நோன்புக் கடமை
“நிலந்தெளியும் பஜ்ருக்கு சற்று முன்பிருந்து பகல் முழுவதும் – சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் எதுவுமின்றி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நோன்பு நோற்றல்” எனும் இக்கடமை ஹள்ரத் ஆதம் நபிக்கு சொர்க்கத்திலிருந்தும் தொடர்ந்து உலகில் எல்லா நபிமார்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்ததாக திருக்குர்ஆன் நமக்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.
“ஈமான் கொண்ட விசுவாசிகளே ! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது போல, உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது”.
1. நோன்பின் தத்துவங்கள்
நோன்பினால் ஜான் நெருங்கினால் முழம் நெருங்கி அருள்புரிகிறான் அல்லாஹ் !
உலகில் சுதந்திரமாக திரியும் மனிதன் தனது சுய இலாபத்தில் மட்டும் கவனம் செலுத்துபவனாக இருந்திருந்தால், இந்த மனித இனம் என்றோ அழிந்திருக்கும். தேவைகளாலும், உதவிகளாலும் மனிதனுக்கு மனிதன் தொடர்பு வைத்திருப்பதால் தான் இனவிருத்தி பெற்று தியாகிகள் உருவாகுகிறார்கள். மிருக இனத்திற்கு அப்பால் மேலே சென்று அறிவாளியாக – கூட்டுக் குடும்பமாக காட்சியளிக்கின்றனர். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, அடுத்தவர் வாழ்வில் அக்கறை கொள்ளும் எண்ணம், அன்பு பாசங்கொண்ட நற்குணங்கள் இவற்றால் ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர்.
“இக்கூட்டுத் தத்துவம் வளர்ந்திடக் காரணமாக இருப்பது எது?” இது தான் கேள்வி. “மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் ஒரே கயிற்றைப் பற்றிக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். கொடுப்பவன் அல்லாஹ், வாங்குபவன் மனிதன். இதை மீறி உலகம் நடந்ததில்லையே? அப்படியானால் இறைவனை நம்பி வாழும் மனிதன் தனக்கும் தன்னைப் படைத்தவனுக்கும் இடைவெளியைக் குறைத்துக் கொண்டு தனது வேண்டுதல்களால் இறைவனிடம் நெருங்கிச் சென்றால், இவனது வாழ்க்கை எவ்வளவு வளமுள்ளதாக இருக்கும்?”
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
“அல்லாஹ் கூறுகிறான். என் அடியான் என் விஷயத்தில் என்ன நினைக்கிறானோ அவனுக்காக நான் அவ்வாறே நினைக்கிறேன். எப்பொழுது அவன் என்னை நினைக்கிறானோ, அப்பொழுது நான் அவனுடனிருக்கிறேன். அவன் தனது உள்ளத்தில் என்னை நினைத்தால் அவனை நானும் எனது உள்ளத்தில் நினைக்கிறேன். அவன் மக்கள் மத்தியில் (மக்கள் நலனுக்காக) நினைத்தால் நானும் அவனை வானவர்கள் மத்தியில் நினைக்கிறேன். அவன் தனது நற்செயலால் என் பக்கம் ஒரு ஜான் நெருங்கினால் நான் அவன் பக்கம் ஒரு முழம் நெருங்கி வருகிறேன். அவன் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் இரண்டு முழம் நெருங்கி வருகிறேன். அவன் என் பக்கம் நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடி வருகிறேன்”.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு, இந்நான்கு வணக்கங்களில் நோன்பு என்பது பகல் முழுவதும் ஒரு வினாடி கூட இடைவிடாமல் தொடர்ந்து செய்யும் இறைவணக்கமாகும். பகல் முழுவதும் இறைவனுடனே ஒன்றியிருக்கும் ஓர் உணர்வுப் பூர்வமான திக்ராகும். இதனாலேயே இறைவன் “மனிதன் செய்யும் எல்லா அமல்களும் அவனுக்கே உரியவை, நோன்பு மட்டும் எனக்குரியது. அதற்குரிய கூலியை நானே தருகிறேன்” என்பதாகக் கூறுகிறான். மற்றோர் அறிவிப்பில் நோன்பிற்குக் கூலியாக நானே இருக்கிறேன் என வருகிறது. நோன்பின் மூலம் இறைவனின் அருளைப் பெறுவது மிக எளிதானதாகும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயமாக மனிதன் கூடி வாழக் கற்றுத்தருவதே நோன்பின் இலக்கணமாகும்.
2. மனக்கட்டுப்பாட்டிற்கு நோன்பு
வாழ்க்கை முழுவதிலும் தனது நடப்பில் கறைபடியச் செய்யக் காரணம் – அவன் தனது மனப்பேராசைகளுக்கு கரைபோட கற்றுக் கொள்ளாதது தானே? மனம் ஒன்று தான் ! அதன் வாசல்கள் ஒன்பதா? எண்பதா? ஆயிரமாயிரம் எண்ணங்கள் – ஆசைகள். அவ்வாசல்களை அடக்குவதென்பதும், அடைப்பதென்பதும் சாமானியப்பட்ட காரியமா? ஆதமுடைய மகனுக்கு தங்கத்தினாலான இரு ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தாலும் மூன்றாவதையும் தேடுவான் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் சொல்லாழத்தையும், பேராசைகளின் ஆழத்தையும் சிந்தித்துப் பாருங்கள். உள்ளத்தை அடக்கியாளத்தான் எல்லா மனிதர்களும் நினைக்கின்றனர். மனம் போன போக்கில் மனிதன் போக நினைப்பதில்லை. ஆனால் அதை அடக்கியாளத்தான் மனிதன் கற்றுக் கொள்ளவில்லை.
வருடம் 360 நாட்களும் தின்னவும் பருகவும் கற்றுக் கொண்டிருக்கிறான். இவன் எவ்வாறு மனதை அடக்கியாள முடியும்? தன் மனப்போக்கிற்கு அடிமையாகும் மனிதன், ஆடுகளை மேய்க்க ஓநாயையே இடையனாக்கிய கதையல்லவா இது?
உண்ணும், பருகும், பெண்ணுடன் கூடும் ஆசைகளை வருடத்தில் 30 நாட்கள் பகலிலாவது அடக்கியாள மனிதன் கற்றுக் கொண்டால் மனதை அடக்கியாள கற்றுக் கொள்வான் என்பது தான் நோன்பின் தத்துவம்.
360 நாட்களும் இப்பயிற்சியில் ஈடுபட வேண்டாம். திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமளானில் மட்டுமே இப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு 360 நாட்களின் பலன் கிடைக்கிறது.
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் :-
“எவரொருவர் ரமளான் முழுக்கவும் நோன்பு நோற்று ஷவ்வால் பிறை ஆரம்ப ஆறு நாட்களிலும் தொடர்ந்து நோன்பு நோற்றாறோ அவர் வருடமெல்லாம் நோன்பு நோற்ற பலனைப் பெறுகிறார்”.
3. சமயச் சார்பற்ற சமூகநலம் பேணுதல்
ஹள்ரத் தாவூது (அலை) அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கூட ஏறக்குறைய அவ்வாறே நோன்பு நோற்றார்கள். ரமளான் காலங்களில் முழுமாதமும் நோன்பாளியாக இருந்தார்கள். இரவிலும் கூட ஸெளம விஸால் எனும் இரவும் பகலும் தொடர் நோன்பு வைக்கும் வழக்கம் உடையவர்களாயிருந்தார்கள். இது மாதிரியே 1,20,000 நபிமார்களும், அவர்கள் தம் கூட்டத்தார்களும் நோன்பு நோற்றிருக்கிறார்கள்.
இஸ்லாமிய சமுதாயத்தவர் தங்களின் நபிவழி தொடர்ந்திட ரமளானில் மட்டுமல்லாமல் இதர குறிப்பிட்ட காலங்களிலும் நோன்பு நோற்கின்றனர். இவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இதன் மூலம் இறைபக்தியை தன்னுள் உண்டாக்கிக் கொள்வதுடன், பசித்திருந்து, மனதைக் கட்டுப்படுத்தி தன் அவயவங்களால் சமுதாயத்தில் பிறர் எல்லாருக்கும் தீங்கு இழைக்கக் கூடாது என்ற சமயச் சார்பற்ற ஒரு சமூக நலனைப் பேணுவது தான் !
4. பொருளாதாரத்தில் சமத்துவ உணர்வைத் தூண்டிடும் நோன்பு
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்து விட்ட வரலாற்றில் 1415 ஆண்டுகளுக்கு முன் ஏற்றத்தாழ்வற்ற பொருளாதார உணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க முதல் முதலாக உலகளாவிய சட்டம் ஒன்று இஸ்லாமிய சமுதாயத்தவருக்கு பிரகடனமாகிறது. அதுதான் ரமளான் மாதம் முழுதும் நோன்பு வையுங்கள் என்பது. தொடர்ந்து அதேயாண்டில் ஜகாத் எனும் சட்டம் கடமை ரீதியாக அமலுக்கு வருகிறது. இவ்விரண்டும் ஏறக்குறைய ஒரே நோக்கத்திலிருந்ததால் அடுத்தடுத்து கடமையாக்கப்பட்டன. (1415 ) நாட்களாக உண்ணாமல் குடிக்காமல் தீமைகள் புரியாமல் மனதைக் கட்டுப்படுத்தி, பகல் முழுதும் நோன்பிருந்து இரவு காலங்களில் விழித்து வணங்கி, தங்களது பொருட்களை அடுத்த நண்பர்களுக்கு பகிர்ந்தளித்து வரலாறு படைத்துள்ளனர் முஸ்லிம்கள் என்பது இதன் பொருளாகிறது !
இன்றுள்ள உலக மக்கள் தொகையில் 600 – கோடியில் சுமார் 200 கோடி முஸ்லிம்கள் தங்களது ஒரு மாத உண்ணா நோன்பு மூலம் பல லட்சம் டன் உணவு தானியங்களை மீதப்படுத்துகின்றன என்பது இதன் அர்த்தமாகிறது.
இந்தியாவின் மக்கள் தொகையான 80 கோடியில் 25 கோடி முஸ்லிம்கள் தங்களது மீத உணவுப் பொருளை அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர் என்று இதன் பொருள் !
மாற்றுமத நண்பர்களுக்காக தம் உணவை விட்டுக் கொடுத்து தியாகம் புரிகிறார்கள் என்பது இதன் தத்துவமாகிறது !
தொலைக்காட்சிகள் ஒலிபரப்பிகள்
ஆடம்பரங்களையும், வீண் விரயங்களையும் நாளொரு மேனியுமாக பொழுதொரு மேனியுமாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் ஒலிபரப்பிகளும், தொலைக்காட்சிகளும், நோன்பின் மாண்புகளையும், பலன்களையும், இஸ்லாமியரின் தியாக உணர்வுகளையும் எடுத்துரைத்தால் எத்துணைப் பலன் தரும்?
நோன்பின் மாண்புகள்
சமுதாய ரீதியில் மேற்கூறப்பட்ட இத்தனை பலா பலன்கள் நோன்பின் மூலம் கிடைக்கப்பெற்றாலும், நோன்பு நோற்பதினால் நற்பண்புகள் பலவற்றை தன்னுள் உருவாக்க பயிற்சி பெறுகிறான் மனிதன்.
1.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“நோன்பு சகிப்புத் தன்மையில் பாதியாகும்.
எனவே மனிதனுள் சகிப்புத் தன்மையை உண்டாக்கி போராட்டங்களுக்கு முடிவு கட்டுகிறது நோன்பு.
2. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசல் உண்டு. உண்மையான பக்தியின் வாசல் நோன்பாகும்”
எனவே போலியான பக்திகளை அகற்றி உண்மையான பக்தியினை உண்டாக்குகிறது நோன்பு.
3. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
“மனிதனுள் ஷைத்தான் இரத்தம் ஓடுமிடமெல்லாம் ஓடுகிறான். அவனை நோன்பைக் கொண்டு ஒடுக்குங்கள்”
எனவே தீவிர வாதத்தை ஒடுக்குகிறது நோன்பு.
4. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“இந்த நோன்பு காதல் வயப்பட்டவர்களுக்கு முறிவு மருந்தாகும்”.
எனவே அனைத்து விதமான இச்சைகளையும் அடக்கி விடுகிறது நோன்பு.
5. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“நிச்சயமாக இந்த நோன்பு காலக்கேடுகளை தடுக்கும் கேடயமாகும்”
(நூல் : ஜாமிஉஸ்ஸகீர்)
எனவே முஸீபத்துகளை அகற்றுகிறது நோன்பு.
6. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“நோன்பு நோற்று ஆரோக்கியம் பெறுங்கள்”. (நூல் : ஹுல்யா)
எனவே உடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும் தருகிறது நோன்பு.
7. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“ஒவ்வொன்றிற்கும் சுத்திகரிக்கும் சாதனம் உண்டு. உடலை சுத்திகரிப்பது நோன்பாகும்”.
எனவே உடலை சுத்தப்படுத்தும் கருவி தான் நோன்பு.
8. அண்ணம் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“நோன்பாளியின் வறட்சியில் வெளியாகும் சதை நாற்றாமாகிறது. இறைவனிடம் அது கஸ்தூரி மணமாகக் கமழ்கிறது”.
(நூல் : தப்ரானீ)
9. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“நோன்பாகிறது பித்தம் – நஞ்சு சம்பந்தப்பட்ட நோய்களை உடைத்து விடுகிறது”.
எனவே பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணி தான் நோன்பு.
10 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“நோன்பாகிறது சதைகளின் கொழுப்பை உருக்கி விடுகிறது”.
11. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“நோன்பாகிறது உஷ்ணத்தால் வரும் நோய்களை நீக்குகிறது”.
எனவே உடற்பருமன் நோய்களை நீக்குகிறது நோன்பு.
12. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“ஆசை வெறிகள் அடங்கிட எனது உம்மத்தார்கள் நோன்பு வைப்பார்கள்”.
எனவே வெறித் தனத்தை ஒடுக்குகிறது நோன்பு.
13. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“நோன்பு நரகத்தின் கேடயமாகும்”. (நூல் : திர்மிதீ)
எனவே நரகத்தின் பால் நோன்பாளி செல்ல மாட்டான்.
14. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :-
“ஆயிஷாவே ! பசியைக் கொண்டு சொர்க்க வாசலைத் தட்டிக் கொண்டிரு”.
எனவே நோன்பாளியின் நோன்பு அவனுக்காக சொர்க்க வாசலைத் தட்டுகிறது.
நோன்பின் பூரண நலம் பெற்று வளமாய் வாழ்ந்திட வல்ல நாயன் அனைவருக்கும் தெளஃபீக் செய்வானாக
நன்றி :
குர்ஆனின் குரல்
ஜுலை 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக