#இப்படி_ஒரு_பத்திரிகை_ஆசிரியரிடமும்
மணிவிளக்கு மாத இதழ் – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட நல்லதொரு தரமிக்க மாத இதழ். அல்லாமா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள் துவக்கி வைத்த மணிவிளக்கு ஆரம்பத்தில் குர்ஆனியச் சிந்தனைகளும் இஸ்லாமிய தத்துவ விளக்கங்களும் இஸ்லாமிய இலக்கிய பகுதிகளும் கொண்டு வெளிவந்த மாத இதழ்.
முதல் தலைமுறையான மணிவிளக்கு எழுத்தாளர்களில் பலரும் உலமா பெருமக்களாகத் திகழ்ந்தார்கள்.
ஆரம்ப மணிவிளக்கு எந்த அரசியலையும் அடையாளம் காட்டியதில்லை. அது ஆன்மீக இலக்கிய இதழாகத்தான் தன்னை அறிவித்துக் கொண்டது.
தமிழகத்தில் அன்றைய கட்டத்தில் வாழ்ந்திருந்த ஆலிம் பெருமக்களில் சிலர் காங்கிரஸ் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தனர். அவ்விதம் காங்கிரஸ் அரசியலை ஏற்றுக் கொண்ட ஆலிம் பெருமக்கள் மணிவிளக்கில் அதிகம் எழுதி வந்தனர்.
ஆனால் அரசியல் வாடை அங்கு வீசுவதே இல்லை. அல்லாமா அப்துல் ஹமீது பாக்கவி அவர்களும் காங்கிரஸ் அரசியல் ஆதரவுக் கொண்டவராக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் உருவாக்கிய மணிவிளக்கு அரசியலை முன்னெடுக்கவில்லை.
மணிவிளக்கு என்ற பெயர் அண்ணலாரை உருவகப் படுத்திய சொல்லாடல். இந்தச் சொல்லாடலுக்கு இலக்கிய பின்னணி உண்டு.
சீறாவைத் தந்த உமரப்பா அவர்கள் அண்ணலாரைக் குறிக்க உருவகப் படுத்திய அற்புதமான சொல்லாடல், மணிவிளக்கு.
பானுவின் கதிரால் இடருறுங் காலம்
படர்தரு தருநிழல் எனலா
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவநோய்
இடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
குறைசியிற் திலதமே யெனலாய்
மானிலந் தனக்கோர் மணிவிளக்கு எனலாய்
முகம்மது நபிபிறந் தனரே!
இப்பாடலில் அண்ணலாரை மணிவிளக்கு என்று வருணிக்கிறார். இந்த மணிவிளக்கு சொல்லாடலே மணிவிளக்கு மாத இதழின் பெயராக இலக்கியத் தரத்தோடு தெரிவு செய்து இடப்பட்டிருந்தது.
மணிவிளக்கின் முதல் தலைமுறை இப்படி ஒளி வீசிப் பிறந்தது.
அடுத்து இரண்டாம் தலைமுறை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவியின் மகனாரும், முஸ்லிம் லீகின் ஆளுமை செழித்த தலைவருமான சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிபை ஆசிரியராகக் கொண்டு முதன்மைப் படுத்தப் பட்டது.
இந்த இரண்டாம் தலைமுறையின் எழுத்தாளர்களைக் குறிக்கும் பொழுது வியப்பு மேலிடும்.
சிறந்த அரசியல் விமர்சகர்கள், ஆழமான ஆன்மீக பார்வைப் பெற்றவர்கள், குர்ஆனிய வளமையான சிந்தனைக் கொண்டவர்கள், இஸ்லாமிய மார்க்க நெறிப் பற்றிய விழுமிய ஆற்றல் மிக்க விமர்சகர்கள், தரம் செழித்த இலக்கிய மேதைகள் போன்றவர்களை உள்ளடக்கிய எழுத்தாளர் பட்டாளமே இரண்டாம் தலைமுறை மணிவிளக்கை நிலை நிறுத்தியது.
முஸ்லிம் லீக் அரசியல் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களால் வெளிப்படையாகவும் வீராவேசமுடனும் மணிவிளக்கை அலங்கரித்தது.
இஸ்லாமிய நாடுகளைப் பற்றிய துல்லியமான படப்பிடிப்புகள் உலக இஸ்லாமிய பிரச்சனைகள் என்றெல்லாம் மணிவிளக்கின் பக்கங்கள் ஞானப் புதையல்களாக விரிவடைந்தன.
ஸமது சாஹிபின் எழுத்தாற்றல் செழுமையான பாகம் பெற்றது. “ஷிப்லி” என்ற புனை பெயரில் ஸமது சாஹிப் எழுதி வந்த பல சமூக அரசியல் கட்டுரைகள் அற்புதமான செய்திகளை முன்வைத்தது.
பர்மாவிலிருது திரும்பி இருந்த அபிராமம் நூரண்ணன் எழுதி வந்த “அண்ணலெனும் அழகிய முன்மாதிரி” எனும் பெருமானாரின் வாழ்க்கைத் தொடர் ஒரு வித்தியாசமான கோணத்தில் எழுதப் பட்ட முன்மாதிரி வரலாறு.
குர்ஆனில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு மட்டுமே அண்ணலார் வாழ்க்கைச் சம்பவங்களைக் கோவைப் படுத்திய ஒரு நல்ல தொடர்.
இந்தத் தொடரை நூரண்ணன் மணிவிளக்கில் எழுதத் தொடங்கும் பொழுது ஒரு நிபந்தனை விதித்து இருந்தார்.
“குறைந்தது எட்டு பத்து பக்கங்களுக்கு மேல் மாத மாதம் எழுதுவேன். இந்தத் தொடர் வரும் பக்கங்களில் எந்த விளம்பரங்களையுனம் வெளியிடக் கூடாது.” இதுதான் நூரண்ணனின் நிபந்தனை.
இந்த நிபந்தனை கடைசிவரை மணிவிளக்கால் கடைப்பிடிக்கப் பட்டது.
வடகரை பக்கரண்ணன், ஆலிம் கவிஞர் சிராஜ் பாக்கவி , நாகூர் புலவர் ஆபிதீன் காக்கா, நாகூர் ஞானமாமேதை எஸ்.அப்துல் வஹாப் பாக்கவி, கவிக்கோ அப்துர் ரஹ்மான் தந்தையார் மதனீ, கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன், அப்துல் வஹாப் எம்.ஏ. பி.டி.ஹெச், அபிராமம் துபாஷ், கவிஞர் தா.காசிம் , வலங்கைமான் அப்துல்லா, நாகப்பட்டினம் கூத்தூர் ஹைதரலி, அக்பர் அண்ணன் இன்னும் மகத்தான ஆலிம் பெருமக்கள் போன்ற ஜாம்பவான்களால் நிரம்பப் பெற்று இருந்த மணிவிளக்கு பத்திரிகை உலகில் தலை நிமிர்ந்து ஆட்சிப் புரிந்து வந்தது.
1957 ஆம் ஆண்டு மணிவிளக்கில் இரண்டாம் தலைமுறை ஆசிரியர் குழுவில் ஸமது சாஹிப் ஆசிரியராகவும், துணை ஆசிரியராக ஏ.கே.ரிபாய் சாஹிபும் பணியாற்றி வந்தனர்.
ஏ.கே.ரிஃபாய் சாஹிப் ஒரு சிறு மன வருத்தத்தால் அவர்களின் தந்தையாரிடமிருந்து முரண்பட்டு சென்னைக்கு தன் குடும்பத்தை அழைத்து வந்து தங்கி மணிவிளக்கு மாத இதழ் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
மிகமிக அற்புதமான மொழி பெயர்ப்பு ஆக்கங்களும், அரசியல் சமூக விமர்சனங்களும் ஏ.கே.ரிபாய் சாஹிபால் மணிவிளக்கு ஒரு வகையான அலங்காரம் பெற்றது. ஏ.கே.ரிபாய் சாஹிப் மாதச் சம்பளத்தில் பணியாற்ற வேண்டிய பொருளாதாரச் சூழல் அவர் வாழ்க்கையில் எப்பொழுதுமே ஏற்பட வேண்டிய அவசியமற்ற நிலையை இறைவன் அவருக்கு அருளி இருந்தான்.
ஆனாலும் தன் தந்தையாரிடம் முரண்பட்டு சென்னை வந்ததால் தன் குடும்பச் சொத்தின் வருவாயை ஏற்றுக் கொள்ளாமல் மணிவிளக்கு மாத இதழில் மாதச் சம்பளத்திற்குப் பணியாற்றினார்.
ஏ.கே.ரிபாய் சாஹிபிற்குச் சம்பளம் கொடுத்தவர் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்.
“நான் கை நீட்டிச் சம்பளம் வாங்கிய ஒரே முதலாளி ஸமது சாஹிப்தான்” என ஏ.கே.ரிபாய் சாஹிப் அடிக்கடிக் கூறுவது உண்டு. இந்த முதலாளி தொழிலாளி உறவு, ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டு காலம் நீடித்தது.
1978க்கு பின் மூன்றாம் கட்டத் தலைமுறை மணிவிளக்கு மாத இதழுக்குள் குடியேறியது. அப்பொழுது தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் மணிவிளக்கு மாத இதழில் ஒரு தலையங்கம் எழுதினார்.
“இப்பொழுது மூன்றாம் கட்டத் தலைமுறைக்கு மணிவிளக்கை இறைவன் அருளால் கொண்டு வந்து சேர்த்து இருக்கிறோம். எங்களுடைய மேற்பார்வையில் இஸ்லாமிய எழுத்துப் பரம்பரையைச் சார்ந்த இரு இளைய தலைமுறையிடம் ஆசிரியர் குழுவை ஒப்படைத்து மணிவிளக்கு பணியைத் தொடர பொறுப்புச் சாட்டுகிறோம். அந்த இருவர் அ. ஹிலால் முஸ்தபா, நாகூர் இஜட். ஜஃபருல்லா” எனத் தலையங்கம் எழுதி பத்திரிகை பொறுப்பை அவர் கண்காணிப்பில் எங்களிடம் ஒப்படைத்தார்.
இந்த மூன்றாம் தலைமுறையும் மணிவிளக்கை இறைவன் தந்த ஆற்றலைக் கொண்டு செம்மைப் படுத்தியது. அதே நேரம் கடுமையான விமர்சனங்களையும் இந்தத் தலைமுறைச் சந்தித்தது.
“வந்த விமர்சனங்களை மாத இதழின் கடிதமும், கருத்தும் பகுதியில் அப்படியே வெளியிட்டு தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள்” என தலைவர் ஸமது சாஹிப் எங்களுக்கு அனுமதி தந்து எங்கள் பணியைத் தொடர ஆக்கம் தந்தார்.
“காயம் பட்ட ஆடைகள்”, “காணாமல் போன ஒட்டகம்” போன்ற சிறுகதைகளை நான் தொடர்ந்து எழுதி வந்தேன். கவிஞர் ஜபருல்லா கவிதைகள் பலவற்றை எழுதி வந்தார். இவைகள் அனைத்தும் மிகக் கடினமான விமர்சனத்திற்குள்ளாயின.
கம்பம் தேனியிலிருந்து சில ஆலிம்கள் கடுமையான விமர்சனம் எழுதி, விமர்சனத்திற்குக் கீழ் கையெழுத்திட்டு அனுப்பினர். அந்த விமர்சனத்தின் முக்கியமான வரியைக் கீழே பதிவு செய்கிறேன்.
“மணிவிளக்கு என்ற மகோன்னதமான மாத இதழில் ஹிலால் முஸ்தபா, ஜபருல்லா எழுத்துக்களைப் பிரசுரித்து அந்த இதழை எங்கள் இடது கையால் கூட தொட முடியாமல் ஆக்கி விட்டீர்களே… வேதனையாக இருக்கிறது. தலைவர் அவர்கள் இந்த எழுத்துக்களை எல்லாம் கவனிக்கிறார்களா?” என்று எழுதப் பட்டு நான்கு பக்க விமர்சனக் கடிதம் வந்தது.
அந்த விமர்சனக் கடிதத்தை தலைவர் ஸமது சாஹிபிடம் நானும் ஜபருல்லாவும் கொண்டு போய் காட்டினோம். அதைப் பார்த்துவிட்டு
“தம்பி, கடிதமும் கருத்தில் இப்படியே இந்த வாசகங்களைப் பிரசுரித்து விட்டு உங்கள் பணியைத் தொடருங்கள்” என ஸமது சாஹிப் கூறினார்கள்.
அடுத்து ஒரு கடிதத்தை ஜபருல்லா எடுத்து “மாமா, இன்னொரு கடிதம் இருக்கிறது” என நீட்டினார்.
அந்தக் கடிதம் அதிராமப் பட்டினத்தில் இருந்து வந்திருந்தது.
அதில், “தங்கத் தாம்பாளத்தில் மணிவிளக்கு விருந்து படைத்தது. அந்த விருந்தின் கடைசி ஓரத்தில் ஹிலால் முஸ்தபா, ஜபருல்லா என்ற இருவரின் எழுத்து என்னும் நஜீஸை (மலம்) வைத்து விட்டீர்களே” என்று குறிப்பிட்டு இருந்தது.
இதைப் படித்து விட்டு தலைவர் ஸமது சாஹிப் அறை முழுதும் அதிரும் அளவுக்கு வாய்விட்டு சிரித்தார்கள்.
“தம்பி, இதையும் கடிதமும், கருத்தில் வெளியிட்டு விடுங்கள், நீங்கள் பணியைத் தொடருங்கள். நிச்சயம் இவர்கள் உங்கள் எழுத்துக்களை ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்வார்கள். தளர வேண்டாம்” என தலைவர் எங்களுக்கு அனுமதி தந்தார்.
நாங்கள் தொடர்ந்து மணிவிளக்கின் இறுதிக் காலம் வரைப் பணியாற்றினோம்.
இப்படி ஒரு பத்திரிகை ஆசிரியரிடமும், தலைவரிடமும் வேறு யாரும் பணி புரிந்து இருக்கிறீர்களா?
ஆக்கம் அண்ணன் ஹிலால் முஸ்தஃபா
14 feb 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக