சனி, 18 ஜூன், 2016

தமிழ் மொழியும் சோழர்களும்

 தமிழ் மொழிப் பற்று ஒரு சிறுவிழுக்காட்டினரைத் தவிர மற்றவர்களுக்கு இல்லை. தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக தமிழர்களது சமூக தளத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பிய இராஇராச சோழன் (அவனது இயற்பெயர் அருண்மொழித் தேவன்) ஒரு தமிழ்ப் பள்ளிக் கூடம் கட்டவில்லை. மாறாக நூற்றுக் கணக்கான வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தங்கள் பல வழங்கினான். ஆசிரியர்களுக்கு அரச கருவூலத்தில் இருந்து ஊதியம கொடுக்கப்பட்டது. இராசஇராசன் அவன் மகன் முதலாவது முதலாவது இராசேந்திரன் காலத்தில் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை கஷ்மீர், வங்காளம் போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவந்து இறையிலி நிலங்களில் குடியேற்றினான். அவன் காலத்தில் தமிழகம் சமற்கிருத மயமாக்கப்பட்டது. இராசராசனது அரச குரு வடநாட்டு ஈசான பண்டிதர். இராசேந்திரனது அரச குரு சர்வசிவ பண்டிதர். முதலாம் குலோத்துங்க சோழன் சமயம் சார்ந்த அரச நிருவாகத்தை தனது குரு சுவாமி தேவரிடம் ஒப்படைத்திருந்தான். பல்லவர், சோழர் ஆட்சியில் தமிழ் நீச பாசை எனவும் சமற்கிருதம் தேவ பாசை என்றும் கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்மொழி ஓரங்கட்டப்பட்டது. சாமிநாத தேசிகர் என்று ஒருவர் 17ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். அதனால் ஈசான தேசிகர் என்றும் அவருக்குப் பெயருண்டு. இலக்கணக் கொத்து என்ற அவருடைய நூலுக்கு, அவரே ஒரு பாயிரமும் எழுதியிருக்கிறார். (இலக்கணக் கொத்தை ஆறுமுக நாவலர் ஓலைச்சுவடியில் இருந்து வெளிக் கொணர்ந்தார்.) அந்தப் பாயிரத்தில் தான் இந்த "ஐந்தெழுத்துப் பாடை" என்ற சொற்றொடர் வருகிறது. வடமொழியில் இல்லாத ழ. ற, ன, எ, ஒ ஆகிய ஐந்தெழுத்துக்கள் தமிழில் உள்ளனவாம்; மற்றவை எல்லாம் வடமொழியில் இருக்கின்றனவாம். எனவே தமிழ் மொழி 5 எழுத்துக்களால் ஆன மொழி என ஈசான தேசிகர் தமிழைப் பழித்தார். 

"அதாவது, "வடநூல் வழி கலவாது, தமிழைத் தனியே தர முடியாது - வேறு வாக்கில் சொன்னால், வடமொழி இன்றி தமிழ் தனித்தியங்காது. தமிழ்நூல் ஒன்றிலும் தனித் தமிழ் கிடையாது; ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று சொல்லிக் கொள்ள அறிவுடையோர் நாணுவோர்; நானும் நாணுகிறேன்; வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிற்கும் ஒரே இலக்கணம்" என்று சொல்லுகிறார. தமிழர்களது கோயில்களில் தமிழ் இல்லை. தேவார திருவாசகங்கள் உள் வீதியில் இருந்து பூசைகள் எல்லாம் முடிந்த பின்னர் பாடப்படுகிறது. தமிழ் தமிழர்களது திருமணத்தில் இல்லை. யாருக்கும் புரியாத சமற்கிருத மொழியில்செய்யப்படும் திருமணத்தை தமிழர்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழ் தமிழர்களது பெயர்களில் இல்லை. இன்றைய பிள்ளைகளுக்கு பெற்றோர் பொருள் இல்லாத வாயில் எளிதாக நுழையாத பெயர்களைச் சூட்டுகிறார்கள். ஆசா, கோசா, யுரேனியா, லக்ஷன், ருக்ஷன், அலக்கா, நிரோஷன் (வெட்கம் இல்லாதவன்) நிரோஷினி (வெட்கம் இல்லாதவள்) அஷ்யா, மகிஷா (எருமைமாடு) யதூஷா, யூவிஸ் போன்ற பெயர்கள் அருவருக்கத்தக்க பெயர்களாகும்.


- வேலுப்பிள்ளை தங்கவேலு (இலங்கை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக