆயத்துக்கள். இவற்றுக்கு மாறாக எந்த முஸ்லிமும் நடக்க முடியாது. அப்படி மார்க்கச் சட்டங்களை மீறி நடப்பவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் எனவும் புனித மறை எச்சரிக்கிறது.

எவர் அல்லாஹ்க்கும் அவனுடைய தூதருக்கும் மறு செய்து அவனுடைய சட்ட வரையறைகளையும் மீறுகிறனோ அவரை நரகத்தில் அவன் புகச்செய்வான் அவர் அதில் நிரந்தமாக இருப்பார் இன்னும் அவருக்கும் இழி தரும் வேதனையும் உண்டு. ( 4 : 14 )

இந்த ஷரிஅத் சட்டங்களை 1937 லேயே இந்திய அரசு (அன்றைய பிரிட்டிஷ் அரசு )ஏற்றுக் கொண்டது. இந்திய முஸ்லிம்களின் வாரிசுரிமை, பெண்களின் சொத்துரிமை, திருமணம், மணவிலக்கு (தலாக், இலா, ஜிகர், லியன்,குலா ) மணக் கொடை,வாழ்க்கை பொருளுதவி, டிரஸ்ட், வக்ப் ஆகிய விவகாரங்களில் ஷரிஅத் சட்டத்தின் படியே முடிவெடுக்கப்பட வேண்டும் என ஷரிஅத் சட்டம் 1937 கூறுகிறது. இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25 மதவழிப்பட்ட நடவடிக்கைகளை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் ஷரிஅத் படி நடப்பது அவனுடைய மார்க்க கடமை மட்டுமல்ல, நம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையும் கூட. இந்த ஷரிஅத் சட்டங்களை மெத்த படித்த அறிஞர்கள் தான் இவற்றுக்கான சரியான விளக்கங்களை கூற முடியும். இந்த நாட்டின் நீதிமன்றங்கள் ஷரிஅத் சட்டத்திற்கான வியாக்கியானங்களை தர முடியாது. மார்க்க அறிஞர்களால் மட்டுமே செய்ய முடிந்த காரியம் அது. இந்த மார்க்க அறிஞர்கள் தான் காஜிகள் என்று அழைக்கப்படு கின்றனர்.

காஜிகள் என்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க சட்ட வல்லுனர்கள். முகலாயர் காலத்திலேயே இந்தியாவில் நாடெங்கிலும் காஜிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு வந்த ஆங்கிலேயர் இந்த காஜிகள் நியமனத்தை தொடர்ந்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க பிரச்சனைகளில் நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலன பணிகளை காஜிகள் செய்து வந்தனர். 1857 ல் நடைபெற்ற """"சிப்பாய் கலகம்"" என சிறுமைபடுத்தப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்கள் பெரும்பங்கு ஆற்றியது கண்டு பயந்த ஆங்கிலேயர், காஜிகளின் அதிகாரங்களை பறித்தனர். ஆயினும் மார்க்க விஷயங்களில் முஸ்லிம் சமுதாயம் முற்ற முழுக்க காஜிகளின் ஆலோசனைப்படியே நடந்து வந்தது. அதனால் மீண்டும் ஆங்கிலேய அரசு காஜிகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடிவு செய்து 1880 ல் காஜிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் அரசாங்கமே காஜிகளை நியமித்தது. இந்த சட்டத்தின் படி காஜிகள் என்பவர்கள் இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு உட்பட்ட திருமணங்கள், சடங்குகளில்- நிகழ்வுகளில் முன் நிற்பார்கள் என்பதே. இந்த சட்டம் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு திருமணமோ, மணவிலக்கோ, பாகப் பிரிவினையோ, இஸ்லாமிய மார்க்க சட்ட விதிகளின் படி முறையாக நடந்ததா இல்லையா என சான்றுரைக்கும் பணியைத்தான் காஜிகள் செய்கிறார்கள். மார்க்க சட்டங்களின்படி ஒரு மண விலக்கு நடந்தது என மார்க்க அறிஞராக உள்ள காஜிகள் தான் சொல்ல முடியும்-மார்க்க சட்டங்கள் தெரியாதவர் செல்ல முடியாது.

இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலே தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கு இந்த மார்க்க அறிஞர்களான காஜிகள் """" மணவிலக்கு மார்க்க சட்டப்படியே நடந்தது"" என சான்றுரைப்பதை தடை செய்யக் கோருகிறது. அப்படியானால் யார் சான்றுரைக்க? நீதிமன்றமா? நீதிமன்றம் சான்றுரைக்க வேண்டுமெனில் மார்க்க சட்டங்கள் என்ன என்பதை தொகுத்து நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டியது அரசின் கடமையல்லவா? இன்றைக்கு இந்துக்கள் சட்டம், கிறிஸ்தவர்கள் சட்டம், பார்சிகள் சட்டம் என தனித்தனியே பாராளுமன்றத்தில் நிறைவேற்றி வைத்திருப்பது போலவே முஸ்லிம் தனியார் சட்டங்களையும் தொகுத்து பாராளுமன்றத்தின் மூலம் சட்டமாக கொண்டு வரவேண்டும் என்பது தான் இவர்களின் வாதம். இந்த மார்க்க சட்டங்களெல்லாம் மனிதன் இயற்றியது அல்ல. இறைவன் இறக்கி வைத்தவை என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. இந்த அடிப்படை மத நம்பிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில முஸ்லிம் தனியார் சட்டங்களை நிறைவேற்ற சொல்வது, இந்திய அரசியல் சாசன பிரிவு 25ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கே முரணானது. இது பொது சிவில் சட்டத்தை புழக்கடை வழியாக கொண்டு வரும் நரித்தனம். உலகக் கல்வியை மெத்தப் படித்த மேதாவிகள் மார்க்க கல்வியை முறையாக படிக்காததால் ஏற்படும் தள்ளாட்டம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் உயரிய தத்துவம். அதன் அடிப்படையை ஆட்டம் காண வைப்பது பொது சிவில் சட்டம் பற்றிய கோரிக்கை. ஷரிஅத்தை கடை பிடிக்காதவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது. எனவே ஷரிஅத்தை பாதிக்கும் இது போன்ற வழக்குகளை எதிர் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாக இருக்கிறது.

இந்திய நாட்டிலே எப்போதெல்லாம் அரசாலும், நீதிமன்றங்களாலும், அடிப்படை வாதிகளாலும் முஸ்லிம் சமுதாயத்திற்கும், மார்க்க சட்டங்களுக்கும் ஆபத்துகள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு போர்ப்படை வீரனாக முன்னின்று சமர் புரிந்து இச் சமுதாயத்தையும், மார்க்க சட்டங்களையும் காத்து வந்துள்ளது வரலாறு. அதுபோலவே மேற்சொன்ன பொது நல வழக்கிலும் முஸ்லிம் லீக் தன்னை ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு ஷரிஅத் சட்டங்களை பாதுகாக்கும் பணியினை செய்யும். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாகிபு முதல் முஜாஹிதே மில்லத் குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா வரை நம் தலைவர்கள் காட்டிச் சென்ற களத்திலே நம் யுத்தம் தொடரும்.  

களத்திலிருந்து வீடு சேரும்பேறுநெல்மணிகளுக்கு மட்டுமே- பதர்கள் வீடு சென்று சேருவதில்லை.

“கலைமாமணி” கவிஞர் நாகூர் சலீம் நினைவுகள்

புகழ் பெற்ற இஸ்லாமியப் பாடலாசிரியரான கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் மறைவுச் செய்தி,மிகுந்த வருத்தத்தை அளித்தது.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்...

இஸ்லாமியச் செய்திகளைத் தமிழுலகுக்குக் கொண்டு சேர்த்த வல்லமை மிக்கது அவருடைய தெள்ளு தமிழ்p பாடல்கள்.அவருடைய தமிழால் அவர் இசைபட வாழ்ந்தார்;வாழ்வார்...

முக்கியமானதொரு சமுதாயப் பணியில் அவரும் நானும் பங்குபெற்ற ஒரு கால கட்டத்தில் அவரிடம் பேசிப் பழகும் சந்தர்ப்பங்கள் எனக்கு இயல்பாக அமைந்தன.அப்போதெல்லாம் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்திகள் மொழி,இலக்கியம்,திராவிட இயக்கம் முதலியவற்றில் அவர் பதித்த முத்திரைகளை விவரிப்பவையாய் இருந்தன.அவற்றை எவர் எவரோ பயன்படுத்திக்கொண்ட விவரங்கள் வருத்தம் அளிப்பவையாகவும் இருந்தன.எனினும் உலகம் அப்படியும் இருக்கும் என்பதை அவர் அறிந்தவராகவே இருந்தார்.

பேரறிஞர் அண்ணா மறைந்த சிறிது காலத்தில் சென்னை கடற்கரையில் முதன் முதலாக நடந்த முப்பெரும் விழாவுக்குக் கூடியிருந்த கூட்டம் அசாதாரணமானது.அந்த மாபெரும் கூட்டம்,அப்போது ஏற்பட்ட இரைச்சல் முதலியவற்றைக் கவனித்த எனக்கு,இந்த மக்கள் எப்படி ஒரு கட்டுக்குள் வருவார்கள்?எப்படி அமைதி ஏற்படும்?எப்படிக் கூட்ட நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள்?என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

அப்போது ஒலிவாங்கியில்(மைக்கில்) யர்ரோ தட்டுவது போலச் சத்தம் கேட்டது... அதையடுத்து,”எங்கே சென்றாய்?எங்கே சென்றாய்? எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?”என்று மறைந்த அண்ணாவைத் தேடுவதைப் போல எழுதப்பட்ட பாடலை(த் தொகையறாவை அடுத்து) இசை முரசு நாகூர் ஹனீஃபா அவர்கள் பாடத்தொடங்கினார்.

இப்போது எண்ணிப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது.

அங்கே கூடி இருந்த லட்சக் கணக்கான மக்களும் ஒரு நிமிட நேரத்தில் அமைதியானார்கள்;அண்ணாவை இழந்த சோகத்தை எண்ணி உறைந்தோர் பற்பலர்;உருகினோர் மிகப் பலர்.அவ்வளவு பேரும் அந்த இசை வசமாகி அண்ணாவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி அவற்றை அசை போடலாயினர்.

அதை ஏன் இப்போது இங்கே நினைவு கூர்கிறேன் என்று கேட்கிறீர்களா?

அந்தப் பாடலை எழுதியவர் இன்று மறைந்த கவிஞர் நாகூர் சலீம் அவர்கள்.

அண்ணாவைப் பற்றி மட்டுமல்ல-மற்ற திராவிடக் கட்சித் தலைவர்கள் சிலரைப் பற்றி அவர் எழுதிய பாடல்களும் வெவேறு வகைகளில் ”ஹிட்” ஆனவைதான்.

அவருடைய பாடல்கள் அளவுக்கு அவர் பெயர் பரவவில்லையே என்று என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஆற்றல் மிகு கவிஞர் நாகூர் சலீம் அவர்களை நாம் இன்று இழந்துவிட்டாலும் போற்றத்தக்க அவருடைய இஸ்லாமிய இசைப் பாடல்களில்-அவற்றின் கருத்துக்களில் அவர் வாழ்ந்து வருவார்.

அவருக்கு அல்லாஹ் பேரருள் பாலிப்பானாக.

அவரை இழந்து வாடும் இதயங்களுக்கு வல்ல அல்லாஹ் ‘அழகிய பொறுமை’யை அளித்து அருள்வானாக.

                ----ஏம்பல் தஜம்முல் முகம்ம்து.

தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற, பிரபல இஸ்லாமியப் பாடலாசிரியர் கவிஞர் நாகூர் சலீம் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, 01-06-2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.  இன்று மாலை 4.30  மணியளவில் அவரது உடல் நாகூரில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. 

வண்ணக் களஞ்சியப் புலவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா உட்பட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை. 

இவர் எழுதிய “காதில் விழுந்த கானங்கள்” என்ற நூலை “பலாச்சுளை பாடல்கள்” என்று வர்ணித்து அணிந்துரை வழங்கியிருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி. “கவிஞர் சலீமின் பாடல்கள், பக்கவாத்திய ஓசைகளையும் விஞ்சி போதங்களின் நாதங்களாக நின்று நிலவுவது தனிச்சிறப்பு” என்று சிராஜுல் மில்லத் மர்ஹூம் A. K. அப்துஸ் சமது சாஹிப் அவர்களின் பாராட்டுப் பெற்றவர். 

“இவருக்கு திரைப்பட உலகில் தக்க வாய்ப்பு கிட்டுமானால், இன்னொரு கண்ணதாசனை நாம் கண்டு களிக்கலாம்; உணர்ச்சி மிக்க பாடல்களில் நம் உள்ளம் குளிக்கலாம்” என்று கவிஞர் மு. மேத்தாவின் அங்கீகாரம் பெற்றவர். கவிஞர் சலீம் எழுதிய “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி” என்ற பாடலைப் பாராட்டி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ஆர் ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், கதை, வசனம், நாடகங்கள், கவிதைகள் படைத்த கவிஞர் சலீம், நாகூரில் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர் இவர். எழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர் ஆடிட்டர் முஹிய்யத்தீன் அப்துல் காதர் ஆகியோரின் தாய் மாமா இவர். அன்னாரின் ஆத்மசாந்திக்கும், மறுமை நல்வாழ்விற்கும், இறைவனிடம் கையேந்துவோமாக! ஆமீன்.

சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து – நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !

தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான தலைவர்கள் உருவானார்கள். ஆனால், அவர்களில் கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் போல் தீர்க்கதரிசனத்துடன் அரசியல் அரங்கில் வலம் வந்தவர்கள் ஒருசிலர் தான்.
  ஒரு தலைவன் என்பவனின் அடையாளம் காலங்களைக் கடந்த பின்னும் சிந்தனையில் உருவான ஒரு கருத்தின் செயல்களால் அதன் பயன்களால் தன் கருத்தை நிலை பெற்றிருக்கச் செய்வதுதான்.
  தன் கருத்தால் தமிழ்நாட்டின் மூலை, முடுக்கு, குக்கிராமம், தொழிற்சாலை, அலுவலகம் என எல்லா இடத்திலும் ஒளியாய் ஒளிர்ந்து நிற்பவர் கண்ணியமிக்கத் தலைவர் ஒருவர்தான்.
  மின்சாரம் இன்றைக்கு அரசுகளின் வளர்ச்சிக்கு உதவும் பெரியதொரு விஷயம். ஒன்றுபட்ட மாகாணமாக இருந்தபோதே அனைவருக்குமாக மின்சாரத் தேவைக்காக தொழிற்துறை வளர்ச்சிக்காக சுரங்கத் தொழில் வளர்ச்சிக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர் ஒரே ஒருவர் தான். இதைச் சொல்வதற்கு காரணம் உண்டு. இன்றைக்கு மாநிலத்தை ஆளும் தி.மு.க. என்ற கட்சியே உருவாகாத காலத்தில் 1948 ல் மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
  கட்சியின் தலைவர் என்ற பொறுப்பில் காயிதெ மில்லத் அவர்கள் விளங்கியபோது 1948 மார்ச் மாதம் 22 ம் தேதி சென்னை மாகாண சட்டமன்றத்தில் அன்றைய தொழில் அமைச்சராக கோபால் ரெட்டி அவர்கள் இருந்தபோது கவன ஈர்ப்புத் தீர்மானமான எதிர்க்கட்சித் தலைவரான காயிதெமில்லத் அவர்கள் மாகாணத்தை தொழில்மயப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தென்னாற்காடு நெய்வேலியில் நிலக்கரி இருப்பதாக நான் கூறிய பின்னரும் அரசு அது தொடர்பாக என்ன ஆய்வு செய்தது.
  நெய்வேலியில் ஐம்பது டன் லிக்னைட் பூமிக்கடியில் உள்ளது. இதை எடுத்த மாகாண தொழில் வளத்திற்கு பயன்படுத்த அரசு என்ன முயற்சி மேற்கொண்டது? பீஹாரிலுள்ள தான்பாத்தில் சுரங்கம் தொடர்பாக கற்பிப்பிக்கிறார்கள். அங்கு செல்லும் நம் மாணவர்களுக்கு அரசு தர உத்தேசித்துள்ள கல்வி உதவித்தொகை போதுமானதல்ல.
  எனப் பல்வேறு விஷயங்களையும் கூறி பேசுகிறார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசியல் நிர்ணய அவைக்கு தேர்வாகி சென்று விடுகிறார்.
  அந்த ஆண்டு ஒரு சோதனை மிக்க ஆண்டு மட்டுமல்ல. ஒரு சுமையான ஆண்டும் கூட என்றும் சொல்லலாம்.
  1948 காந்தியார் படுகொலை - ஜனவரி
  முஸ்லிம் நேஷனல் கார்டு என்கிற தொண்டர் படை கலைப்பு –பிப்ரவரி
  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடக்கம் – மார்ச்
  அரசியல் நிர்ணய சபையில் பணி – ஆகஸ்ட்
  ஜின்னா சாஹிப் மறைவு – செப்டம்பர்
  ஆயினும் மீண்டும் 1949 ம் ஆண்டு தனக்கு கிடைத்த சென்னை மாகாண சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தும் வாய்ப்பில் 4.3.1949 மீண்டும் நெய்வேலிக்கு நிலக்கரி தொடர்பாக வினவுகிறார்.
  இவரின் வற்புறுத்தலால் நில ஆய்வு அதிகாரிகள் வேண்டா வெறுப்பாக ஆய்வு செய்து குறைந்த மதிப்பீட்டில் நிலக்கரி இருப்பதாக தகவல் தருகின்றனர்.
  அதே மாதம் 22 ம் தேதி சபையில் மீண்டும் நெய்வேலி தொடர்பாக வினாவை எழுப்பி ஏற்கனவே ஆய்வு செய்த அதிகாரிகள் கூறுவது தவறு. அங்கு அதிக அளவில் லிக்னைட் கனிமவளம் இருப்பதாக வேறு இருவரின் அறிக்கையை அவையில் வைத்து வாதாடுகிறார். அரசு நினைப்பதை விட அங்கு அதிக அளவு நிலக்கரி படிவம் உள்ளது என்கிறார்.
  தொழில் அமைச்சரான கோபால் ரெட்டி காயிதெ மில்லத் அவர்களை புத்திசாலித்தனமாக மடக்குவதாக நினைத்து கனம் உறுப்பினர்க்கு அங்கு அதிகளவு நிலக்கரி படிவம் உள்ளது எப்படி தெரியும் எனக் கேட்கிறார்.
  சற்றும் அசராமல் “எனக்கு இந்தத் துறையில் நீண்ட அனுபவம் உண்டு. அந்த இலாக்காவுடன் தொடர்புண்டு. எனவே, என் கருத்தில் தவறுள்ளது என அரசு நிருபிக்க முன் வருமா? அரசு கூறும் உத்தேச அளவை விட அங்கு புதைந்துள்ள கனிமவளம் அதிகம்” என்கிறார்.
  மீண்டும் 23 ம் தேதி அதே மாதத்தில் அதே ஆண்டில் நெய்வேலி குறித்தும் அதை வெட்டி எடுத்து தொழிற்துறை வளர்ச்சிக்காக அரசை வற்புறுத்தி, வலியுறுத்தி பேசுகிறார்.
  புதிதாக விடுதலை பெற்ற அரசும் மாகாண அரசுகளும் தொழில் வளர்ச்சி விஷயத்தில் மெத்தனமாக இருப்பதை அவ்வப்போது சுட்டிக் காட்டும் நிலையில் 1950 அதே மார்ச் மாதம் 23 ம் நாள் அரசின் நிதி நிலை அறிக்கை மீது கருத்துக் கூறும்போது மீண்டும் நெய்வேலி குறித்து பேசுகிறார்.
  அவர் ஒவ்வொரு தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போதும் தொடர்ந்து 1948 முதல் 49,50,51 ஆண்டுகளில் நெய்வேலி தொடர்பாக பேசும்போதெல்லாம் கேலியாகப் பார்ப்பதும் தேவையற்ற ஒன்றை அவர் பேசுவதாகவும் பலரும் கருதினார்கள். இதை அவரே 28.3.1950 ஆண்டில் கூறியுள்ளார்.
  நாட்டின் மாகாணங்களில் முதல் ஐந்தாண்டு திட்டம் அமுலான போது அந்தத் திட்டத்திலும் நெய்வேலி தொடர்பாக அரசு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
  23.10.1951 ம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டத்தில் தான் கூறும் நெய்வேலித் திட்டம் இல்லாததை சுட்டிக் காட்டிப் பேசுகிறார்.
  1952 ம் ராஜ்ய சபைக்கு தேர்வு பெற்று சென்று விடுகிறார். எனினும், தமிழகத்திற்கு அன்றைய சென்னை மாகாணத்திற்கு ஒளிவிளக்கேற்றப் போகும் தன் நெய்வேலி திட்டம் தொடர்பாக மட்டும் அவர் கடைசி வரை வலியுறுத்தப் பின்வாங்கவில்லை.
  1952 மே மாதம் 20 ம் நாள் ராஜ்ய சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது மறக்காமல் நெய்வேலி நிலக்கரி படிவங்கள் அரசின் ஆய்வை விட நிச்சயம் அதிகமாகக் கிடைக்கும். மாகாண தொழிற்துறை வளர்ச்சிக்காக அரசு உடனடியாக இத்திட்டம் தொடங்க வேண்டும் என வற்புறுத்துகிறார்.
  ஒரு வழியாக ஆய்வுகள் நடக்கின்றன. அங்கு காயிதெ மில்லத் அவர்கள் கூறுவது போல் அதிகளவு படிவம் உண்டு என்ற உண்மைகள் வெளியானதும் ஏற்கனவே ஆய்வு செய்த பலமூத்த அதிகாரிகள் தலையைத் தொங்க விட்டனர். அந்தத் திட்டம் தொடங்க தடையாய் இருந்தவர்கள் வெட்கப்படும் அளவுக்கு ஆய்வு முடிவுகள் கண்ணியத் தலைவருக்கு சாதகமாக வந்தன. அரசு திட்டத்தை தொடங்க முடிவு செய்தது. 
  1956 ல் சுரங்கம் தோண்டும் வேலை தொடங்கியது. 1948,49,50,51,52,53,54,55,56,57 முதலான ஆண்டில் தன்னுடைய மகத்தான போராட்ட குணமிக்க வாதத்தினால் அந்தத் திட்டம் வெற்றிகரமாகத் துவங்கிட வைத்த ஒரே தலைவர் கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள்.
  இவரைத் தவிர இத்திட்டத்தின் மீது வேறெவரும் அக்கறை கொள்ளவில்லை. அந்தத்துறையுடன் நீண்ட தொடர்பு கொண்டு முழுமையான தகவல்களை சேகரித்தவாறு அரசுக்கு உந்துதலாக இருந்து நெய்வேலி கனிமவள திட்டம் நிறைவேற முழு முதற் காரணமாணவர் இவர் ஒருவர் தான். இன்றும் இங்கு கனிமம் வெட்டப்படுகிறது. மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெறப்படும் மின்சார வாரியம் முழுவதும் விநியோகமாகிறது. தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களும் நெய்வேலி மின்சாரத்தை நுகர்கின்றன.
  1962 ம் ஆண்டு முழுமையாகத்தன் அனல் மின் உற்பத்தியைத் தொடங்கியது. இங்கு மாநில அரசு ஒவ்வொரு டன் கரிக்கும் ராயல்டி எனும் மதிப்புத் தொகை மத்திய அரசிடம் பெறுகிறது. இதற்குக் காரணம் காயிதெ மில்லட், அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யக் காரணம் காயிதெ மில்லத், தென்னாற்காட்டிலே நெய்வேலி டவுன்ஷிப் என்ற மாபெரும் தொழில் மையம் உருவாகக் காரணம் காயிதெ மில்லத், மக்கள் தொழில் காரணமாக ஒரு நகர்மன்றத்தில் வாசிக்கக் காரணமானவர் காயிதெ மில்லத்.
  அவர் காலத்தில் அவர் குறிப்பிட்டது போல ஆய்வில் தெரியவந்த போது இருப்பை விடவும் கூடுதலாக இன்னும் நிலக்கரி அதிலும் தரமாக கிடைத்து வருகிறது. இத்தனை அற்புதனமான திட்டத்தை வாதாடி, போராடி கொண்டு வந்த அந்த மாமனிதரின் பெயரை உச்சரிக்கவும், நினைவு படுத்தவும் கூட அங்கு எந்த அடையாளமும் இல்லை. தமிழர்கள் நன்றி உடையவர்கள் தான் என்பதை காலம் கடந்தாவது உணர்த்திட காயிதெ மில்லத் நெய்வேலி லிமிடெட் கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு உரிய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
  அமெரிக்காவில் ஒளிவிளக்கை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்காக சில வினாடி விளக்கை அனைத்து நினைவு கூர்கிறார்கள். ஆனால், அந்த விளக்கு தமிழகத்தில் தென்னகத்தில் எரியவைக்க பாடுபட்ட சமூக அறிவியல் மேதை காயிதெ மில்லத் அவர்களுக்காக நாம் விளக்கை அணைக்க வேண்டாம். குறைந்தபட்சம் அவர் பெயரையாவது சூட்டுவது நன்றியுள்ள செயலாகும். ஏனெனில் அவர் தான் தமிழகத்தின் நிஜமான ஒளிவிளக்கு.
                                            -அறிந்தார்க்கினியன்

நன்றி :
பிறைமேடை
ஜுன் 1-15, 2010