ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

“கலைமாமணி” கவிஞர் நாகூர் சலீம் நினைவுகள்

புகழ் பெற்ற இஸ்லாமியப் பாடலாசிரியரான கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் மறைவுச் செய்தி,மிகுந்த வருத்தத்தை அளித்தது.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்...

இஸ்லாமியச் செய்திகளைத் தமிழுலகுக்குக் கொண்டு சேர்த்த வல்லமை மிக்கது அவருடைய தெள்ளு தமிழ்p பாடல்கள்.அவருடைய தமிழால் அவர் இசைபட வாழ்ந்தார்;வாழ்வார்...

முக்கியமானதொரு சமுதாயப் பணியில் அவரும் நானும் பங்குபெற்ற ஒரு கால கட்டத்தில் அவரிடம் பேசிப் பழகும் சந்தர்ப்பங்கள் எனக்கு இயல்பாக அமைந்தன.அப்போதெல்லாம் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்திகள் மொழி,இலக்கியம்,திராவிட இயக்கம் முதலியவற்றில் அவர் பதித்த முத்திரைகளை விவரிப்பவையாய் இருந்தன.அவற்றை எவர் எவரோ பயன்படுத்திக்கொண்ட விவரங்கள் வருத்தம் அளிப்பவையாகவும் இருந்தன.எனினும் உலகம் அப்படியும் இருக்கும் என்பதை அவர் அறிந்தவராகவே இருந்தார்.

பேரறிஞர் அண்ணா மறைந்த சிறிது காலத்தில் சென்னை கடற்கரையில் முதன் முதலாக நடந்த முப்பெரும் விழாவுக்குக் கூடியிருந்த கூட்டம் அசாதாரணமானது.அந்த மாபெரும் கூட்டம்,அப்போது ஏற்பட்ட இரைச்சல் முதலியவற்றைக் கவனித்த எனக்கு,இந்த மக்கள் எப்படி ஒரு கட்டுக்குள் வருவார்கள்?எப்படி அமைதி ஏற்படும்?எப்படிக் கூட்ட நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள்?என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

அப்போது ஒலிவாங்கியில்(மைக்கில்) யர்ரோ தட்டுவது போலச் சத்தம் கேட்டது... அதையடுத்து,”எங்கே சென்றாய்?எங்கே சென்றாய்? எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?”என்று மறைந்த அண்ணாவைத் தேடுவதைப் போல எழுதப்பட்ட பாடலை(த் தொகையறாவை அடுத்து) இசை முரசு நாகூர் ஹனீஃபா அவர்கள் பாடத்தொடங்கினார்.

இப்போது எண்ணிப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது.

அங்கே கூடி இருந்த லட்சக் கணக்கான மக்களும் ஒரு நிமிட நேரத்தில் அமைதியானார்கள்;அண்ணாவை இழந்த சோகத்தை எண்ணி உறைந்தோர் பற்பலர்;உருகினோர் மிகப் பலர்.அவ்வளவு பேரும் அந்த இசை வசமாகி அண்ணாவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி அவற்றை அசை போடலாயினர்.

அதை ஏன் இப்போது இங்கே நினைவு கூர்கிறேன் என்று கேட்கிறீர்களா?

அந்தப் பாடலை எழுதியவர் இன்று மறைந்த கவிஞர் நாகூர் சலீம் அவர்கள்.

அண்ணாவைப் பற்றி மட்டுமல்ல-மற்ற திராவிடக் கட்சித் தலைவர்கள் சிலரைப் பற்றி அவர் எழுதிய பாடல்களும் வெவேறு வகைகளில் ”ஹிட்” ஆனவைதான்.

அவருடைய பாடல்கள் அளவுக்கு அவர் பெயர் பரவவில்லையே என்று என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஆற்றல் மிகு கவிஞர் நாகூர் சலீம் அவர்களை நாம் இன்று இழந்துவிட்டாலும் போற்றத்தக்க அவருடைய இஸ்லாமிய இசைப் பாடல்களில்-அவற்றின் கருத்துக்களில் அவர் வாழ்ந்து வருவார்.

அவருக்கு அல்லாஹ் பேரருள் பாலிப்பானாக.

அவரை இழந்து வாடும் இதயங்களுக்கு வல்ல அல்லாஹ் ‘அழகிய பொறுமை’யை அளித்து அருள்வானாக.

                ----ஏம்பல் தஜம்முல் முகம்ம்து.

தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற, பிரபல இஸ்லாமியப் பாடலாசிரியர் கவிஞர் நாகூர் சலீம் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, 01-06-2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.  இன்று மாலை 4.30  மணியளவில் அவரது உடல் நாகூரில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. 

வண்ணக் களஞ்சியப் புலவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா உட்பட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை. 

இவர் எழுதிய “காதில் விழுந்த கானங்கள்” என்ற நூலை “பலாச்சுளை பாடல்கள்” என்று வர்ணித்து அணிந்துரை வழங்கியிருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி. “கவிஞர் சலீமின் பாடல்கள், பக்கவாத்திய ஓசைகளையும் விஞ்சி போதங்களின் நாதங்களாக நின்று நிலவுவது தனிச்சிறப்பு” என்று சிராஜுல் மில்லத் மர்ஹூம் A. K. அப்துஸ் சமது சாஹிப் அவர்களின் பாராட்டுப் பெற்றவர். 

“இவருக்கு திரைப்பட உலகில் தக்க வாய்ப்பு கிட்டுமானால், இன்னொரு கண்ணதாசனை நாம் கண்டு களிக்கலாம்; உணர்ச்சி மிக்க பாடல்களில் நம் உள்ளம் குளிக்கலாம்” என்று கவிஞர் மு. மேத்தாவின் அங்கீகாரம் பெற்றவர். கவிஞர் சலீம் எழுதிய “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி” என்ற பாடலைப் பாராட்டி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ஆர் ரூபாய் பத்தாயிரம் பரிசு வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், கதை, வசனம், நாடகங்கள், கவிதைகள் படைத்த கவிஞர் சலீம், நாகூரில் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் இஸ்லாமியப் பெண்மணி எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர் இவர். எழுத்தாளர் முனைவர் நாகூர் ரூமி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர் ஆடிட்டர் முஹிய்யத்தீன் அப்துல் காதர் ஆகியோரின் தாய் மாமா இவர். அன்னாரின் ஆத்மசாந்திக்கும், மறுமை நல்வாழ்விற்கும், இறைவனிடம் கையேந்துவோமாக! ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக