வியாழன், 16 ஜூன், 2016

நாற்பது வயதின் நிழல்கள்- 10

பேசிக்கொள்ள அதிக நேரம் இல்லாத
ஒரு சந்திப்பின்
நழுவும் கணத்தில்
என் பழைய சிநேகியைச் சந்தித்தேன்
தினமும் தனக்குத்தானே நூறுமுறை
சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்த வாக்கியத்தை
அவ்வளவு அவசரமாக கூறினாள்.
“ இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
வீட்டை விட்டு வெளியேறிய
என் திருமண நாளில்
உன்னைத்தான் தேடி வந்தேன்
எனக்கு வேறு யாரையும் தெரியாது
எனக்கு அன்றே பஸ்ஸே இல்லை
அன்று ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டார்கள்
பஸ் எதுவும் ஓடவில்லை
என் வீட்டிற்கு திரும்பிப்போனேன்
அன்று ராஜீவ் காந்தி இறக்காமல் இறந்திருந்தால்
என் விதியை நோக்கி
நான் திரும்பிப் போயிருக்க மாட்டேன்”
அவளது குரலில் ஒரு நிந்தனை இருந்தது
ஒரு நீதி கேட்டல் இருந்தது
ஒரு நிராசை இருந்தது
ஒரு வருத்தம் இருந்தது
நாற்பது வயதுகள் சங்கடமானவை
நமது பாதைகள் திரும்பிய இடம் குறித்த
எண்ணற்ற பிரமைகளை ஏற்படுத்துபவை
நான் அவளிடம் கூறவிரும்பினேன்
’’ நீ அன்று வீட்டிற்கு திரும்பிப் போயிராவிட்டால்
இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகோ
அதற்கு சற்று முன்னதாகவோ
நிச்சயம் உன் வீட்டிற்குத்தான்
திரும்ப வேண்டியிருந்திருக்கும்”
- மனுஷ்ய புத்திரன்
( புலரியின் முத்தங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக