ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கலாம் பற்றிய செய்திகள் சொல்கிறார் அவர் அண்ணன் முஹம்மது மீரான் லெப்பை


மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமை இழந்த துயரம் ராமேஸ்வரத்தைவிட்டு இன்னும் நீங்கவில்லை. கடலில் மிதந்துகொண்டிருந்த அந்த சின்னஞ்சிறிய தீவு, ஜூலை 27-ஆம் தேதியிலிருந்து கண்ணீரில்தான் மிதந்துகொண்டிருக்கிறது. அங்கு, மசூதித் தெருவில் இருக்கும் கலாமின் இல்லம் இன்னும் துக்கம்கப்பிய நிலையில்தான் இருக்கிறது. கலாமின் அபிமானிகள் நாடுமுழுவதிலுமிருந்து அவரது இல்லத்திற்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். மனமொடிந்து போயிருக்கும் கலாமின் 98 வயது அண்ணன், முகமது மீரான் லெப்பை மரைக்காயர், கலாமின் நினைவாகவே இருக்கிறார். சுகர், பிரஷர் என்று எந்தக் கோளாறும் இல்லாமல், நல்ல தெளிவோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கும் அவர், மனரீதியாக பலமாக பாதிக்கப் பட்டிருக்கிறார். நம் வாசகர்களுக்காக அவரிடம் சில கேள்விகளை நாம் வைத்தோம். கேட்கும் திறன் குறைந்திருக்கும் மரைக்காயர் பதில்தர, அவரின் மகள் முனைவர் நசீமாவும் பேரன் சேக் சலீமும் உதவினார்கள்.

அய்யா எப்படி இருக்கிறீங்க?

ஏதோ இருக்கேன். ஒரே நாள்ல எல்லாத்தை யும் இழந்துட்டதுபோல இருக்கேன். எனக்கு 98 வயசாகுது. கலாம் என்னைவிட 14 வயசு சின்னவர். அவருக்கு இப்படி ஆகியிருக்கக்கூடாது. ரொம்ப நல்லவர். கடின உழைப்பாளி. ஒரு ஈ, எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காதவர். இந்தியாவே பெருமைப்படும்படி இருந்தார். ஒரு மகான்போல வாழ்ந்தார். அவரைப் பறிகொடுத்துட்டு நிக்கிறோம்.

உங்களைப் பத்தி சொல்லுங்கய்யா?

பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்ல. நான் 5 ஆம் வகுப்புவரைதான் படிச்சேன். கலாம் படிப்பில் ரொம்ப ஆர்வமா இருந்ததால், அவனைப் படிக்கவச்சோம். மரக்கலம் (படகு) விடுறதுதான் எங்க குடும்பத் தொழில். நான் ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் ’பாசஞ்சர் போட் ’விட்டுக்கிட்டி ருந்தேன். 64-ஆம் வருஷ புயலில் தனுஷ்கோடி உட்பட எல்லாம் போச்சு. அப்ப பாம்பன் பாலத்தில் ஓடிய ஒரு ரயில் கடலோட போச்சு. இந்தப் பகுதி மக்களோட தலையெழுத்தையே அந்தப் புயல் மாத்திடிச்சி. புயலுக்கு அப்புறம், தலைமன்னாருக்கு படகு விடமுடியலை. அதனால் படகுகளை மீன்பிடி படகா மாத்தி, வாடகைக்கு விட்டேன். தோப்புத் தொறவை முழுசா பார்த்துக் கிட்டிருந்தேன். பெரிய தென்னந்தோப்பு இருக்கு. அதில் ஓரளவு வருமானம். இதுக்கிடையில் ராமேஸ்வரம் பஞ்சாயத்துத் தலைவரா தேர்தல்ல நின்னு ஜெயிச்சேன். முடிஞ்சதை ஊருக்கு செஞ்சேன். வயசான பிறகு ஓஞ்சுபோய் உட்கார்ந்துட்டேன். அதுக்குப் பிறகு குடும்பத்தை கலாம் கையில் எடுத்துக் கிட்டான்.

உங்க குடும்பத்தைப் பத்தி?

என் மனைவி பேரு அகமது கனிஅம்மாள். மவுத் (இறப்பு) ஆயிட்டார். எங்களுக்கு அஞ்சு பொண்ணுங்க. ரெண்டு மகன்கள். அதில் என் மூத்த மகன் சாகுல் ஹமீதும் மகள் தங்கராணியும்கூட மவுத் ஆயிட்டாங்க. மத்தவங்க இங்க ராமேஸ்வரத்திலேயே இருக்காங்க. ஆளாளுக்கு ஒரு தொழிலை வச்சி பொழப்பை நடத்தறாங்க. பேரப் பிள்ளைக, கொள்ளுப்பேரப் பிள்ளை களோட பெரிய குடும்பமா வாழ்ந்துக் கிட்டிருக்கோம். என்னை என் மகள் நசீமாவும் மகன் ஜெய்னுலாபுதீனும் நல்லபடியா பார்த்துக்கறாங்க.

கலாம் சின்னவயசில் எப்படி?

கலாம் என்னை எப்பவும் காக்கான்னு கூப்பிடுவார். பெரியவங் களை இப்படிக் கூப்பிடுறது இந்தவூர் பழக்கம். என் மனைவி அகமது கனியை மச்சின்னு கூப்பிடுவார். தன் அண்ணிமேல் ரொம்ப மரியாதை யாவும் அன்பாவும் இருப்பார் கலாம். கலாமுக்கு அப்ப இருட்டுன்னா பயம். கொல்லைப்புறம் போகனும்னாக்கூட, வீட்டில் யாரையாவது துணைக்கு அழைச்சிக்கிட்டுப் போவார்.

பூரணம் வச்ச போலி, பயித்தம் லட்டுன்னா கலாமுக்கு உசுரு. வீட்டில் எங்க அம்மா லட்டு பண்ணி ஏனத் தில் போட்டு பரணியில் வச்சிருப் பாங்க. எங்க அம்மா தூங்கிக்கிட்டி ருந்தாக்கூட ஸ்டூலைப் போட்டு ஏறி, லட்டை எடுத்து ஆசையா சாப்பிடு வார். எங்க அம்மா எழுந்ததும், உங்கிட்ட சொல்லாம லட்டை எடுத்துச் சாப்பிட்டுட்டேம்மான்னு சொல்லிடுவார். பொய் பேசமாட்டார். படிப்பில் கெட்டிக்காரர். கொஞ்சம் குறும்புக்காரர். சும்மா இருக்கமாட்டார். துறுதுறுன்னு இருப்பார். படிக்கும்போதே பிறருக்கு உபகாரங்கள் பண்ணுவார். ஒரு தடவை படிச்சிக்கிட்டிருந்த கலாமைக் காணலை. பார்த்தா, பக்கத்தில் இருந்தவங்க சொன்னாங்கன்னு, டீக்கடைக்கு போய் அவங்களுக்கு தேத்தண்ணி வாங்கிட்டு வந்துக்கிட் டிருந்தார். வீட்டுக்கு வந்ததும், இதான் படிக்கிற லட்சணமான்னு முதுகில வச்சேன். இப்படி அவர் அருமை தெரியாம நிறையதடவை அடிச்சிருக் கேன். வாத்தியார்கள்ட்ட அவருக்கு பக்தி அதிகம்.

சின்ன வயசிலேயே, பைலட் ஆவப் போறேன், ஏரோப்பிளேன்ல பறக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருப் பார். அப்பவே வித்தியாசமா இருந் தார். எங்க ஊர்ல கலாம்தான் முதல் பட்டதாரி.

உங்களுக்கும் கலாமுக்கும் கிடைச்ச அப்பா- அம்மாவைப் பத்தி சொல்லுங்க?

ரொம்ப அருமையானவங்க. நாங்க எங்க அப்பா- அம்மாமேல பய பக்தியா இருப்போம். அப்பா ஜெய்னுலாபுதீன் பாக்க, ஆள் நெடுநெடுன்னு சிவப்பா, கம்பீரமா இருப்பார். தர்மசீலர். அதேசமயம் கொஞ்சம் கோபக்காரர். தப்பு செஞ்சா எங்களை பின்னி எடுத்துடு வார். ஊர்த் தலைவரா இருந்தார். மும்மத ஜனங்களும் அவரை ஊர்த் தலைவரா ஏத்துக்கிட்டாங்க. எங்க ஊர்ல அப்ப கோர்ட் கிடையாது. அவர்தான் கோர்ட். குடும்பப் பிரச்சினையில் இருந்து வாய்க்கா வரப்புப் பிரச்சினை வரை, அவர் தீர்த்துவச்சிடுவார். பாசஞ்சர் படகும் அவருக்கு ஓடுச்சு. ஒருதரம், ராமேஸ்வரம் கோயில் உற்சவம். படகில் வந்துக்கிட்டிருந்தப்ப, திடீர்ன்னு படகு கவிழ்ந்துபோய், சாமி சிலைகள் கடல்ல விழுந்துடுச்சி. அப்ப எங்க அப்பாவும் அவர் ஆளுங்களும்தான் கடல்ல குதிச்சி, சாமி சிலைகளை தேடியெடுத்துக் கொடுத்தாங்க. உடனே கோயில் அதிகாரிகள், இனி உங்க படகில்தான் சாமி வரும்ன்னு சொல்லிட்டாங்க. அதிலிருந்து கோயில் உற்சவம் எங்க அப்பா படகில் நடக்க ஆரம்பிச்சிது.

கலாம் ஜனாதிபதி ஆவார் என அதற்கு முன்பு நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா?

இல்லை. ஆனா ரொம்பப் பெரிய ஆளா வருவார்ன்னு மட்டும் நெனைச்சேன். ஜனாதிபதிக்கு வாஜ்பாய் நிக்கச் சொன்னப்ப, ரெண்டுமணி நேரம் யோசிக்க டைம் வாங்கினார். அப்ப என்கிட்டயும் போன் பண்ணி, இதப் போல வாஜ்பாய் சொல்றார். ஜனாதிபதிக்கு நிக்கலாமானு கேட்டார். சந்தோசமா இருந்துச்சு. உன்னைத்தேடி பொறுப்பு வரும்போது தைரியமா ஏத்துக்க. அதைவச்சி நாட்டுக்கு என்ன பண்ணனுமோ பண்ணு. நீ எங்க போனாலும் அங்க நீ உன்னை நிரூபின்னு வாழ்த்தினேன்.

கலாமுக்குத் திருமணம் பண்ணிவைக்க நீங்கள் யாரும் முயற்சி எடுக்கவில்லையா?

எவ்வளவோ முயற்சி எடுத்தோம். மதுரை, அழகன்குளம் எல்லாம் போய் கலாமுக்குப் பெண் பார்த்தோம். அதோட கலாம் நிறைய படிச்சிருந்ததால, நிறையபேர் பெண் கொடுக்க முன்வந்தாங்க. சில பெண்களை எங்களுக்குப் பிடிச்சிப்போய், நீ ஒருதரம் நேர்லவந்து பார்த்துட்டுப் போய்யான்னு கலாமைக் கூப்பிட்டிருக்கோம். அதோ வர்றேன் இதோ வர்றேன்னு சொல்வார். வரவேமாட்டார். இப்படியே நாளோடிப்போச்சு. கடைசியா என் தம்பி ஜெய்னுலாபுதீனுக்கும் ரெண்டு தங்கை களுக்கும் சேர்த்து ஒரே நாளில் நிக்காஹ் பண்ணிவச்சோம். அப்பவும் கலாமுக்கும் சேர்த்து நடத்த திட்டம்போட்டோம். ஒண்ணும் நடக்கலை. அந்தசமயம் ஜப்பான் போயிருந்த கலாம், கல்யாணப் பரிசா ஜப்பான் புடவைகளை வாங்கிவந்திருந்தார்.

கலாம் மாதிரி உங்க வீட்டில் எல்லாருமே சைவம்தானா? அவருக்குப் பிடிச்ச உணவு என்ன?

நாங்க எல்லாம் அசைவம் சாப்பிடுவோம். கலாமும் எங்க மகள் நசீமாவும் சைவம். அவருக்கு சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், பொறியல் இதுதான் பிடிக்கும். இதைத்தான் அவர் விரும்பிச் சாப்பிடுவார். அவரோட வர்ற ஆளுங்கள்ல அசைவம் சாப்பிடறவங்க இருந்தா, அவங்களுக்குத் தனியா அசைவச் சாப்பாடு ரெடி பண்ணச்சொல்வேன். அவர் இங்க வரும்போதேல்லாம் வீட்டுக்கு பக்ரீத், ரம்ஜான் வந்தமாதிரி இருக்கும். எங்க சொந்த பந்தங்கள் எல்லாரும் ஒண்ணா கூடுவாங்க. அன்னைக்கு எல்லாருக்கும் இங்க சைவச் சாப்பாடுதான்.

கலாம் உங்களுக்கு எதாவது வாங்கிட்டு வருவாரா?

சால்வை, துண்டு, ட்ரெஸ்ன்னு பலதும் வாங்கிட்டு வருவார். பழங்கள் நிறைய கொண்டுவந்து சாப்பிடச் சொல்வார். குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லெட்டுன்னு அள்ளிக் கிட்டு வருவார். எல்லாம் இப்ப கனவா ஆய்டிச்சி.

கடைசியாக எப்போது ராமேஸ்வரம் வந்தார்? அப்போது என்ன சொன் னார்?
(பேரன் சேக் சலீமிடம் தேதி, நேரத்தைக் கேட்டுக் கொண்டு)

பிப்ரவரி 3-ஆம் தேதி மதுரைக்குப் போய்ட்டு காலைல பதினொன்னரை மணிக்கு கலாம் வந்தார். அன்பா கட்டித்தழுவி எனக்கு ஒரு பெரிய சால்வை போட் டார். ரெண்டு வருசத்தில் உங்களுக்கு நூறுவயசு ஆகுது. அதை நான் சிறப்பா கொண்டாட னும்ன்னு ஆசைப்படறேன். என் ஆசை நிறைவேற துவா’ பண்ணுங்கன்னு சொன்னார். கலாமை பக்கத்தில் உட்காரவச்சி, நான் துவா செஞ்சேன். ரொம்ப சந்தோசமா இருந் தார். நங்க ரெண்டுபேரும் பேசிக்கிட்டே என் அறை யில் உட்கார்ந்து சாப்பிட் டோம். அப்புறம் வந்த அத்தனை உறவுக்காரங் களையும் அழைத்து நலம் விசாரிச்சார். பிள்ளை கள்ட்ட படிப்பைப் பத்தி விசாரிச்சார். என் மகன் ஜெய்னுலாபுதீனையும் மகள் நசீமாவையும் கூப்பிட்டு, காக்காவை நல்லா பாத்துக் கங்க. அவர் ஆரோக்கியமா நடமாடறதை பாக்குறப்ப சந்தோசமா இருக்கு. அவரை தினமும் வாக்கிங் கூட்டிட்டுப் போங்க. செரிக்கிற மாதிரியான உணவைக் கொடுங்க. நீங்க விரும்பறதைக் கொடுக்காம, அவர் விரும்பறதைக் கொடுங்கன்னு அக்கறை யாச் சொன்னார். சாயந் தரம் நாலரைக்குப் புறப்பட்டுட்டார். அதான் கடைசி சந்திப்புன்னு தெரியாமப் போய்டுச்சி. என் நூறாவது வயசைக் கொண்டாட ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறாத ஆசையா ஆய்டிச்சி. மவுத்துக்கு மொதநாள் போன்ல அன்பா என் மகன்கிட்டயும் மகள்கிட்டவும், காக்கா என்ன சாப்பிட்டார். எப்படி இருக்கார். இன்னைக்கு வீட்ல என்ன மெனுன்னு விசாரிச்சார். கூடிய சீக்கிரம் ராமேஸ்வரம் வருவேன்னு சொன்னார். இப்படி உயிரில்லாம வருவார்ன்னு நினைச்சிக்கூட பார்க்கலை. (அவரது கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்).

கலாம், இந்த ராமேஸ்வரத்துக்கு எதையாவது செய்திருக்கிறாரா?

நூறுவருட பாம்பன் பாலத்தைப் புதுப்பிச்சிக் கொடுத்தார். 25 லட்சத்தில் லைப்ரரி கொண்டு வந்தார். மீனவக் குடும்பங்களுக்கு சோலார் லைட்டுகளை ஏற்பாடுசெஞ்சார். இப்படி முடிஞ் சதை செஞ்சிருக்கார்.

கலாம் நினைவிடம் பற்றி அதிகாரிகள் உங்ககிட்ட பேசினாங்களா?

இல்லை. (ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் கலாமை அடக்கம் செஞ்ச இடம் ஒரு ஏக்கர் 63 சென்ட் பரப்பளவு கொண்டது) அதிகாரிங்க அடக்க ஸ்தலத்தை அளந்துட்டுப் போயிருக்காங்க. எங்க கிட்ட நினைவிடத்தை எப்படி கட்ட போறாங் கன்னு யாரும் சொல்லலை. 40 நாள் துக்கம் கழிச்சிதான் இதுபத்திக் கேக்கப்போறோம். அடக்கஸ்தலம் வெறும் சமாதி மேடையா இருக்கக்கூடாது. அங்க மாணவர்களுக்குப் பயனுள் ளதை உருவாக்கனும். (அங்கு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மையம் அமைக்கனும் என்பது எங்க எல்லோரின் விருப்பமாகும் என்றார் பேரன் சேக் சலீம்) கலாமுக்கு மாணவர்கள்மேல் பிரியம் ஜாஸ்தி. அதனால் இறந்த பிறகும் கலாம், மாணவர்களுக்கு மத்தியிலேயே இருக்கனும்.

தன்னம்பிக்கை நாயகரான கலாம் கலங்கி நீங்கள் பார்த்ததுண்டா?

எங்க அம்மா, வாப்பா மவுத்தில் அவர் கதறி அழுததைப் பார்த்தோம். எங்க அப்பா ஜெய்னு லாபுதீன், உடம்பு சரியில்லாம இருந்தார். நாட்டு வைத்தியம்தான் பார்த்துக்குவார். ஆஸ்பத்திரிக்குப் போகமாட்டார். 72 வாக்கில், ஒருநாள் அவர் மதிய சாப்பாடு சாப்பிடாம படுத்துட்டார். நாங்க சொல்லியும் அவர் சாப்பிடலை. அப்ப வைத்தியர் அவர் நாடியைப் பிடிச்சிப் பார்த்துவிட்டு, பல்ஸ் ரொம்ப வீக்கா ஆய்டிச்சின்னு சொன்னார். டாக்டர்கள் வந்து பார்த்த கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடுச்சி. உடனே திருவனந்தபுரத்தில் வேலை பார்த்துக்கிட்டிருந்த கலாமுக்கு டரங்கால் புக் பண்ணித் தகவல் கொடுத்தோம். ஊருக்குவந்த கலாம், "வாப்பா'ன்டு கதறி அழுதுக்கிட்டே வந்தார். ரொம்பக் கலங்கிப் போயிட்டார். எங்கம்மா அடுத்த ஒரு வருசத்தில் ஒரு அதிகாலையில் மவுத் ஆனாங்க. கலாமுக்குத் தகவல் கொடுத்தோம். மிட்நைட் 12 மணிக்கு வந்தார். பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச் சத்தில் காத்திருந்தோம். அப்பவும் அழுதுபுரண் டார். கொஞ்ச நேரத்தில் அடக்கம் பண்ணியாச்சு. இவங்களோட கடைசி நேரத்தில் பக்கத்தில் இருக்க முடியலையேங்கிற ஏக்கம் கலாமுக்கு கடைசிவரை இருந்தது.

கலாம் என்றால்...?

தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு, நேர்மை, வெற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக