திங்கள், 21 ஜூன், 2021

தளபதி திருப்பூர் மைதீன் மற்றும் சமுதாய கவிஞர் த காசிம் அவர்கள்

 காயிதேமில்லத்_அவர்கள் "#தளபதி " #என்ற_அடைமொழி_கொடுத்து_அழைக்கப்பட்ட_முதல்_தொண்டர்

தளபதி திருப்பூராரைத் திரும்ப அழைக்க காயிதே மில்லத் அவர்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட நபர்




தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன் அரசியல் வட்டாரத்தில் அதிகம் அறிமுகமாகி இருக்க வேண்டிய ஒரு விற்பன்னர். ஆனால் அதிகமாக மறைக்கப்பட்ட திரைகளால் நிரப்பப்பட்டிருந்தார்.

ஈரோட்டு பெரியார் ஈ.வே.ராவின் நம்பிக்கைகளைப் பெற்றவர்களில் இவரும் ஒருவர். பள்ளிபடிப்புப் பூஜ்யம். ஆனாலும் பெற்றிருந்த ஞானப் பரப்பு கொஞ்சம் விசாலம். மேடைகளில் இவர் முழக்கம் கூட்டத்தை அதிரவைத்து விடும். இவரின் சொற்பொழிவு வேகத்தில் தயாரிக்கப்பட்ட நபர்களில் இன்றைய மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதியும் ஒருவர் என்ற ரகசியம் பலருக்குத் தெரியாது. எனினும் கலைஞர் கருணாநிதிக்கு அந்த நன்றி உணர்வு இன்றும் இருக்கிறது.
இன்றிருக்கும் திராவிடக் கழகத் தலைவர்களில் திருப்பூர் மைதீன் அண்ணனுக்குத் தனிப பெரும் இடம் உண்டு. அந்த மைதீன் அண்ணன் நம்மை விட்டு மறைந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
கவிஞர் தா. காசிம் பற்றிய நினைவுகளைப் பதிவு செய்யும் போது திருப்பூர் மைதீன் அண்ணனைச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இந்தப் பீடிகையுடன் பேசப்படும் மைதீன் அண்ணன், தன்னுடைய சமூக வாழ்வின் தடத்தை மாற்றியமைத்துக் கொண்டார். அதாவது பெரியார் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
காயிதேமில்லத் அரசியல் வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டார். காயிதேமில்லத்தைப் பின்பற்றிய மூத்த தலைவர்கள் அனைவருக்கும் மூத்தவர் திருப்பூர் மைதீன் அண்ணன்.
அவர் அடிக்கடி சொல்லிக்கொள்வார்," காயிதேமில்லத் தனியே மேடையில் அரசியல் பேசிய காலத்தில் அவர்களை அடுத்து அரசியல் பேசிய முதல் தொண்டன் நான்" என்று.
காயிதேமில்லத் அடைமொழி கொடுத்து அழைக்கப்பட்ட முதல் தொண்டரும் இவர்தான். அடந்த அடைமொழிதான் தளபதி என்பது.
இந்தத் தளபதிக்கும் காயிதேமில்லத்திற்கும் ஓர் மனத்தடங்கல் ஏற்பட ஆரம்பித்தது. அது விரிவுபட்டு இயக்கப் பணிகளை விட்டு முழுமையாகத் தன்னை விலக்கிக்கொள்ள வேண்டிய ஒரு துயரம் முஸ்லீம் லீக்கின் வரலாற்றில் ஒரு வடுவாகப் பதிந்தது.
காலங்கள் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தன. தலைவரும் மூத்தத் தொண்டனும் பார்வைகளை விட்டு படுவேகமாக நகர்ந்து கொண்டே இருந்தனர்.
தளபதி திருப்பூர் அண்ணனின் மேடைப் பேச்சு துவங்கும்போதே "வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை" என்று முழங்கும். இந்த ஓசை எந்த மேடையில் எங்கு கேட்டாலும் அது மைதீன் அண்ணன் மேடை என்று சொல்வார்கள். இந்தப் பாடல் தேவார அப்பர் அடிகளுக்கு உரியது.
அந்த நினைவுகள் காயிதேமில்லத்தின் ஆழ்மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அந்தத் தளபதி திருப்பூர் மைதீன் மீண்டும் இயக்கத்திற்குள் வந்தாக வேண்டும் என்ற முடிவிற்குக் காயிதேமில்லத் வந்துவிட்டார்கள்.
இடைப்பட்ட காலம் முஸ்லீம் லீகின் அடுத்தக்கட்ட தலைவர்கள் ஏராளாமாக உருவாகிவிட்டார்கள். முஸ்லீம் லீகின் மேடைகளில் வடகரை பக்கர் அண்ணன் முழங்குகிறார். அ.க.அப்துல் சமது மேடைகளில் அலங்காரம் செய்கிறார். இரவணசமுத்திரம் M.M.பீர்முகம்மது மேடைகளில் வீர முழக்கம் தருகிறார். இப்படிப் பல பேச்சாளர்கள்.
A.K.ரிபாய் சாஹிப், திருச்சி அப்துல் வகாப் சாஹிப், மதுரை ஷரீப் சாஹிப், A.சாகுல்ஹமீது சாஹிப் போன்ற அரசியல் சிந்தனையாளர்கள் பலர் வந்துவிட்டனர். என்றாலும் காயிதேமில்லத்திற்குத் தளபதி மைதீன் அண்ணன் இடம் காலியாக இருப்பது மனத்திற்குள் காயமாகவே இருந்தது.
தளபதி திருப்பூராரைத் திரும்ப அழைக்க ஒருவரை தேர்ந்தேடுக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும் ? என்று தேர்வு செய்யும் பொழுது காயிதேமில்லத் எடுத்த முடிவுதான் கவிஞர் தா. காசிம்.
காயிதேமில்லத்தின் இந்த அந்தரங்க ராஜதந்திரத்தை இன்றிருப்பவர்களில் எத்தனைபேர் அறிந்திருப்பார்களோ நமக்குத் தெரியாது.
கவிஞர் தா.காசிமை அழைத்து "தளபதி திருப்பூராரைத் திரும்ப அழைக்க ஒரு கட்டுரையைப் பத்திரிக்கையில் எழுதுங்கள். அந்தக் கட்டுரை தளபதியாரின் கைக்கும் போய்ச் சேர வேண்டும். தளபதியார் திரும்ப வர அந்தக்கட்டுரை தளபதியாரின் ஆழ்மனதில் உந்துசக்தி ஏற்படுத்த வேண்டும். இவ்வளவுசக்திமிக்க எழுத்தாற்றலை புலவரே நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உடனே எழுதுங்கள். என்னுடைய தலையீடு எங்கும் தெரிய வேண்டாம்" என காயிதேமில்லத் சொன்னார்கள்.
சென்னை மாநகராட்சியின் முஸ்லீம் லீகின் துணை மேயராக இருந்த சிலார் மியானின் பிறைக்கொடி மாத இதழில் "தளபதி எங்கே இருக்கிறாய்" என்று ஒரு ஆவேசமான உருக்கமான கட்டுரையைத் தா.காசிம் எழுதினார்.
இந்தக்கட்டுரை முடங்கிக் கிடந்த திருப்பூராரைச் சென்னை குரோம்பேட்டை காயிதே மில்லத்தின் குடிலுக்கு கூட்டிவந்து சேர்த்தது. காயிதேமில்லத்தின் ஆழ்மன வேதனை அன்றுதான் முழுவதுமாக விடைபெற்றது. அது அரசியல் அந்தரங்க ரகசியம்.
திருப்பூர் மைதீன் அண்ணன், அதன் பின் துறைமுகம் தொகுதியில் நின்று வென்று சட்ட மன்றத்துக்குள் சென்றார். முஸ்லீம் லீகின் கொறடாவாகப் பரிணமித்தார்.
இன்னொரு நிகழ்வு. காயிதேமில்லத் அவர்கள் தன்னுடைய நாடாளுமன்ற லெட்டர் பேடில் சமுதாயத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார்கள்.
“புலவர் தா.காசிம் சமுதாயத்தின் சொத்து. அவருக்கு உதவுபவர்கள் எனக்கே நேரிடையாக உதவுபவர்கள் ஆவார்கள்” என எழுதி கையொப்பமிட்டு கவிஞர் தா.காசிமிடம் கொடுத்தார்கள். கொடுத்துவிட்டுச் சொன்னார்கள், “இந்தக் கடிதத்தில் நான் தேதி போடவில்லை. தேதி போடாத கடிதமும், பணம் குறிக்காமல் கையெழுத்திட்டுத் தரும் செக்கும் விலை மதிப்பற்றது. எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்”.
இப்படி ஒரு சிபாரிசுக் கடிதம் தன வாழ்நாளில் எவருக்கும் காயிதேமில்லத் தரவில்லை என்பதே சத்தியம் என இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன்.
இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு காயிதேமில்லத் தன் தம்பி மறைந்துவிட்ட அஹமது இப்ராஹீம் சாஹிப் அவர்களின் காது ஒலி கேட்கும் கருவியையும் கொடுத்தார்கள்.
கவிஞர் தா.காசிம், காயிதேமில்லத் தந்த இந்த இரு பொக்கிஷங்களையும் கடைசிவரைப் பயன்படுத்த முடியாமலேயே போய்விட்டது.
கவிஞர் இந்த இரு பொக்கிஷங்களையும் தன் கைப்பையிலேயே வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார்.
ஒருமுறை ஈரோடு அக்ரஹாரத்தில் மீலாது கவியரங்கத்திற்கு இளைஞன் A.ரஷீத் அண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்து விட்டு சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்த கவிஞர் தன் கைப்பையைத் தொலைத்து விட்டார்.
காயிதேமில்லத் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தன் வாழ்வின் இறுதி கால கட்டங்கள். கவிஞர் தா.காசிமும், மணிவிளக்கு மாத இதழின் அச்சுக்கோப்பாளர் பலராமனும் தலைவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தார்கள்.
தலைவர் அவர்களுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. கவிஞர் வந்து நின்றபோது தலைவர் முழு நினைவோடு இருந்தார்கள். கவிஞர் தா.காசிமைப் பார்த்து லேசாக கையசைத்தார்கள். கவிஞர் தலைவர் பக்கத்திற்குச் சென்றார். தலைவரின் ஒரு கரம் தலையணையின் கீழ் சென்று வெளிவந்தது. கவிஞர் கையில் வைத்து அழுத்தி கவிஞரைப் பிடித்த்துக் கொள்ளும்படி சைகை காட்டினார்கள். கவிஞர் கண் கலங்கிவிட்டார்.
“தலைவரே ! இதெல்லாம் எதற்கு?” என்று விம்மினார். காயிதேமில்லத்தின் கரம் கவிஞரின் கரத்தில் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை வைத்து அழுத்தியது. ஏற்கனவே இப்படிப் பலமுறை நடந்திருக்கிறது.
காயிதேமில்லத் அவர்கள் இறுதியாக செய்த “அறம்” அதுவாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் மருத்துவமனையிலிருந்து திரும்பாமலேயே அடுத்த ஓரிரு தினங்களில் காயிதேமில்லத் மறைந்துவிட்டார்கள்.
கவிஞர் தா.காசிமின் மனைவி பெயர் பாத்திமா. மூத்த மகன் அப்துல் ஹமீது. பாக்கிஸ்தான்-இந்தியா போரில் பாக்கிஸ்தானின் டாங்கியை அழிக்க தன் உடல் முழுதும் வெடிகுண்டுகளைக் கட்டி டாங்கியின் அடியில் விழுந்து அந்த டாங்கிப் படையைச் சீரழித்து நம் இந்தியப் படைக்கு வெற்றி வாங்கித்தந்த வீரப்பதக்கத்திற்குரிய ஹவில்தார் அப்துல்ஹமீதின் நினைவாகத் தன் மகனுக்கு அப்பெயரை வைத்தார்.
இரண்டாவது மகன் அகமது கபீர் ரிபாய். A.K. ரிபாய் சாஹிபின் மீது வைத்த பாசத்தால் வைத்த பெயர். மூன்றாவது மகள் ஆமினா.
பெரியாரின் குடியரசு இதழில் இராவணன் என்ற பெயரில் எழுதி வந்த கவிமணி வீ. நூற் முகம்மது கவிஞர் தா.காசிமின் மாமி மகன்.
கண்டெடுத்த கவிஞனின் கவிதைகள் “மேற்கின் உதயம்” என்ற பெயரில் தொகுப்பாக அவராலேயே தொகுக்கப்பட்டது. வெளிவந்தது.
திருவள்ளுவர் 1330 குறள்களை திருக்குறள் என வழங்கினார். கவிஞர் தா.காசிம் 1550 அருட்குறள்கள் என அறிவித்து எழுத தொடங்கினார். ஆனால் முடிக்கவில்லை. அருட்குறளில் ஒன்று. இன்பத்துப்பால் என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதியது. வெளிநாடு செண்றிருக்கும் கணவன் தன் மனைவிக்குக் கடிதம் எழுதுகிறான்.
தான் இந்தியா திரும்புவதாக அதில் குறிப்பிடுறான். மனைவிக்கு இந்த கற்கண்டுச் செய்தி இனிக்கிறது. மாமியாரிடம் ஓடிச்சென்று அவர் மகன் வருவதைச் சொல்கிறாள். கணவன் தங்கையான தன நாத்தியிடம் குதூகலித்துச் சொல்கிறாள். கடைசியாக நாணிக்கோணி தன்படுக்கையான மெத்தையிடம் சொல்கிறாள்.
“அத்தைக்கும் நாத்திக்கும் ஆளன் வரவுரைத்து
மெத்தைக்கும் சொல்வாள் தனித்து”.
எழுதிய கவிஞன் வயது இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை. எப்போது பார்த்தாலும் நாற்பதைத் தாண்டாத உருவத்தோற்றம்.
என் தந்தை A.K. ரிபாய் சொல்வார்கள். “கவிஞர் சொல்லும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது என்னைவிட எட்டு அல்லது ஒன்பது வயது மூத்திருக்க வேண்டும்” என்று. இப்படி சொல்லும்போது என் தந்தைக்கு அறுபத்தி மூன்று வயதிருக்கும்.
எதோ ஒரு கல்ப கால தை மாதம் ஒன்றாம் நாள் (ஜனவரி 14) தான் பிறந்ததாகக் கவிஞர் அடிக்கடிச் சொல்லிக் கொள்வார்.
ஆக்கம் அண்ணன் ஹிலால் முஸ்தஃபா
11 March 2013

மணிவிளக்கு..!!

 #இப்படி_ஒரு_பத்திரிகை_ஆசிரியரிடமும்

மணிவிளக்கு மாத இதழ் – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட நல்லதொரு தரமிக்க மாத இதழ். அல்லாமா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள் துவக்கி வைத்த மணிவிளக்கு ஆரம்பத்தில் குர்ஆனியச் சிந்தனைகளும் இஸ்லாமிய தத்துவ விளக்கங்களும் இஸ்லாமிய இலக்கிய பகுதிகளும் கொண்டு வெளிவந்த மாத இதழ்.
முதல் தலைமுறையான மணிவிளக்கு எழுத்தாளர்களில் பலரும் உலமா பெருமக்களாகத் திகழ்ந்தார்கள்.
ஆரம்ப மணிவிளக்கு எந்த அரசியலையும் அடையாளம் காட்டியதில்லை. அது ஆன்மீக இலக்கிய இதழாகத்தான் தன்னை அறிவித்துக் கொண்டது.
தமிழகத்தில் அன்றைய கட்டத்தில் வாழ்ந்திருந்த ஆலிம் பெருமக்களில் சிலர் காங்கிரஸ் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். அவ்விதம் காங்கிரஸ் அரசியலை ஏற்றுக் கொண்ட ஆலிம் பெருமக்கள் மணிவிளக்கில் அதிகம் எழுதி வந்தனர்.
ஆனால் அரசியல் வாடை அங்கு வீசுவதே இல்லை. அல்லாமா அப்துல் ஹமீது பாக்கவி அவர்களும் காங்கிரஸ் அரசியல் ஆதரவுக் கொண்டவராக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் உருவாக்கிய மணிவிளக்கு அரசியலை முன்னெடுக்கவில்லை.
மணிவிளக்கு என்ற பெயர் அண்ணலாரை உருவகப் படுத்திய சொல்லாடல். இந்தச் சொல்லாடலுக்கு இலக்கிய பின்னணி உண்டு.
சீறாவைத் தந்த உமரப்பா அவர்கள் அண்ணலாரைக் குறிக்க உருவகப் படுத்திய அற்புதமான சொல்லாடல், மணிவிளக்கு.
பானுவின் கதிரால் இடருறுங் காலம்
படர்தரு தருநிழல் எனலா
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவநோய்
இடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
குறைசியிற் திலதமே யெனலாய்
மானிலந் தனக்கோர் மணிவிளக்கு எனலாய்
முகம்மது நபிபிறந் தனரே!
இப்பாடலில் அண்ணலாரை மணிவிளக்கு என்று வருணிக்கிறார். இந்த மணிவிளக்கு சொல்லாடலே மணிவிளக்கு மாத இதழின் பெயராக இலக்கியத் தரத்தோடு தெரிவு செய்து இடப்பட்டிருந்தது.
மணிவிளக்கின் முதல் தலைமுறை இப்படி ஒளி வீசிப் பிறந்தது.
அடுத்து இரண்டாம் தலைமுறை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவியின் மகனாரும், முஸ்லிம் லீகின் ஆளுமை செழித்த தலைவருமான சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிபை ஆசிரியராகக் கொண்டு முதன்மைப் படுத்தப் பட்டது.
இந்த இரண்டாம் தலைமுறையின் எழுத்தாளர்களைக் குறிக்கும் பொழுது வியப்பு மேலிடும்.
சிறந்த அரசியல் விமர்சகர்கள், ஆழமான ஆன்மீக பார்வைப் பெற்றவர்கள், குர்ஆனிய வளமையான சிந்தனைக் கொண்டவர்கள், இஸ்லாமிய மார்க்க நெறிப் பற்றிய விழுமிய ஆற்றல் மிக்க விமர்சகர்கள், தரம் செழித்த இலக்கிய மேதைகள் போன்றவர்களை உள்ளடக்கிய எழுத்தாளர் பட்டாளமே இரண்டாம் தலைமுறை மணிவிளக்கை நிலை நிறுத்தியது.
முஸ்லிம் லீக் அரசியல் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களால் வெளிப்படையாகவும் வீராவேசமுடனும் மணிவிளக்கை அலங்கரித்தது.
இஸ்லாமிய நாடுகளைப் பற்றிய துல்லியமான படப்பிடிப்புகள் உலக இஸ்லாமிய பிரச்சனைகள் என்றெல்லாம் மணிவிளக்கின் பக்கங்கள் ஞானப் புதையல்களாக விரிவடைந்தன.
ஸமது சாஹிபின் எழுத்தாற்றல் செழுமையான பாகம் பெற்றது. “ஷிப்லி” என்ற புனை பெயரில் ஸமது சாஹிப் எழுதி வந்த பல சமூக அரசியல் கட்டுரைகள் அற்புதமான செய்திகளை முன்வைத்தது.
பர்மாவிலிருது திரும்பி இருந்த அபிராமம் நூரண்ணன் எழுதி வந்த “அண்ணலெனும் அழகிய முன்மாதிரி” எனும் பெருமானாரின் வாழ்க்கைத் தொடர் ஒரு வித்தியாசமான கோணத்தில் எழுதப் பட்ட முன்மாதிரி வரலாறு.
குர்ஆனில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு மட்டுமே அண்ணலார் வாழ்க்கைச் சம்பவங்களைக் கோவைப் படுத்திய ஒரு நல்ல தொடர்.
இந்தத் தொடரை நூரண்ணன் மணிவிளக்கில் எழுதத் தொடங்கும் பொழுது ஒரு நிபந்தனை விதித்து இருந்தார்.
“குறைந்தது எட்டு பத்து பக்கங்களுக்கு மேல் மாத மாதம் எழுதுவேன். இந்தத் தொடர் வரும் பக்கங்களில் எந்த விளம்பரங்களையுனம் வெளியிடக் கூடாது.” இதுதான் நூரண்ணனின் நிபந்தனை.
இந்த நிபந்தனை கடைசிவரை மணிவிளக்கால் கடைப்பிடிக்கப் பட்டது.
வடகரை பக்கரண்ணன், ஆலிம் கவிஞர் சிராஜ் பாக்கவி , நாகூர் புலவர் ஆபிதீன் காக்கா, நாகூர் ஞானமாமேதை எஸ்.அப்துல் வஹாப் பாக்கவி, கவிக்கோ அப்துர் ரஹ்மான் தந்தையார் மதனீ, கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன், அப்துல் வஹாப் எம்.ஏ. பி.டி.ஹெச், அபிராமம் துபாஷ், கவிஞர் தா.காசிம் , வலங்கைமான் அப்துல்லா, நாகப்பட்டினம் கூத்தூர் ஹைதரலி, அக்பர் அண்ணன் இன்னும் மகத்தான ஆலிம் பெருமக்கள் போன்ற ஜாம்பவான்களால் நிரம்பப் பெற்று இருந்த மணிவிளக்கு பத்திரிகை உலகில் தலை நிமிர்ந்து ஆட்சிப் புரிந்து வந்தது.
1957 ஆம் ஆண்டு மணிவிளக்கில் இரண்டாம் தலைமுறை ஆசிரியர் குழுவில் ஸமது சாஹிப் ஆசிரியராகவும், துணை ஆசிரியராக ஏ.கே.ரிபாய் சாஹிபும் பணியாற்றி வந்தனர்.
ஏ.கே.ரிஃபாய் சாஹிப் ஒரு சிறு மன வருத்தத்தால் அவர்களின் தந்தையாரிடமிருந்து முரண்பட்டு சென்னைக்கு தன் குடும்பத்தை அழைத்து வந்து தங்கி மணிவிளக்கு மாத இதழ் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
மிகமிக அற்புதமான மொழி பெயர்ப்பு ஆக்கங்களும், அரசியல் சமூக விமர்சனங்களும் ஏ.கே.ரிபாய் சாஹிபால் மணிவிளக்கு ஒரு வகையான அலங்காரம் பெற்றது. ஏ.கே.ரிபாய் சாஹிப் மாதச் சம்பளத்தில் பணியாற்ற வேண்டிய பொருளாதாரச் சூழல் அவர் வாழ்க்கையில் எப்பொழுதுமே ஏற்பட வேண்டிய அவசியமற்ற நிலையை இறைவன் அவருக்கு அருளி இருந்தான்.
ஆனாலும் தன் தந்தையாரிடம் முரண்பட்டு சென்னை வந்ததால் தன் குடும்பச் சொத்தின் வருவாயை ஏற்றுக் கொள்ளாமல் மணிவிளக்கு மாத இதழில் மாதச் சம்பளத்திற்குப் பணியாற்றினார்.
ஏ.கே.ரிபாய் சாஹிபிற்குச் சம்பளம் கொடுத்தவர் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்.
“நான் கை நீட்டிச் சம்பளம் வாங்கிய ஒரே முதலாளி ஸமது சாஹிப்தான்” என ஏ.கே.ரிபாய் சாஹிப் அடிக்கடிக் கூறுவது உண்டு. இந்த முதலாளி தொழிலாளி உறவு, ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டு காலம் நீடித்தது.
1978க்கு பின் மூன்றாம் கட்டத் தலைமுறை மணிவிளக்கு மாத இதழுக்குள் குடியேறியது. அப்பொழுது தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் மணிவிளக்கு மாத இதழில் ஒரு தலையங்கம் எழுதினார்.
“இப்பொழுது மூன்றாம் கட்டத் தலைமுறைக்கு மணிவிளக்கை இறைவன் அருளால் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறோம். எங்களுடைய மேற்பார்வையில் இஸ்லாமிய எழுத்துப் பரம்பரையைச் சார்ந்த இரு இளைய தலைமுறையிடம் ஆசிரியர் குழுவை ஒப்படைத்து மணிவிளக்கு பணியைத் தொடர பொறுப்புச் சாட்டுகிறோம். அந்த இருவர் அ. ஹிலால் முஸ்தபா, நாகூர் இஜட். ஜஃபருல்லா” எனத் தலையங்கம் எழுதி பத்திரிகை பொறுப்பை அவர் கண்காணிப்பில் எங்களிடம் ஒப்படைத்தார்.
இந்த மூன்றாம் தலைமுறையும் மணிவிளக்கை இறைவன் தந்த ஆற்றலைக் கொண்டு செம்மைப் படுத்தியது. அதே நேரம் கடுமையான விமர்சனங்களையும் இந்தத் தலைமுறைச் சந்தித்தது.
“வந்த விமர்சனங்களை மாத இதழின் கடிதமும், கருத்தும் பகுதியில் அப்படியே வெளியிட்டு தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள்” என தலைவர் ஸமது சாஹிப் எங்களுக்கு அனுமதி தந்து எங்கள் பணியைத் தொடர ஆக்கம் தந்தார்.
“காயம் பட்ட ஆடைகள்”, “காணாமல் போன ஒட்டகம்” போன்ற சிறுகதைகளை நான் தொடர்ந்து எழுதி வந்தேன். கவிஞர் ஜபருல்லா கவிதைகள் பலவற்றை எழுதி வந்தார். இவைகள் அனைத்தும் மிகக் கடினமான விமர்சனத்திற்குள்ளாயின.
கம்பம் தேனியிலிருந்து சில ஆலிம்கள் கடுமையான விமர்சனம் எழுதி, விமர்சனத்திற்குக் கீழ் கையெழுத்திட்டு அனுப்பினர். அந்த விமர்சனத்தின் முக்கியமான வரியைக் கீழே பதிவு செய்கிறேன்.
“மணிவிளக்கு என்ற மகோன்னதமான மாத இதழில் ஹிலால் முஸ்தபா, ஜபருல்லா எழுத்துக்களைப் பிரசுரித்து அந்த இதழை எங்கள் இடது கையால் கூட தொட முடியாமல் ஆக்கி விட்டீர்களே… வேதனையாக இருக்கிறது. தலைவர் அவர்கள் இந்த எழுத்துக்களை எல்லாம் கவனிக்கிறார்களா?” என்று எழுதப் பட்டு நான்கு பக்க விமர்சனக் கடிதம் வந்தது.
அந்த விமர்சனக் கடிதத்தை தலைவர் ஸமது சாஹிபிடம் நானும் ஜபருல்லாவும் கொண்டு போய் காட்டினோம். அதைப் பார்த்துவிட்டு
“தம்பி, கடிதமும் கருத்தில் இப்படியே இந்த வாசகங்களைப் பிரசுரித்து விட்டு உங்கள் பணியைத் தொடருங்கள்” என ஸமது சாஹிப் கூறினார்கள்.
அடுத்து ஒரு கடிதத்தை ஜபருல்லா எடுத்து “மாமா, இன்னொரு கடிதம் இருக்கிறது” என நீட்டினார்.
அந்தக் கடிதம் அதிராமப் பட்டினத்தில் இருந்து வந்திருந்தது.
அதில், “தங்கத் தாம்பாளத்தில் மணிவிளக்கு விருந்து படைத்தது. அந்த விருந்தின் கடைசி ஓரத்தில் ஹிலால் முஸ்தபா, ஜபருல்லா என்ற இருவரின் எழுத்து என்னும் நஜீஸை (மலம்) வைத்து விட்டீர்களே” என்று குறிப்பிட்டு இருந்தது.
இதைப் படித்து விட்டு தலைவர் ஸமது சாஹிப் அறை முழுதும் அதிரும் அளவுக்கு வாய்விட்டு சிரித்தார்கள்.
“தம்பி, இதையும் கடிதமும், கருத்தில் வெளியிட்டு விடுங்கள், நீங்கள் பணியைத் தொடருங்கள். நிச்சயம் இவர்கள் உங்கள் எழுத்துக்களை ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்வார்கள். தளர வேண்டாம்” என தலைவர் எங்களுக்கு அனுமதி தந்தார்.
நாங்கள் தொடர்ந்து மணிவிளக்கின் இறுதிக் காலம் வரைப் பணியாற்றினோம்.
இப்படி ஒரு பத்திரிகை ஆசிரியரிடமும், தலைவரிடமும் வேறு யாரும் பணி புரிந்து இருக்கிறீர்களா?
ஆக்கம் அண்ணன் ஹிலால் முஸ்தஃபா
14 feb 2014



செங்கம் ஜப்பார்


 #இளைஞர்_லீக்கின்_முதல்_மாநிலச்_செயலாளர்_செங்கம்_ஜப்பார்

பழம் நினைவுகள்...!
மறக்கமுடியாது
தொடர்ந்து கொண்டே இருக்கும் பழம் நினைவுகள்...!
முந்தைய நாள் (28/ 12/ 2015) அன்று மாலையில் திடீரென்று ஒரு நினைவு. சில மணிநேரங்கள் என்னைப் பிடித்து அழுத்திக் கொண்டே இருந்தது. இரவில் முழுவதுமாக இந்த நினைவு விலகி விட்டது.
மறுநாள் (28/12/ 2015) அதிகாலை நான் விழித்த போது அதே நினைவு
மீண்டும் என்னோடு விழித்து என்னை அப்பிக் கவ்விக் கொண்டது.
அதனை விடாப்பிடியாகத் தள்ளித் தூர எறிய முயன்றேன். முடியவில்லை தோற்று விட்டேன். அந்த நினைவைச் சுமந்துகொண்டு என்னால் இருக்க முடியவில்லை.
என் முகநூலைத் தோண்டி, அந் நினைவுக்குரிய மனிதரின் அலைபேசி எண்ணைக் கண்டு பிடித்தேன். உடனடியாகத் தொடர்பு கொண்டேன்.
எதிர் முனையில் மணி ஒலித்து.பதில் இல்லை.விட்டுவிட்டேன்.
அடுத்த நொடிப்பொழுது என் அலைபேசியில் நான் வைத்திருக்கும்
" அழகுத் திருமுகம் ஆயிரம் நிலவு..." (என்பாடல்தான்) இசைத்தது.
அந்த நினைவுக்காரர்தான் அழைத்திருந்தார்.
ஆர்வமுடன் அலைபேசியை "ஆன்" பண்ணினேன். எதிர் முனையில் "செங்கம் ஜப்பார். நீங்கள் யார்?" இப்படித்தான் தொடங்கினார்.
"நான் ஹிலால் முஸ்தபா"
"அடஅடா கவிஞரே!" ஜப்பார் குரலில் ஆச்சர்யம்.
இன்றைய அதிகாலைத் தொடக்கமே எங்கள் இருவருக்கும் ஆனந்தமாக இருந்தது.
செங்கம் ஜப்பார் இவர் நினைவுகளில்தான் ஒரு மாலையும் அடுத்த அதிகாலையும் கனத்துக் கொண்டிருந்தேன்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரிய அளவில் தொடர்பே எங்களுக் கிடையில் இல்லை. ஆனாலும் மறந்து விடவில்லை என்பதை இந்த நினைவூட்டல் அறிவித்திருக்கிறது.
செங்கம் ஜப்பார். தன் பிள்ளைப் பருவம் கடந்து இளைய பருவம் தழுவும் காலத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தவர்.
செங்கத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தலைசிறந்த சொற்பொழிவாளர். முஸ்லிம் லீகின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர். இப்படி ஒரு மேம்போக்கான தகவல்கள் மட்டுமே
பலருக்கும் தெரிந்திருக்கலாம். இவைகளையும் தாண்டி, ஜப்பார் ஒரு ஆற்றல் கனிந்த பண்பாளர் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்களோ எனக்குத் தெரியாது.
காயிதெ மில்லத் உடல் நலச் சோர்வாக இருந்த ஒருகட்டத்தில் ஓய்வெடுக்க முடிவு செய்தார்கள். அதிகமான அன்பர்களின் கண்ணிற் படாமல் ஓய்வெடுக்க வேண்டும் என முடிவு செய்தபோது, செங்கம் ஜப்பாரை அழைத்துச் சொன்னார்கள், "தம்பி! யார் கண்ணிலும் படாமல்
ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும. சாத்தனூர் டேமில் ஏற்பாடு பண்ணுங்கள்"என்று சொன்னார்கள்.
ஜப்பார் முனைந்து நின்று ஏற்பாடு செய்தார். காயிதெ மில்லத், பெரும் பாலும் பிறர் யாரிடமும் அப்படி கேட்கும் பழக்கமே இல்லாதவர்கள்.இது அனைவருக்கும் தெரியும்.ஆனால் ஜப்பார் மீதுள்ள பாசத்தால் இது நிகழ்த்து.
காயிதெ மில்லத், முஸ்லிம் லீகில் இளைஞர் அணி உருவாக்க முடிவு செய்தார்கள். என் தந்தையாரை ( A.K.ரிபாய் சாஹிப்) அழைத்து இளைஞர் முஸ்லிம் லீக் "பைலா" தயாரிக்கச் சொன்னார்கள். தலைவர் உத்தரவு பிறந்து விட்டது. உடனே "பைலா" தயாராகி விட்டது. இளைஞர் லீக்கின் முதல் மாநிலச் செயலாளர் ஜப்பார். மாநிலப் பொதுச் செயலாளருக்குரிய தகுதி உள்ள பதவி. காயிதெ மில்லத் தந்தது.
"இளைய சமுதாயம்"என்றொரு மாத இதழ், இளைஞர் லீகிற்காவே ஜப்பார் சொந்தச் செலவில் வெளியிட்டார். செங்கத்தில் ஜப்பாருக்குச்
சொந்தமான அச்சுக் கூடம் இருந்து. அங்கிருந்து முதலில் இளைய சமுதாயம் வெளியானது. அந்த அச்சுக் கூடத்தில் சில காலம் சமுதாயக் கவிஞர் தா.காசிம் அந்தப் பத்திரிகையில் பணிபுரிந்தார். குடும்பத்தோடு செங்கத்தில் தங்கியிருந்தார்.
கவிஞர் தன்னை முஸ்லிம் லீகில் இணைத்துக் கொண்ட பின்னர் சென்னையை விட்டு வெளி ஊர் சென்று பணிபுரிவதை ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாமா அப்துல் ஹமீது பாகவியின் மணிவிளக்கு அச்சக் கூடத்தில், தர்ஜுமததுல் குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்பைக் கம்போஸ் செய்தார். அதன் பின் அறிஞர் அப்துற்-றஹீமின் யுனிவர்சல்
பப்ளிகேஷனில் பணி புரிந்திருக்கிறார். தொடர்ந்து முஸ்லிம் லீகின் உரிமைக் குரல் வார இதழில் பணிபுரிந்துள்ளார். சென்னை துணை மேயராக இருந்த முஸ்லிம் லீகைச் சேர்ந்த சிலார் மியானின் பிறைக் கொடி மாத இதழில் பணிபுரிந்தார். இப்பத்திரிகையின் வெளியீட்டாளர்
மர்ஹும் காயல் ஹம்சா. ஜப்பார் மீதுள்ள பாசத்தின் காரணமாகக் கவிஞர் தா.காசிம் செங்கம் சென்று பணி புரிந்தார்.
இதன் பின் கசப்பான தகவல்கள் நினைவுக்கு வருகின்றன.
மண்ணடி, மூர் தெரு சந்திப்பில் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம்.செங்கம் ஜப்பார் தலைமையில் நடந்தது.
முஸ்லிம லீகில் காயிதெ மில்லத் திருவாயால் முதன்முதலில் தளபதி என அழைக்கப்பட்ட மூத்த தலைவர் "தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன்தான் பிரதான பேச்சளர். பல மூத்த முஸ்லிம் லீகின் தலைவர்களுக்கு இவர்தான் முன்னோடி.
" நான்தான் தலைவர் காயிதெ மில்லத்தின் அடிச்சுவட்டை ஒட்டித்
தமிழகத்தில் முதல் அடி எடுத்து வைத்தவன்."இப்படித் தளபதியார் தனது பேச்சைத் தொடங்கினார். ( அவரைப் பற்றியும் அவர் பேச்சாற்றலைப் பற்றியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.) இது உணமையாகவும் இருக்கலாம்.
தளபதியார் பேச்சு திசை தப்பியது. " ஸமது சாஹிப், அப்துல் வஹாப் ஜானி சாஹிப், ஏ.கே. ரிபாய் சாஹிப் போன்றோர்கள் அப்போது அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டிருந்திருக்கலாம். இப்போது எல்லோரும் முதிர்ந்து விட்டோம். உதிர வேண்டியதுதான்.அடுத்தத்
தலைமறையினருக்கு வழிவிட்டு விலகிக் கொள்வோம். தம்பீ! ஜப்பார்
தலைமை தாங்க வா. நான் உனக்குக் கீழ் பணிபுரிகிறேன்" எனத் தளபதி
முழங்கினார்.
முஸ்லிம் லீகில் அதிர்வு ஏற்பட்டது. சென்னை மரைக்காயர் லெப்பைத் தெரு முஸ்லிம் லீக் தலையகத்தில் மாநில செயற்குழு கூடியது. கூட்டத்தில் தீப் பறந்தது. ஜப்பாரும் அக் கூட்டத்தில் இருந்தார்.
மண்ணடிக் கூட்டத்தின் பேச்சுக்களுக்குச் சாட்சியாக, நானும், நாகூர் ஜபருல்லாஹ்வும்,கா.மு ஆதமும் பேசினோம். ஜப்பார் இதற்குப்
பதில் சொன்னார். அப் பதிலில் துடுக்குத்தனம் தலை காட்டியது.
அமர்நதிருந்த டாக்கர் திருவண்ணாமலை ஷம்சுத்தீன் அமர்ந்திருந்த
சேரை, மடக்கி ஜப்பாரை அடிக்கத் தூக்கி வந்தார். முடிவு ஜப்பார் முஸ்லிம் லீகிலிருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டார். தளபதி திருப்பூர்
மைதீன் அண்ணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இது துயரச் சம்பவந்தான். ஆனால் சரியான முடிவுதான். இன்றும் என் முடிவு இதுதான். ஜப்பார் இதற்கு முரண்படலாம்.
அப்போது ஒரு வதந்தி வந்தது. பல ஆண்டுகள் முடக்கப்பட்டிருந்த சென்னை மாநகராட்சித் தேர்தல் நடக்கப் போவதாகவும்,அதைத் தொடர்ந்து முஸ்லிம் ஒருவருக்குதான் மேயர் பதவி என்றும்,அந்த
மேயர் ஜப்பார்தான் என்றும் செய்தி பரவியது. எம்.ஜி. யார் அப்போது முதல்வராக இருந்தார். இது உண்மையோ பொய்யோ? தெரியாது.
ஆனால் ஜப்பார் அ.இ.தி.மு.க.வில் இணைந்து மாநில பால் வளத்துறைத் தலைவராகி விட்டார்.
முஸ்லிம் லீகில் தென்காசி சட்ட மன்றத் தொகுதி வேட்பாளராக நின்று தோற்ற அனுபவமும் ஜப்பாருக்கு உண்டு. எப்போதும் ஒரு முஸ்லிம் வெல்ல வாய்ப்பற்ற தொகுதி தெனகாசி. அதை ஜப்பாருக்கு ஒதுக்கியதிலும் ஒரு உட்கட்சி அரசியலும் உண்டு.
பால் வளத்துறைத் தலைவராக ஜப்பார் இருந்த காலக் கட்டத்தில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு
மிக அருகாமையில் பழைய எம்.எல்.ஏ. ஹாஸ்டல் இருந்தது. அங்கே இரண்டாவது மாடியில் ஜப்பார் குடியிருந்தார். அதற்கு நேர் கீழே தரைப் பகுதியில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் அறை இருந்தது.
அப்போது ஸமத் சாஹிப் திருவல்லிக்கேணிச் சட்ட மன்ற உறுப்பினர்.
ஸமது சாஹிப் அறைச் சாவி என்னிடமும் இஜட் ஜபருல்லாஹ்
விடமும்தான் இருக்கும். நாங்கள்தாம் அங்கே குடியிருந்தோம்.
ஸமது சாஹிப் எப்போதாவது சில வேளைகளில் மட்டமே வருவார்.
ஜப்பார், பால் வளத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் அவருக்குள்
இருந்த முஸ்லிம் லீகனைக் காணமுடிந்தது.
ஜப்பாருக்கும் எங்களுக்கும் (எனக்கு,ஜபருல்லாஹ்வுக்கு, இன்னும் சில லீக் தலைவர்களுக்கு) கருத்து முரண்பாடு உண்டு. ஆனாலும் நட்புக்கு எங்குமே இடைஞ்சல் வந்ததே இல்லை. பால் வளத்துறைத் தலைவராக இருந்த போது, அடியக்க மங்கலம் ரஜாக் ஷா காதரி போன்ற மூத்த தலைவர்கள், எம்.ஏ.அக்பர் அண்ணன் போன்ற லீக் மேதைகள் ஆகியோரைக் காணும் போதெல்லாம் எத்தனையோ உதவிகளை எந்தக் கைமாறும் கருதாமல் செய்திருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் ஹாஸ்டலில் தங்கி இருந்த காலத்தில் நானும் ஜபருல்லாஹ்வும் கொலைப் பட்டினியில் கிடப்போம். மூன்றாவது மாடியில் இருந்து "ஏ! வீணப்போன கவிஞன்களே! பசியா? நான் கீழே வாரேன். வயிறு நிறையச் சாப்பிடலாம். அல்லாஹ் படியளந்திட்டான்"எனறெரு சத்தம் வரும். அதுதான் ஜப்பார் சத்தம்.
லீக் செயற்குழுவில் எங்கள் சாட்சிகளால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எங்கள் பசியாற எத்தனை எத்தனை முறை உதவியிருக்கிறார். செயற்குழுவில் சேரத் தூக்கி அடிக்க வந்த
திருவண்ணாமலை ஷம்சுதீனுக்கும் மறைமுகமாக உதவியிருக்கிறார்.
ஒருமுறை எனக்கு ஒரு இக்கட்டான வேளை. ஜப்பாரிடம் உதவி கேட்டேன். அப்போது அவரிடம் இல்லை. எனினும் அண்ணாசாலையில் ஒரு கடையில் வாங்கி எனக்குத் தந்தார். இவை எல்லாம் ஸமது சாஹிபுக்கும் தெரியும்.
ஜப்பாரிடம் மோதலும் உண்டு. மேலான அரவணைப்பும் உண்டு.
லீகை விட்டு அவர் போன பின்னர் இந்த மணித்துளிகள் வரை நாங்கள்
அரசியல் பேசியதே கிடையாது. ஏனென்றால் எங்களுக்கிடைய பெரிய முரண்பாடுகள் இருக்கினறன. ஜப்பாரிடம் லீக் ரத்தத்தோடு இருக்கிறது. கருத்து முரண் சிந்தனையில் இருக்கிறது.
இந்தியில் ஒரு காலத்தில் சக்கைப்போடு போட்ட மொஹலே ஆஜாம்
அக்பர் திரைப்படத்தைத் தமிழாக்கம் செய்து வருவதாகக் கேள்விப் பட்டேன். அதுபற்றி ஒன்றும் எனக்கு இதுவரை தெரியாது.
இதை எழுதிய பின் நினைவுக் கனம் ஒத்தடமாக மாறி விட்டது.
ஆக்கம் அண்ணன் ஹிலால் முஸ்தஃபா

விந்தை மனிதர்...! அக்பர் அண்ணன்

தமிழக முஸ்லிம் லீக் சரித்திரத்தில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத முன்னோடிகள் ஏராளமானவர்கள் உள்ளனர். அந்த உயரிய பட்டியலில் எம்.ஏ.அக்பர் அண்ணனுக்கு ஓர் இடம் உண்டு.

அக்பர் அண்ணன் லேசில் நம்மால் அறிந்து கொள்ள முடியாத ரகசியங்களையும், ஆழமான அரசியல் விற்பனத்தனத்தையும் தனக்குள் பொதிந்து கொண்டு இருப்பவர்.
அக்பர் அண்ணனின் பெற்றோர்கள் கேரளத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் பல ஆண்டுகள் தூத்துக்குடியில் குடியேறி வாழ்ந்து வந்தவர்கள் என்றும் தகவல் உண்டு.
அக்பர் அண்ணனைப் பொறுத்தவரை உடன் பிறந்தவர்களைப் பற்றியும் அறிய வாய்ப்பு இல்லை. பெற்றவர்களையும் தெரிய இயலவில்லை.
அக்பர் அண்ணனை அறிந்தவர்கள் அனைவரும் அவரைச் சென்னைவாசியாகத்தான் தீர்மானித்து இருந்தார்கள். அவரிடம் கேரளத்து மொழி நடையோ, வாழ்வு முறையோ எப்பொழுதும் வெளிப்பட்டதில்லை. அக்பர் அண்ணன் ஒற்றைத் தனிமனிதனாகவே நடமாடித் திரிந்தார்.
சென்னை ஆலந்தூரில் நாற்பது ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார்.
அக்பர் அண்ணனின் எழுத்து எவரையும் வசீகரிக்கும் சக்தி மிக்கது. அவர் சிறுகதை ஆசிரியராகச் சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் அரசியல் விமர்சகராக விஸ்வரூபம் எடுத்தவர். அவரின் அரசியல், முஸ்லிம் லீக் அரசியல் மட்டுமே. அவரை ஆக்கிரமித்து இருந்த தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஒருவரே.

முஸ்லிம் லீகின் வரலாற்றில் எந்த மூலையில் சந்தேகம் வந்தாலும் அக்பர் அண்ணனை சென்றடைந்தால் ஆதாரமானத் தகவல்களும் உண்மை நிலைகளும் அவரிடம் இருந்து கண்டெடுத்து விடலாம். அவர் ஒரு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தகவல் கலைக்களஞ்சியம்.
அதிகமான முரண்பாட்டுக் குணம் உடையவர். பிரம்மாண்டமான ராஜ தந்திர பிரமுகர். எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் லீகில் எவர் தலைவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்பட்டவர். நகைச்சுவை என்பதே அக்பர் அண்ணனின் முழுச் சரக்குத்தான்.
அக்பர் அண்ணனுடைய செயல்கள் பலப்பல நேரங்களில் முஸ்லிம் லீகிற்குள் சுனாமிப் பேரலைகளை ஏற்படுத்தியது உண்டு. அந்தப் பேரலைகளில் எத்தனையோத் தலைவர்கள் காணாமல் போய் இருக்கிரார்கள். சுனாமியின் அமைதிக்குப் பின் முஸ்லிம் லீகைப் பார்த்தால் முஸ்லிம் லீகின் அதே இடத்தில் அக்பர் அண்ணன் அமர்ந்து இருப்பார்.
அக்பர் அண்ணன் கோபப்பட்டு அவர் காலத்தில் அவரை யாரும் பார்த்ததே இல்லை. ஆனால் அக்பர் அண்ணனால் கோபம் கொண்டு கதிகலங்கியவர்கள் முஸ்லிம் லீகில் நிறையப் பேர் உண்டு.
சென்னையில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த “காதல்” மாத இதழில் சிறுகதை எழுதி வந்தார். இந்த மாத இதழை அரு.ராமநாதன் நடத்தி வந்தார். அரு.ராமநாதன் அற்புதமான எழுத்தாளர்.
கல்கி, அகிலன், சாண்டில்யன், விக்ரமன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்துலக வேந்தர்கள் சரித்திரக் கதைகள் எழுதி வந்த காலகட்டத்தில் அரு.ராமநாதன் “வீரபாண்டியன் மனைவி” என்ற சரித்திர நாவலை எழுதியவர். ஒரு சரித்திர நாவல் அந்த சரித்திர காலக்கட்டத்தை தெளிவாக எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற உண்மை எழுத்தை வரலாறு ஆக்கியவர் அரு.ராமநாதன்.
கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, அகிலனின் “வேங்கையின் மைந்தன்”, சாண்டில்யனின் “யவன ராணி”, “கடல் புறா”, நா.பார்த்த சாரதியின் “மணிப்பல்லவம்” போன்ற சரித்திர நாவல்கள் நல்ல கதைகளாக இருந்தன. ஆனால் ஏராளமான வரலாற்றுப் பிழைகளைக் கொண்டு இருந்தன.
அந்தக் காலகட்டத்தில் அரு.ராமநாதனின் “வீரபாண்டியனின் மனைவி” தான் சரித்திர நாவல் என்ற தரத்திற்கும், உயர்வுக்கும் தமிழில் முன் மாதிரியாகும்.
“வீரபாண்டியம் மனைவியில்” வரும் ஜனனாதன் தமிழகத்து அரசியல் விற்பனத்தின் சரியான முன்னோடி.
இந்த அரு.ராமநாதனோடு நெருக்கமும் எழுத்து உறவும் வைத்து இருந்தவர் அக்பர் அண்ணன். இது அவரின் இலக்கிய உலகம்.
அரசியல் விமர்சனம் என்று அவர் பேனாமுனை எழுதத் துவங்கியது முஸ்லிம் லீகில் அவர் இணைந்த காலத்தில் இருந்துதான். அதுவரை அவர் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் சேர்ந்தவர் அல்லர்.
அரசியல் விமர்சனத்தை துவங்கியதற்குப் பின்னால் அவருடைய பேனாமுனை இலக்கியத்தைத் தலாக் சொல்லிவிட்டது.
பிறை மாத இதழ் அப்துல் வஹாப் எம்.ஏ, பி.டி.ஹெச். அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இந்த மாத இதழிலும் அக்பர் அண்ணன் பணி புரிந்து இருந்தார்.
பின்னர் வளர்மதி என்ற மாத இதழை அவரே தொடர்ந்து நடத்தினார். அக்பர் அண்ணன் ஏராளமானப் பத்திரிகை டைட்டில்களைப் பதிவு செய்து இருந்தார். அவைகள் எல்லாம் வெளிவரவில்லை.
முஸ்லிம் லீகின் சொந்த இதழான உரிமைக் குரல் வார இதழ் காயிதே மில்லத்தை நிறுவனராக ஏற்றும், சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளர் இளையான் குடி பி.என்.ஐ.அபு தாலிப் அண்ணனை வெளியீட்டாளராகப் பெற்றும், ஏ.கே.ரிபாயி சாஹிபை ஆசிரியராகக் கொண்டும் வெளிவந்தது.
ஒரு காலகட்டத்தில் உடல் நலக் குறைவின் காரணமாக ஏ.கே.ரிபாயி சாஹிப் அவர் சொந்த கிராமமான வாவா நகரத்தில் வந்து குடியேறி வாழத் தொடங்கினார். அந்த நிலையில் சரித்திர ஆசிரியர் ஹசன் அண்ணன் (செய்யதுனா) உரிமைக் குரல் பத்திரிகையின் பொறுப்பை ஏற்று நடத்தினார். மிகக் குறுகிய காலத்தில் அந்தப் பணியில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டார். அதன் பிறகு காயிதெ மில்லத் அவர்கள் எம்.ஏ.அக்பர் அண்ணனிடம் உரிமைக்குரல் வார இதழ் பொறுப்பை ஒப்படைத்தார்கள். ஐந்தாறு ஆண்டுகள் தொடர்ந்து உரிமைக் குரல் வெளி வந்தது. அப்படி உரிமைக்குரல் வெளிவந்த காலம் முழுவதும் எம்.ஏ.அக்பர் அண்ணன் தான் நடத்தி வந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தினுடைய தலைவராக காயிதே மில்லத்தின் மகனார் மியான் கானும், பொதுச்செயளாலராக அக்பர் அண்ணனும் இணைந்து பணியாற்றி வந்தார்கள்.
அந்தக் காலத்தில் அச்சுத்துறை இன்று இருப்பது போல வளர்ச்சிப் பெற்று இருக்கவில்லை. கைகளால் அச்சுக் கோப்பதும், ஈயத்தால் உருவான பிளாக்குகளில் படங்களைப் பதிவு செய்தும், அச்சு இயந்திரங்களில் அச்சிட்டும் தான் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டு இருந்தன. இந்த அத்துனைத் துறைகளிலும் அக்பர் அண்ணனின் அறிவு அபாரமானது.
இந்த கால கட்டங்களில் தாய்ச் சபையின் தலைமை நிலையத்திலேயே தங்கி இருந்தார் அக்பர் அண்ணன். அவர் வயது என்ன என்பது அல்லாஹ்விற்குத் தான் வெளிச்சம். ஆனால் அவர் அப்பொழுதும் திருமணம் செய்திருக்கவில்லை.
அதற்குப் பின்னர் மீண்டும் ஆலந்தூருக்கு குடியேறி விட்டார். அக்பர் அண்ணன் எழுத்துக்கள் மட்டும் வசீகரமானது அல்ல, எவ்வளவு தேவை என்று அவரிடம் சொல்லி விட்டால் அந்த அளவில் சொல்லி வைத்தது மாதிரி எழுதித் தருவார்.
பத்திரிகை கம்போஸிங் நடந்து கொண்டு இருக்கும். கம்போஸ் பண்ணிக் கொண்டு இருப்பவர் அக்பர் அண்ணனிடம் வருவார், “இந்தப் பக்கத்துக்கு 20 வரிகள் தேவை ஏதாவது எழுதித் தாருங்கள்” என்று கேட்பார். அக்பர் அண்ணன் அவரிடம் திரும்பக் கேட்பார், “எது மாதிரி வேண்டும்?” என்று.
அக்பர் அண்ணனின் பேனா, பேப்பரில் குனிந்து எழுதத் தொடங்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதி முடிக்கும். கம்பாஸிடர் அதை அச்சுக் கோப்பார். சரியாக 20 வரிகள் இருக்கும். அதில் கூடாது, குறையாது.
கவிஞர் காசிம் அப்போது கம்பாசிடர். அக்பர் அண்ணனிடம் 10 வரி வேண்டும் அது துணுக்காக இருக்க வேண்டும் என்று கேட்பார். அக்பர் அண்ணன் உடனே எழுதித் தருவார். அது பத்து வரிதான் இருக்கும். இரண்டரை பக்கத்துக்கு வேண்டும் அரை பக்கம் விளம்பரம் போட வேண்டும் என்பார். அது ஒரு குட்டிக் கதையாக இருக்க வேண்டும் என்று மேலும் சொல்லுவார். அக்பர் அண்ணன் உடனே எழுதித் தருவார். நல்லதொரு குட்டிக் கதை இருக்கும். இரண்டரைப் பக்கத்துக்கு சரியாக இருக்கும். கூடாது, குறையாது.
இப்படி நூறு முறைகளுக்கு மேல் அக்பர் அண்ணன் கம்பாஸிடர்களால் பரிசோதிக்கப்பட்டார். அக்பர் அண்ணன் தோற்றதே இல்லை. கம்பாஸிடர்கள் தான் வெட்கப்பட்டு இருக்கிறார்கள். எழுத்து முறையில் அவ்வளவு தெளிந்த ஞானம் பெற்றவர் அக்பர் அண்ணன்.
கவிஞர் காசிம், “எழுத்துத் துறையிலும், அரசியல் சிந்தனையிலும் நான் அக்பர் அண்ணனிடம் முரீது வாங்கியவன். என்னை கவிஞர் காசிம் என்று சொல்வதை விட காசிம் ஆலந்தூரி (ஆலந்தூர் அக்பர் அண்ணன் வாழ்ந்த பகுதி) என்று அழைப்பதில் பெருமைப் படுகிறேன்” என்று தலைவர் அப்துஸ் ஸமதிடம் கவிஞர் ஒருமுறை கூறினார்.
முஸ்லிம் லீகில் இளைஞர் அணித்தலைவராக காயிதே மில்லத்தால் நியமிக்கப் பட்ட செங்கம் ஜப்பாருக்கு அரசியல் குரு அக்பர் அண்ணன். ஆனால் ஜப்பார் மமதையால் முஸ்லிம் லீகைவிட்டு வெளியேறினார்.
முஸ்லிம் லீகின் மாநிலப் பொதுச்செயளாலராக இருந்த எம்.ஏ. லத்தீஃப் சாஹிபிற்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் அக்பர் அண்ணன். ஆனால் லத்தீஃப் சாஹிப் குதர்க்கத்தால் லீகைவிட்டு வெளியேறினார்.
மாநில முஸ்லிம் லீகின் பொருளாளர் பொதிகைக் கவிஞர் அ.சாகுல் ஹமீது சாஹிப் (என் சிறிய தந்தையார்) அவர்களுக்கு அரசியல் ஆலோசகராகவும் அக்பர் அண்ணன் இருந்தார். ஆனால் விடாப்பிடி குணத்தால் முஸ்லிம் லீகை விட்டு சாகுல் ஹாமீது சாஹிப் வெளியேற்றப் பட்டார்.
முஸ்லிம் லீகினுடைய மாநிலத் தலைவர் அப்துல் ஸமது சாஹிப் எம்.ஏ. அக்பர் அண்ணனை ஒரு கட்டத்தில் அழைத்து தன்னுடைய அறமுரசு பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் எம்.ஏ. அக்பர் அண்ணனிடம் கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.
எம்.ஏ. அக்பர் அண்ணனிடம் ஒரு பழக்கம் உண்டு. அன்றைய செலவுக்கு எவ்வளவு தேவையோ தன் எழுத்தின் மூலம் அந்தத் தொகையைச் சம்பாதிப்பார். அதற்கு மேல் அன்று சம்பாதிக்க மாட்டார். மறுநாள் ஆலந்தூரில் இருந்து வெறுங்கையோடுதான் சென்னை மண்ணடிக்கு வருவார்.
பிந்திய காலத்தில் அக்பர் அண்ணன் ஒரு கேரளத்து பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். ஆலந்தூரிலேயே அப்பொழுதும் குடியிருந்தார். குடும்பம் நடத்திக் கொண்டு இருந்த காலத்திலும் காலையில் வீட்டிலிருந்து வெறும் பையோடு மண்ணடிக்கு வருவார். மறு நாளுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கரிக்குத் தேவையானப் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இரவு ஆலந்தூருக்கு சென்று விடுவார்.
ஒரு கட்டத்தில் நாங்களெல்லாம் அவரிடம் கேட்டோம், “அண்ணே ஒரு நாள் தேவை பூர்த்தி பொருளாதாரத் திட்டம் ஆபத்தானதே. இதை இனி மேலாவது மாற்றிக் கொள்ளக் கூடாதா?” என்று.
அதற்கு அக்பர் அண்ணன் சொன்ன பதில், “இன்று இருக்கிறேன். நேற்றும் இன்றும் நாளையும் அல்லாஹ் கையில் இருக்கிறது” என்பதே.
நாங்கள் அவர் தொழுது பார்த்ததில்லை. ஆனால் இறை நம்பிக்கை அவரிடம் அழுத்தமாக இருந்திருக்கிறது. அக்பர் அண்ணனின் இறுதி கால கட்டம் வறுமையானது. இறைவன் ஒரு நாள் அவரை வறுமையில் இருந்து விடுவித்து விட்டான். ஆம் அவர் மரணித்து விட்டார்.
தற்போது அவர் துணைவியாரும் குழைந்தைகளும் கேரளத்தில் எங்கேயோ இருப்பதாகத் தகவல்.
அக்பர் அண்ணன் ஒரு வினோத விந்தை...!!!
ஆக்கம் அண்ணன் ஹிலால் முஸ்தஃபா