வெள்ளி, 11 செப்டம்பர், 2015

எல்ஐசி எனும் வைரம்----இரா. புண்ணியமூர்த்தி----தி இந்து

எல்ஐசியின் வரலாறு, பொதுத் துறை நிறுவனங்களின் வெற்றி வரலாறு

வைரவிழா ஆண்டில் இன்று அடியெடுத்துவைக்கிறது எல்ஐசி. ஒருவகையில் எல்ஐசியின் வரலாறு, பொதுத் துறை நிறுவனங்களின் வெற்றிகரமான வரலாறு. 59 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.5 கோடியில் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்றைக்கு 30 கோடி பாலிசிதாரர்களுடன் உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாக நிமிர்ந்து நிற்கும் சூழலில் அதன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ. 20.31 லட்சம் கோடி.

இன்றும் அரசின் அந்த ரூ.5 கோடி முதலீட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் லாப ஈவுத் தொகையை எல்ஐசி அளிக்கிறது. 2014-15-ல் இப்படி வழங்கப்பட்ட தொகை

ரூ. 1,803 கோடி. 2001 - 2015 வரையிலான 15 ஆண்டுகளில் மட்டுமே இப்படி அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தொகை ரூ 13,000 + கோடி. தவிர, உபரி நிதி மதிப்பீட்டின் பிந்தைய வரியாக ரூ. 36,080 கோடியை அரசுக்குச் செலுத்தியுள்ளது. மேலும், தேசத்தின் வளர்ச்சிக்காக அரசின் பத்திரங்களிலும், சமூக நலத்திட்டங்களிலும் ரூ. 12.86 லட்சம் கோடி முதலீடுசெய்துள்ள ஒரே பெரிய இந்திய நிறுவனம் எல்ஐசி. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 1956-ல் எல்ஐசிக்கு மத்திய அரசு கொடுத்த ரூ. 5 கோடி முதலீட்டைத் தவிர, இடையில் ஒரு நயா பைசாவைக்கூட இதுவரை உதவியாகப் பெறாமலேயே இத்தகைய சாதனைகளை எல்ஐசி நிகழ்த்தியிருக்கிறது என்பதுதான்.

உலகின் முதல் நிறுவனம்

எல்ஐசியின் சாதனைகள் அவ்வளவு எளிதில் நடந்தவை அல்ல. ஏனென்றால், எல்ஐசி உருவாகும் முன் இந்நாட்டின் காப்பீட்டுத் துறை தனியார் நிறுவனங்களின் கைகளில் இருந்தது. மக்கள் பணத்தை அவை சூறையாடின. மக்கள் உரிமத்தொகை வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டார்கள். அப்படியெல்லாம் இருந்தும் நஷ்டக் கணக்கைக் காட்டின அந்நாளைய காப்பீட்டு நிறுவனங்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் நாட்டின் காப்பீட்டுத் துறையை அரசின் கைக்குக் கொண்டுவந்தார் பிரதமர் நேரு. எல்ஐசி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, “ஆயுள் காப்பீட்டுத் தொழிலை நடத்தத் தேவைப்படும் வணிகத் திறமையும், தகுதிகளும் அரசால் நடத்தப்படுகிற இந்நிறுவனத்துக்கு இருக்குமா?” என்று கேள்வி கேட்ட பொருளாதார நிபுணர்களே அதிகம். ஆனால், படிப்பறிவில்லாத கிராமத்து மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட, பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லாத, தனிநபர் வருமானம் குறைவாக உள்ள ஒரு தேசத்தில், மக்களோடு மக்களாக இந்தப் பொதுத்துறை நிறுவனம் கலந்ததன் விளைவு புதிய முன்னுதாரணங்கள் விளைந்தன.

அதேபோல, 1999-க்குப் பிறகு, காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டபோதும், “இனி, எல்ஐசி அவ்வளவுதான்” என்றார்கள். நவீன தாராளவாத ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி, இன்றைக்கு 23 தனியார் நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டுத் துறையில் இயங்கிவரும் நிலையில், பாலிசிகள் எண்ணிக்கை அடிப்படையில் 78% சந்தைப் பங்கை நிலைநிறுத்தியிருக்கிறது எல்ஐசி. எல்லாவற்றுக்கு மேல் எத்தனை பாலிசிகளை விற்கிறது என்பதில் அல்ல ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் சிறப்பு; எவ்வளவு பாலிசிகளுக்கு முதிர்வு / இறப்பு உரிமத்தொகைகளை ஒழுங்காக வழங்குகிறது என்பதிலேயே அதன் சிறப்பு இருக்கிறது. எல்ஐசியின் தலையாய பெருமை இங்கேதான் இருக்கிறது. இறப்பு உரிமங்கள் வழங்குவதில் 99.51%; முதிர்வு உரிமங்கள் வழங்குவதில் 99.78% உரிய முறையில், சரியான நேரத்திலும் வழங்கி உலகிலேயே உரிமங்களை வழங்குவதில் முதல் நிறுவனமாக நிற்கிறது எல்ஐசி.

மத்திய அரசுக்கு உதவும் எல்ஐசி

எல்ஐசியின் வெற்றிக் கதையும் அதன் லாபங்களும் ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் வெற்றியல்ல. மாறாக, இந்திய அரசின், இந்திய மக்களின் வெற்றி. எப்படி? இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த அடுத்த ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி அதில் முதலீடு செய்யப்படும் என்று அரசு அறிவித்தது அல்லவா? அந்த முதலீட்டில் முதல் முதலீடு எங்கிருந்து வந்தது? எல்ஐசியிலிருந்து வந்தது. இது சமீபத்திய உதாரணம். அவ்வளவே. நீண்ட காலமாக எல்ஐசியின் நிதி அரசுக்கு உதவிவருகிறது. நாட்டின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு மட்டும் இதுவரை எல்ஐசி வழங்கியிருக்கும் தொகை ரூ. 32.14 லட்சம் கோடி. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் தவிர, கருப்புத் திங்கள், கருப்பு வெள்ளி என்று எப்போதெல்லாம் பங்குச்சந்தை சரிவை நோக்கிச் செல்கிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசு எல்ஐசியின் வாசல் கதவைத் தட்டுவதற்குத் தயங்குவதே இல்லை.

ஏன் தனியார்மயம்?

ஒரு பொதுத் துறை நிறுவனத்தைச் சரியான திசையில் செலுத்தினால், அது எந்த அளவு உயரத்துக்கு வரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும், பொதுத் துறை நிறுவனங்கள் தேசத்தின் கட்டுமானத்தில் கொண்டுள்ள அக்கறைக்கும் தேசத்தின் வளர்ச்சிக்குப் பொதுத் துறை நிறுவனங்கள் அளித்திருக்கும் பங்களிப்புக்கும் இது ஒரு உதாரணம். பொதுத் துறை நிறுவனங்களின் எழுச்சிக்கான குறியீடாக எல்ஐசி இப்படி உயர்ந்து நிற்கும் வைர விழா தருணத்தில், நாம் சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய அரசாங்கம் ஏன் தொழில் நடத்தத் தனியாரை அழைக்கிறது? ஏன் பொதுத் துறை நிறுவனங்களை மூடி, முழுக்க தனியார்மயமாக்கிவிடத் துடிக்கிறது?

காப்பீட்டுத் துறையைத் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டபோது அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட முக்கியமான காரணங்கள், “காப்பீட்டுத் துறையை மேலும் பரவலாக்க, மேலும் பல கிராமங்களை நோக்கிச் செல்ல இந்தத் தனியார்மயம் உதவும். மேலும் சந்தையை இது விரிவாக்கும்” என்பது. இதே காரணங்கள்தான் வெவ்வேறு வார்த்தைகளில் எல்லா தனியார்மயமாக்க நடவடிக்கைகளின்போதெல்லாம் சொல்லப்படுகின்றன. ஆனால், இவையெல்லாம் நடந்ததா?

இந்திய அரசுக்கான செய்தி

உண்மையில், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எந்த கிராமப் பகுதிக்கும் செல்லவில்லை என்பதோடு, சிறிய நகரங்களில் திறந்த அலுவலகங்களைக்கூட மூடிவருகின்றன என்பதே கள யதார்த்தம். சாலைகளே இல்லாத கிராமங்களிலும்கூட எல்ஐசியின் பாலிசிகள் பயணித்திருக்கின்றன. ஆனால், தனியார் நிறுவனங்களோ அதிக பிரிமியம் எனும் இலக்கைக் குறியாக வைத்துக்கொண்டு நகரங்களையே சுற்றுகின்றன. சிறிய தொகையைப் பிரிமியமாகச் செலுத்துகிற எளிய மக்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. சரி, சந்தையில் போட்டியை உத்வேகப்படுத்துவதற்காகவே தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஏன் பொதுத் துறை நிறுவனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காலிசெய்ய வேண்டும்?

இன்றைக்கு இந்தியாவில் எல்ஐசி போன்ற விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய நிறுவனங்கள் நீங்கலாக, ஏனைய பொதுத் துறை நிறுவனங்கள் யாவும் கவலையுடனே தங்கள் எதிர்காலத்தை நோக்கியிருக்கின்றன. சுதந்திரமான சந்தையே தேசத்தின் வளர்ச்சிக்கு உதவிடும் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் நம்முடைய அரசியல்வாதிகள், பொதுத் துறை நிறுவனங்கள் எனும் மக்கள் சொத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து, அவற்றைத் தாரைவார்த்துக்கொண்டிருக்கின்றனர். பொதுத் துறை நிறுவனங்கள் நம் சொத்து, அவற்றின் எதிர்காலம் தேசத்தின் எதிர்காலப் பொருளாதாரமும் வேறுவேறல்ல. எல்ஐசி தன்னுடைய வைர விழா தருணத்தில் இந்திய அரசுக்குச் சொல்லும் மகத்தான செய்தி இதுதான்!

- இரா. புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர்,

தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு.

தொடர்புக்கு: rpmthanjai@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக