தமிழக முஸ்லிம் லீக் சரித்திரத்தில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத முன்னோடிகள் ஏராளமானவர்கள் உள்ளனர். அந்த உயரிய பட்டியலில் எம்.ஏ.அக்பர் அண்ணனுக்கு ஓர் இடம் உண்டு.
அக்பர் அண்ணன் லேசில் நம்மால் அறிந்து கொள்ள முடியாத ரகசியங்களையும், ஆழமான அரசியல் விற்பனத்தனத்தையும் தனக்குள் பொதிந்து கொண்டு இருப்பவர்.
அக்பர் அண்ணனின் பெற்றோர்கள் கேரளத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் பல ஆண்டுகள் தூத்துக்குடியில் குடியேறி வாழ்ந்து வந்தவர்கள் என்றும் தகவல் உண்டு.
அக்பர் அண்ணனைப் பொறுத்தவரை உடன் பிறந்தவர்களைப் பற்றியும் அறிய வாய்ப்பு இல்லை. பெற்றவர்களையும் தெரிய இயலவில்லை.
அக்பர் அண்ணனை அறிந்தவர்கள் அனைவரும் அவரைச் சென்னைவாசியாகத்தான் தீர்மானித்து இருந்தார்கள். அவரிடம் கேரளத்து மொழி நடையோ, வாழ்வு முறையோ எப்பொழுதும் வெளிப்பட்டதில்லை. அக்பர் அண்ணன் ஒற்றைத் தனிமனிதனாகவே நடமாடித் திரிந்தார்.
சென்னை ஆலந்தூரில் நாற்பது ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார்.
அக்பர் அண்ணனின் எழுத்து எவரையும் வசீகரிக்கும் சக்தி மிக்கது. அவர் சிறுகதை ஆசிரியராகச் சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் அரசியல் விமர்சகராக விஸ்வரூபம் எடுத்தவர். அவரின் அரசியல், முஸ்லிம் லீக் அரசியல் மட்டுமே. அவரை ஆக்கிரமித்து இருந்த தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஒருவரே.
முஸ்லிம் லீகின் வரலாற்றில் எந்த மூலையில் சந்தேகம் வந்தாலும் அக்பர் அண்ணனை சென்றடைந்தால் ஆதாரமானத் தகவல்களும் உண்மை நிலைகளும் அவரிடம் இருந்து கண்டெடுத்து விடலாம். அவர் ஒரு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தகவல் கலைக்களஞ்சியம்.
அதிகமான முரண்பாட்டுக் குணம் உடையவர். பிரம்மாண்டமான ராஜ தந்திர பிரமுகர். எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் லீகில் எவர் தலைவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்பட்டவர். நகைச்சுவை என்பதே அக்பர் அண்ணனின் முழுச் சரக்குத்தான்.
அக்பர் அண்ணனுடைய செயல்கள் பலப்பல நேரங்களில் முஸ்லிம் லீகிற்குள் சுனாமிப் பேரலைகளை ஏற்படுத்தியது உண்டு. அந்தப் பேரலைகளில் எத்தனையோத் தலைவர்கள் காணாமல் போய் இருக்கிரார்கள். சுனாமியின் அமைதிக்குப் பின் முஸ்லிம் லீகைப் பார்த்தால் முஸ்லிம் லீகின் அதே இடத்தில் அக்பர் அண்ணன் அமர்ந்து இருப்பார்.
அக்பர் அண்ணன் கோபப்பட்டு அவர் காலத்தில் அவரை யாரும் பார்த்ததே இல்லை. ஆனால் அக்பர் அண்ணனால் கோபம் கொண்டு கதிகலங்கியவர்கள் முஸ்லிம் லீகில் நிறையப் பேர் உண்டு.
சென்னையில் இருந்து வெளிவந்துக் கொண்டிருந்த “காதல்” மாத இதழில் சிறுகதை எழுதி வந்தார். இந்த மாத இதழை அரு.ராமநாதன் நடத்தி வந்தார். அரு.ராமநாதன் அற்புதமான எழுத்தாளர்.
கல்கி, அகிலன், சாண்டில்யன், விக்ரமன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்துலக வேந்தர்கள் சரித்திரக் கதைகள் எழுதி வந்த காலகட்டத்தில் அரு.ராமநாதன் “வீரபாண்டியன் மனைவி” என்ற சரித்திர நாவலை எழுதியவர். ஒரு சரித்திர நாவல் அந்த சரித்திர காலக்கட்டத்தை தெளிவாக எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்கின்ற உண்மை எழுத்தை வரலாறு ஆக்கியவர் அரு.ராமநாதன்.
கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, அகிலனின் “வேங்கையின் மைந்தன்”, சாண்டில்யனின் “யவன ராணி”, “கடல் புறா”, நா.பார்த்த சாரதியின் “மணிப்பல்லவம்” போன்ற சரித்திர நாவல்கள் நல்ல கதைகளாக இருந்தன. ஆனால் ஏராளமான வரலாற்றுப் பிழைகளைக் கொண்டு இருந்தன.
அந்தக் காலகட்டத்தில் அரு.ராமநாதனின் “வீரபாண்டியனின் மனைவி” தான் சரித்திர நாவல் என்ற தரத்திற்கும், உயர்வுக்கும் தமிழில் முன் மாதிரியாகும்.
“வீரபாண்டியம் மனைவியில்” வரும் ஜனனாதன் தமிழகத்து அரசியல் விற்பனத்தின் சரியான முன்னோடி.
இந்த அரு.ராமநாதனோடு நெருக்கமும் எழுத்து உறவும் வைத்து இருந்தவர் அக்பர் அண்ணன். இது அவரின் இலக்கிய உலகம்.
அரசியல் விமர்சனம் என்று அவர் பேனாமுனை எழுதத் துவங்கியது முஸ்லிம் லீகில் அவர் இணைந்த காலத்தில் இருந்துதான். அதுவரை அவர் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் சேர்ந்தவர் அல்லர்.
அரசியல் விமர்சனத்தை துவங்கியதற்குப் பின்னால் அவருடைய பேனாமுனை இலக்கியத்தைத் தலாக் சொல்லிவிட்டது.
பிறை மாத இதழ் அப்துல் வஹாப் எம்.ஏ, பி.டி.ஹெச். அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இந்த மாத இதழிலும் அக்பர் அண்ணன் பணி புரிந்து இருந்தார்.
பின்னர் வளர்மதி என்ற மாத இதழை அவரே தொடர்ந்து நடத்தினார். அக்பர் அண்ணன் ஏராளமானப் பத்திரிகை டைட்டில்களைப் பதிவு செய்து இருந்தார். அவைகள் எல்லாம் வெளிவரவில்லை.
முஸ்லிம் லீகின் சொந்த இதழான உரிமைக் குரல் வார இதழ் காயிதே மில்லத்தை நிறுவனராக ஏற்றும், சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளர் இளையான் குடி பி.என்.ஐ.அபு தாலிப் அண்ணனை வெளியீட்டாளராகப் பெற்றும், ஏ.கே.ரிபாயி சாஹிபை ஆசிரியராகக் கொண்டும் வெளிவந்தது.
ஒரு காலகட்டத்தில் உடல் நலக் குறைவின் காரணமாக ஏ.கே.ரிபாயி சாஹிப் அவர் சொந்த கிராமமான வாவா நகரத்தில் வந்து குடியேறி வாழத் தொடங்கினார். அந்த நிலையில் சரித்திர ஆசிரியர் ஹசன் அண்ணன் (செய்யதுனா) உரிமைக் குரல் பத்திரிகையின் பொறுப்பை ஏற்று நடத்தினார். மிகக் குறுகிய காலத்தில் அந்தப் பணியில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டார். அதன் பிறகு காயிதெ மில்லத் அவர்கள் எம்.ஏ.அக்பர் அண்ணனிடம் உரிமைக்குரல் வார இதழ் பொறுப்பை ஒப்படைத்தார்கள். ஐந்தாறு ஆண்டுகள் தொடர்ந்து உரிமைக் குரல் வெளி வந்தது. அப்படி உரிமைக்குரல் வெளிவந்த காலம் முழுவதும் எம்.ஏ.அக்பர் அண்ணன் தான் நடத்தி வந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தினுடைய தலைவராக காயிதே மில்லத்தின் மகனார் மியான் கானும், பொதுச்செயளாலராக அக்பர் அண்ணனும் இணைந்து பணியாற்றி வந்தார்கள்.
அந்தக் காலத்தில் அச்சுத்துறை இன்று இருப்பது போல வளர்ச்சிப் பெற்று இருக்கவில்லை. கைகளால் அச்சுக் கோப்பதும், ஈயத்தால் உருவான பிளாக்குகளில் படங்களைப் பதிவு செய்தும், அச்சு இயந்திரங்களில் அச்சிட்டும் தான் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டு இருந்தன. இந்த அத்துனைத் துறைகளிலும் அக்பர் அண்ணனின் அறிவு அபாரமானது.
இந்த கால கட்டங்களில் தாய்ச் சபையின் தலைமை நிலையத்திலேயே தங்கி இருந்தார் அக்பர் அண்ணன். அவர் வயது என்ன என்பது அல்லாஹ்விற்குத் தான் வெளிச்சம். ஆனால் அவர் அப்பொழுதும் திருமணம் செய்திருக்கவில்லை.
அதற்குப் பின்னர் மீண்டும் ஆலந்தூருக்கு குடியேறி விட்டார். அக்பர் அண்ணன் எழுத்துக்கள் மட்டும் வசீகரமானது அல்ல, எவ்வளவு தேவை என்று அவரிடம் சொல்லி விட்டால் அந்த அளவில் சொல்லி வைத்தது மாதிரி எழுதித் தருவார்.
பத்திரிகை கம்போஸிங் நடந்து கொண்டு இருக்கும். கம்போஸ் பண்ணிக் கொண்டு இருப்பவர் அக்பர் அண்ணனிடம் வருவார், “இந்தப் பக்கத்துக்கு 20 வரிகள் தேவை ஏதாவது எழுதித் தாருங்கள்” என்று கேட்பார். அக்பர் அண்ணன் அவரிடம் திரும்பக் கேட்பார், “எது மாதிரி வேண்டும்?” என்று.
அக்பர் அண்ணனின் பேனா, பேப்பரில் குனிந்து எழுதத் தொடங்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதி முடிக்கும். கம்பாஸிடர் அதை அச்சுக் கோப்பார். சரியாக 20 வரிகள் இருக்கும். அதில் கூடாது, குறையாது.
கவிஞர் காசிம் அப்போது கம்பாசிடர். அக்பர் அண்ணனிடம் 10 வரி வேண்டும் அது துணுக்காக இருக்க வேண்டும் என்று கேட்பார். அக்பர் அண்ணன் உடனே எழுதித் தருவார். அது பத்து வரிதான் இருக்கும். இரண்டரை பக்கத்துக்கு வேண்டும் அரை பக்கம் விளம்பரம் போட வேண்டும் என்பார். அது ஒரு குட்டிக் கதையாக இருக்க வேண்டும் என்று மேலும் சொல்லுவார். அக்பர் அண்ணன் உடனே எழுதித் தருவார். நல்லதொரு குட்டிக் கதை இருக்கும். இரண்டரைப் பக்கத்துக்கு சரியாக இருக்கும். கூடாது, குறையாது.
இப்படி நூறு முறைகளுக்கு மேல் அக்பர் அண்ணன் கம்பாஸிடர்களால் பரிசோதிக்கப்பட்டார். அக்பர் அண்ணன் தோற்றதே இல்லை. கம்பாஸிடர்கள் தான் வெட்கப்பட்டு இருக்கிறார்கள். எழுத்து முறையில் அவ்வளவு தெளிந்த ஞானம் பெற்றவர் அக்பர் அண்ணன்.
கவிஞர் காசிம், “எழுத்துத் துறையிலும், அரசியல் சிந்தனையிலும் நான் அக்பர் அண்ணனிடம் முரீது வாங்கியவன். என்னை கவிஞர் காசிம் என்று சொல்வதை விட காசிம் ஆலந்தூரி (ஆலந்தூர் அக்பர் அண்ணன் வாழ்ந்த பகுதி) என்று அழைப்பதில் பெருமைப் படுகிறேன்” என்று தலைவர் அப்துஸ் ஸமதிடம் கவிஞர் ஒருமுறை கூறினார்.
முஸ்லிம் லீகில் இளைஞர் அணித்தலைவராக காயிதே மில்லத்தால் நியமிக்கப் பட்ட செங்கம் ஜப்பாருக்கு அரசியல் குரு அக்பர் அண்ணன். ஆனால் ஜப்பார் மமதையால் முஸ்லிம் லீகைவிட்டு வெளியேறினார்.
முஸ்லிம் லீகின் மாநிலப் பொதுச்செயளாலராக இருந்த எம்.ஏ. லத்தீஃப் சாஹிபிற்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் அக்பர் அண்ணன். ஆனால் லத்தீஃப் சாஹிப் குதர்க்கத்தால் லீகைவிட்டு வெளியேறினார்.
மாநில முஸ்லிம் லீகின் பொருளாளர் பொதிகைக் கவிஞர் அ.சாகுல் ஹமீது சாஹிப் (என் சிறிய தந்தையார்) அவர்களுக்கு அரசியல் ஆலோசகராகவும் அக்பர் அண்ணன் இருந்தார். ஆனால் விடாப்பிடி குணத்தால் முஸ்லிம் லீகை விட்டு சாகுல் ஹாமீது சாஹிப் வெளியேற்றப் பட்டார்.
முஸ்லிம் லீகினுடைய மாநிலத் தலைவர் அப்துல் ஸமது சாஹிப் எம்.ஏ. அக்பர் அண்ணனை ஒரு கட்டத்தில் அழைத்து தன்னுடைய அறமுரசு பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் எம்.ஏ. அக்பர் அண்ணனிடம் கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.
எம்.ஏ. அக்பர் அண்ணனிடம் ஒரு பழக்கம் உண்டு. அன்றைய செலவுக்கு எவ்வளவு தேவையோ தன் எழுத்தின் மூலம் அந்தத் தொகையைச் சம்பாதிப்பார். அதற்கு மேல் அன்று சம்பாதிக்க மாட்டார். மறுநாள் ஆலந்தூரில் இருந்து வெறுங்கையோடுதான் சென்னை மண்ணடிக்கு வருவார்.
பிந்திய காலத்தில் அக்பர் அண்ணன் ஒரு கேரளத்து பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். ஆலந்தூரிலேயே அப்பொழுதும் குடியிருந்தார். குடும்பம் நடத்திக் கொண்டு இருந்த காலத்திலும் காலையில் வீட்டிலிருந்து வெறும் பையோடு மண்ணடிக்கு வருவார். மறு நாளுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கரிக்குத் தேவையானப் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இரவு ஆலந்தூருக்கு சென்று விடுவார்.
ஒரு கட்டத்தில் நாங்களெல்லாம் அவரிடம் கேட்டோம், “அண்ணே ஒரு நாள் தேவை பூர்த்தி பொருளாதாரத் திட்டம் ஆபத்தானதே. இதை இனி மேலாவது மாற்றிக் கொள்ளக் கூடாதா?” என்று.
அதற்கு அக்பர் அண்ணன் சொன்ன பதில், “இன்று இருக்கிறேன். நேற்றும் இன்றும் நாளையும் அல்லாஹ் கையில் இருக்கிறது” என்பதே.
நாங்கள் அவர் தொழுது பார்த்ததில்லை. ஆனால் இறை நம்பிக்கை அவரிடம் அழுத்தமாக இருந்திருக்கிறது. அக்பர் அண்ணனின் இறுதி கால கட்டம் வறுமையானது. இறைவன் ஒரு நாள் அவரை வறுமையில் இருந்து விடுவித்து விட்டான். ஆம் அவர் மரணித்து விட்டார்.
தற்போது அவர் துணைவியாரும் குழைந்தைகளும் கேரளத்தில் எங்கேயோ இருப்பதாகத் தகவல்.
அக்பர் அண்ணன் ஒரு வினோத விந்தை...!!!
ஆக்கம் அண்ணன் ஹிலால் முஸ்தஃபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக