-கே.ஜெய்புன்னிஸா ( ஜெய்பு )
தணல் அடுப்போடு இணைக்கப்பட்ட அலுமினிய தேக்சாவோடு ஊர்வலம் புறப்பட்டு விட்டார் அபூபக்கர்.
சுக்கு காப்பி சூடான சுக்கு காப்பி! கட்டமிட்ட லுங்கியும் அரைக்கைச் சட்டையுமாக சுக்குக் காப்பி விற்கக் கிளம்பினார். அவர் காய்கறி, மளிகைக் கடைகள் நிறைந்த அந்த அங்காடியில் இருந்த வியாபாரிகளே அவரது வாடிக்கையாளர்கள் !
என்ன அபூபக்கரே ஹஜ்ஜூக்குப் போகனும்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிட்டிருப்பியே? என்னாச்சு? வெங்காயக் கடை வகாபு வாயைக் கிளறினான்.
நிச்சயமா ஒரு நாளு நானும் ஹஜ்ஜூக்கு மக்கத்துக்குப் போயி அல்லாவோட பள்ளியிலே தொழுவேன்! இது நெசம்! சுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டே சொன்ன அபூபக்கரின் வார்த்தைகளில் உறுதி தொனித்தது.
இருக்கப்பட்ட பணக்காரங்களாலேதான் ஹஜ்ஜூக்குப் பயணம் போகமுடியும்? ஒங்களைப்போல கூலிப்பாட்டுக் காரங்களாலே லட்சக்கணக்கிலே பணம் செலவு செஞ்சிட்டுப் போக ஏலுமா? அவன் குரலில் கிண்டல் தெரிந்தது.
நானு சுக்குக் காப்பி விக்கிறவன் தான். நாளு முச்சூடும் சுத்தினாலும் முப்பது ரூபாய்க்கு மேலே கிடைக்காத வருமானம் இதிலே தெனமும் ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைச்சுட்டு பத்து ரூவாயா சேர்த்துக்கிட்டு வர்றேன்!
எந்த வேளைச் சாப்பாட்டை குறைக்கிறே?
காலம்பற பசியாறலைத்தான்! வெறும் சுக்குக் காப்பியோடு சரி!!
இல்லாட்டா மட்டும் பரோட்டாவும் குருமாவுமாக ஆக்கி எறக்குறேயாக்கும்? காயற கும்பி ஒரு நல்ல கொள்கைக் காகக் காயட்டுமே?
பேசிக்கொண்டே லாவகமாகக் கூடியிருந்த கூட்டத்தினருக்குச் சுக்குக் காப்பியை ஆற்றிக் கொடுத்துத் தலைக்கு அறுபது காசாக வாங்கிப் பையில் போட்டுக் கொண்டிருந்தார் அபூபக்கர்.
பத்து ரூபாயாகப் பணம் சேர்த்து மக்கத்துக்குப் போறது எந்த நாளு? அதுக்குளர ஆயுசு முடிஞ்சுருமே? பக்கத்துக் கடை மணியும் அவரைக் கிண்டல் செய்வதில் சேர்ந்து கொண்டான்.
அப்படிச் சொல்லாதீங்க! கண்ணை மூடறதுக்குள்ளே ஹஜ்ஜூக்குப் போயி ஹாஜியாராத் திரும்பணுங்கிறது என்னட நெடுநாளு ஹாஜத்து (ஆசை)
என்னென்னமோ அதிசயமெல்லாம் இந்த கம்ப்யூட்டர் காலத்துல நடக்குது ! அப்படி ஏதாவது அதிசயம் நடந்து லாட்டரியிலே லட்சமாக விழுந்தா நீ ஹாஜியாராகலாம் ! குஞ்சு வாப்பாவின் வார்த்தைகளில் நையாண்டி தொனித்தது.
சுக்குக் காப்பி… சூடான சுக்கு காப்பி … சுமை இறக்கிக் கொண்டிருந்த லாரியை நெருங்கினார் அபூபக்கர் காப்பி பாத்திரம் அந்தக் காலை வேளையில் காலியாகிக் கொண்டிருந்தது.
அபூபக்கருக்கு ஆண் வாரிசு இல்லை. பெற்றது இரண்டுமே பெண்கள் எப்படியோ ஏழெட்டு வகுப்புவரை படிக்க வைத்தார். பெண்கள் புத்தியறிஞ்சவுடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே குர்ஆன் ஓதவைத்தார். மூன்று வருடங்களில் பெண்கள் அரபிப் பாடங்களை ஓதி முடித்தனர்.
சிறுகச் சிறுக சிறுவாடு சேர்த்துக் காதை மூக்கை மூடி அரிசிக் கிடங்கில் சாக்குத் தைத்துக் கொண்டிருந்த ஈசுபுக்கு மூத்த பெண்ணை எளிமையாக மணம் முடித்துக் கொடுத்தார்.
இரண்டாவது பெண் முமினாவையும் சைக்கிளில் சுற்றிப் பழைய பேப்பர் வியாபாரம் செய்து கொண்டிருந்த தூரத்து உறவான இஸ்மாயிலுக்கு மணம் முடித்துக் கொடுத்துத் தன் கடமையை முடித்தார்.
நெஞ்சில் சிறு பொறியாய் ஒளிர்ந்த ஹஜ் பயண ஆசை நாளாக ஆக பெருந்தீயாய்ப் பற்றியெரிந்தது. நபிகள் நாயகம் நடந்த புனித மண்ணை மிதிக்க வேண்டும்! அவர்களின் அடக்கத்தலத்தைக் காணவேண்டும். மக்கத்துப் பள்ளியில் தொழவேண்டும். ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்ற வேண்டும். என்ற அவா இப்பொழுது அவர் நெஞ்சின் வேட்கையாகவே மாறிவிட்டது.
அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத ஒரு பரம ஏழை. ஹஜ்ஜூக்கு போகவேண்டும் என்கிற பணக்கார பெரிய கனா காண்பதையறிந்து அந்த வட்டாரத்தில் அவரை அறிந்தவர்கள் வேண்டுமென்றே வாயைக் கிண்டி கிண்டல் செய்வது வாடிக்கையாகிப்போனது.
யார் என்ன கேளி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஹஜ்ஜூப் பயணத்திற்காக யார் யாரையோ போய்ப் பார்த்து அதுபற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு எழுதிப் போட்டார். ஹஜ் கமிட்டி மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவசப் பயணமாக ஒருவரின் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதையறிந்து அதற்கும் பெரிதும் முயன்றார்.
உங்களுக்கு வேற வேலையில்லே! பணம் படைச்சவங்களே ஹஜ்ஜூக்குப் பயணம் பண்ண ஏலும் நம்மப்போல கூலிக்காரங்க அதை நெனச்சுக் கூடப் பார்க்க முடியாதே? வீணா ஏங்க ஆசையை வளர்த்துக்கிறீங்க
அவர் மனைவி புலம்பினாள்.
ஆயிஷா பார்த்துக்கிட்டே இரேன்! என்னை கேலிபேசின இந்த ஊருக்காரங்களே மூக்கு மேலே விரல் வெக்கிற மாதிரி நானும் ஒரு நாளு ஹஜ்ஜூக் கடமையை நிறைவேத்த மக்காவுக்கு போகத்தான் போறேன். எப்பவும்போல ஹஜ்ஜூக் கமிட்டிக்கி எழுதிப் போட்டிருக்கு ! என்னிக்காச்சும் கிடைக்கும் !
மண்ணில் பாய்ந்த ஆணிவேராய் அவர் நெஞ்சில் வேரோடி யிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கை கண்டு மலைத்துப் போனாள் ஆயிஷா.
வெள்ளிக்கிழமை ஜூம் ஆத் தொழுகை நேரத்தில் மவுலவி, ஹதீஸ் என்னும் நபிகள் நாயக வாழ்வின் நிகழ்ச்சி பற்றி உரையாற்றி முடித்தார்.
அப்போது
ஜமாஅத் குழுவில் முத்தவல்லி முக்கிய செய்தியை அறிவிக்கும் பொருட்டுக் கூட்டத்தின் முன் வந்தார். ஊரார் பற்றிய முக்கியமான அறிவிப்பை அப்போதுதான் தெரிவிப்பது அவ்வூரின் வழக்கம்.
முத்தவல்லி தொடர்ந்தார். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்பவர்கள் பட்டியலில் ஹஜ் கமிட்டியின் செலவில் இலவசப் பயணம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா? அவர் நிறுத்திவிட்டுக் கூட்டத்தினரைப் பார்த்தார்.
அவைக்கூட்டம் வியப்பும் ஆர்வமுமாகப் பார்த்தது அந்த அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல சுக்குக் காப்பி விற்கும் அபூபக்கர்தான் ! அவருக்கு நாம் உதவுவதோடு நம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
கூட்டத்திலுள்ளவர்கள் அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப் புகழ்ந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்த ஆனந்தம் அடங்க சில நிமிடங்களாயிற்று.
கடைசியில் அவரோட அசைக்க முடியாத நம்பிக்கை நிறைவேறிவிட்டது.
கூட்டம் பரவசத்தோடு முணுமுணுத்தது.
படைச்சவனே! என் நாட்டத்தை நிறைவேத்திட்டே! நன்றி ஆனந்தக் கண்ணீர் பார்வையை மறைக்க இரு கரமேந்தி இறைவனுக்கு நன்றி கூறினார் அபூபக்கர்.
தொழுகைக்கு கூடிய கூட்டத்தினர் அபூபக்கருக்காகத் துண்டேந்தி வந்தவரிடம் தம்மால் முடிந்த தொகையை அள்ளிக்கொடுத்தனர்.
தன்னுடைய புனிதப் பயணத்திற்காக ஊராரே முன்வந்து உதவுவதைக் கண்டு மனமுருக மெய்யுருக மெழுகாய்க் கரைந்து கண்களிலிருந்து நீர் வழிய நின்றார் அவர்.
இறைவன் எவ்வளவு கருணையாளன்!
அந்த நல்ல செய்தியை தம் மனைவி ஆயிஷாவிடம் சொல்ல உள்ளம் நிறைந்த உவகையோடும் கனக்கும் பணப்பையோடும் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தார் அபூபக்கர்.
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2003
எழுதியவர்: ஜெய்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக