( ஆபிதா அதிய்யா )
நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )
முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதனைப் பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைகின்றார்கள்.
ஆகவே, புனிதமிக்க இந்த ஜம்ஜம் தண்ணீரில் அப்படி என்ன தான் சிறப்பு இருக்கிறது என்றால் அதில் அனைத்தும் இருக்கின்றது.
வறண்ட பாலைவனத்தில் உதித்த இந்நீரூற்று பல நூறு ஆண்டுகளாய் வற்றாமல், மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. என்றைக்குமே வற்றாத நீரூற்றாகத் தொடர்ந்து ஒலித்தோடிக் கொண்டிருக்கிறது.
இது ஐந்தடி ஆழமுள்ள கிணறு. இதற்கு அருகில் எந்த நீர் நிலைகளும், நீராதாரமும் மிக்க எந்த வழிகளும் கிடையாது. இந்தக் கிணற்றின் நீர் எப்போதும் தானாகவே பொங்கி வரக்கூடியதாகவும், கோடிக்கணக்கான ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவதோடு, தங்கள் தேவைகளுக்காகத் தாய்நாட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கும் நீர் சுரக்கின்றது.
இதில், கால்சியம், மெக்னீசியம் இருப்பதன் காரணமாக நோயைக் குணப்படுத்துகிறது.
இயற்கையாகவே, இதில் ஃபுளூரைடு கலந்திருப்பதால் நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய தன்மைகள் உண்டு என்று மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மிதவெப்பமான காலத்தில் நீர் நிலைகளில் ‘ஆல்கே’ என்ற பாசி படியும். ஆனால் இக் கிணற்றில் எவ்விதப் பாசியும் படிவதில்லை. மேலும் இது உயிர் – வேதியியல் காரணிகளின் கேடுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
ஜம் ஜம் தோன்றிய வரலாறு
அன்னை ஹாஜரா (அலை) அவர்கள், தனது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பருகக் கொடுப்பதற்காக, இந்தப் பாலைப் பெருவெளியில் தண்ணீருக்காக ஸஃபா, மர்வா எனும் இரு மலைக் குன்றுகளுக்குக்கிடையில் ஓடிக்கொண்டிருந்தபோது, அல்லாஹ் தனது அருட்கொடையினால் இந்த நீரூற்றை ஓடச் செய்தான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“அல்லாஹ் தனது மிகப்பெரும் கருணையை இஸ்மாயீல் (அலை) அவர்களது அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் மீது பொழிவானாக ! அன்னை ஹாஜரா அவர்கள் அந்த ஜம்ஜம் தண்ணீரை (ஊற்றை) அது எவ்வாறு இருந்ததோ அதன்படி, (அதில் தொட்டி போன்று எதனையும் கட்டாமல்) அதிலிருந்து நீரூற்றாக ஒலித்தோடும்படி விட்டு வைத்தார்கள். ஜூர்ஹூம் என்ற அரபு கோத்திரதார் ஹாஜரா (அலை) அவர்களுடன் வந்து, நாங்கள் இங்கே உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டபோது, ஆம் ..! (தங்கிக் கொள்ளலாம்) ஆனால், இந்த நீரூற்றின் மீது உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. (என்றால் நீங்கள் தங்கிக் கொள்ளலாம்) என்றார்கள். அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். (புகாரி)
இவ்வாறே உயிர் வாழ்வதற்கு எந்தவித ஆதாரமும் அற்ற அந்தப் பாலைப்பெருவெளியில் மனிதர்கள் குடியேறத் துவங்கினர்.
ஜம் ஜம் நீரூற்றின் மறுபிறப்பு !
மக்காவில் முதன் முதலில் குடியேறி ஜூர்ஹூம்கல் நீதமாகவும் நேர்மையாகவும் நடப்பதை விட்டுவிட்டு அடக்குமுறையாளர்களாக மாறிய போது, மக்காவை விட்டும் அவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. அவர்கள் இப்புனித நீரூற்றின் மகத்துவத்தினைப் பற்றி அக்கறையில்லாத காரணத்தால், ஜம்ஜம் நீரூற்று அதன் அருட்கொடைகளை அம்மக்களுக்கு வழங்க மறுத்தது. நீரூற்றை பூமி இழுத்துக் கொண்டது. அதன் பின்பு ஜம்ஜம் திறக்கப்படாமலேயே மறக்கப்பட்டதாகவும் ஆகிப் போனது.
இவ்வாறு பல தலைமுறைகள் வந்து போயின. பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப்பின் தலைமுறை வரைக்கும் இவ்வாறிருந்தது. அதன் பின் அப்துல் முத்தலிப் அவர்கள் இந்த நீரூற்றை மீண்டும் தோண்டினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள், மூடப்பட்ட நிலையில் கிடந்த கிணற்றைத் தோண்டுவது போலக் கனவு கண்டார்.
அன்று மக்காவாசிகளிடம் இருந்த கடுமையான இறை நிராகரிப்பின் காரணமாக, ‘இந்தப் பாழ் பட்டுப்போன இடத்திலா தண்ணீரைத் தேடுகிறீர்கள்’ என்று அப்துல் முத்தலிபை நோக்கி ஏளனமாகச் சிரித்தார்கள். பின் அந்தத் தொன்மையான கிணறு கஅபாவிற்கு மிக அருகில் தான் உள்ளது என்பதைக் கண்டு கொண்டார்கள்.
ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுவதற்காக மக்கா வரும் பயணிகளுக்கு ஜம்ஜம் நீர் எளிதாகக் கிடைப்பதற்குண்டான வழிகளை ஏற்பாடு செய்து கொடுக்கும் பொறுப்பை அப்துல் முத்தலிப் ஏற்றுக் கொண்டார்.
அப்துல் முத்தலிபின் முயற்சியால் ஜம்ஜம் நீரூற்று புதுப்பொலிவை அடைந்தது. அது புனிதமானது என நம்பினார். முக்கியப் பிரச்சனைகளின் பொழுது, ஜம்ஜம் நீரைப் பருகிவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்கக் கூடியவராக இருந்தார்.
அல்ஹாரித் இப்னு கலீஃபா அஸ்ஸாதீ என்பவர் அறிவிக்கின்றார்கள்:
“குறைஷிகள் தங்களது எதிரிகளைச் சந்திக்கச் செல்லுமுன், அதற்கான தயாரிப்புகளுக்கு முன்பாக ஜம்ஜம் நீரைப் பருகும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தம்முடைய பிரச்சனையின் தீவிரத்தை வெளிக்காட்ட விரும்பும் ஒருவர், ஜம்ஜம் கிணற்றின் அருகிலிருக்கும் பானைகளைச் சேகரிப்பதன் மூலம் அதனை வெளிப்படுத்துவார். பிரச்சனைகளின் போது இந் நீர் தங்களுக்கு அருட்கொடையை வழங்கும் என நம்பிக்கை கொண்டிருந்தாலும், பல நேரங்களில் அவர்களது நம்பிக்கைக்கு மாற்றமாகவும் நடந்திருக்கின்றன.
கிணற்றின் அமைவிடம்
கஅபாவிற்குச் சில அடி தூரத்திலும், மகாமே இபுராஹீமிற்குப் பின்புறத்திலும் இக்கிணறு அமைந்துள்ளது. இப்பொழுது இந்த இடத்தை வட்ட வடிவ அமைப்பிலான மார்பிள் கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. இன்னும் கஅபாவை வலம் (தவாஃப்) வரக் கூடியவர்களுக்கு இடையூறின்றி, தரை மட்டத்திலிருந்து கீழே அமைக்கப்பட்டுள்ளது. மாசுகளிலிருந்தும் பாதுகாக்கும் பொருட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்ஜம் கிணறு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு, இதே பெயரினைக் கொண்ட கிணறுகள் மதீனாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான அத்தாட்சிகள்
ஜம்ஜம் கிணறு அமைந்துள்ள ‘ஹரம்’ பள்ளிவாசல் தான் உலகிலேயே ஓரிறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் புனிதமிக்க பள்ளிவாசலாகும். இப் புனிதத்துடன் இன்னும் பல அடையாளங்களையும் இவ்விடத்தின் மீது அருட்கொடையாக இறைவன் வழங்கியிருக்கிறான்.
இறைவன் தன் இறைமறையிலே கூறுகின்றான் : “(இறைவணக்கத்திற்கென) மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வீடு, நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரகத்து (அருள்வளம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (இப்ராஹீம் நின்ற இடம்) மகாமே இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்புப் பெறுகிறார்.” (3 : 96-97)
ஜம்ஜம் கிணறுகூட தெளிவான அத்தாட்சிகளில் உள்ளதாகும். வரலாற்றுக் குறிப்பின்படி, இப்ராஹீம் (அலை), தனது மனைவியையும், குழந்தையையும் அந்தப் பாலைவனப் பிரதேசத்தில் விட்டுவிட்டுச் செல்லும்பொழுது, இறைவனிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றார்:
“எங்கள் இறைவனே ! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே ! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே, அவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக ! மேலும், இவர்களுக்கு உண் பொருள்களை வழங்குவாயாக ! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக்கூடும்!” (அல்குர்ஆன் 14:37)
வாழ்வாதாரத் தேவைகளில் இறைவன் வழங்கியிருக்கின்ற எல்லாவற்றிலும் முதன்மையானது ஜம்ஜம்.
வற்றாத நீரூற்று
ஜம்ஜம் நீரூற்றின் மற்றொரு சிறப்பம்சம். இது வற்றாத நீரூற்றாகும். இது மக்காவிற்கு, ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்ற வரும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
“அல்லாஹ் தனது முழுமையான அருளை அன்னை ஹாஜரா மீது பொழிவானாக ! அவர்கள் இவ்வற்றாத ஊற்றிலிருந்து (ஜம்ஜம்) நீரை வழிந்தோடும் படிச் செய்வதற்குக் காரணமாக அமைந்தார்கள்.”
(அஹ்மத்)
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பில்லியன் கணக்கான மக்கள் இந்நீரைப் பருகிச் சென்றவண்ணம் இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் பள்ளி அமைந்திருக்கும் மதீனாவிற்கும் இந்நீர் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஜ், உம்ரா செய்பவர்கள் மில்லியன் கணக்கான லிட்டர்கள் இந்நீரை எடுத்துச் சொல்கிறார்கள்.
இதன் சிறப்பு என்னவெனில், எந்த அளவு இந்நீரைப் பருகுகின்றோமோ, அந்த அளவுக்கு அது ஊறிக் கொண்டேயிருக்கும்.
நன்றி : நம்பிக்கை மாத இதழ், மலேசியா, நவம்பர் 2010
Waltuhal
பதிலளிநீக்கு