புதன், 27 நவம்பர், 2013

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!



( ஆபிதா அதிய்யா )


   

நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )

முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதனைப் பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைகின்றார்கள்.

ஆகவே, புனிதமிக்க இந்த ஜம்ஜம் தண்ணீரில் அப்படி என்ன தான் சிறப்பு இருக்கிறது என்றால் அதில் அனைத்தும் இருக்கின்றது.

வறண்ட பாலைவனத்தில் உதித்த இந்நீரூற்று பல நூறு ஆண்டுகளாய் வற்றாமல், மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. என்றைக்குமே வற்றாத நீரூற்றாகத் தொடர்ந்து ஒலித்தோடிக் கொண்டிருக்கிறது.

இது ஐந்தடி ஆழமுள்ள கிணறு. இதற்கு அருகில் எந்த நீர் நிலைகளும், நீராதாரமும் மிக்க எந்த வழிகளும் கிடையாது. இந்தக் கிணற்றின் நீர் எப்போதும் தானாகவே பொங்கி வரக்கூடியதாகவும், கோடிக்கணக்கான ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவதோடு, தங்கள் தேவைகளுக்காகத் தாய்நாட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கும் நீர் சுரக்கின்றது.

இதில், கால்சியம், மெக்னீசியம் இருப்பதன் காரணமாக நோயைக் குணப்படுத்துகிறது.

இயற்கையாகவே, இதில் ஃபுளூரைடு கலந்திருப்பதால் நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய தன்மைகள் உண்டு என்று மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிதவெப்பமான காலத்தில் நீர் நிலைகளில் ‘ஆல்கே’ என்ற பாசி படியும். ஆனால் இக் கிணற்றில் எவ்விதப் பாசியும் படிவதில்லை. மேலும் இது உயிர் – வேதியியல் காரணிகளின் கேடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டது.

ஜம் ஜம் தோன்றிய வரலாறு
அன்னை ஹாஜரா (அலை) அவர்கள், தனது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பருகக் கொடுப்பதற்காக, இந்தப் பாலைப் பெருவெளியில் தண்ணீருக்காக ஸஃபா, மர்வா எனும் இரு மலைக் குன்றுகளுக்குக்கிடையில் ஓடிக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் தனது அருட்கொடையினால் இந்த நீரூற்றை ஓடச் செய்தான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“அல்லாஹ் தனது மிகப்பெரும் கருணையை இஸ்மாயீல் (அலை) அவர்களது அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் மீது பொழிவானாக ! அன்னை ஹாஜரா அவர்கள் அந்த ஜம்ஜம் தண்ணீரை (ஊற்றை) அது எவ்வாறு இருந்ததோ அதன்படி, (அதில் தொட்டி போன்று எதனையும் கட்டாமல்) அதிலிருந்து நீரூற்றாக ஒலித்தோடும்படி விட்டு வைத்தார்கள். ஜூர்ஹூம் என்ற அரபு கோத்திரதார் ஹாஜரா (அலை) அவர்களுடன் வந்து, நாங்கள் இங்கே உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, ஆம் ..! (தங்கிக் கொள்ளலாம்) ஆனால், இந்த நீரூற்றின் மீது உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. (என்றால் நீங்கள் தங்கிக் கொள்ளலாம்) என்றார்கள். அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். (புகாரி)

இவ்வாறே உயிர் வாழ்வதற்கு எந்தவித ஆதாரமும் அற்ற அந்தப் பாலைப்பெருவெளியில் மனிதர்கள் குடியேறத் துவங்கினர்.

ஜம் ஜம் நீரூற்றின் மறுபிறப்பு !
மக்காவில் முதன் முதலில் குடியேறி ஜூர்ஹூம்கல் நீதமாகவும் நேர்மையாகவும் நடப்பதை விட்டுவிட்டு அடக்குமுறையாளர்களாக மாறிய போது, மக்காவை விட்டும் அவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. அவர்கள் இப்புனித நீரூற்றின் மகத்துவத்தினைப் பற்றி அக்கறையில்லாத காரணத்தால், ஜம்ஜம் நீரூற்று அதன் அருட்கொடைகளை அம்மக்களுக்கு வழங்க மறுத்தது. நீரூற்றை பூமி இழுத்துக் கொண்டது. அதன் பின்பு ஜம்ஜம் திறக்கப்படாமலேயே மறக்கப்பட்டதாகவும் ஆகிப் போனது.

இவ்வாறு பல தலைமுறைகள் வந்து போயின. பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப்பின் தலைமுறை வரைக்கும் இவ்வாறிருந்தது. அதன் பின் அப்துல் முத்தலிப் அவர்கள் இந்த நீரூற்றை மீண்டும் தோண்டினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள், மூடப்பட்ட நிலையில் கிடந்த கிணற்றைத் தோண்டுவது போலக் கனவு கண்டார்.

அன்று மக்காவாசிகளிடம் இருந்த கடுமையான இறை நிராகரிப்பின் காரணமாக, ‘இந்தப் பாழ் பட்டுப்போன இடத்திலா தண்ணீரைத் தேடுகிறீர்கள்’ என்று அப்துல் முத்தலிபை நோக்கி ஏளனமாகச் சிரித்தார்கள். பின் அந்தத் தொன்மையான கிணறு கஅபாவிற்கு மிக அருகில் தான் உள்ளது என்பதைக் கண்டு கொண்டார்கள்.

ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுவதற்காக மக்கா வரும் பயணிகளுக்கு ஜம்ஜம் நீர் எளிதாகக் கிடைப்பதற்குண்டான வழிகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் பொறுப்பை அப்துல் முத்தலிப் ஏற்றுக் கொண்டார்.

அப்துல் முத்தலிபின் முயற்சியால் ஜம்ஜம் நீரூற்று புதுப்பொலிவை அடைந்தது. அது புனிதமானது என நம்பினார். முக்கியப் பிரச்சனைகளின் பொழுது, ஜம்ஜம் நீரைப் பருகிவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்கக் கூடியவராக இருந்தார்.

அல்ஹாரித் இப்னு கலீஃபா அஸ்ஸாதீ என்பவர் அறிவிக்கின்றார்கள்:

“குறைஷிகள் தங்களது எதிரிகளைச் சந்திக்கச் செல்லுமுன், அதற்கான தயாரிப்புகளுக்கு முன்பாக ஜம்ஜம் நீரைப் பருகும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தம்முடைய பிரச்சனையின் தீவிரத்தை வெளிக்காட்ட விரும்பும் ஒருவர், ஜம்ஜம் கிணற்றின் அருகிலிருக்கும் பானைகளைச் சேகரிப்பதன் மூலம் அதனை வெளிப்படுத்துவார். பிரச்சனைகளின் போது இந் நீர் தங்களுக்கு அருட்கொடையை வழங்கும் என நம்பிக்கை கொண்டிருந்தாலும், பல நேரங்களில் அவர்களது நம்பிக்கைக்கு மாற்றமாகவும் நடந்திருக்கின்றன.

கிணற்றின் அமைவிடம்
கஅபாவிற்குச் சில அடி தூரத்திலும், மகாமே இபுராஹீமிற்குப் பின்புறத்திலும் இக்கிணறு அமைந்துள்ளது. இப்பொழுது இந்த இடத்தை வட்ட வடிவ அமைப்பிலான மார்பிள் கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. இன்னும் கஅபாவை வலம் (தவாஃப்) வரக் கூடியவர்களுக்கு இடையூறின்றி, தரை மட்டத்திலிருந்து கீழே அமைக்கப்பட்டுள்ளது. மாசுகளிலிருந்தும் பாதுகாக்கும் பொருட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்ஜம் கிணறு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு, இதே பெயரினைக் கொண்ட கிணறுகள் மதீனாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான அத்தாட்சிகள்

ஜம்ஜம் கிணறு அமைந்துள்ள ‘ஹரம்’ பள்ளிவாசல் தான் உலகிலேயே ஓரிறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் புனிதமிக்க பள்ளிவாசலாகும். இப் புனிதத்துடன் இன்னும் பல அடையாளங்களையும் இவ்விடத்தின் மீது அருட்கொடையாக இறைவன் வழங்கியிருக்கிறான்.

இறைவன் தன் இறைமறையிலே கூறுகின்றான் : “(இறைவணக்கத்திற்கென) மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வீடு, நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரகத்து (அருள்வளம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (இப்ராஹீம் நின்ற இடம்) மகாமே இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்புப் பெறுகிறார்.” (3 : 96-97)

ஜம்ஜம் கிணறுகூட தெளிவான அத்தாட்சிகளில் உள்ளதாகும். வரலாற்றுக் குறிப்பின்படி, இப்ராஹீம் (அலை), தனது மனைவியையும், குழந்தையையும் அந்தப் பாலைவனப் பிரதேசத்தில் விட்டுவிட்டுச் செல்லும்பொழுது, இறைவனிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றார்:

“எங்கள் இறைவனே ! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே ! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே, அவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக ! மேலும், இவர்களுக்கு உண் பொருள்களை வழங்குவாயாக ! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக்கூடும்!” (அல்குர்ஆன் 14:37)

வாழ்வாதாரத் தேவைகளில் இறைவன் வழங்கியிருக்கின்ற எல்லாவற்றிலும் முதன்மையானது ஜம்ஜம்.

வற்றாத நீரூற்று

ஜம்ஜம் நீரூற்றின் மற்றொரு சிறப்பம்சம். இது வற்றாத நீரூற்றாகும். இது மக்காவிற்கு, ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்ற வரும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

“அல்லாஹ் தனது முழுமையான அருளை அன்னை ஹாஜரா மீது பொழிவானாக ! அவர்கள் இவ்வற்றாத ஊற்றிலிருந்து (ஜம்ஜம்) நீரை வழிந்தோடும் படிச் செய்வதற்குக் காரணமாக அமைந்தார்கள்.”

(அஹ்மத்)

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பில்லியன் கணக்கான மக்கள் இந்நீரைப் பருகிச் சென்றவண்ணம் இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் பள்ளி அமைந்திருக்கும் மதீனாவிற்கும் இந்நீர் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஜ், உம்ரா செய்பவர்கள் மில்லியன் கணக்கான லிட்டர்கள் இந்நீரை எடுத்துச் சொல்கிறார்கள்.


இதன் சிறப்பு என்னவெனில், எந்த அளவு இந்நீரைப் பருகுகின்றோமோ, அந்த அளவுக்கு அது ஊறிக் கொண்டேயிருக்கும்.

நன்றி : நம்பிக்கை மாத இதழ், மலேசியா, நவம்பர் 2010

கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை

வியாபாரத்தில் கடன் என்பது தவிக்க முடியாத அம்சமாகி விட்டது. எல்லா வியாபரத்திலும் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்து கொண்டே இருக்கிறது. கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறையை அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக சொல்கிறது.
     
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். அல்குர்ஆன் 2:282


இந்த வசனத்தின்படி கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள். இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி

வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், 'அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்" என்று கூறினார்கள். நூல்: புகாரி

சிறந்த முறையில் கடனை அடைப்பதன் மூலம் நாமும் சிறந்த மனிதனாகிறோம். வசதி குறைந்தவர்களுக்கு கடன் கொடுப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகப் படியாகவே கால அவகாசம் தரலாம். அந்த அவகாச காலத்தில் கடனை செலுத்த முடியாத நிலையேற்பட்டால் வசதி குறைந்தவரின் கடனை தள்ளுபடி செய்து விடுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியை பெற்றுத்தரும். எந்த நிழலும் இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலில் இடம் தருவான்.

யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி

மற்றொரு ஹதீதில்

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

ஒருவர் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. . கடன் வாங்கிய பிறகு அதனை நிறவேற்ற முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது அவனில் ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி

கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக!

சனி, 23 நவம்பர், 2013

தொண்டரான தலைவர்!!! - காயல் ஹம்ஸா

எழுதியது ஹிலால் முஸ்தபா

நம்மால் அண்ணாந்து பார்க்கும் பெருமைக்குரியவர்களால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தன் கிரீடத்தைச் சூட்டிக் கொண்டது உண்மையாக இருக்கலாம். அதே நேரம் தன் அடிமட்டத் தொண்டர்களாலும் வெளிப்புறம் தெரியாத வீரம் செறிந்த உழைப்புத் தோழர்களாலும் தன் தண்டுவடத்தை நிமிர்த்திக் கொண்டிருந்தது என்பதும் பென்னம்பெரிய உண்மையாகும்.


தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான்களாக இருந்தவர்களில் தனி இடம் பெற்றிருந்தவர் தமிழர்த் தந்தை சி.பா. ஆதித்தனார். ஆதித்தனார் லண்டனில் பார் அட் லா படித்து வந்து தமிழகத்தில் பாமர மக்களுக்கு பத்திரிகை உலகைக் காட்டியவர்.

தமிழகத்தின் டீக்கடைகளில், முடி திருத்தகங்களில், இன்னும் சின்ன சின்ன கடைகளில், கிராமத்து நூல்நிலையங்களில் , படிப்பகங்களில் பாமர மக்களைக் கண்டடைந்து அவர்களை அரசியல் பேச வைத்த மகத்தான பணியை சி.பா. ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தி நாளிதழ்களின் மூலம் சாதித்துக் காட்டினார்.

நெல்லை மாவட்டத்துக்காரர். திருச்செந்தூருக்கு அருகாமையில் உள்ள காயாமொழியிலும் திருவைகுண்டத்திலும் பிள்ளைப் பருவத்தைக் கழித்தவர்.

சென்னையில் ஓடிய டிராம் வண்டிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த எழும்பூரில் உள்ள குடோன் இடத்தை ஏலத்திற்கு விட்டனர். இரண்டு பெரும் தலைவர்கள் சம பங்காக அந்த இடத்தை ஏலத்தில் எடுத்தனர். ஒருவர் தந்தை பெரியார். அதுதான் இன்று இருக்கும் பெரியார் திடல். மற்றொருவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். அந்த இடம்தான் இன்று இருக்கும் தினத்தந்தி அலுவலக இடம்.

சி.பா.ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தியைச் சென்னையில் தொடங்கியபோது, அலுவலகத்தில் பணிபுரிய தன்னுடைய மாவட்டத்துக்காரர்களையும் குறிப்பாகத் தன் ஊருக்கு அருகாமையில் உள்ள ஊர்க்காரர்களையும் தேர்ந்தெடுத்து பணியில் அமைத்துக் கொண்டார்.

ஆதித்தனாருக்கு தன் சமுதாயமான நாடார் சமுதாயத்தின் மீது பிடிமானம் அதிகம் உண்டு. அடுத்தபடியாக தன் ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் மீதும் கூடுதலான பாசம் இருந்தது. தன் அலுவகத்தில் கூடுதலாக நாடார் சமுதாய மக்களுக்கும், அடுத்ததாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.

பின்னர், “நாம் தமிழர்” என்ற இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்திலும் மேற்சொன்ன இரு சமுதாயத்தவர்கள் அதிகம் இருந்தனர். நாம் தமிழர் இயக்கம் அரசியல் பணியையும், சமுதாயப் பணியையும் ஆற்றுமென கொள்கை வகுத்திருந்தார்.

இந்த நாம் தமிழர் இயக்கத்தில் காயல்பட்டினத்தைச் சார்ந்த பாமரத் தொழிலாள முஸ்லிம்கள் கணிசமாகப் பங்கு பெற்று இருந்தனர். இந்தப் பாமரத் தொழிலாள முஸ்லிம்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘காயல்’ என்ற தன் ஊர் பெயரைத் தரித்துக் கொள்வார்கள். காயலின் பூர்வீகக் குடி நாங்கள் என்ற அறிவிப்பு போல இது இருக்கும்.

காயல் ஹம்ஸா - இவர் ஒரு அற்புதமான மனிதர். ஆதித்தனாரால் கவரப்பட்டுச் சென்னைக்கு வந்தவர்.

நாம் தமிழர் இயக்கத்தில் சென்னையில் களப்பணி புரிந்தவர். தன் குடும்ப வருவாய்க்காக எலக்ட்ரிக்கல் பணியில் , எலக்ட்ரீஷியனாக அனுபவத்தில் உயர்ந்தவர்.

எலக்ட்ரீஷியனாக வரும் வருமானம் வீட்டிற்கு. களப்பணியும், அரசியல் பணியும் ‘நாம் தமிழர்’ இயக்கதிற்கு என வாழ்வை அமைத்துக் கொண்டவர்.

ஒரு கால கட்டத்தில் அண்ணா ஆட்சி பீடத்தில் அமர்கிறார். அதன்பின்னர் ஆதித்தனாரோடு ஒரு கூட்டுறவு தி.மு.க வைத்துக் கொள்கிறது. இந்தக் கூட்டுறவு இன்னும் நெருக்கமாகி முடிவில் ‘நாம் தமிழர்’ இயக்கம் கலைக்கப் பட்டு தி.மு.க வில் இணைக்கப்பட்டது என சி.பா.ஆதித்தனார் அறிவித்துவிட்டு தி.மு.க வில் இணைந்துவிட்டார்.

இந்த இரு இயக்கங்களும் இணைந்த காலகட்டத்தில், சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சிச் செயலாளராகக் காயல் ஹம்ஸா இருந்தார்.

தி.மு.க வோடு, காயல் ஹம்ஸா இணையவில்லை. இதற்கு முக்கிய காரணம் சி.பா.ஆதித்தனார்.

சி.பா. ஆதித்தனார், தன் ‘நாம் தமிழர்’ இயக்கத்தைக் கலைத்தவுடன், அவர் இயக்கத்தில் இருந்த முஸ்லிம்களில் சிலரை ஒன்றுத் திரட்டி , காயல் ஹம்ஸா தலைமையில் சென்னைக் குரோம்பேட்டையில் உள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் இல்லமான தயா மன்ஸிலுக்குத் தாமே அழைத்து வந்தார்.

“ஐயா , இங்கு வந்திருக்கும் தோழர்கள், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள். இதோ இவர் காயல் ஹம்ஸா. சென்னை மாவட்ட எங்கள் இயக்கச் செயலாளர். இவரையும், இங்கு வந்திருக்கும் பிறரையும் உங்கள் வசம் ஒப்படைக்கிறேன். என் இயக்கத்தில் முஸ்லிம்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நான் கண்ணியமான இடம் கொடுத்து இருந்தேன்

நான் இயக்கத்தைக் கலைத்துவிட்டேன். ஆனால் பொறுப்புணர்வுடன் இவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்.” என்று கூறி காயிதே மில்லத்திடம் அவர்களை ஒப்படைத்துவிட்டு ஆதித்தனார் தான் போய் தி.மு.க வில் சேர்ந்து கொண்டார்.

அந்த நிமிடத்திலிருந்து, காயல் ஹம்ஸா , கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தொண்டராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் பூரணமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

காயல் ஹம்ஸாவிற்கு ஒரு பெரும் ஆற்றலை இறைவன் வழங்கி இருந்தான். இந்திய அரசியல் நிகழ்வுகளையும், தமிழக அரசியல் போக்கினையும் துல்லியமாகவும், விவரமாகவும் அறிந்து வைத்து இருந்தார்.

அவருக்குத் தமிழைத் தவிர எந்த மொழியும் படிக்கத் தெரியாது. சென்னை ராயபுரத்தில் அடிமட்ட மக்களோடு கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் கொண்டிருந்ததால் உருது நன்றாகப் பேசத் தெரியும்.

நான் இப்போது சொல்லும் செய்தி ஆச்சர்யமாக இருக்கலாம். முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்கள் இந்திய அரசியலின் சில நிகழ்வுகளை மறந்து விடும் பொழுது காயல் ஹம்ஸாவைத் தனியே அழைத்து அந்த நிகழ்வைப் பற்றிக் கேட்பார்கள். தன் நினைவாற்றலிலிருந்து காயல் ஹம்ஸா சரியாக எடுத்துச் சொல்லுவார்.

அப்படிச் சில நேரங்களில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் கேட்டு இருக்கிறார். A.K. ரிபாய் சாஹிப் கேட்டு இருக்கிறார். M.A. அப்துல் லத்தீப் கேட்டுத் தெரிந்து இருக்கிறார்.

காயல் ஹம்ஸாவிற்குத் தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி அந்தரங்க நண்பர். ஆதித்தனார் அவரோடு அதிகம் கலந்து நட்புக் கொண்டிருந்தவர். நமது அண்டை கர்நாடக மாநில முஸ்லிம் லீகின் மாநில பொதுச் செயலாளர் கம்ருல் இஸ்லாம் நெருங்கிய தோழர். மேற்கு வங்க முஸ்லிம் லீக் மாநில அமைச்சராக இருந்த ஹஸனுஸ் ஸமான் அணுக்கத் தோழர்.

சுலைமான் சேட் சாஹிப், பனாத்வாலா சாஹிப், முஹம்மது கோயா சாஹிப், அவுக்காதர்குட்டி நஹா சாஹிப் போன்றவர்களுக்கும் காயல் ஹம்ஸா பரீட்சயமானவர்.

காயிதே மில்லத்தின் பூரண நம்பிக்கைக்கும் அன்பிற்கும் உரியவர். சென்னை மாநகராட்சித் துணை மேயராக இருந்த சிலார் மியான் சாஹிபுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர். சிலார் மியானோடு சேர்ந்து பிறைக்கொடி மாத இதழை காயல் ஹம்ஸா தொடங்கினார். அதன் வெளியீட்டாளரும் அவரே.

இத்தனை பட்டியல்களை அவரோடு இணைத்துப் பார்க்க முடியும். ஆனாலும் காயல் ஹம்ஸா ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு , கைலியை மடித்துக் கட்டி, உள் அணிந்து இருக்கும் காக்கி டவுஸர் வெளித்தெரிய எலக்ட்ரீஷியன் பணியைச் செய்து கொண்டிருப்பார்.

என்னோடும் மற்றும் இஜட்.ஜஃபருல்லா, கவிஞர் காசிம் போன்றவர்களோடும் விளையாட்டு மொழிகளில் பேசிக் கொண்டிருப்பார். ஹம்ஸா அன்புமயனாவர்

சென்னைத் துறைமுகத்தின் அருகில் உள்ள காயல் நகரைச் சார்ந்த வாவு குடும்பத்தாருக்கு சொந்தமான பலமாடிக் கட்டிடத்தை அவர்கள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தினுடைய எலக்ட்ரீஷியனாக வாவு குடும்பத்தார் வேலையில் அமர்த்தி அவரைப் பாதுகாத்து வந்தனர்.

சென்னை ராயபுரம் தொப்ப முதலித் தெருவில் உள்ள அவர் குடியிருந்த ஒரு பொந்து வாடகை வீட்டிற்குத் தமிழக்கத்தில் உள்ள முஸ்லிம் லீகின் மூத்தத் தலைவர்கள் ஏதாவதொரு நிகழ்விற்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பது தனிப் பெருமை.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மறைந்து விட்டார்கள். அவர்கள் ஜனாஸா புதுக் கல்லூரி வளாகத்தில் வைக்கப் பட்டு இருக்கிறது. ஜனாஸா மீது முஸ்லிம் லீகின் இளம்பச்சைப் பிறைக் கொடி போர்த்தப் பட்டு இருக்கிறது.

தமிழகத்தில், கேரளத்தில், இந்தியத்தில் உள்ள பெரும் தலைவர்கள் அனைவரும் வந்து கலந்துக் கொண்டனர். திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதுக்கு அடக்கம் செய்ய ஊர்வல பவனி செல்கிறது. முடிவில் கபரில் வைத்து மூடப் படுகிறது.

அந்த நேரத்தில் , சற்றுக் கருநிறம் கொண்ட இரு கரங்கள் , காயிதே மில்லத் ஜனாஸாவை மூடியிருந்த இளம்பச்சைக் கொடியைப் பிடித்திழுத்துத் தன் வசமாக்கிக் கொண்டது. அந்தக் கரத்திற்குரியவர் காயல் ஹம்ஸா. அதற்குப் பின்னால் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் ஜனாஸாவில் காயிதே மில்லத்தைப் போர்த்திய பிறைக் கொடியைப் போர்த்துவதற்காகக் காயல் ஹம்ஸா அந்தக் கொடியை தன் கழுத்தில் துண்டு போல் போட்டுக் கொண்டு அங்கு வந்து நிற்பார். போர்த்துவார். பின்பு மறக்காமல் எடுத்துச் சென்று விடுவார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் உரிமை ஏடான ‘உரிமைக் குரல்’ வார இதழின் வெளியீட்டாளரும், சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளருமான இளையாங்குடி பி.என்.ஐ. அபுதாலிப் அண்ணன் ஒரு அஸர் தொழுகைக்கு ஒளுச் செய்தார். அந்த நிலையிலேயே இறை நாட்டப்படி இறைவனடிச் சேர்ந்தார்.

அவர் ஜனாஸாவில் போர்த்துவதற்காகக் காயல் ஹம்ஸா, காயிதே மில்லத்திற்குப் போர்த்திய துணியைத் தன் கழுத்தில் தாங்கி வந்தார். போர்த்தினார். அருகில் அமர்ந்து கண்ணீர் சிந்தி அழுதார். காயல் ஹம்ஸா அழுது நான் முதன்முதலில் அப்பொழுதுதான் பார்த்தேன்.

ராமநாதபுர நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் , அடுத்த முறை பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் முஸ்லிம் லீக் வேட்பாளராக வெற்றிப் பெற்றுச் சென்ற மதுரை ஷரீப் அண்ணன் மறைந்து விட்ட செய்தி வந்தது.

தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப், S.A. காஜா முஹைதீன் M.P. , வந்தவாசி வஹாப் சாஹிப், கவிஞர் தா.காசிம், இஜட். ஜபருல்லா, நான் மதுரைக்குச் சென்றோம். எங்களோடு காயல் ஹம்ஸாவும் வந்தார். அப்பொழுதும் அவர் கழுத்தில் , சென்னையில் இருந்து மதுரை வரை காயிதே மில்லத்தைப் போர்த்தி இருந்த முஸ்லிம் லீக் கொடி, அவர் கழுத்தில் துண்டாகத் தவழ்ந்து கிடந்தது.

மதுரையில் ஷரீப் சாஹிப் ஜனாஸா மீது போர்த்தப்பட்டது. அப்பொழுதும் ஜனாஸா அருகில் அமர்ந்து காயல் ஹம்ஸா விக்கல் கலந்து அழுதார். ஹம்ஸா அழுகையை இரண்டாம் முறை அப்பொழுது பார்த்தேன்.

இன்று அந்த ஹம்ஸா இல்லை. அவர் ஜனாஸாவைக் காயிதே மில்லத்தைத் தழுவிய பச்சிளம் பிறைக் கொடி போர்த்தி இருந்தது. அதன்பின் அந்தக் கொடி என்ன ஆனது? எனக்குத் தெரியவில்லை.

ஒரு கொடி வரலாறு முற்றுப் பெற்று விட்டதோ?

வெள்ளி, 15 நவம்பர், 2013

கர்பலா நினைவுகள்


ஹிஜ்ரி 61 ம் ஆண்டு முஹர்ரம் 2 ம் நாள் கர்பலாவில் ஹுசைன் கால் பதித்தார்..... 
கர்பலாவில் தங்கியிருந்த ஹுசைனையும் அவர் குடும்பத்தையும் பணிய வைத்து தன்னிடம் இழுத்து வருவதற்கு உமர் இப்னு சஅத் என்பவன் தலைமையில் 4000 படை வீரர்களை கர்பலாவுக்கு அனுப்பி வைத்தான் கூபாவின் ஆளுநர் இப்னு ஜியாத். இந்த வேலைக்கு கூலியாக இப்னு சஅதுக்கு "ராய்"நகரின் ஆளுநர் பதவி தருவதாக ஆசைக் காட்டப்பட்டது. பதவிக்காக எந்த மாபாதகத்தையும்செய்யத்
துணிந்தவன் சஅத்.

இவன் கர்பலாவுக்கு வந்து "ஏன் கர்பலாவுக்கு புறப்பட்டு வந்தீர்கள்" என்று இமாம் ஹுசைனிடம் கேட்டான் .
"கூபா மக்கள் அழைப்பு விடுத்ததால் வந்தேன்..இப்போது அவர்கள் என் வருகையை விரும்பவில்லை என்று தெரிகிறது.அதனால் நான் திரும்பிச் சென்று விடத் தயாராக இருக்கிறேன்" என்றார் இமாம் ஹுசைன்.

"ஹுசைன் நமது வலையில் வந்து மாட்டிக் கொண்ட பிறகு திரும்பிச் செல்வதற்கோ..தப்பிச் செல்வதற்கோ அனுமதிக்க வேண்டாம்" என்ற கட்டளையை அனுப்பி வைத்தான் இப்னு ஜியாத்.
"முதலில் ஹுசைன் யஜீதுக்கு "பைஅத்" செய்ய வேண்டும். அதன் பிறகு அவரை என்ன செய்வது என்பதைப் பற்றி
தீர்மானித்துக் கொள்ளலாம்" என்ற வஞ்சக அறிவிப்பையும் வெளியிட்டான் இப்னு ஜியாத்.

அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் யஜீதுக்கு பைஅத் செய்ய ஹுசைன் மறுத்து விட்டார். அதனால் புராத் நதியின் தண்ணீர் ஹுசைனுக்கு மறுக்கப்பட்டது.ஹுசைனும் அவரது குடும்பத்தாரும் தாகத்தால் தவித்தார்கள். அவர்களின் வேதனையை தாங்க முடியாத ஹுசைன் இப்னு ஸஅதிடம் மூன்று நிபந்தனைகளை முன் வைத்தார். அதன்படி...

"நான் மக்காவுக்கே திரும்பிச் சென்று விடுகிறேன் அல்லது..நான் யஜீதை சந்திப்பதற்கு அனுமதி கொடுங்கள்..அல்லது பரந்த பூமியின்
ஏதாவது ஒரு மூலையில் சென்று தங்கி இறைப்பணி செய்வதிலேயே என் காலத்தை கழித்து விடுகிறேன்.அதற்காவது அனுமதி கொடுங்கள்."

இதில் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான் இப்னு ஜியாத். அத்துடன்...யஜீதை கலீபாவாக ஏற்றுக்கொள்ள ஹுசைன் மறுத்து விட்டால் தாமதமின்றி அவர்மீது போர் தொடுக்கக் கட்டளையிட்டு "தில் ஜவ்ஷான்" என்ற ஒரு கொலைகாரனையும் கர்பலாவுக்கு அனுப்பி வைத்தான்.மேலும்,

"இப்னு சஅது போரை ஆரம்பம் செய்ய தாமதித்தால் நீயே தளபதியாக இருந்து போரை நடத்து..ஹுசைனின் தலையை வெட்டி எனக்கு அனுப்பு..அவரைச் சார்ந்தவர்கள் அத்தனை போரையும் கொன்று ,அவர்களின் உயிரற்ற சடலங்களின் மீது குதிரைப் படையை ஓடச் செய்து சிதைத்துப்போடு" என ஒரு வெறி நாயைப்போல உத்தரவிட்டு தில்ஜவ்ஷானை ஏவி விட்டான்..

ரத்த வெறிபிடித்த தில் ஜவ்ஷான் கண்களில் கொலை வெறியோடு கர்பலாவை நோக்கி பாய்ந்து சென்றான்.
000
கூபாவாசிகளின் துரோகம்
***********************
முஹர்ரம் மாதம் 9 ம் நாள்.அசர் தொழுகைக்கு பிறகு ஹுசைனின் மீது போர் பிரகடனத்தை அறிவித்தான் இப்னு சஅது.
தனது சகோதரர் அப்பாஸ் மூலம் ஓரிரவு மட்டும் அவகாசம் கேட்டு பெற்றுக் கொண்டார் ஹுசைன்.பிறகு தனது உறவினர்களை எல்லாம் அழைத்து, தனக்காக யாரும் உயிர் துறக்க வேண்டாமென்றும் அனைவரும் இரவோடு இரவாக மதீனாவுக்கு சென்று விடும்படியும் மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் தாங்கள் யாரும் ஹுசைனை விட்டு செல்ல முடியாது என்று அனைவரும் உறுதிபட உரைத்து விட்டனர்.

"இறைவன் மீது ஆணையாக..நான் மரணித்து விட்டால் நபிகள்(ஸல்)அவர்கள் வாக்குக்கு மாற்றமாக யாரும் ஒப்பாரி வைத்து அழக்கூடாது.
முகத்திலும் மார்பிலும் அறயக்கூடாது" என அன்புக் கட்டளையிட்டார் ஹுசைன்.

அன்றைய இரவு ஹுசைனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இறுதி இரவாக அமைந்தது.அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தண்ணீர்
இல்லை.ஆனால் தங்களுக்கு ஏற்பட்ட சோதனையை எண்ணி அவர்கள் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை.

முஹர்ரம் 10 ம் நாள் வெள்ளிக் கிழமை அதிகாலை.
இப்னு சஅது தனது 4000 படை வீரர்களை ஹுசைனுக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.
ஹுசைனின் அணியில் 32 பேர் குதிரையில் அணிவகுத்து நின்றார்கள்.மற்ற 40 பேர்களில் யாரிடமும் எந்த வாகனமும் இல்லை.
அவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். அவர்கள் அனைவரும் கூடாரத்தில் தங்கி இருந்தனர்.

இப்னு சஅதுடைய படை வீரார்களின் மனதைத் தொடும் வகையில் அவர்களிடையே இமாம் ஹுசைன் உரையாற்றினார்.

" நபிகள் (ஸல்) அவர்கள் என்னையும் என் சகோதரர் ஹசனையும் சொர்க்கத்து இளைஞர்களின் தலைவர்கள் என்று கூறியதை நீங்கள் மறந்து விட்டீர்களா?
என் தாயார் பாத்திமா பெற்றெடுத்த ஆண் மக்களில் நான் மட்டும்தானே மிச்சமிருக்கிறேன்?
நான் உங்களுக்கு என்ன அநியாயம் செய்தேன்?
நீங்கள் அழைத்தீர்கள் என்றுதானே நான் இங்கே புறப்பட்டு வந்தேன்? நீங்கள் விரும்பவில்லை என்றால் என்னை திரும்பிப் போக விடுங்கள் " என்று உருக்கமாகப் பேசினார்.

ஷாம் தேசத்தார்களும் கூபாவாசிகளும் ஹுசைனின் பேச்சுக்கு செவி கொடுக்காமல் அவர்களை கேலி செய்தனர்.
மக்காவிலிருந்த ஹுசைனுக்கு கடிதங்கள் எழுதியும் நேரில் சென்று சந்தித்தும் கூபாவுக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்த
அந்த கூபாவாசிகள் இப்போது இறைவன் மீது ஆணையாக...நாங்கள் ஹுசைனையும் அவரது குடும்பத்தாரையும் போரில் கொன்று குவிப்போம்" என்று வெறிக் கூச்சலிட்டனர்.

பணத்துக்காகவும் பதவிக்காகவும் யஜீதிடம் விலைபோன கூபாவாசிகளின் படு பயங்கரமான நம்பிக்கை துரோகத்தின் வெளிப்பாட்டை அவர்களின் வாய் வார்த்தைகளின் வழியாக நேரிடையாக கண்டு கொண்ட ஹுசைன் மனம் நொறுங்கிப் போனார்.தனது தந்தையார் அலீக்கும் சகோதரர் ஹசனுக்கும் இந்த கூபா மக்கள் செய்த துரோகம் தன்னிடமும் தொடர்வதைக் கண்டு துவண்டு போனார்.தனது கூபா பயணத்தை தடுத்து நிறுத்த முயன்ற நல்லோர்களின் வார்த்தைகளை தான்
மறுதலித்ததை எண்ணி வருந்தினார்.ஆயினும் காலம்
கடந்து விட்டதை எண்ணி இறைவனிடமே பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

இந்தத் துயர நேரத்திலும் ஹுசைனை சந்தோசப் படுத்தியது
ஒரு சம்பவம்.
ஆரம்பத்தில் ஹுசைனின் கூட்டத்தாரை பின் தொடர்ந்து முற்றுகையிட்ட ஹூர் இப்னு யஜீது திடீரென ஹுசைனின்
அணியில் வந்து இணைந்து கொண்டார்.அதை எண்ணி ஹுசைன் சந்தோசப்பட்டார்.

ஹூர் இப்னு யஜீதும் சுஹைர் பின் கைன் என்பாரும் கூபா மக்களுக்கு ஹுசைனின் நற்குணங்களையும் அவரது மேன்மையையும் எடுத்துரைத்து, அவரைக் கொல்ல நினைப்பவன் அல்லாஹ்வின் கடுமையான தண்டனையை அனுபவிப்பான் என்றும் எச்சரித்தனர்.அதை யாரும்
பொருட்படுத்தவில்லை.எதிரிகளின் ஒரே நோக்கம் ஹுசைனை கொலை செய்வதிலேயே இருந்தது.

இஸ்லாமியப் பேரரசின் மன்னனாக முடி சூட்டிக்கொண்ட யஜீதின் படைத்தளபதி சஅது முதல் அம்பை எய்து போரைத் தொடக்கி வைத்தான்.

இரு தரப்பிலிருந்தும் தனித்தனி வீரர்கள் களத்தில் மோதிப் பார்த்தனர்.ஹயாத் பின் உமைய்யா, இப்னு யஸ்ஸார் ஆகிய எதிரிகளை ஹுசைனின் அணி வீரர் உமைர் கல்பீ என்பவர் கொன்று போட்டார்.அதன் பிறகும் தனித்தனியாக நடந்த
மோதல்களில் யஜீதின் வீரர்களே கொல்லப்பட்டனர். இந்தத் தோல்வியை எதிர்பார்க்காத தில் ஜவ்ஷான் தனது குதிரைப்படையை ஏவி விட்டு ஹுசைனாரின் அணியின் மீது கடும் தாக்குதலைத்
தொடுத்தான்.சரமாரியாக தொடுக்கப்பட்ட அம்புகள் பாய்ந்துவர, ஹுசைனைச் சேர்ந்தவர்கள் பலர் பரிதாபமாகப் பலியானார்கள்.

ஹுசைனின் மிகச் சிறந்த வீரர்களான முஸ்லிம் பின் அவ்சஜா உமைருல் கல்பீ, அவரது மனைவி ஹபீப் பின் மஷ்ஹர், ஹூர் பின் யஜீது, சுஹைர் பின் கைன் போன்றோர் மிகுந்த வீரத்துடன் போரிட்டு யஜீதின் படை வீரர்கள் பலரை கொன்று போட்டனர். என்றாலும் மலைபோல் திரண்டு நின்ற யஜீதுப் படைத் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வீர மரணமடைந்தனர்.
நிராயுத பாணியாக நின்று கொண்டிருந்த ஹுசைனை கைது செய்து யஜீதிடம் கொண்டு செல்ல யாரும் முன் வரவில்லை. மாறாக , அவரை கொலை செய்வதிலேயே எதிரிகள் குறியாக இருந்தார்கள்...

கண்கள் குளமாகி நெஞ்சம் ரணமாகி....
**********************
........முஹர்ரம் மாதத்தின் பத்தாம் பிறை வெள்ளிக்கிழமை நண்பகல். கடுமையான சூரிய மழையில் நனைந்து
வியர்வை வெள்ளத்தை வடித்துக்கொண்டிருந்தது
இமாம் ஹுசைனின் உடல்.

தாங்கிக்கொள்ள முடியாத உயிரிழப்புகள் எல்லாம் கண்முன்னால்
நிகழ்ந்துவிட்ட கொடூரத்தை எண்ணி
கண்களிலிருந்து கண்ணீரும்
எதிரிகளின் அம்புகள் பாய்ந்த
புண்களிலிருந்து செந்நீரும்
வழிந்து கொண்டிருந்த இமாம் ஹுசைனின்
தலையின்மீது வாளால் வெட்டினான் -
நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்ட
மாலிக் பின் சபர் என்பவன்.

இமாம் ஹுசைனின் உச்சந்தலையில் ஆழமாக இறங்கியது வாள்.
கொப்பளித்து வந்த ரத்தத்தில்
ஹுசைனின் முகம் ஒழுவெடுத்துக் கொண்டிருந்தது.
உடலெங்கும்
எதிரிகள் வீசிய நூற்றுக்கணக்கான அம்புகள்...
பாய்ந்து வழிந்த ரத்தத்தில் ஹுசைனின் பூவுடல்
குளியல் நடத்திக்கொண்டிருந்தது.

"கொல்லுங்கள் ஹுசைனை" -
குரைத்து, குரைத்து கூப்பாடு போட்டான் வெறியன் ஷிம்ரு.

யஜீதின் படையினர் வேட்டை நாய்களைப்போல இமாம் ஹுசைனின் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தனர்.
ஒரு அம்பு ஹுசைனின் கழுத்தில் பாய்ந்தது.
சிரமப்பட்டு அதனைத் தூக்கி எறிந்தார் ஹுசைன்.

ஜுராப் பின் ஷரீக் தமீமி என்ற தீப்பிடித்தவன் தனது வாளால் ஹுசைனின் வலது
கரத்தை வெட்டினான்.கழுத்திலும் தாக்கினான்.

மாநபி(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்த செம்மல்,மரணத்தின் வேதனையோடு மண்ணில்
மல்லாந்து விழுந்தபோது,மாவீரர் மார்பில் வேகத்தோடு வந்து ஈட்டியால் குத்திக் கிழித்தான் சினான் பின் நஜமீ என்ற ஈனன்.

குற்றுயிரும் கொலையுயிருமாக துடித்துக்கொண்டிருந்த பாத்திமா(ரலி) பெற்றெடுத்த பிள்ளை ஹுசைனின்
கழுத்தை, நரியைபோல் நெருங்கிவந்த நாசக்காரன் ஷிம்ரு தனது வாளால் அறுத்தெடுத்து அநியாயத்தின்
உச்சக்கட்டத்தை அரங்கேற்றம் செய்தான்.

மனித உருவத்திலிருந்த யஜீதின் ராணுவ மிருகங்கள் ஹுசைனின் ஆடைகளையெல்லாம் உரிந்து போட்டார்கள்.

பதவி வெறிபிடித்த சஅது பத்து குதிரைப்படை வீரர்களை அனுப்பி தலை அறுக்கப்பட்ட ஹுசைனின் உடல்மீது குதிரைகளை ஏற்றி சிதைக்கச் செய்தான்.

இமாம் ஹுசைனின் அறுத்தெடுக்கப்பட்ட தலையோடு அவரது குடும்பத்துப் பெண்கள் அனைவரும் கூபா ஆளுநர் இப்னு ஜியாதின் முன் இழுத்துச் செல்லப்பட்டனர்.

கீழ்பிறப்பினும் இழிபிறப்பான இப்னு ஜியாத், இமாம் ஹுசைனின் துண்டிக்கப்பட்ட தலையை பார்த்துப் பார்த்து ரசித்தான்.
தட்டின்மீது வைக்கப்பட்டிருந்த ஹுசைனின் இதழ்களை," இதில்தான் நபிகள் முத்தமிட்டார்களா?" எனக்கேட்டுக்கொண்டே தன் கையிலிருந்த பிரம்பால் அடித்து அவமானப்படுத்தினான்.

இதயமே இல்லாத அந்த ஓநாயின் செயலால் ஆத்திரப்பட்ட ஜைத் பின் அர்கம் என்ற பெரியவரை துன்புறுத்தினான்.அப்துல்லாஹ் இப்னு ஹபீப் அஸ்தி என்பவரை கொன்று போட்டான்.

கர்பலா போர் முடிந்து பலநாட்கள்வரை இமாம் ஹுசைனின் உடலையும் அவரைச் சேர்ந்தவர்களது உடலையும் யாரும் அடக்கம் செய்யவில்லை.சில தினங்கள் கழிந்தபிறகே பக்கத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த உடல்களை நல்லடக்கம் செய்தனர்.

கைதிகளாகி நின்ற பெருமானார் வீட்டுப்பெண்களிடம் இப்னு ஜியாத் மிகக்கேவலமாக நடந்துகொண்டான். சிறுவர் ஜைனுல் ஆப்தீனையும் கொல்லத்துடித்தான். (ஜைனுல் ஆப்தீன்,இமாம் ஹுசைனின் உயிர் தப்பிய ஒரே மகன்.) பின்னர் மனம் மாறி அவர்கள் அனைவரையும் யஜீதிடம் அனுப்பி வைத்தான்.

இமாம் ஹுசைனின் துண்டிக்கப்பட்ட
தலையை ஈட்டியில் சொருகி ஜுகர் பின் கைஸ் என்பவனிடம் கொடுத்து டமாஸ்கசிலிருந்த யஜீதுக்கு அனுப்பி வைத்தான்.

ஈட்டியில் சொருவப்பட்ட இமாம் ஹுசைனின் தலை கூபா வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு
யஜீதுக்கு அனுப்பப்பட்டது.யஜீதின் அரண்மனை வாயிலில் பொதுமக்கள் பார்வைக்காக ஹுசைனின் தலை காட்சிப் பொருளாக்கப்பட்டது.

000000000000000000000

கர்பலா - அது போர்க்களமல்ல! நபிகள்(ஸல்)அவர்களின் வழித்தோன்றல்களை கொன்றுபோட்ட கொலைக்களம்.
முஆவியாவின் மகன் யஜீதின் அடக்குமுறைக்கும் ஆசைகாட்டலுக்கும் அடிபணிந்து அண்ணல்நபி (ஸல்)
அவர்களின் குடும்பத்தாரை நம்பவைத்து,நம்பிக்கை துரோகம் செய்து,நயவஞ்சகமாக,கொடூரமாக,படுகொலை செய்த
கூபாவாசிகளும் ஈராக் மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை - இன்றுவரை!
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அவனுக்கே எல்லாப்புகழும்!
......- அபூஹாஷிமா எழுதிய "உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் " என்ற நூலிலிருந்து... 

வியாழன், 14 நவம்பர், 2013

அத்தா

இது தமிழ்நாட்டில் வாழும் ஹனபியாக்களால் தங்களின் தந்தையை அழைக்கப் பயன் படுத்தப்படும் சொல்லாகும். தமிழில் அத்தன் என்றால் தந்தை என்று பொருள்படும்.

இறைவனைத் தமிழர்கள் "அத்தனே" என்றும் "அத்தா" என்றும் விளித்துள்ளனர். கலித்தொகையில் மருதக்கலி 16 ஆம் செய்யுளில் அத்தா என்ற சொல் அப்பா என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமாயணத்தில் அத்தா இதுகேள் என ஆரியன் கூறுவான் இப்பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ? என்ற அடிகளில் அத்தா என்ற சொல் அப்பா என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிற்கால கவிஞர் ஒருவரும் "அத்தா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்!" என்று இறைவனை விளித்து ஒரு கவிதையை துவக்குகின்றார்.

துருக்கி மொழியிலும் அத்தா என்றால் தந்தை என்றும் பொருள்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் துருக்கிச் சொல்லையே தங்களின் தந்தையைக் குறிப்பிடப் பயன்படுத்தி வருகின்றனர் என்று சிலர் கூறுகின்றார்கள்.

ஆனால் அத்தா என்ற சொல் முதல் மனிதரான ஆதம் என்பதிலிருந்து தோன்றியது என வேறு சிலர் சொல்கின்றனர்.

ஓகுஸ் களிடையே இது சிறப்புடையோரின் பெயரோடு இணைத்து "அறிவாளர்" " புனுதமானவர்" என்ற பொருளில் மரியாதையுடன் வழங்கப்பெற்று வருகிறது.

யசவி தரிக்காவின் மூலவரான அஹமது யசவியின் கலிபாக்கள் அத்தா என்ற பட்டதை தங்களின் பெயருக்குப் பின் புனைந்து கொண்டனர்.

அவரின் முதல் கலிபாவின் பெயர் மன்சூர் அதா, இரண்டாவது கலிபாவின் பெயர் சையீத் அதா, மூன்றாவது கலிபாவின் பெயர் ஹகீம் அதா என்பனவாகும். இவ்வாறே இவர்களுக்குப் பின் வந்த கலிபாக்களும் செய்து வந்தார்கள்.

சாரச்சூக் என்ற ஊரில் ஒரு வயோதிகத் துருக்கியர் இருந்தாரென்றும் அவரை மக்கள் அத்தா என்று அழைத்ததாகவும் தமக்கு அவர் விருந்தளிததாகவும் இப்னு பதுதா கூறுகிறார். போலி நபி முகன்னா அல் குரசானியின் இயற்பெயர் அத்தா என்பதாகும்.

அத்தாவிலிருந்து ஏற்ப்பட்ட பட்டங்கள் தாம் அதாபெக், அதாபெக் அசாகீர், அதாலிக் காசி ஆகியவை.

துருக்கி அதிபர் முஸ்தபா கமாலுக்கு அம்மக்கள் அளித்த அன்பு பட்டம் அத்தா துர்க் (துருக்கியின் தந்தை) என்பதாகும்.

தகவல்: இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் -

பகிர்ந்த ராஜகிரி கஸ்ஸாலிக்கு நன்றி

ஞாயிறு, 10 நவம்பர், 2013

“நான் ஹஜ்ஜூக்குப் போகணும்!”

-கே.ஜெய்புன்னிஸா ( ஜெய்பு )
தணல் அடுப்போடு இணைக்கப்பட்ட அலுமினிய தேக்சாவோடு ஊர்வலம் புறப்பட்டு விட்டார் அபூபக்கர். 
சுக்கு காப்பி சூடான சுக்கு காப்பி! கட்டமிட்ட லுங்கியும் அரைக்கைச் சட்டையுமாக சுக்குக் காப்பி விற்கக் கிளம்பினார். அவர் காய்கறி, மளிகைக் கடைகள் நிறைந்த அந்த அங்காடியில் இருந்த வியாபாரிகளே அவரது வாடிக்கையாளர்கள் !
என்ன அபூபக்கரே ஹஜ்ஜூக்குப் போகனும்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிட்டிருப்பியே? என்னாச்சு? வெங்காயக் கடை வகாபு வாயைக் கிளறினான். 
நிச்சயமா ஒரு நாளு நானும் ஹஜ்ஜூக்கு மக்கத்துக்குப் போயி அல்லாவோட பள்ளியிலே தொழுவேன்! இது நெசம்! சுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டே சொன்ன அபூபக்கரின் வார்த்தைகளில் உறுதி தொனித்தது. 
இருக்கப்பட்ட பணக்காரங்களாலேதான் ஹஜ்ஜூக்குப் பயணம் போகமுடியும்? ஒங்களைப்போல கூலிப்பாட்டுக் காரங்களாலே லட்சக்கணக்கிலே பணம் செலவு செஞ்சிட்டுப் போக ஏலுமா? அவன் குரலில் கிண்டல் தெரிந்தது. 
நானு சுக்குக் காப்பி விக்கிறவன் தான். நாளு முச்சூடும் சுத்தினாலும் முப்பது ரூபாய்க்கு மேலே கிடைக்காத வருமானம் இதிலே தெனமும் ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைச்சுட்டு பத்து ரூவாயா சேர்த்துக்கிட்டு வர்றேன்!
எந்த வேளைச் சாப்பாட்டை குறைக்கிறே? 
காலம்பற பசியாறலைத்தான்! வெறும் சுக்குக் காப்பியோடு சரி!!
இல்லாட்டா மட்டும் பரோட்டாவும் குருமாவுமாக ஆக்கி எறக்குறேயாக்கும்? காயற கும்பி ஒரு நல்ல கொள்கைக் காகக் காயட்டுமே?
பேசிக்கொண்டே லாவகமாகக் கூடியிருந்த கூட்டத்தினருக்குச் சுக்குக் காப்பியை ஆற்றிக் கொடுத்துத் தலைக்கு அறுபது காசாக வாங்கிப் பையில் போட்டுக் கொண்டிருந்தார் அபூபக்கர். 
பத்து ரூபாயாகப் பணம் சேர்த்து மக்கத்துக்குப் போறது எந்த நாளு? அதுக்குளர ஆயுசு முடிஞ்சுருமே? பக்கத்துக் கடை மணியும் அவரைக் கிண்டல் செய்வதில் சேர்ந்து கொண்டான். 
அப்படிச் சொல்லாதீங்க! கண்ணை மூடறதுக்குள்ளே ஹஜ்ஜூக்குப் போயி ஹாஜியாராத் திரும்பணுங்கிறது என்னட நெடுநாளு ஹாஜத்து (ஆசை) 
என்னென்னமோ அதிசயமெல்லாம் இந்த கம்ப்யூட்டர் காலத்துல நடக்குது ! அப்படி ஏதாவது அதிசயம் நடந்து லாட்டரியிலே லட்சமாக விழுந்தா நீ ஹாஜியாராகலாம் ! குஞ்சு வாப்பாவின் வார்த்தைகளில் நையாண்டி தொனித்தது.
சுக்குக் காப்பி… சூடான சுக்கு காப்பி … சுமை இறக்கிக் கொண்டிருந்த லாரியை நெருங்கினார் அபூபக்கர் காப்பி பாத்திரம் அந்தக் காலை வேளையில் காலியாகிக் கொண்டிருந்தது.
அபூபக்கருக்கு ஆண் வாரிசு இல்லை. பெற்றது இரண்டுமே பெண்கள் எப்படியோ ஏழெட்டு வகுப்புவரை படிக்க வைத்தார். பெண்கள் புத்தியறிஞ்சவுடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே குர்ஆன் ஓதவைத்தார். மூன்று வருடங்களில் பெண்கள் அரபிப் பாடங்களை ஓதி முடித்தனர். 
சிறுகச் சிறுக சிறுவாடு சேர்த்துக் காதை மூக்கை மூடி அரிசிக் கிடங்கில் சாக்குத் தைத்துக் கொண்டிருந்த ஈசுபுக்கு மூத்த பெண்ணை எளிமையாக மணம் முடித்துக் கொடுத்தார். 
இரண்டாவது பெண் முமினாவையும் சைக்கிளில் சுற்றிப் பழைய பேப்பர் வியாபாரம் செய்து கொண்டிருந்த தூரத்து உறவான இஸ்மாயிலுக்கு மணம் முடித்துக் கொடுத்துத் தன் கடமையை முடித்தார். 
நெஞ்சில் சிறு பொறியாய் ஒளிர்ந்த ஹஜ் பயண ஆசை நாளாக ஆக பெருந்தீயாய்ப் பற்றியெரிந்தது. நபிகள் நாயகம் நடந்த புனித மண்ணை மிதிக்க வேண்டும்! அவர்களின் அடக்கத்தலத்தைக் காணவேண்டும். மக்கத்துப் பள்ளியில் தொழவேண்டும். ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்ற வேண்டும். என்ற அவா இப்பொழுது அவர் நெஞ்சின் வேட்கையாகவே மாறிவிட்டது. 
அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத ஒரு பரம ஏழை. ஹஜ்ஜூக்கு போகவேண்டும் என்கிற பணக்கார பெரிய கனா காண்பதையறிந்து அந்த வட்டாரத்தில் அவரை அறிந்தவர்கள் வேண்டுமென்றே வாயைக் கிண்டி கிண்டல் செய்வது வாடிக்கையாகிப்போனது.
யார் என்ன கேளி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஹஜ்ஜூப் பயணத்திற்காக யார் யாரையோ போய்ப் பார்த்து அதுபற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு எழுதிப் போட்டார். ஹஜ் கமிட்டி மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவசப் பயணமாக ஒருவரின் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதையறிந்து அதற்கும் பெரிதும் முயன்றார். 
உங்களுக்கு வேற வேலையில்லே! பணம் படைச்சவங்களே ஹஜ்ஜூக்குப் பயணம் பண்ண ஏலும் நம்மப்போல கூலிக்காரங்க அதை நெனச்சுக் கூடப் பார்க்க முடியாதே? வீணா ஏங்க ஆசையை வளர்த்துக்கிறீங்க 
அவர் மனைவி புலம்பினாள்.
ஆயிஷா பார்த்துக்கிட்டே இரேன்! என்னை கேலிபேசின இந்த ஊருக்காரங்களே மூக்கு மேலே விரல் வெக்கிற மாதிரி நானும் ஒரு நாளு ஹஜ்ஜூக் கடமையை நிறைவேத்த மக்காவுக்கு போகத்தான் போறேன். எப்பவும்போல ஹஜ்ஜூக் கமிட்டிக்கி எழுதிப் போட்டிருக்கு ! என்னிக்காச்சும் கிடைக்கும் !
மண்ணில் பாய்ந்த ஆணிவேராய் அவர் நெஞ்சில் வேரோடி யிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கை கண்டு மலைத்துப் போனாள் ஆயிஷா. 
வெள்ளிக்கிழமை ஜூம் ஆத் தொழுகை நேரத்தில் மவுலவி, ஹதீஸ் என்னும் நபிகள் நாயக வாழ்வின் நிகழ்ச்சி பற்றி உரையாற்றி முடித்தார்.
அப்போது 
ஜமாஅத் குழுவில் முத்தவல்லி முக்கிய செய்தியை அறிவிக்கும் பொருட்டுக் கூட்டத்தின் முன் வந்தார். ஊரார் பற்றிய முக்கியமான அறிவிப்பை அப்போதுதான் தெரிவிப்பது அவ்வூரின் வழக்கம். 
முத்தவல்லி தொடர்ந்தார். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்பவர்கள் பட்டியலில் ஹஜ் கமிட்டியின் செலவில் இலவசப் பயணம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா? அவர் நிறுத்திவிட்டுக் கூட்டத்தினரைப் பார்த்தார்.
அவைக்கூட்டம் வியப்பும் ஆர்வமுமாகப் பார்த்தது அந்த அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல சுக்குக் காப்பி விற்கும் அபூபக்கர்தான் ! அவருக்கு நாம் உதவுவதோடு நம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
கூட்டத்திலுள்ளவர்கள் அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப் புகழ்ந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்த ஆனந்தம் அடங்க சில நிமிடங்களாயிற்று. 
கடைசியில் அவரோட அசைக்க முடியாத நம்பிக்கை நிறைவேறிவிட்டது. 
கூட்டம் பரவசத்தோடு முணுமுணுத்தது.
படைச்சவனே! என் நாட்டத்தை நிறைவேத்திட்டே! நன்றி ஆனந்தக் கண்ணீர் பார்வையை மறைக்க இரு கரமேந்தி இறைவனுக்கு நன்றி கூறினார் அபூபக்கர்.
தொழுகைக்கு கூடிய கூட்டத்தினர் அபூபக்கருக்காகத் துண்டேந்தி வந்தவரிடம் தம்மால் முடிந்த தொகையை அள்ளிக்கொடுத்தனர். 
தன்னுடைய புனிதப் பயணத்திற்காக ஊராரே முன்வந்து உதவுவதைக் கண்டு மனமுருக மெய்யுருக மெழுகாய்க் கரைந்து கண்களிலிருந்து நீர் வழிய நின்றார் அவர். 
இறைவன் எவ்வளவு கருணையாளன்!
அந்த நல்ல செய்தியை தம் மனைவி ஆயிஷாவிடம் சொல்ல உள்ளம் நிறைந்த உவகையோடும் கனக்கும் பணப்பையோடும் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தார் அபூபக்கர். 
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2003
எழுதியவர்: ஜெய்பு