💓💓💓💓💓💓💓💓💓💓
💠 வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு நபிகள் கோமான் ஈருலக இரட்சகர் ஏந்தல் நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முதல் படைப்பு என்றும்,அல்லாஹுத்தஆலா அவர்களின் ஒளியையே முதலில் படைத்தான். இந்த ஒளியிலிருந்தே அனைத்துப் படைப்பினங்களையும் வெளியாக்கினான் என்றும்,
சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறி வருகின்றனர்.
💠 ஸஹாபாக்கள் காலம் முதல் இதுநாள்வரை இக்கருத்து அறிஞர்களால் உரைக்கப்பட்டும்,வரையப்பட்டும் வந்துள்ளது.
நபிகள் நாயகத்தின் வரலாற்று நூற்களிலும், ஹதீதுப் பெரு நூற்களிலும் திருமறை விரிவுரைகளிலும், மௌலிது நூற்களிலும் இக்கருத்து முக்கியத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ளது.
💠 இறைவனின் முதல் படைப்பு தண்ணீர்தான் படைக்கப்பட்டது என்று கூறுபவர்கள் குர்ஆன் ஷரீப், ஹதீஸ்களை, இமாம்களின் கருத்துகளை தெளிவாக விளங்கிக்கொள்ளாததே அடிப்படை காரணமாகும் எனவே முதல் படைப்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தான், அல்லாஹ்வின் ஒளியிலிருந்து படைக்கப்பட்ட முதல் ஒளியே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்களின் ஒளியிலிருந்துதான் எல்லாம் படைக்கப்பட்டன என்பதை தக்க ஆதாரத்துடன் நிறுவியுள்ளோம். கவனமாகப் படியுங்கள்! உண்மையை தெளிவீர்கள்!
💎 அல்லாஹ்வின் தூதரே!
என் தாயும் என் தந்தையும் தங்களுக்குஅர்ப்பணமாகட்டும்!
அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஜாபிரே! அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான்.
அந்த ஒளியை அல்லாஹ் நாடியவாறு வல்லமை கொண்டு சுற்றக் கூடியதாக ஆக்கினான். அந்த நேரத்தில் லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) இருக்கவில்லை, பேனா இருக்கவில்லை, சொர்க்கம், நரகம், வானவர்கள்,வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனிதன் (என்று யாரும்) இருக்கவில்லை. அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்க எண்ணிய போது அந்த ஒளியை நான்கு பகுதியாகப் பிரித்தான்.
முதல் பகுதியிலிருந்து பேனாவைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) ஐப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து அர்ஷைப் படைத்தான். பின்னர் நான்காம் பகுதியை (மீண்டும்) நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியில் அர்ஷைச் சுமப்பவர்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து குர்ஷியைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய வானவர்களைப் படைத்தான்.பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.அதன் முதல் பகுதியிலிருந்து வானங்களைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து பூமிகளைப் படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து சொர்க்கம், நரகத்தைப் படைத்தான்.பின்னர் நான்காம் பகுதியை நான்கு பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியில் முஃமின்களின் பார்வையின் ஒளியைப் படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து அவர்களின் உள்ளங்களின் ஒளியைப் படைத்தான். அதுதான் அல்லாஹ்வை அறிதலாகும். மூன்றாம் பகுதியிலிருந்து மனிதனின் ஒளியைப் படைத்தான். இதுதான் தவ்ஹீத் என்ற லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதாகும். (நான்காம் பகுதியைக் கொண்டு ஏனைய படைப்புகளைப் படைத்தான்)
(நூல் : கஷ்புல் கஃபா, பாகம்:1, பக்கம் :265)
1⃣ நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து பேரொளியும்,தெளிவும் உள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது.
(அல்குர்ஆன் - 5: 15)
2⃣ அல்லாஹ் வானங்கள் பூமியின் பிரகாசமாக இருக்கின்றான். அவனது பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கின்றது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டிருக்கிறது).
3⃣ நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு) சாட்சியாகவும்,நட்செய்தி கூறுபவராகவும்,அச்சமூட்டி எச்சரிக்கைசெய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும் அல்லாஹ்வின் அனுமதியின்படி (ஜனங்களை நீர்) அவன்பால் அழைப்பவராகவும் ஒளி வீசும் (மணி) விளக்காகவும் (இருக்கின்றீர்கள்).
(அல்குர்ஆன் - 33 : 45,46)
4⃣ அல்லாஹ்வுடைய ஒளியை தம் வாய்களால் (ஊதி) அணைத்து விடலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஒளி வீசும்படி) பூர்த்தியாகவே ஆக்கி வைப்பான்.
(அல்குர்ஆன் - 61 : 8)
5⃣ இவர்கள் தங்கள் வாய்களைக்கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப்போவதில்லை
(அல்குர்ஆன் - 9 : 32)
♦ குறிப்பு : முதல் திருவசனத்தில் “நூர்“ என்ற சொல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். வெளிச்சமில்லாமல் புத்தகத்தை படிக்க முடியாதது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இன்றி திருக்குர்ஆனை விளங்க முடியாது.
♦ இரண்டாவது திருவசனத்தில் அல்லாஹ்வுடைய “நூர்“ என்று சுட்டிக்காட்டப்படும் வாக்கியமும்,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். காரணம் அல்லாஹ் ஒப்பு உவமைகளை விட்டும் பரிசுத்தமானவன். ஆனால்,இத்திருவசனத்தில் அல்லாஹ்வின் “நூர்“ - (ஒளி)க்கு உவமை கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கு குறிக்கப்படும் நூர் - ஒளி - றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும்.
♦ மூன்றாவது திருவசனத்தில் ‘சிறாஜுன் முனீர்‘ பிரகாசிக்கும் தீபம் என்று நாயகமவர்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் மற்றுமொரு இடத்தில் சூரியனையும் “சிறாஜுன் முனீர்“ என்று குறிப்பிட்டுள்ளான். - ஒளி என்பது தானும் வெளியாகி ஏனையவற்றையும் வெளியாக்குவதற்கு கூறப்படும். சூரியன் தானும் பிரகாசித்து சந்திரன், நட்சத்திரங்கள்,உள்ளிட்ட பல்வேறு கிரகங்களையும்,தாரகைகளையும் பிரகாசிக்கச் செய்கின்றது.
இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரகாசிக்கும் பேரொளியாக இருப்பதுடன், நபிமார்கள் ஸஹாபாக்கள்,வலிமார்கள் உள்ளிட்டோரை பிரகாசிக்கச் செய்பவர்களாகவும் விளங்குகின்றார்கள்.
♦ நான்காவதும், ஐந்தாவதும் திருவசனங்களில் குறிப்பிடப்படுகின்ற “நூர்“ ஒளி என்பது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே குறிக்கும். காபிர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அழித்து விட பகீரதப்பிரயத்தனம் செய்தனர். ஆனால் அல்லாஹுத்தஆலா பெருமானாரின் அனைத்துப் பணிகளையும் தடையின்றி பூர்த்தியாக்கினான்.
♦ முதல் திருவசனத்தில் வரும் “நூர்“ என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிக்கும் என்று தப்ஸீர் ஜலாலைன் விளக்கம் சொல்கிறது.
“தப்ஸீர் ஜலாலைன்“ இன் விரிவுரைத் தப்ஸீரான தப்ஸீர் ஸாவியில் “நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நூர் - ஒளி என்று குறிப்பிடக் காரணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பார்வைகளை ஒளி பெறச்செய்கிறார்கள். மேலும்,வெற்றியின் பக்கம் அவற்றுக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும்,புறப்புலன்களால் பார்க்கப்படும் காட்சிக்கும், அகப்புலன்களால் அறியப்படும் அறிவுக்கும்,நபியவர்கள் அஸலாக - மூலமாக விளங்குகின்றார்கள் என்றும் வரைந்துள்ளார்கள்.“
♦ இதே கருத்தையே தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக்,தப்ஸீர் காஸின் உள்ளிட்ட அநேக தப்ஸீர்கள் கூறுகின்றன. இவற்றுள் தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவி,தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக் ஆகிய தப்ஸீர்கள் அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
💠 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் எதார்த்தம் “ஒளி“ என்பதை ஹதீது நூற்கள் தெளிவாக பறைசாற்றுகின்றன.