புதன், 4 ஜூன், 2014

கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி. அயோத்திக்கு பாபர்; சோமநாதபுரத்திற்கு கஜினி. அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும் தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.
இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.
கஜினி படையெடுப்பு
கஜினி படையெடுப்பு
அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உணமை.
ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும், அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் நமது பாடநூல்கள் குறிப்பிடாத உணமை.
கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.
ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு சுமார் 50(தற்போது 65 ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.
ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?
இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள். அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?
இது வேடிக்கையான வாதமோ, குதர்க்கவாதமோ அல்ல. இந்து தேசியக் கண்ணோட்டத்திலிருந்து நமக்குக் கற்பிக்கப்படும் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் முயற்சி.
பிரபல வரலாற்றாய்வாளர் ரோமில்லா தபார் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு நிகழ்த்திய டி.டி. கோசாம்பி நினைவுச் சொற்பொழிவில் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த புதிய வரலாற்றுத் தரவுகளை வெளியிட்டுள்ளார். ‘செமினார்’ ஆங்கில மாத இதழில் வெளியான அந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.
***
சோமநாதபுரம் – அரேபியர்களுடன் இருந்த கடல் வர்த்தகத் தொடர்பு காரணமாக செல்வச் செழிப்புடன் விளங்கிய துறைமுக நகரம். இந்த அராபிய வர்த்தகத் தொடர்பு பல நூற்றாண்டுகள் முந்தையது. அரேபிய வர்த்தகர்கள், மாலுமிகளில் பலர் இங்கேயே திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டு மேற்குக் கடற்கரை ஓரமாக நிரந்தரமாகவே தங்கி விட்டனர். கி.பி 8, 9 நூற்றாண்டைச் சேர்ந்த ராட்டிரகூட ஆட்சியில் கடலோரப் பகுதிகளில் தாஜிக்கிஸ்தானைச் சேர்ந்த முசுலீம்கள் ஆளுநர்களாகக் கூடப் பணியாற்றியிருக்கின்றனர். அதே போல கஜினி நகரத்தில் இந்து வியாபாரிகள் செல்வாக்குடன் இருந்திருக்கின்றனர்.
சோமநாதபுரம் கடற்கரை
சோமநாதபுரம் கடற்கரை (இன்று)
சோமநாதபுரம் கோயில் அத்தனை செல்வச் செழிப்புள்ளதாக விளங்கச் சில காரணங்கள் இருந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் யாத்திரை வரி வசூலிக்கப்பட்டது. (ஜஸியா எனும் யாத்திரை வரி முசுலீம் மன்னர்களால் இந்து யாத்தீகர்களிடம் வசூலிக்கப்பட்டதாக மட்டுமே கூறுகிறது பாடநூல்). இதில் கிடைத்த பெரும் வருவாயைக் கொண்டு அரேபியக் குதிரை இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது கோயில் நிர்வாகம்.
கோயில் நிர்வாகத்திற்கும், சோலங்கி ஆட்சிக்கும் அன்றைக்குப் பெரும் சவாலாக இருந்தவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கொள்ளையடித்த குறுநில மன்னர்கள்தான். யாதவர்கள், சுடாசாமர்கள், அபிரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தக் குறுநில மன்னர்கள் வர்த்தகர்களையும் பக்தர்களையும் வழிமறித்து அவர்கள் கொண்டுவரும் காணிக்கைகளை வழிப்பறி செய்தனர். இவர்களைச் சமாளிப்பதுதான் சோலங்கி அரசின் தலையாய பணியாக இருந்தது.
இந்தப் பின்புலத்தில் கி.பி 1025-ம் ஆண்டு நடந்தது கஜினியின் படையெடுப்பு. அது குறித்த வெவ்வேறு வரலாற்று ஆதாரங்களை இனிக் காண்போம்.
துருக்கிய – பாரசீகக் குறிப்புகள்:
ன்னர்களின் வீரபராக்கிரமங்களை மிகைப்படுத்திக் கூறும் எல்லா இலக்கியங்களுக்கும் உள்ள தன்மை இவற்றிலும் உண்டு. கீழை இசுலாமிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞரான பரூக்கி சிஸ்தானி என்பவர் கஜினியின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கிறார்.
சிஸ்தானியின் கூற்றுப்படி சோமநாதபுரத்தில் கஜினியால் உடைப்பக்கட்ட சிலை இந்துக் கடவுள் அல்ல; இசுலாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் வழிப்பட்டு வந்த வாத், உஸ்ஸா, மானத் என்ற பெண் தெய்வங்களில் ஒன்றான மானத் என்ற பெண் கடவுளின் சிலை.
உருவ வழிபாட்டை எதிர்த்த முகமது நபி இச்சிலைகளை உடைத்தெறியுமாறு ஆணையிட்டதாகவும் மற்ற இரண்டு கடவுள்களின் சிலையும் உடைக்கப்பட்டு விட்டதாகவும், மானத்தின் சிலை மட்டும் குஜராத்திற்கு ரகசியமாகக் கடத்தி வரப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார் சிஸ்தானி.
‘’சு-மானத்’ என்றால் ’’மானத் கடவுளின் உறைவிடம்’’ என்று பொருள். இந்தச் சிலையை உடைத்ததன் மூலம் நிறைவேற்றப்படாமலிருந்த ஒரு இசுலாமியக் கடமையை கஜினி நிறைவேற்றிவிட்டார்’’ என்று அவர் எழுதுகிறார்.
மன்னனைக் ‘குளிப்பாட்டுவதற்கு’ வழக்கமாக அரசவைப் புலவர்கள் புனையும் கதைதான் இது என்றும், பல்வேறு இசுலாமிய மன்னர்களைக் காட்டிலும் தன்னை ஒரு மதக்கடமையை நிறைவேற்றிய மாவீரனாகச் சித்தரித்துக் கொள்ள கஜினி செய்த முயற்சி என்றும் கூறி வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதையை நிராகரிக்கின்றனர்.
கஜினியின் அரசவையில் இருந்த அல் பரூனி எனும் அறிஞர் இந்தியாவின்பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து கிதாப் உல் ஹிந்த் எனும் வரலாற்று நூலை எழுதியவர். அவர் இத்தகைய கட்டுக் கதைகள் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கஜினி பேரரசு
கஜினி பேரரசு
இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி, ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் 50,000 பேரை இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக் கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.
இன்னொரு சம்பவமும் நடதுள்ளது. மூல்தான் நகரிலிருந்த இந்துக் கோயிலொன்றை இசுமாயிலி முசுலீம்கள் தாக்கியிருக்கின்றனர். அதற்குப் பதிலடியாக இசுமாயிலி முஸ்லீம்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களது மசூதியையும் இழுத்து மூடியிருக்கிறான் கஜினி.
சோமநாதபுரத்தின் மீதான தாக்குதல், ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றை மதக் கடமையை நிறைவேற்றும் செயல்களாக அன்று இசுலாமிய உலகத்திடம் (கலீபாவிடம்) கஜினி சித்தரித்திருக்கலாம். எனினும் அடிப்படை உண்மை அதுவல்ல.
இந்தியாவின் பல்வேறு அரசுகளுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகத்தில் அரேபியாவுடன் கஜினி (ஆப்கான்) போட்டியிட்டுக் கொண்டிருந்தது. சோமநாதபுரத்தின் போரா முஸ்லீம் மற்றும் இந்து வணிகர்கள் மூலமாகவும், சிந்து மாகாணத்தின் (மூல்தான்) இசுமாயிலி, ஷியா வியாபாரிகள் மூலமாகவும் நடைபெற்ற இந்த வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம்தான் கஜினியின் வர்த்தகம் பெருகும் என்பது யதார்த்த நிலையாக இருந்தது.
வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை போர்த்திக் கொண்டது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.
சமண நூல்களின் குறிப்புகள்:
இனி, அக்காலத்தில் நாடெங்கும் செல்வாக்குடன் திகழ்ந்த சமண மத்ததினரின் குறிப்புகளைக் காண்போம். கோயில்களை அழித்து முனிவர்களையும் பார்ப்பனர்களையும் துன்புறுத்துகின்ற ராட்சதர்களுக்கெதிராக சாளுக்கிய மன்னன் போர் தொடுத்ததை 12-ம் நூற்றாண்டின் சமண நூல் குறிப்பிடுகிறது.
ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த கஜினியின் படையெடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதே சாளுக்கிய மன்னன் காம்பே பகுதியில் முசுலீம்களுக்கு ஒரு மசூதி கட்டிக் கொடுத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் குமாரபாலன் என்பவன் சாகாவரம் பெற விரும்பிய கதையை இன்னொரு சமண நூல் கூறுகிறது:
கஜினி முகமது
கஜினி முகமது
சோமநாதபுரத்திலுள்ள மரத்தினாலான பாழடைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றிக் கட்டினால் சாகாவரம் பெறலாமென அவனது அமைச்சன் கூறிய யோசனையை மன்னன் அமல்படுத்துகிறான். சமண மதத்தைச் சார்ந்த அந்த அமைச்சன் தனது மதத்தின் வலிமையை மன்னனுக்குப் புரிய வைக்க சமண முனிவர் ஒருவரை அழைத்து வந்தான். சோமநாதபுரம் கோயிலுக்கு வந்த அந்த முனிவர் தனது தவ வலிமையினால் ‘சிவபெருமானை’ அழைத்தவுடனே சிவன் மன்னனுக்குக் காட்சியளித்தாராம். சிவனையே சொடுக்கு போட்டு வரவழைக்கும் அந்த முனிவரின் தவ வலிமையை வியந்த மன்னன், உடனே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.
கஜினி முகமதுவின் படையெடுப்புக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூலிலும் படையெடுப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை.
11-ம் நூற்றாண்டில் (அதாவது கஜினி முகமதுவின் படையெடுப்பின் போது) வாழ்ந்த மால்வா அரசவையின் சமணக் கவிஞர் தனபாலன் என்பவர் சோமநாதபுரம் படையெடுப்பைக் குறிப்பிடுகிறார். ஆனால் சிலை உடைப்பு பற்றி ஏதும் இல்லை. மாறாக மகாவீரரின் சிலைகளை கஜினி முகமதுவால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை விரிவாகக் கூறுவதன் மூலம் சைவத்தைக் காட்டிலும் சமணத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.
சைவத்திற்கு எதிராகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த சமணர்கள், ‘’தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சிவபெருமானைப்’’ பற்றி எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
சோமநாதபுரத்தின் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்:
12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.
ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படையெடுப்பைப் பற்றி ஒரு கல்வெட்டும் இல்லை.
கல்வெட்டைக் காண்பவர்கள் ‘’சிவனுக்கே இந்தக் கதியா’’ என்று நம்பிக்கையிழந்து விடுவார்கள் என்ற சங்கடமா? அப்படியானால் உள்ளூர் மன்னர்கள் கோயிலைத் தாக்கியதை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும்? அல்லது கோயிலைக் கொள்ளையடிப்பது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய சாதாரண விசயமாக இருந்ததா? – என்ற பல கேள்விகளை இக்கல்வெட்டுகள் கிளப்புகின்றன.
1264-ம் ஆண்டின் இன்னொரு கோயில் கல்வெட்டு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்திலும் அராபிய மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு, ஹார்மூஸ் நகரைச் சேர்ந்த ஒரு முசுலீம் வியாபாரிக்கு மசூதி கட்டுவதற்காக சோமநாதபுரத்திலேயே நிலம் விற்பனை செய்யப்பட்டது பற்றியதாகும்.
கோஜா நூருதீன் பெரூஸ் என்ற வியாபாரிக்கு ஸ்ரீசாதா என்ற உள்ளூர் மன்னன் அனுமதியுடன் செய்த இந்த நிலவிற்பனைக்கு இரண்டு உள்ளூராட்சி அமைப்புகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.
சோமநாதபுரம் கோயிலின் அர்ச்சகர் வீரபத்ரனின் தலைமையில் வர்த்தகர்கள், அதிகாரிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள் அடங்கிய ‘பஞ்சகுலா’ என்ற பஞ்சாயத்து ஒரு உள்ளூர் அமைப்பு.
கப்பல் முதலாளிகள், கைவினைஞர்கள், மாலுமிகள், மதகுருமார்கள் ஆகியோரடங்கிய ‘ஜமாதா’ என்ற ஜமாத் இரண்டாவது அமைப்பு. இந்த ஜமாத்தின் உறுப்பினர்களாக வாணிபர்கள், கொத்தனார்கள், முசல்மான் குதிரை லாயக்காரர்கள் ஆகியோரும் அவர்களது சாதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் இசுலாத்திற்கு மாறிய உள்ளூர் சேவைச் சாதியினராக இருக்கக்கூடும்.
மசூதிக்கான நிலம் யார் யாரிடமிருந்தெல்லாம் விலைக்கு வாங்கப்பட்டது என்ற பட்டியல் தெளிவாக உள்ளது. அதில் பெரும்பகுதி நிலம் சோமநாதபுரம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதும், அதை விற்பனை செய்தவர் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தக் கல்வெட்டையும் பரிசீலிக்கும் போது, எவ்வித நிர்jfபந்தமுமின்றி மிகச் சுமுகமாகவே இந்த விற்பனை நடந்துள்ளதென தெரிகிறது.
கஜினி முகமதுவின் படையெடுப்பு நடைபெற்று சுமார் இருநூறே ஆண்டுகளில் அந்தக் கோயில் நிலத்தையே மசூதிக்கு விற்க அர்ச்சகர்களும், ‘இந்து’ வியாபாரிகளும் எப்படிச் சம்மதித்தனர்? 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்களின் நினைவில் கல்வெட்டாகப் பதிந்து அவமான உணர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் என்று பாரதீய ஜனதா கூறுகிறதே, அந்த கஜினியின் படையெடுப்பை அதே சோமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மறந்தது எப்படி? அதுவும் இருநூறே ஆண்டுகளில்!
ஞாபக மறதியா? அல்லது பலநூறு படையெடுப்புகளில் அதுவும் ஒன்று என்பதால் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவு முக்கியமானல்ல என்பதாலா?
அல்லது தங்களுடன் “சுமூகமான வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள் வேறு, ஆக்கிரமித்த துருக்கியர்கள் வேறு; இருவரும் இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களிருவரையும் ‘முசல்மான்கள்’ என்று ஒரே மாதிரியாகக் கருத முடியாது’’ என எண்ணினார்களா – இந்தக் காரணம்தான் அடிப்படையானதாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்ல, குதிரை வர்த்தகத்திற்குப் பெயர்போன ஹார்மஸ் நகர முசுலீம் வியாபாரிக்குத்தான் நிலம் விற்கப்பட்டிருக்கிறது. எனவே வர்த்தக நலன் இதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கக் கூடும். கோயில் நிர்வாகிகள் கோயில் பணத்தில் குதிரை வர்த்தகம் செய்து கணிசமாக லாபம் ஈட்டியிருக்கக் கூடும் என்பதும் இந்தப் ‘பெருந்தன்மைக்கு’க் காரணமாக இருந்திருக்கலாம்.
‘அர்ச்சகர்களின் பெருந்தன்மை’
இந்திய மன்னர்களுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகம் அரேபியா, சிந்து பகுதிகளைச் சேர்ந்த ஷியா, இசுமாயிலி பிரிவு முஸ்லீம் வியாபாரிகள் கையில் இருந்தது. இந்த வர்த்தக வழியைத் தடுத்து, ஆப்கான் மூலம் வர்த்தகம் செய்ய வைப்பதன் மூலம் தனது அரசின் செல்வாக்கை பெருக்குவதே கஜினி முகமதுவின் நோக்கம். வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை அணிந்தது இப்படித்தான்.
அதேபோல கஜினி முகமது சோமநாதபுரதிதன் மீது படையெடுத்து 200 ஆண்டுகளுக்குள், அந்த கோயில் நிலத்தையே மசூதி கட்டுவதற்காக விற்றிருக்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள். இவர்களும் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுதான் இந்தப் ‘பெருந்தன்மை’க்கு காரணமாக  இருக்கும்.
சோமநாதபுரத்திலேயே காணப்படும் 15-ம் நூற்றாண்டின் கல்வெட்டொன்று இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகப் பயன்படுகிறது.
சமஸ்கிருத மொழியில் உள்ள அக்கல்வெட்டு ‘’பிஸ்மில்லா ரஹ்மானி ரஹீம்’’ என்ற இசுலாமிய வாழ்த்துச் சொல்லுடன் தொடங்குகிறது. ‘’போராபரீத்’’ என்பவருடைய அராபிய வம்சாவளியை விவரமாகக் கூறி துருக்கியர்களால் (கஜினி) சோமநாதபுரம் தாக்கப் பட்டபோது அதை எதிர்த்து உள்ளூர் மன்னன் பிரம்ம தேவன் சார்பாக போரா பரீத் போரிட்டு மடிந்ததாகவும், அவரது நினைவாக அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படையெடுப்புக்கு ஆளான சோமநாதபுரம் நகரைச் சேர்ந்தவர்களே கஜினியின் படையெடுப்பைப் பற்றி அப்போதும், அதையடுத்த சில நூற்றாண்டுகளிலும் எத்தகைய கருத்தும் கண்ணோட்டமும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கண்டோம். அப்படியானால் இந்த ‘’ஆயிரம் ஆண்டு அவமானம்’’ என்ற கதை எப்போது உருவானது? இந்தக் கதையின் முதல் ஆசிரியர்கள் வெள்ளையர்கள்.
பிரிட்டிஷ் காமன்ஸ் அவை விவாதம்:
“சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த கஜினி முகமது அந்தக் கோயிலின் சந்தனமரக் கதவுகளை கொண்டு சென்று விட்டான். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பிரிட்டிஷ் ராணுவம் கஜினிக்குச் சென்று அங்கிருந்து அந்தக் கதவைக் கொண்டு வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று 1842-ல் அறிவித்தார் லார்டு எல்லன்பரோ.
(1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்கு 15 ஆண்டுகள் முன்னர்தான் அந்த விவகாரம் தொடங்குகிறது என்பதையும், இந்து-முசுலீம் மன்னர்களையும் மக்களையும் பிளவுபடுத்துவது அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வாழ்வுக்கே அவசியமானதாக இருந்தது என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.)
ஆப்கானை வெல்ல முடியாத பிரிட்டன் இக்கதவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஆப்கான் மீதான தனது மேலாண்மையைக் காட்டலாம்; அதே நேரத்தில் இந்துக்களையும் கவர முடியும் என்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.
இந்நடவடிக்கையை ஆட்சேபித்த காமன்ஸ் அவையின் எதிர்த் தரப்பினர், “இது முசுலீம்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதில் முடியும்; மேலும் லிங்க வழிபாடு போன்ற காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளுக்கு நாம் துணை போவதாக அமையும்” என்று கூறினர்.
இந்த எதிர்ப்பை முறியடிக்க எல்லன் பரோவின் ஆதரவாளர்கள் கீழ்க்கண்டவாறு வாதிட்டார்கள்:
“முசுலீம் மன்னர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாடு, அந்தத் துன்புறுத்தும் நினைவுகளால் ஆயிரம் ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது. இந்துஸ்தானத்தின் மீதான மிக மோசமான ஆக்கிரமிப்பின் சின்னமாக அந்தச் சந்தனக் கதவுகள் இந்துக்களின் நினைவில் பதிந்திருக்கின்றன. எனவே இந்நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும்” என்றனர்.
கஜினியின் படையெடுப்பு – கொள்ளைக்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய நூல் பிரிஷ்டா என்ற பாரசீகக் கவிஞன் 17-ம் நூற்றாண்டில் எழுதியது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.
11-ம் நூற்றாண்டில் சிஸ்தானி எழுதியதைக் காட்டிலும் பிரிஷ்டாவின் கட்டுக்கதை மிகக் கவர்ச்சிகரமானது. சோமநாதபுரத்தில் மிகப் பிரம்மாண்டமான கடவுள் சிலை இருந்ததாகவும், அதன் வயிற்றைத் தன்னுடைய வாளால் கஜினி முகமது கிழித்தவுடன் அதிலிருந்து தங்கமும் நகையும் கொட்டத் தொடங்கியதாகவும் புராணப் புளுகுகள் கணக்கில் அளக்கிறார் பிரிஷ்டா.
ஒரு வழியாக இந்த ‘’வரலாற்று ஆதாரத்தை’’ வைத்துக் கொண்டு கஜினியிலிருந்து இரண்டு கதவுகளைத் தூக்கிக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ராணுவம். வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள். அதற்கும் சோமநாதபுரத்திற்கும் சம்பந்தமில்லை. எனவே அவை ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. ‘இந்துக்களின் நினைவில் பதிந்த அந்த சந்தனக் கதவுகளை’ இப்போது கரையான்கள் தின்று கொண்டிருக்கும்.
காங்கிரசும் கஜினி முகமதுவும்:
இந்திய தேசிய விடுதலை இயக்கம் மறைமுகமாக முன்வைத்த இந்து தேசிய அரசியல் சோமநாதபுரம் விவகாரத்தைப் பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
குஜராத்தைச் சேரந்த கே.எம்.முன்ஷி சோமநாதபுரம் கோயிலை திரும்பக் கட்டுவதை தேசிய இயக்கத்தின் கடமையாக முன்னிறுத்தினார். இவர் கல்கி பாணியிலான ‘வரலாற்று’ நாவல்கள் எழுதிக் கொண்டிருந்தவர். முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியத்தை பிரச்சாரம் செய்த பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் நாவலைப் படித்து, அதன் தாக்கத்தில் அதே பாணியில் “ஜெய சோமநாதா’’ எனும் நாவலை இவர் 1927-ல் எழுதி வெளியிட்டார். “சோமநாதா – அழிவில்லா ஆலயம்” என்ற இவரது இன்னொரு நூல் 1843-ல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையில் நடைபெற்ற விவாதக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.
“இசுலாமிய ஆக்கிரமிப்புக்கு முந்தைய ஆரியப் பெருமிதத்தை மீட்பதே நமது லட்சியம்” என்று பகிரங்கமாகப் பேசி வந்த முன்ஷி மத்திய அமைச்சரும் ஆனார். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் வேலையாக இந்திய அரசாங்கம் சோமநாதபுரம் கோயிலைக் கட்டி 1951-ல் ஜனாதிபதி ராசேந்திர பிரசாத்தை வைத்துக் குடமுழுக்கு நடத்தியது.
“இந்திய அரசாங்கம் இதுவரை செய்த, செயது கொண்டிருக்கிற அனைத்துப் பணிகளைக் காட்டிலும் இந்தக் கோயிலைக் கட்டியதுதான் முக்கியமானது; ஏனென்றால் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம் குளிரச் செய்யும்” என்றார் அமைச்சர் முன்ஷி.
இப்படியாக ஒரு வரலாற்றுப் புரட்டு மதரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டதுடன், “அரசு அங்கீகாரம் பெற்றது” என்ற முத்திரையும் அதன்மீது இடப்பட்டு விட்டது.
பாடநூல் புரட்டு!
மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் வரலாற்றுப் பாடநூலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறோம். ரோமிலா தபாரின் ஆ்ய்வுடன் இதனைப் பொருத்திப் பார்க்கவும்.
“கஜினி முகமது ஒரு முஸ்லீம் வெறியன். சோமநாதபுரத்தில் அவன் சிவபெருமான் சிலையைத் துண்டு துண்டாக உடைத்தான்; குவியல் குவியலாக வைரங்களையும், நகைகளையும் கொள்ளையடித்தான். ஏராளமான பேரைப் படுகொலை செய்தான்”
“கஜினி முகமதுவிம் படையெடுப்பின் விளைவாக பஞ்சாப், முஸ்லீம்களின் கைக்குப் போய் விட்டது, இந்திய நாடிடன் பொருளாதார, இராணுவ வல்லமைக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.”
‘மதவெறியன்’, பஞ்சாப் போன கதை இவையெல்லாம் பிரிஷ்டாவின் கட்டுக் கதையையும், முன்ஷியின் நாவலையும் வைத்து எழுதப்பட்டவை. இந்த ‘வரலாற்றை’ப் படித்த படிப்பாளிகள் மதவெறிக்கு ஆளாவதில் என்ன வியப்பு!
***
ராளமான நூல்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆதாரம் காட்டி இந்த ஆய்வுரையை நிகழ்த்தியிருக்கிறார் ரோமில்லா தபார். ஆனால் எந்தக் கோயிலை பாதுகாப்பதற்காக ஒரு முசுலீம் உயிர் துறந்தாரெனக் கல்வெட்டு இருக்கிறதோ அதே கோயிலிலிருந்து முசுலீம் மக்களுக்கெதிரான நாடு தழுவிய கலவரத்தைத் துவக்கி வைக்கிறார் அத்வானி.
இத்தகைய வரலாற்றுப் புரட்டு என்பது இந்துமத வெறியர்களால் மட்டும் செய்யப்படுவதல்ல. தத்தம் அரசியல் தேவைக்கு ஏற்ப இசுலாமிய, கிறித்தவ மதவெறியர்களும், இன வெறியர்களும், சாதி வெறியர்களும் இதையே தான் செய்கிறார்கள். கட்டபொம்மன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மன்னன் அல்ல – கொள்ளைக்காரத் தெலுங்கன் எனகிறது ஒரு தமிழின வெறிப் பத்திரிகை; ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார்; கான்சாகிபுவா மருதநாயகமா என்ற தகராறு கமலஹாசனுடைய படத்தின் வசூலுக்கு வலிமை சேர்க்கிறது. வரலாற்றின் பெயரால் சாதி, மத, இனவாதிகள் நடத்தும் இந்த மோதலை முறியடிக்க வேண்டுமானால் நமக்குத் தேவை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம். அந்தக் கண்ணோட்டமிருந்தால் நாம் கஜினியையும் புரிந்து கொள்ளலாம்; கார்கிலையும் புரிந்து கொள்ளலாம்.
மன்னனின் பெருந்தன்மை
கஜினி முகமதுவால் தோற்கடிக்கப்பட்ட ஆனந்த பாலன் என்றும் மன்னன் கஜினி முகமதுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை அல்பரூனி தனது நூலில் மேற்கோள்  காட்டுகிறார்.
“உங்களுக்கெதிராகத் துருக்கியர்கள்  கலகம் செய்வதாக அறிந்தேன். நீங்கள் விரும்பினால் 500 குதிரைப் படையினர், 10,000 காலாட்படையினர், 100 யானைகளுடன் நான் உங்கள் உதவிக்கு வருகிறேன். அல்லது இரண்டு பங்குப் படையுடன் என் மகனை அனுப்புகிறேன்.  ஏனென்றால் நான் உங்களால் தோற்கடிக்கப்பட்டவன், நீங்கள் வேறொருவனால் தோற்கடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை”
முஸ்லீம் மக்களை ‘பாபரின் வாரிசுகள்’ என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஆனந்தபாலனின் வாரிசுகள் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுவார்களா?
- அஜித்                                                                                                                 Courtosy : வினவு

ஞாயிறு, 16 மார்ச், 2014

கவியரசு கண்ணதாசன் காலமானபோது கலைஞர் எழுதிய கவிதை

என் உயிர்த்தோழன்!
(தனது நெருங்கிய நண்பன் கவியரசு கண்ணதாசன் காலமானபோது கலைஞர் எழுதிய கவிதை …)
என் இனிய நண்பா!
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத் துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்?
தென்றலாய் வீசியவன் நீ – என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததே யன்றி
அணைந்த தீபமாக ஆனதே யில்லை நண்பா!
கண்ணதாசா, என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ! உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கிவிட்டதே!
கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ,
அமைதிப்பால் அருந்தித் தூங்கிவிட!
இயக்க இசை பாடிக் களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனை தான் நீ கொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை!
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் – சுவைப்
பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை,
தித்திக்கும் கவித் தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்று விட்டாய்!
அட்டா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங் காலத்துப் பயிர் பயிர் நம் தோழமை யென
ஆயிரங் கோடி கனவுகள் கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு!
இந்த அதிசயத்தை விளைவிக்க – உன் பால்
இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்!
எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?
எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெலாம் நிறைந்தாய்!
கனமான இயதத்துடன்…
உன் நண்பன்
மு. கருணாநிதி.

திங்கள், 10 மார்ச், 2014

உளவியல் சொல்லும் உண்மைகள்

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.
4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

நன்றி: ஆஷிக் முஹைதீன் முஹம்மத் அபூபக்கர்.

யாருக்கு நிலம் சொந்தம்?

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, "இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார்.

துறவி கேட்டார்,

"இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார்.

"அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அந்த செல்வந்தன்.

"ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி.

செல்வந்தன், "அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை''என்றான்.

"இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா'' எனக் கேட்க,

"அவர் என் அப்பாவாக இருக்கும்'' என்றான் செல்வந்தன்.

"நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?'' என்று கேட்ட துறவிக்கு,

அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி, "அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்'' என்றான் அந்த செல்வந்தன்.

துறவி சிரித்துக்கொண்டே, "நிலம் இவர்களுக்குச் சொந்தமா..? அல்லது, இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா?

என் நிலம்,என் சொத்து,என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர்.
அவர்கள் இப்போது இல்லை.ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது.இது என்னுடையது எனக்கூறும் நீயும்,ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய்.
உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்'' என்று கூறி முடித்தார் துறவி.

செல்வந்தனோ தன் அறியாமை எண்ணி தலை குனிந்தான்.

உலகில் எதுவும் நிலையானது அல்ல.கவுரவம்,பணம்,சொத்து,பதவிஎல்லாம் ஒரு நாள் நம்மை விட்டுச் சென்று விடும்.
அதனால்,அவற்றின் மீது அளவுக்கு மீறி பற்று வைக்க கூடாது.மனதிலிருந்து அகந்தையை தூக்கி எறியுங்கள். அன்புடன் எல்லா உயிர்களுக்கும் சேவை செய்யுங்கள்.
நாம் எல்லோரும் சமம் என்பதை உணருங்கள்.

வியாழன், 6 மார்ச், 2014

அறியவை 33

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

செவ்வாய், 4 மார்ச், 2014

கும்பகோணம் - அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு ஏற்படுத்தும் அதிர்வலைகள்


​-ஸ்ரீலங்காவிலிருந்து 
பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்
இலக்கியங்களால் இதயங்களை இணைப்போம்’ என்ற தொனிப்பொருள் வாசகத்தோடு அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாடு - 2014 பெப்ரவரி 14,15,16களில் கும்பகோணம் நகரில் இனிதே நடந்து முடிவுற்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் எந்த நாட்டில் நடந்தாலும் இலக்கிய உலகிலும் பண்பாட்டு மரபுகளிலும்  அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் செல்வாக்குகள் பற்றி நாம் மீளாய்வு செய்வதன் மூலம் அடுத்த எமது திட்டங்களை இன்னும் வலிமையானதாகவும் பயனுள்ளதாகவும் கட்டியெழுப்ப முடியும்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் ஒரு தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை என்ற குறைபாடும் மாநாட்டு முடிவுகள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்ற குறைபாடும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். மாநாடுகளுக்கிடையிலான இடைவெளி காலவரையறையின்றி நீடிக்கும் போது மாநாடுகளினால் எதிர்பார்க்ப்படும் பலன் நிறைவடைவதில்லை. எனினும் கும்பகோண மாநாடு இந்த குறைபாடுகளுக்கு பதில் தரக் கூடிய விதத்திலும் முஸ்லிம் தமிழ் இலக்கிய மாநாட்டு வரிசையில் கவனயீர்ப்பைப் பெறத்தக்க மாநாடு என்று கூறக் கூடிய விதத்திலும் - இம்மாநாட்டு வரிசைக்கு - சிறப்புச் சேர்த்திருப்பதாகக் கருதலாம்.

இன்னொரு வகையில் நோக்கும் போது மாநாட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்ட கும்பகோணம் நகரம் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரது அபிமானத்தையும் பெற்றுக் கொண்டது என்பதோடு அங்கு வாழும் முஸ்லிம்களின் கல்வி, பண்பாடு, விருந்தோம்பல் கடந்த சில தசாப்தங்களாக கும்பகோணம் மக்கள் பெற்று வரும் பல்துறை வளர்ச்சி என்பவை எல்லோரது அவதானத்தையும் கவரத்தக்கதாக அமைந்திருந்தது மற்றொரு சிறப்பம்சமாகும்.

கும்பகோணத்திற்கான எமது பிரயாணம் 13ம் திகதி ஆரம்பமானது. மாலையில் திருச்சி நகரை சென்றடைந்த போது இலங்கைக் குழுவினரையும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வருகை தர இருந்த குழுவினரையும் வரவேற்பதற்கு மாநாட்டு அங்கத்தவரகள் சிலர் காத்திருந்தனர். மாலை 5 மணியளவில் எமது வாகனம் திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கிப் புறப்பட்டது. கும்பகோண மாநாட்டு குழுவினரின் அன்பும் உபசாரமும் திருச்சி விமான நிலையத்தில் இருந்தே ஆரம்பமாகியதை எங்களால் நன்றாக அவதானிக்க முடிந்தது.

தி.மு.க வின் புதிய தலைவர் தளபதி ஸ்டாலின் தலைமையில் மாநில மாநாடு மறுநாள் நடக்க இருந்ததால் திருச்சி நகரம் ஒரு பரபரப்பான கட்சிக் கொண்டாட்ட சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது. ஆயிரக்கணக்கான தி.மு.க கொடிகளும் போஸ்டர்களும் பதாதைகளும் நகர் முழுக்க நிறைந்திருந்தன. இரவூ 7.30 மணியளவில் தஞ்சாவூரைக் கடந்து கும்பகோணத்தை அடைந்தோம்.

அங்கு சென்ற வெளிநாட்டுக் குழுவினரை பேராசிரியர் அப்துஸ்ஸமது தலைமையிலான இலக்கியக் கழகக் குழுவினரும் மாநாட்டு அனுசரணை அமைப்பான கும்பகோண கிஸ்வா அங்கத்தவர்களும் அன்போடு வரவேற்று சிறந்த உபசரிப்பை வழங்கினர். அன்றிரவு வருகை தந்த வெளிநாட்டவர்களுக்கான விருந்துபசாரம் 9 மணியளவில் ஆரம்பமாகியது. விருந்துபசாரம் நடைபெற்ற போது கிஸ்வா அமைப்பைப் பற்றியும் இலக்கியக்கழக மாநாட்டு நடவடிக்கைள் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறப்பட்டது. ஊர்த்தலைவர்களும் பிரமுகர்களும் உலமாக்களும் கதீப்மார்களும் அந்த விருந்துபசார வைபவத்தில் கலந்து கொண்டனர். மாநாட்டுக் குழுவினர் ஒவ்வொருவராக விசாரித்து தமது அன்பையும் பரிவையும் விருந்தோம்பல் உணர்வையும் வெளிப்படுத்துவதில் உற்சாகத்துடன் செயல்பட்டனர்.

மாநில மாநாடாக ஆரம்பித்த எட்டாவது இலக்கிய மாநாடு எவ்வாறு அனைத்துலக இலக்கிய மாநாடாக பரிணமித்தது என்பது விருந்துபசார ஒன்று கூடலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இருக்கின்ற வசதி வளங்களுக்கு ஏற்ற விதத்திலும் மாநாட்டின் முக்கிய பணிகள் சரிவர நிறைவேறக்கூடிய விதத்திலும் திட்டமிட்டு இந்த இலக்கிய மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்று எமக்கு தெரிவிக்கப்பட்டது. கவிக்கோ அப்துர் ரஹ்மானும் பேராசிரியர் அப்துஸ்ஸமதும் பேராசிரியர் எம். நஜிமுத்தீனும் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹானும் எல்லோரையும் வரவேற்று 3 நாள் நிகழ்வூகளைப் பற்றியும் மாநாட்டின் நோக்கங்களைப் பற்றியும் விளக்கப்படுத்தினர். கிஸ்வா அமைப்பு கும்பகோணத்தில் நடத்திவருகின்ற பொதுநல சேவைகள் பற்றியும் கல்வித் தொண்டுகள் பற்றியும் கிஸ்வா அமைப்பின் பிரமுகர்கள் சில விளக்கங்களை வழங்கினர். அதன் பின்னர் ஒரு பெரிய விருந்துபசாரம் காத்திருந்தது. இவ்வாறுதான்13ம் திகதி நிறைவடைந்தது.

கும்பகோணம் எப்படிப்பட்ட நகரம் என்பது பற்றி நான் அதிகம் தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் வந்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் அது ஒரு சிறிய நகரம் அல்லது ஒரு பெரிய கிராமம் என்று கூறிக் கொண்டிருந்ததை நான் அவதானித்தேன். ஆனால் நேரில் பார்த்த போது கும்பகோணம் தமிழ் நாட்டில் வளர்ச்சி அடைந்துவரும் நகரங்களில் ஒன்று என்பது தெளிவாகத் தெரிந்தது. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கும்பகோணம் கோயில்களுக்கு பேர்போன நகரம். எந்தப் பக்கம் திரும்பினாலும் வானத்தைத் தொடுவது போல் நிமிர்ந்து நிற்கும் கோயில்களும் அதைச் சூழ பரந்து கிடக்கும் குளங்களும் கும்பகோணத்தின் தவிர்க்க முடியாத பிரதான அடையாளங்களாகும்.

இதற்கிடையில் அங்காங்கே பல பள்ளிவாசல்கள் கும்பகோணத்தில் முஸ்லிம்களின் இருப்பையும் செல்வாக்கையும் எடுத்துக் காட்டுவது போல் விளங்குகின்றன. மக்கள் தொகையில் இரண்டாவதாக முஸ்லிம்களும் அதற்கு அடுத்தவர்களாக கிறிஸ்த்தவர்களும் இங்கு வாழ்கின்றனர். முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். உருது மொழி பேசும் முஸ்லிம்களும் இங்கு வாழ்கின்றனர். 14ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையை ஹனபி பள்ளிவாசல் ஒன்றில் நிறைவேற்றினோம். காலையில் இருந்து விருந்துபசாரங்களுக்கு குறைவே இருக்கவில்லை. பழகுவது வந்தவர்களை ஆதரிப்பது என்ற விடயங்களில் எந்தக் குறையும் நிகழ்ந்து விடக்கூடாது என்று மிகுந்த கவனத்தோடு மாநாட்டு அமைப்பாளர்கள் நடந்து கொண்டனர். அத்துடன் இந்த விருந்துபசார நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஏனைய கும்பகோண மக்களிடத்திலும் ஒரு பணிவையும் பண்பாட்டையும் அவதானிக்க முடிந்தது.
ஒரு ஊரை அல்லது நகரை மையப்படுத்தியதாக பண்பாட்டு மாநாடுகள் நடக்கும் போது அந்த ஊரின் வாசமும் வளமும் ஒத்துழைப்பும் விரைவாக எமது கவனத்திற்கு வந்து சேர்கின்றன. பொதுவாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் என்ற தலைப்பில் பெரிய அளவில் மாநாடுகள் நடத்தப்படும் போது தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர் மலேசிய மக்களிடத்திலும் இலக்கியாவதிகள் எழுத்ததாளர்கள் மத்தியிலும் ஏன் அரசியல்வாதிகள் மத்தியிலும் இனந்தெரியாத ஆர்வமும் குதூகலமும் ஒன்றிணைந்து கொள்கின்றன. எவ்வளவு பணம் செலவு செய்தும் இந்த மாநாட்டு நிகழ்வூகளை பார்ப்பதற்கு எல்லோருக்குமே ஒரு ஆர்வம் இருக்கின்றது. இது இந்த மாநாட்டுத் தொடர்களுக்கு இருக்கின்ற ஒரு ஜனரஞ்சக அடையாளம் என்று கூறத் தோன்றுகின்றது. மக்கள் சார்ந்ததாக இந்த மாநாடுகள் வெற்றி பெறுவதற்கும் மக்கள் தரும் இந்த உந்துதலும் ஆர்வமும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது.
இத்தகைய மாநாடுகள் இலக்கியத்தின் பேரில் ஒன்றுகூட்டப்பட்டாலும் அவை இதயங்களை இணைப்பதாக இருப்பது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் ஒரு பொதுப் பண்பாக இருந்து வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடந்த இவ்வகையான மலேசிய மாநாட்டில் இந்த விடயம் அடிக்கடி வலியூறுத்தப்பட்டது. உலகின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்களை ஓரிடத்தில் சந்திப்பதற்கும் அளவளாவுவதற்குமான ஒரு பெரிய வாய்ப்பை இந்த மாநாடுகள் உருவாக்குகின்றன. தமிழ் நாட்டில் நடந்தாலும் தமிழ் நாட்டிற்கு வெளியே நடந்தாலும் தமிழக முஸ்லிம்களோடு இலங்கை முஸ்லிம்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பை இந்த மாநாடுகள் வழங்குகின்றன.

மாநாட்டு நிகழ்வுகளுக்கு வெளியே நடைபெறும் சந்திப்புக்களும் கலந்துரையாடல்களும் அரசியல் உட்பட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைவதை நான் அநேக மாநாடுகளில் அவதானித்திருக்கின்றேன். கும்பகோணம் மாநாடு அந்தக் குறைபாட்டையும் விட்டுவைக்கவில்லை என்று கூற வேண்டும். இலக்கியவாதிகளோடும் இலக்கிய ஆர்வலர்களோடும் ஊர் மக்களோடும் அந்நிய தேசத்தவர்கள் என்ற வகையில் கலந்துறவாடுகின்ற ஒரு நல்ல சந்தர்ப்பத்தை கும்பகோணம் மாநாடும் சிறப்பாக வழங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சிகள் அஸ்சூர் புறவெளிச் சாலையில் இருக்கும் ஹாஜி இ.எஸ்.எம் பக்கீர் முஹம்மது வளாகம் டி.எஸ் மகாலில் 4 மணியளவில் ஆரம்பமானது. அது மாநாட்டின் துவக்க விழாவாக அமைந்திருந்தது. பச்சைக் கம்பள வரவேற்பும் பக்கீர் பைத் குழுவினரின் இசையூம் ஒன்று கலந்ததாக மாநாடு மாலை 5 மணிக்கு ஆரம்பமானது. மாநாட்டு கீதம் இசைக்கப்பட்டு மாநாட்டுக் கொடி ஏற்றுதலுடன் அடுத்த கட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வுகளில் பிரதான சொற்பொழிவாளர்களில் தஞ்சாவூர் பல்கலைக்கழக முனைவர் ம. திருமலையூம் எழுத்தாளர் விமர்சகர் ஆ. மார்க்சும், குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் க. அன்பழகன், சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி. குரூஸூம் பங்கேற்றனர். அந்த மாநாட்டு முன்னிலை வரிசையை அலங்கரித்தவர்களில் கெப்டன் என்.ஏ அமீர் அலி, ஜெ.எம் சாலி ஆகியோரும் அடங்கியிருந்தனர். துவக்க விழாவின் தலைமை உரையை இலக்கியக் கழகத்தின் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் நிகழ்த்தினார். சுகவீனமுற்றிருந்த நிலையையும் பொருட்படுத்தாது கவிக்கோ வழமைபோல் கம்பீரமாகத் தனது உரையை மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களை விளக்கும் வகையில் வழங்கினார்.

கும்பகோண மாநாட்டிற்கு ஒரு சிறப்புத் தொனிப்பொருள் தரப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகள்’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டு ஆய்வரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. கவிக்கோ முஸ்லிம் இலக்கியப் பரப்பில் இசைப்பாடல் மரபுகள் பற்றியும் முஸ்லிம்களின் பண்பாட்டில் இசை பெற வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் விரிவாகப் பேசினார்.  இசை தொடர்பாக வெளியிடப்படும் கருத்துக்கள் முன்வைக்கப்படும் சமய ஆதாரங்கள் பற்றி அவர் கேள்வி எழுப்பியதோடு பண்பாட்டு வளர்ச்சியில் இசையின் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டியது காலத்தின் தேவை என்ற கருத்தை பல்வேறு ஆதாரங்களுடனும் சபையில் விரிவாக விளக்கினார்.
பல்வேறு இனங்களைஇ இதயங்களை இணைக்கும் சக்தியுள்ள இசைத் துறை வளர்ச்சியில் முஸ்லிம்களின் கவனம் திரும்ப வேண்டியதன் அவசியம் மாநாட்டு நிகழ்வுகளில் தெளிவாகப் புலப்பட்டது. துவக்க விழா மேடை நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக 15 அல்லது 20 இளைஞர்களின் இஸ்லாமிய கீதத்துடனான பக்கீர் பைத் முஸ்லிம்களின் பாரம்பரிய இசை மரபுகளை நவீன மேடை உத்திகளோடு சபை முன் அலங்காரமாகக் கொண்டுவர முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருந்தது.

கவிக்கோவின் தலைமை உரை  நடைபெறவிருந்த மாநாட்டுத் தொனிப்பொருளுக்கான ஒரு மகுடமாகவூம் முன்னுரையாகவும் அமைந்திருந்தது என்று எவ்வித தயக்கமும் இன்றிக் கூறலாம். இதுவொரு நீண்டகால அவாவும் தேவையுமாக இருந்ததை முஸ்லிம் இசை மரபுகளோடும் குறிப்பாக அர்வி பிராந்தியத்தின் இசையோடும் முஸ்லிம் இசைப்பாடல்களின் மரபுகள் பற்றிய ஆய்வுப் பொருளோடும் இருந்த கனவூகளின் நிறைவு போல் இந்த மாநாடு அமைந்திருந்தது. இதுவரை நடைபெற்றுள்ள மாநாடுகளிலும் எப்போதுமே மாநாட்டு அமைப்பாளர்கள் இசைக்கு ஒரு முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளார்கள். மாநாட்டின் இடை நிகழச்சியாகவோ மாநாட்டு நிகழ்வூகள் நிறைவு பெற்ற பின்னர் இரவு நேர நிகழச்சியாகவோ இசைக்கும் கலை நிகழ்வூகளுக்கும் இடம் அளிக்கப்படுவது ஒரு மரபாக இருந்துள்ளது. 1979ம் ஆண்டு பேராசிரியர் எம்.எம் உவைஸ் நடத்திய மாநாட்டின் தொடக்க விழா காயல் ஷெய்க் முகம்மத் பாடிய  ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரே’ என்ற பாடலுடன் தான் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. அதன் பின்னர் ரவூப்ஹக்கீமின் தலைமையில் இலங்கையில் நடத்தப்பட்ட மற்றொரு சர்வதேச மாநாட்டில் கலை நிகழ்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. நூர்தீனின் இசைக்குழுவினரின் இஸ்லாமிய கீத நிகழ்ச்சியூம் புனித பூமியிலே’ நாடகமும் எனது நினைவூகளில் பதிந்துள்ளன.

இலங்கை மாநாட்டில் புனித பூமியிலே நாடகம் தனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சியையூம் கவலையையும் முதல்நாள் விருந்துபசார வைபவத்தின் போது மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவர் மிகுந்த உருக்கத்தோடு விபரித்ததையும் இங்கு நினைவூ கூரலாம். பண்பாட்டுத் துறையில் விரிவாக கால் பரப்ப வேண்டிய தேவையைப் பற்றி நாம் பேசி வருகின்றோம். உணர்வுப் பாலங்களை அமைப்பதற்கும் இதயங்களை இணைப்பதற்கும் முஸ்லிம் சமூகம் சார்ந்த நடப்புக்களை தேச எல்லைகள் கடந்து இன எல்லைகள் கடந்து கொண்டு செல்வதற்கும் இத்தகைய பெரிய மாநாடுகளின் பண்பாட்டு நிழ்ச்சிகள் பெரும் பணி ஆற்றுவதாகவே கருத வேண்டும்.

அ.மார்க்சும் ஜோ.டி. குரூசும் துவக்க விழா உரையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த விடயங்களை முஸ்லிம்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் அறிவுறுத்துவதற்கும் முயன்றதை என்னால் அவதானிக்க முடிந்தது. பம்பாயில் தனக்கு ஏற்பட்ட ஒரு அவலத்தின் போது முஸ்லிம் பெண்கள் தமக்கு வழங்கிய பேருதவியை ஒரு கதையாகக் கூறி குரூஸ் இந்த விடயங்களை விளக்க முற்பட்டார். எதிர்மறையான அல்லது கோபாவேசமான போக்குகளை விட முஸ்லிம்கள் தங்களுக்கே உரித்தான பரந்த மனப்பான்மை விருந்தோம்பல் பண்பாட்டு முதுசொம்கள் போன்றவற்றினூடாக தமது எல்லைகளை விரிவுபடுத்த முடியூம். இதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அ. மார்க்ஸ் தமது கருத்;தை வெளியிட்டார்;;. இந்த வகையில் இசை பெரும் பணியாற்றக்கூடிய ஒரு துறை என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்தத் துறைகளில் ஏற்கனவே முஸ்லிம்களின் சாதனை பெரும் வழிகாட்டியாக இருப்பதும் அன்று துவக்க விழா நிகழ்வுகளில் எடுத்துக் காட்டப்பட்டது.

15ம் திகதி மாநாட்டின் முதுகெலும்பான ஆய்வரங்கு நிகழ்வூகள் ஆரம்பமாகின. 2 அரங்கங்களாக வகுக்கப்பட்டுக் கட்டுரைகள் படிப்பதற்கு வாய்பளிக்கப்பட்டது. அநேகமான கட்டுரைகள் முஸ்லிம் இசை மரபுகளையும் இசைப் பாடல்களையும் தழுவியதாக அமைந்திருந்தமை மாநாட்டின் நோக்கத்தை நிறைவேற்ற உதவியதாகக் கருதலாம். வழமையான மூத்த ஆய்வாளர்கள் வரிசை ஒரு புறமாகவும் வளர்ந்து வரும் ஆய்வாளர்களின் கட்டுரைகளும் கருத்துக்களும் மற்றொருபுறமாகவும் இந்த அரங்குகளில் முன்வைக்கப்பட்டன. கணிசமான பொதுமக்கள் கருத்தரங்குகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். எனினும் இளைஞர்களின் தொகை போதுமானதாக இருக்கவில்லை என்று சில நண்பர்கள் என்னிடம் கூறினர். மேலும், பவர் பொயின்ட் விளக்கக் காட்சிக்குத் தேவையான வசதிகள் இல்லாமல் இருந்தது ஒரு குறைபாடாகவே தெரிந்தது.

படிக்கப்பட்ட கட்டுரைகளில் தீவிரமான, ஆழமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்த கட்டுரைகள் எத்தனை என்பது கேள்விக்குறியாக இருக்கலாம். மாநாடுகளில் அதுவும் இவ்விதமான பன்னாட்டு மாநாடுகளில் அத்தகைய கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்பதை நாம் அறிவோம். எனினும் பொதுவாக இங்கு வாசிக்கப்படும் கட்டுரைகளின் தரம் பற்றிய விடயங்கள் சில சந்தர்ப்பங்களில் ஆழமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதை இங்கு கூறாமல் இருக்க முடியாது. இலங்கையில் இருந்து 12 கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டதாகவும் அதில் இருந்த சில கட்டுரைகள் மாநாட்டின் தொனிப்பொருளை சரியாகப் பிரிதிபலித்ததோடு அதேவேளை மாநில மாநாட்டை இன்னும் விரிவுபடுத்தும் அவாவை அக்கட்டுரைகள் தூண்டியதாகவூம் பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துஸ்ஸமது மாநாட்டின் முக்கியமான சந்தர்ப்பங்களில் சபையினருக்கு எடுத்தரைத்தார். அத்தோடு மாநாட்டு சிறப்புத் தொனிப் பொருளில் எத்தனை கட்டுரைகள் வந்து சேரும் என்று தமக்கிருந்த தயக்கத்தை மாநாட்டுக்காக எழுதப்பட்ட 110 கட்டுரைகள் தீர்த்து வைத்ததாகவும் மாநாட்டு பிரமுகர்கள் தகவல்களை வழங்கினர்.

எவ்வாறாயினும்  இசையை பிரதிபலிக்கக் கூடியதாக குறிப்பிடத்தக்க சில கட்டுரைகள் அங்கு வாசிக்கப்பட்டது மாத்திரம் அல்ல முஸ்லிம் இசைப் பாடல் மரபில் தேர்ச்சி பெற்ற பல அனுபவ சாலிகளின் உரைகளையும் அங்கு  கேட்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இசை ஆய்வாளர் ந.மம்மது,சென்னைப் பல்கலைக்கழக இந்திய இசைத் துறைத் தலைவர் முனைவர் பிரமிலா குருமூர்த்தி மற்றும் இஸ்லாம் வளர்த்த இசைத் தமிழ் நூல் ஆசிரியரான இரா. திருமுருகன் பற்றிப் பேசிய இரு கட்டுரையாளர்கள் என்று இந்த மாநாட்டு தொனிப்பொருளோடு அமைந்த கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தற்கலை மு. பஷீர், ஏம்பல் தஜம்மல் முஹம்மத்,பேராசிரியர் நஜிமுத்தீன், தத்தோ இக்பால், முனைவர் முஹம்மது நாஸிர், கெப்டன் என். ஏ. அமீர் அலி,பேராசிரியர் சாயிபு மரைக்கார் தம்பதியர், கலந்தை. பீர் முஹம்மத், முனைவர். தி. மு அப்துல் காதர்,முனைவர் ராஜா முஹம்மத், இளைய இசை முரசு ஈ.எம் பாஷா இசை ஆய்வாளர் மம்மது என்று எனக்குத் தெரிந்த பல நண்பர்களை காண முடிந்ததோடு பல புதிய இலக்கிய இசை ஆர்வலர்களையூம் அறிந்து கொள்ள எனக்கும் பலருக்கும் மாநாடு நல்ல வாய்ப்பை வழங்கியது.

காரைக்கால் ஏ. எம். தாவூத், நாகூர் எஸ். எம். ஏ. காதர், புகழ் பெற்ற பாடகி சரளா போன்றோருக்கு இசைப் பங்களிப்புக்காக வாழ்நாள் சேவை விருதுகள் வழங்கப்பட்டன. இசை முரசு ஈ.எம் ஹனிபா அவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சத்துடன் கூடிய உமறுப்புலவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்த மாநாட்டின் மறக்க முடியாத நிகழ்வாகும். இவ்வாறான பெரிய விருதுகளை இலங்கை, மலேசிய மாநாடுகள் கூட வழங்கி அவரது இசைச் சேவையை கௌரவித்திருக்க முடியும். மூத்த இசை அறிஞர் விருது குமரி அபூபக்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  வாழ்நாள் விருது வழங்கி இஸ்லாமிய கீத பாடகி சரளாவும் அங்கு பாராட்டப்பட்டார். மற்றும் பல இசைக் கலைஞர்களுக்கும் இலக்கிய கர்த்தாக்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. காரைக்கால் ஏ.எம் தாவூத் எஸ்.எம்.ஏ காதர்,இசை முரசு நாகூர் ஹனிபா, இசை மணி யூசுப், பி.கே. கலீபுல்லாஹ் போன்ற பாடகர்களின் பெயர்கள் அரங்கு முழுக்க அடிக்கடி எதிரொலித்தன. கவி கா. மு. ரீப் அரங்கமும் புலவர் ஆபிதீன் அரங்கமும் இசைப் பாடல் துறைக்கு பங்களிப்புச் செய்தவர்களின் பெருமையை மீண்டும் மீண்டும் எதிரொலிப்பதாக அமைந்திருந்தன. நாகூர் சலீமின் இசைப் பாடல் பங்களிப்புப் பற்றியூம் புலவர் ஆப்தீனின் இஸ்லாமிய கீத பாடல்கள் பற்றியூம் விரிவாக கருத்தரங்குகளில் உரையாடப்பட்டன. இது தவிர தமிழ் நாட்டுச் சூழலில் வெவ்வேறு வகைகளில் இசை மரபுகள் மக்கள் வாழ்வில் பயிலப்பட்டு வருவதைப் பற்றிய பல தகவல்கள் மாநாட்டில் பரிமாறப்பட்டன. இவ்வாறு பார்க்கும் போது ஆய்வரங்குகள் எடுத்துக் கொண்ட தொனிப் பொருளை முடிந்தவரை நிறைவு செய்ய முற்பட்டன என்றே கூற வேண்டும்.

இஸ்லாமியக் கீத இசைக்கு நவீன வானொலி நிலைய ஒலிபரப்பு வசதிகளை வழங்கி இஸ்லாமியக் கீதத்தை காற்றலை மூலம் உலகத்திற்குக் கொண்டு சென்ற பெருமை இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்சிப் பிரிவுக்கு கிடைக்க வேண்டிய தனிப்பெருமையாகும். என்ற இவ்வசனத்தை எனதுரையில் ஒரு சந்தரப்பத்தில் நான் பேசிய போது அரங்கம் முழுக்க கரகோஷத்தால் நிறைந்தது. 1960, 70 காலங்களில் காரைக்கால் தாவூத் பி.கே கலீபுல்லாஹ், எஸ்.எம்.ஏ காதிர், ஈ.எம். நாகூர் ஹனிபா, காயல் ஷெய்க் முகம்மது போன்றோரது பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பி அவர்களின் செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்கு உதவிய இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு  மீதான நன்றியைத் தமிழக முஸ்லிம்கள் அன்று அந்த சபையில் வெளியிட்டமை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகும். இசைப் பங்களிப்பாளர்களின் பெயர்களோடு சில அரங்கங்கள் அங்கு காட்சி அளித்த போதும் இலங்கை வானொலி முஸ்லிம் பிரிவில் முஸ்லிம் இசை வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களின் பெயர்களும் இந்த அரங்கத்தை அழகுபடுத்தத் தகுதி பெற்றவையாகும் என்றும் எனது உரையில் நான் கூறினேன். குறிப்பாக முன்னாள் இஸ்லாமிய நிகழ்ச்சிப் பகுதிப் பணிப்பாளர் பாத்காண்டே இசைப் பட்டதாரி எம். எச் குத்தூஸ் பேரில் ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் நான் அங்கு குறிப்பிட்டதையும் அந்த சபை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. காரைக்கால் தாவூதின் இசையை வானலைகளுக்கு முதலில் கொண்டு சென்ற பெருமை இலங்கை முஸ்லிம் நிகழ்சிப் பிரிவூக்கு உண்டு என்று நான் கூறிய ஒரு வரியையூம் மக்கள் கரகோஷம் செய்து வரவேற்றனர்.

இவ்விதமான வானொலி தொலைக்காட்சி மற்றும் நவீன சாதனங்கள் இன்றி முஸ்லிம் இசையை உலகளவுக்குக் கொண்டு செல்வது எவ்விதத்திலும் சாத்தியமற்றது அத்தகைய வாய்ப்பு இன்று இலங்கையிலும் இல்லை தமிழ் நாட்டிலும் இல்லை என்று நான் வலியூறுத்திப் பேசிய போது அரங்கம் அதிர மீண்டும் கரகோஷம் எழுந்தது. இத்தகைய விடயங்களில் மக்கள் எவ்வளவு நன்றியுணர்வோடும் புதிய ஊடகத்துறைகளின் வருகையை எவ்வளவு ஆர்வத்தோடு விரும்புகிறார்கள் என்பதை இவற்றின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

மாநாட்டின் மொத்த நிகழ்வுகளும் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும் முஸ்லிம்களின் பண்பாட்டின் பரப்பிற்கும் வலிமை சேர்ப்பதாக இருந்தது என்பதை இங்கு வலியூறுத்துவது கடமையாகும். மலேசிய பல்கலைக்கழத்தில் மிகப் பிரமாண்டமாக மலேசியாவே திரும்பிப் பார்க்கும் அளவு மாநாடு நடைபெற்ற போதும் மாலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதில் எந்தவித ஏற்பாடுகளும் அங்கு இருக்கவில்லை. 2அல்லது 3 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் இத்தகைய மாநாடுகளில் மாலை நேரங்களில் முஸ்லிம்களின் பண்பாட்டின் பரப்பை உலகுக்கு அறிவிக்கக்கூடிய நிகழச்சியாக அமைப்பது ஒரு கடமையாகக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் நினைவுக்கெட்டிய காலம் முதல் நம்மோடு பிரிக்க முடியாத உறவாக வளர்ந்து வரும் இப்பண்பாட்டு முதுசொம்களின் சொந்தக்காரர்களை அவர்களின் நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகப்படுத்துவதும் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குவதும் அவர்களில் மூத்தவர்களுக்கு வாழ்நாள் சேவைக்கான விருதுகள் வழங்கி அவர்களை கௌரவிப்பதற்கும் முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.

ஈ.எம் நாகூர் ஹனீபாவிற்கு வழங்கப்பட்ட விருது அந்தளவு கௌரவம்மிக்கது. சீறாப்புறாணச் செம்மல் குமரி அபூபக்கர் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதும் மறக்க முடியாத கௌரவத்தை நமக்கு நினைவூட்டுகின்றது. சீறாப்புராணத்தை கர்நாடக இசையில் தேன் ஒழுகப் பாடுவதில் இன்றும் அவர் இளமைத் துடிப்புடன் இயங்குவதை மாநாட்டில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் அவதானிக்க முடிந்தது.

மாநாட்டு இறுதி நாள் நிகழச்சிகளில் அனைவரது கவனத்தையும் அன்றைய இசைக் கச்சேரி கவர்ந்து கொண்டது. தாஜ் நூரின் அன்பே இஸ்லாம்’ இறை இசை நிகழ்ச்சி  இளைஞர் உலகத்திற்கு இஸ்லாமிய பக்தி இசையை கொண்டு செல்வதற்கான புதிய பரிசோதனை இசை வடிவமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வித மாநாடுகளில் எவ்வகையிலும் எதிர்பார்க்க முடியாத பிரமாண்டமான இசைக் கச்சேரியை அன்று கும்பகோணம் உலகுக்கு வழங்கியது. நாங்கள் வெளி நாட்டவர்களுக்கான சிறப்பு மண்டபத்தில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது புயலைப் போல் ஒரு குழுவினர் உணவுத் தட்டுக்களுடன் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அணிந்திருந்த நீல நிற பெனியன்களின் முன்பகுதி அன்பே இஸ்லாம்என்ற கொட்டை எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர்களில் அநேகர் முஸ்லிம் அல்லாதவர்கள். தாஜ்நூரின் இசையில் பாட இருப்பவர்கள் இவர்கள் என்று பின்னர் நான் அறிந்து கொண்டேன்.

அந்தக் குழுவில் இருந்தவர்களில் சுப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீனிவாசனும் ஒருவர். தொலைக்காட்சி மூலம் அவரை நான் நன்கு அறிவேன். அவர் சூஃபி மற்றும் கவ்வாலி ரக உச்சஸ்தாயி பாடல்களைப் பாடுவதில் வல்லவராக விளங்குபவர். ஏர். ஆர். ரஹ்மானின் இசையில் பின்னணி பாடியிருப்பதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது. அன்பே இஸ்லாம் குழுவில் அவரைக் கண்டதும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். அவரை சந்தித்து சூஃபி இசையில் பாடிய அவரது சில பாடல்களை நினைவூபடுத்தி அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் திறமையைப் பாராட்டினேன். இன்னும் சிறிது நேரத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி றெஹானாவும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் இன்னும் சில முஸ்லிம் பெண்மணிகளும் கடைசி நாள் இசை அரங்கில் பாட இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. றெஹானா ஒரு பாடகியும், வளர்ந்து வரும் இசையமைப்பளரும் ஆவார். இந்தியத் தொலைக்காட்சிகளில் அவர் வழங்கிய இசைப் பேட்டிகள் தொடர்பாக நானும், எனது மனைவியூம், அங்கிருந்த வேறு சில பெண்களும் எங்களின் கருத்துக்களை றெஹானாவுடன் பகிர்ந்து கொண்டோம்.

மறுநாள் 9 மணியளவில் டி.எஸ் மஹால் முற்றவெளியில் தாஜ்நூரின் அன்பே இஸ்லாம் பக்தி அல்லது சூஃபி இசை அரங்கு ஆரம்பமானது. மிகவும் உயர்தர மற்றும் சக்தி வாய்ந்த ஒலி இயந்திரங்களோடும் பிரமாண்டமான மேடை அமைப்புக்களோடும் 40-க்கும் மேற்பட்ட கலைஞர்களோடும் அந்தப் பரிசோதனை இசை விழா தொடங்கியது. சில நிமிடங்களில் அந்த இசை நிகழ்வின் அறிவிப்பாளராக மேடையில் பி.எச் அப்துல் ஹமீத் தோன்றினார். ஏ.ஆர் ரஹ்மானின் இசைத் தொழிநுட்பப் பிரிவில் 14 வருடங்கள் தாஜ்நூர்  பணியாற்றியவர். இன்று 10க்கும் அதிகமான படங்களில் இசை அமைத்திருப்பதோடு இஸ்லாமிய இசை மரபில் புதியதொரு மாற்றத்தை உருவாக்குவதற்காக ஒரு இசைக் குழுவோடு உலகை வலம்வர காத்திருப்பவர்.

அந்தப் பிரமாண்ட இசையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தவர் தாஜ்நூர். ஆனால் தாஜ்நூர் உட்பட அந்த முழு இசை அரங்கையும் தனது பண்பட்ட அறிவிப்புத் திறமையாலும் கண்ணியமான கம்பீரமான அறிமுகக் குறிப்புக்களாலும் அப்துல் ஹமீத் அரங்கை சிறப்பான முறையில் வழிநடத்தினார். அப்துல் ஹமீதின் அறிமுக உரைகளும் ஒவ்வொரு பாடகரையும் பாடலையும் அறிமுகப்படுத்தும் போது அவர் வழங்கும் புதிய தகவல்களும் ரசிகர்களை மேலும் மேலும் தாஜ்நூரின் இசையோடு ஒன்றிணைத்தன. தாஜ்நூரும் அப்துல் ஹமீதும் அந்த மேடையின் பிரமாண்டமான நட்சத்திரங்களாக அன்று மக்கள் உள்ளத்தில் பிரகாசித்தனர். பீ. எச். அப்துல் ஹமீத் அன்று தனது முழு அறிவிப்பு ஆளுமையையூம் சரளமாகப் பயன்படுத்தியது பெருமையாகவே இருந்தது. குமரி அபூபக்கரின் சீறாப்புராண பாடலுக்கு தாஜ்நூர் தனது பிரமாண்டமான இசைக் கருவிகளோடு உயிரூட்டியது ஒரு பிரமிப்பளிக்கும் அனுபவமாகும். அப்துல் ஹமீத் அபூபக்கரை அறிமுகப்படுத்தியது இன்னொரு சிறப்பம்சமாகும். திக்குத் திகந்தமும் கொண்டாடியே’ என்ற பாடல் இசை முரசின் குரலுக்கு மட்டுமே சொந்தமானதாகும். அது மாற்று இன சகோதரர்களையூம் எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்பதற்கு அன்பழகனின் திக்குத்திகந்தமும் பாடல் நல்ல உதாரணமாக அமைந்திருந்தது.

இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற ஈ.எம். நாகூர் ஹனீபாவின் பாடலை குத்தூஸ் பாடியதில் இருந்துதான் அன்பே இஸ்லாம் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்தப் பாடல் பழைய பாணியை முற்றாகப் பிரதிபலித்தது. ஆனால் நாம் எதிர்பார்த்த அந்தப் பாடலுக்குரிய இசை கைவிடப்பட்டு தாஜ்நூரின்  நவீன கருவிகளின் இசைச் சங்கமத்தின் பக்தி ஒலி மேடையை அதிர வைத்துக் கொண்டிருந்தது. குத்தூஸ் சளைக்காமல் பாடினார். பக்கீர் பாவாக்களும் தாஜ் நூரின் ஜாஸ் போன்ற அதிரடியான இசைக்கு ஈடுகொடுத்து தமது திறமைகளை வெளிப்படுத்தினர். உருது கவ்வாலி (பக்கீர் வகைப்பாடல்) குழுவினரும் தமது உருதுப் பாடல்களுடன் இதில் பங்கேற்றனர். அன்பே இஸ்லாம்  அதன் தலைப்பிற்கு ஏற்ப இசையினால் இதயங்களை ஒன்றிணைத்தது. தாஜ் நூரின் இந்தப் பணி தொடர வேண்டும் என்பது தான் நாம் அன்று எடுத்த முடிவாகும். உலகளவிற்கு அந்த இசையைக் கொண்டு செல்ல அவரிடம் திட்டங்கள் இருப்பது பற்றியும் இது ஒரு ஆரம்ப அல்லது முன்னோடி நிகழ்ச்சி என்றும் தாஜ்நூர் அன்று  அறிவித்தார்.

இவ்வாறு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அதன் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டை திட்டமிட்டது போல் முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகளின் ஆய்வுக்கும் இரசனைக்கும் விருந்தாக்கியது பெருமைக்குரியதொன்றாகும். அதே நேரம் முஸ்லிம்களின் நிகழ்த்துக் கலைகள் சிலவற்றையாவது அன்று மேடையேற்றி அந்தக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தமை இன்னொரு வகையில் பாராட்டப்பட வேண்டிய நிகழ்வாகும். தாஜ்நூரின் இசை முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்தியில் புதிய இஸ்லாமிய இசைக் கோலத்தை அறிமுகப்படுத்தும் ஒரு பாரிய பணியை எமக்குக் காட்டியது. இந்த வகையில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை; கிஸ்வா அமைப்பு கும்பகோணமும் இணைந்து முஸ்லிம் உலகம் கவனத்தில் கொள்ளக்கூடிய ஒரு மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. இது இன்னும் தொடரப்போகும் பல மாநாடுகளுக்கு மற்றொரு முன்னோடி மாநாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.
​*************************************************************************************​
News From :
Yembal Thajammul Mohammad