சனி, 26 ஜூலை, 2014

Face Book என்ற பெயர் சொல்லை ஏன் மொழி பெயர்க்க வேண்டும்


  • Senapathy Thirugnanasambandam ஒரு ஐயம் எனக்கு ?

    பெயர்ச்சொல்லை(facebook) ஏன் மொழி பெயர்க்க வேண்டும் ?

    inbox / draft போன்றவைகளுக்கு தேவை உள்ளது...
    9 hrs · Edited · Like
  • இராஜ. தியாகராஜன் ஃபேஸ்புக் என்பது ஒரு வணிகச் சொல். பயன்படுத்தும் தமிழன்பர்கள் மாற்றாக ஒரு தமிழ்ச் சொல் பயன்படுத்தினர். உங்களைப் போல பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முகநூல் அமைப்பாளர்களே பெரும்பான்மைப் பயன்பாட்டினால் அதனைத் முதன்மைத் தமிழ்மொழி பெயர்ப்பாக ஏற்றுக் கொண்டனர். சஞ்சிகை என்கிற செங்கிருதப் பெயர்ச் சொல்லைக் கூட பத்திரிக்கை என்றும், நாளிதழ் என்றும் மாற்றிய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். டீ/ சாயா இந்தப் பெயர்ச் சொல்லைக் தேநீர் என்று பயன்படுத்திய போதில் கூட நிறைய எதிர்ப்புகள். 

    ஆப்பிள் என்கிற ஆங்கிலச் சொல்லின் வேர் கூட ape என்கிற வாலில்லா குரங்கின் வாயின் வண்ணத்தால் வந்தது. எனவே குருதியின் (அரத்தம்) வண்ணமாக இருப்பதால் ஆப்பிளை அரத்தி என்று சொல்கிறோம் புதுவையில். பிடித்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். தமிழிலக்கணப் புணர்ச்சியின் படி கோயில் தான் சரி; கோவில் சரியில்லைதான்; ஆனால் இத்தனை பேர்கள் பயன்படுத்துகையில் அதுவும் சரிதான். தேளின் பன்மை தேட்கள் ஆகாது; ஆனால் நாளின் பன்மை நாட்களாகவும், வாளின் பன்மை வாட்களாகவும், ஆனதை நாம் ஏற்றுக் கொண்டோம். இயன்றவரை புதுப்புனைவுகளை ஏற்பதில் தடையிருப்பது சரியில்லை. 

    மரபியலிலான செய்யுளோத்துகள் மட்டும் கொண்ட தமிழ்க் கவிதை இலக்கியத்தில், இன்று புதுப்பாக்கள், குறும்பாக்கள், துளிப்பாக்கள் இவையும் வந்தன. தமிழை நேசிக்கும் அனைவருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். 

    ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு ஐயம்: ஆங்கிலேயர் வாயில் வழங்க இயிலாமையால், வைத்துவிட்டார்கள் என்பதற்காக ப்ராப்பர் நவுன்களான தஞ்சாவூரை டாஞ்சுர் என்றும், பறங்கிப்பேட்டையை போர்ட்நோவா என்றும், கன்னியாகுமரியை கேப் கேமரின் என்றும், திருவனந்தபுரத்தை ட்ரிவாண்ட்ரம் என்றும், தரங்கம்பாடியை ட்ரங்க்பார் என்றும் சொன்ன்னதை ஏற்றுக் கொண்டிருந்தோம். பின்னர் முயன்று பழைய பேர்களை வைக்கவில்லையா? முதலில் சைக்கிளை மிதிவண்டி என்றும், பஸ்ஸை பேருந்து என்றும், காரை சீருந்து என்றும், ப்ளேனை ஆகாயவிமானம்/ வானூர்தி என்றும் பயன்படுத்திய போதில் சிரிக்காதவர் எவர்?
    9 hrs · Edited · Unlike · 6
  • இராஜ. தியாகராஜன் இன்னும் கொல்லம், கோழிக்கோடு, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை என்று நிறையச் சொல்லலாம். நான் அதிகம் இப்படிப்பட்ட கருத்தாடல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை நான் முகநூலி வரும் கொஞ்ச நஞ்ச நேரத்தைக் கூட அஃது வெகுவாகத் தின்றுவிடுகிறது.
    9 hrs · Like

பொறுமை

பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது.
உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை.
பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும்.
. பொறுமை என்றால் இணைப்புணர்வு.
எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அவசரமும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்.
நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை.
பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது.
காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு.
உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை தேவை .
பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை.
பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்.
நீ வாழ்வை உள் வாங்குபவனாக மாறும் அந்த கணத்தில் உனக்கு யாரும் போதனை தர தேவை இருக்காது .
நீயே ஒரு புத்தாவாக மாறி இருப்பாய் .
--- ஓஷோ ---

அந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள் !


கவிமாமணி பேராசிரியர் தி.மு அப்துல் காதர்

********************************
தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹியாத் விரல்கள் !

செடார் மரக் கிளைகளில்
தொட்டில்கள்
தொங்கும் கல்லறைகள் !

காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .

மானபங்கப்படும்
மனிதநேயத்திற்கு
உத்தரீயம் கொடுக்கவும்
அமெரிக்க சகுனியிடம்
உத்தரவு கேட்கும்
கவுரவர் சபை
பஞ்ச பாண்டவர்களாய்
வளைகுடா நாடுகள் !

கிப்லாவை
டாலருக்கு மாற்றிக் கொண்டு
முசல்லாவை விற்று
அமெரிக்க அழகுச் சிலை வாங்கியதால்
மினாராக்கள்
யூதர்களுக்கு சஜ்தா செய்கின்றன !

ஆப்கன் விதைஎடுத்து
அமெரிக்கா பயிரிடும்
கொடிமுந்திரித் தோட்டக்
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின்
முழிக்கும் விழிகள் !

அமெரிக்க - இஸ்ரேல்
காக்டெயில் விருந்தின்
ஐஸ்க்ரீம் மகுட உச்சியில்
செர்ரிப் பழமாய்
பாய்மார்களின்
தாய் மார்க்காம்புகள் !

அலிப்
எழுத்துப்போல சேராது
தனித்திருக்கும்
அரபு நாடுகளே ...

ஒன்றாய் நீங்கள்
ஒன்றுக்கிருந்தால்
மூத்திரத்தில் மூழ்கிப்போகும்
யூத - அமெரிக்கக்
கள்ள உறவில் தோன்றிய
கர்ப்பக் கழிவு !

அஸாக் கோல்களால் ஆன
சந்தூக்குகள்
அமெரிக்காவில் கிடைக்கலாம் !
ஆனால்...
மூமின் உடல்களை
அடக்கம் செய்ய
ஓரடி மண்கூட
உங்களிடம் இருக்காது !

உங்கள் பாலஸ்தீன
கபர்க்குழி ஒன்றிலிருந்து
கடிதம் ஒன்று
கண்ணிமை உதடு திறக்கிறது !

" பாலஸ்தீன விடுதலை இயக்கப்
பதினாறு வயதுப்
பச்சிளம் பிறை நான் !
போரில் வெடித்து சிதறிய
விரலால்
இரத்தம் தொட்டு எழுதுகிறேன் !

வீரர்களே ...
தாயக மீட்சிக்காக
தீன் நெறி ஆட்சிக்காக
என் கையத்துப் போனாலும்
என் மெய்யத்துப் போனாலும்
நான் மையத்து ஆனாலும்
என் நிய்யத்துப் போகாது !

மூமின்களே ...
ஆமீன்களுக்காக மட்டும்
உயரும் கரங்கள்
புனித
ஆயுதங்களுக்காக உயரட்டும் !

விடுதலை விதைகளே...
நீங்கள் எப்போதாவது
களத்தில்
நிராயுதபாணியாக நின்றால்
ஆயுதம் இல்லையே என
அவதியுற வேண்டாம் !

என் சவக்குழியைத் தோண்டுங்கள்
என் கபாலத்தைக் கேடயமாக்குங்கள்
என் கைகால் எலும்புகளை
ஆயுதமாக்குங்கள்
என் எலும்புகளுக்கு
இரண்டாம் முறையும்
போரிடும் வாய்ப்பு தாருங்கள்
இன விடுதலைக்காக... ! "

" நமது முற்றம் "
செப்டம்பர் 2006 இதழில் எழுதிய கவிதை !
************************************************

செவ்வாய், 22 ஜூலை, 2014

கர்பலாவே காட்சியாக!


கர்பலாவில் ...

கர்பலா போர்க்கள கூடாரத்தில் தங்கி இருந்த
இமாம் ஹுசைனாரின் நிறைமாத 
கர்ப்பிணி மனைவி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அழகுக் குழந்தையை தன் கைகளில் ஏந்தி 
" அப்துல்லாஹ் " என பெயர் சூட்டி
குழந்தையின் காதில்
" பாங்கு " சொல்லிக் கொண்டிருந்தார் இமாம் ஹுசைன் ( ரலி ).
அந்த நேரத்தில் எதிரி எய்த அம்பு ஒன்று
குழந்தையின் கழுத்தில் பாய்ந்து ....
அதன் உயிரைப் பறித்தது !

கர்பலா போர்க்களக் கொடுமைகளை நான் இப்படியெல்லாம் எழுதி இருக்கிறேன் .
காட்சியாக இப்போதுதான் பார்க்கிறேன் !

யா அல்லாஹ்....
உன்னிடம் முறையிட
என்னிடம் வார்த்தைகளில்லை !
ஹஸ்ஸான் இப்னு தாபித் ( ரலி ) சொன்னதைப்போல ...
" நான் சொல்லாற்றலில் ஏழை !
ஏழை எப்போதும் தோற்று விடுகிறான் !"
அதனால்...
நான் எதுவும் சொல்லப்போவதில்லை !

நாங்கள் காணும் காட்சிகள் சொற்பம் !
அனைத்தையும் காண்பவன் நீ !
ஏன் ? எதற்கு ? என்று
அறிந்தவன் நீ !

ஆத்திரப்பட்டு
ஆதங்கப்பட்டு
அவசரப்பட்டு
யூதர்களின் அழிவுக்கு
நாங்கள் கொஞ்சம் போல்
துஆ செய்து விடுவோமோ
என்று அச்சமாக இருக்கிறது !

அதனால் ...
கடல் அளவு
கை ஏந்தி
உன்னிடம் நாங்கள்
பிரார்த்தித்ததாக
ஏற்றுக்கொள் !

இறைவா !
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு
கருணை காட்டு !
யூதர்களுக்கு
உண் கருணையின்
எதிர் புறத்தை சாட்டு !

நான் ஒரு பாலஸ்தீனியனாக பிறந்திருந்தால்..!

நான் ஒரு பாலஸ்தீனியனாக 
பிறந்திருந்தால்...
இந்நேரம் 
ஷஹீதாகி இருப்பேனே...!
கேள்வி கணக்கே இல்லாமல் 
சுவனம் போயிருப்பேனே !
அதற்குமுன்னால் 
பத்து யூதனையாவது 
சாவூருக்கு அனுப்பி இருப்பேனே !

போர்க்களச்சாவு என்ன
எல்லோருக்குமா வாய்த்து விடுகிறது ?

இறைவா ...
முஸ்லிம்களெல்லோரும்
சகோதரர்கள் என்று
சொல்லப்பட்ட மார்க்கத்தில்
அரிசி விலையையும்
காய்கறி விலையையும்
சிந்தித்து சிந்தித்தே
சிந்தை சேதாரம் ஆகிப்போனவர்கள்
மத்தியில்
ஒரு சகோதரனுக்காக ...
தலை சிதறி
செத்துப்போன
அவன் மகளுக்காக
கண்ணீர் சிந்தும்
இரக்கத்தையாவது
எனக்குத் தந்தாயே...
நீ கருணையுள்ளவன் !

" அடுத்தவர்மீது
அன்போ இரக்கமோ
இல்லாதவர் மீது
இறைவனின்
அன்போ இரக்கமோ
ஏற்படுவதேயில்லை "
என்று சொன்ன
உத்தம நபிகளின்
உம்மத்தாய் என்னை
ஆக்கி வைத்த
இறைவா ....
நீ
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் !

ரத்தம் இல்லாத யுத்தம் ....

-அபூஹாஷிமா

" பச்சைப் பறவைகளாய் 
சுவனச் சோலையில் 
சுற்றிப் பறப்பவர்கள் 
இஸ்லாத்திற்கான
வீரப்போரில் இறப்பவர்கள் !"
உம்மி நபி சொன்ன இந்த
உயர் வாழ்த்துக்காக
வானம் செனறு கொண்டிருக்கிறார்கள்
வாஞ்சையுள்ள
பாலஸ்தீன் முஸ்லிம்கள் !
குர் ஆன் சுமக்கும் வயதில்
குண்டுகளை சுமந்து சாய்ந்த
சின்னமலர்ச் செண்டுகள் !
உடலெல்லாம் குருதி
உயிரெல்லாம்
நம்பிக்கையின் சுருதி
இறுதி மூச்சிலும்
கலிமா கூறி
ஈமானின் சுருமா
பூசிக் கொண்ட
மூமின் பெண்கள் !
" முடம் உடலுக்கென்றாலும்
எதிரிக்கில்லை இங்கே இடம் "
யூதர்களின் குண்டு மழையில்
தலை நனைத்து
மரணத்தால் உயிர் துடைத்துக் கொண்ட
முதியவர்கள் என
கொத்து கொத்தாய்
உருவப்பட்ட உயிர்கள்
மொத்த மொத்தமாய்
வீசி எறியப்படுகின்றன
சுவனச் சோலைக்குள் !
எறிபவர்கள் ...
நரகத்தின் நெருப்பு வயிற்றுக்கு
நிரந்தர உணவாகப்போகும்
யூத விறகுகள் !
ஆயிரத்தி நானூறு
ஆண்டுகளுக்கு முந்திய
இஸ்லாத்தின் தியாக வரலாறு
மீண்டும்
மறுபதிப்பாகிக் கொண்டிருக்கிறது
காஸாவில் !
காஸாவிலும்
கரையிலும்
உடல் கிழிக்கப்பட்ட
யாசிரின் தோழர்களே !
ஏவுகணைகளால்
சாவுகணைகளை பிரசவித்த
சுமையாவின் தொப்புள் கொடிகளே !
போரையே
போர்வையாகப் போர்த்திக் கொண்டிருக்கும்
உங்களுக்கு
எதிரிகள் வீசும்
ஏவுகணைகளெல்லாம்
சிக்கன் குனியா கொசுவைப்போல !
போக்களச் சாவு
புதிதாய்ப் பிறக்கும் சிசுவைப்போல !
பத்ருப்போரும்
உஹதுப்போரும்
பறித்துபோகாத உயிர்களா ?
மூத்தப் போரில்
மூச்சை இழந்து
சுவனக் காற்றை
சுவாசிக்கச் சென்ற
சஹாபாக்கள் சரிதையை
நான் சொல்லவா ?
ஹம்சாவின் ஈரல்
அறுக்கப்படவில்லையா ?
ஜாபரின் உடல் சிதைக்கப்படவில்லையா ?
அந்த உத்தமர்கள் ஊதிவிட்ட
உயிர் காற்றில்தானே
இஸ்லாத்தின் வெற்றிக்கொடி
உயரே உயரே பறந்தது !
மடியும் வேளையிலும்
குடிக்க நீரின்றி துடித்தவர்
குருதியைக் குடித்துத்தானே
தீன் பயிர்
திசையெங்கும் முளைத்தது !
அன்று ...
சஹாபாக்களின் வறுமை
வாழ்விலிருந்தது !
உயிருக்கு விலைபோகாத
ஆண்மை
வாளிலிருந்தது !
அதனால் ...
அல்லாஹ்வின் வாள் என
பெயருமிருந்தது !
இன்று ...
" அல்லாஹ்வின் அப்து " என்ற
பெயர் இருக்கிறது !
பெட்ரோலில் ஊறும் பணம்
கோடி கோடியாய் குவிகிறது !
உள்ளத்தில் மட்டும்
இனத்துக்கே இல்லாத
பேடித்தனம் பல்லிளிக்கிறது !
சகோதரனின்
சாவு சத்தம் கேட்டும்
சத்தமின்றி
அமெரிக்கக் காலடியில்
சரிந்து கிடக்கும்
சாம்ராஜ்ஜிய சாக்கடைகள் !
சாகாவரம் கேட்டு
வெள்ளையரின் காலைக்
கழுவத் துடிக்கும்
ராஜ அவமானங்கள் !
சோரத்திற்கு ஓரம் போனவர்களை
காறித்துப்பிவிட்டு
தீரத்தோடு போராடும்
பாலஸ்தீனப் போராளிகளே ....
நாய்கள் வீசிய
நாசகார குண்டுகளின் கூச்சலை விட
உச்சமாகக் கேட்கிறதே
" அல்லாஹு அக்பர் " என்று
முழக்கமிடும்
உங்கள் நெஞ்சுக் கூட்டின் சப்தம் !
ஆனாலும் ...
என் அருமைத் தோழர்களே ..
உரிமைப் போராளிகளே ...
ஆயுதமே இல்லாமல்
அணுப்பேய்களோடு மோதலாமா ?
தலை போனாலும் தப்பில்லை
தலைப்பாகை தப்பித்தால் போதுமென்று
நினைக்கலாமா ?
சாதிப்பதைவிட
சாவதிலேயே
சாதனை நிகழ்த்துகின்ற
உங்கள் சடலங்களை
எண்ணி எண்ணி
செத்துப் போகிறதே
எங்களது ரத்தம் !
சுவனத்தின் கதவுகள்
மண்ணறையிலும் உங்களுக்கு
திறந்தே இருக்கின்றன !
ஈராக்கும்
பாலஸ்தீனும்
நரகமாகவே இருக்கின்றன !
அழிவதைப் பார்த்தும்
அழவேத் தெரியாத
உங்களைப் பார்த்து
ஆவி துடிக்குது எங்களுக்கு !
பக்கத்திலிருந்த
பாபர் மசூதியையே
பாதுகாக்கத் தெரியாத
பேதைகள் எங்களால்
கடற்கரை ஓரத்தில் நின்று
கோஷம் போடுவதைத் தவிர
வேறென்ன செய்து விட முடியும் ?
களத்துக்கே வர வக்கில்லாத அரபிகளையும்
முக நூலில் வீரம் காட்டுகின்ற எங்களையும்
நம்பி
செத்துப் போகாதீர்கள் !
யுத்தங்களை வெற்றி கொள்ளும்
சக்தியும் யுக்தியும்
சித்தியாகும் வரை
சாவுகளை முக்திபெறச் செய்யுங்கள்
பக்தியில் மனம் நனையுங்கள் !
சண்டைதான் வேண்டுமென்றால்
இங்கே வந்து விடுங்கள் !
அது கூடுமா கூடாதா ?
ஆதாரம் இருக்கா இல்லையா ?
இதுபோல் இன்னும்
எத்தனையோ உண்டு
நமக்குள் சண்டைபோட !
கத்தியின்றி ரத்தமின்றி
இனத்தின் அடையாளமே
தெரியாமல்
அழிந்து போக
இது போதாதா ?
அதைத்தான்
நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் !
கியாம நாள் வரை
கவலையே இல்லை !

சனி, 19 ஜூலை, 2014

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி 



பாடம் பயில நான் 
பள்ளிவாசல் புகுந்த 
பிராயந்தொட்டு தொழுகை புரிய 
பள்ளிவாசல் 
புகுவாரோடு பழகி நின்றவன்! 
அவர்களது அன்பை ஆரா 
அமுதமாய் தின்றவன் ! 

என் ஒவ்வொரு பருவத்திலும் 
எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள் 
இஸ்லாமிய இனத்தவர் 
அவரெலாம் - தண்ணீர் கலவா 
தாய்ப்பால் மனத்தவர் ! 

இன்றைய என் ஏற்றம் 
அவர்களிட்ட பிச்சை 
இதைச் சொல்ல 
எனக்கில்லை லஜ்ஜை ! 

எல்லா சமயமும் 
எல்லாச்சமயமும் 
பேசுவது அன்பு 
பேணுவது அறம் இதை 
ஒர்ந்தார்க்கு இயல்பாகக் 
கைவரும் சமயப் பொறை 
எனும் இமயப் பொறை ! 
இந்தப் பொறை 
இருப்பின் இச்சமயம் 
அச்சமயம் 
என எச்சமயமாயினும் 
எவரும் 
அச்சமின்றி வாழலாம் என்பதை 
உணர்ந்து வாழ்ந்திடும் மன்பதை ! 

கவிவேந்தர் மு.மேத்தா காவியமாய் 
வரைந்த நபிகளார் வரலாற்றை வரிவிடாமல் 
படித்தவன் படித்து - பரவசத்தில் புளகாங்கிதம் எய்தி 
விழிப்புனலை வடித்தவன் ! 

அருளார்ந்த அத்தனும் அன்னையுமான 
அப்துல்லாவும் ஆமினாவும்
 இருளார்ந்த உலகிற்கு ஓர் இரவியை ஈந்தனர்
 அங்கனம் ஈர்ந்ததால் அவர்கள் மரித்த பின்னும் 
மக்கள் மனங்களில் மீந்தனர் ! 

அண்ணலார் அவர்கள் என்பு தோல் 
கொண்டு எழுந்து வந்த அன்புரு ! ம
றம் தன்னை புறம் காண வந்த அறம் ! 
காலணி அணிந்து தர்மம் நடந்த நூலணி ! 
மனிதம் என்னும் வடிவில் வந்த புனிதம் ! 
பயிர் உய்ய பெய்யும் வான் மழைபோல் 
ஞாலத்தின் உயிர் உய்யப் பெய்த ஞான மழை ! 
உலகு வணங்கும் உயரிய விழுமங்களின் 
மொத்தக் குழுமம் 
தகிக்கும் பாலையில் 
தவிக்கும் வேர்களுக்கான 
தண்ணீர்த் தடாகம் ! 
கதியற்றோர் கண்ணீரைத் துடைக்க 
வந்த பூந்துவாலை ! 
விட்டொழிக்க வேண்டிய வெற்றுச் சடங்குகளை 
சுட்டெரிக்க வந்த செந்தணல் சுவாலை ! 
எவ்வுயிரும் ஏற்று நிற்கும் செவ்வுயிர் ! 
சுருங்கச் சொன்னால் 
அண்ணல் நபிகளார் அவர்கள் 
இவ்வுலகிற்கு இறைவன் தந்த கொடை ! 
தூரிகையால் தீட்ட முடியாத ஓவியம் ! 
யாப்பதிகாரங்களால் காட்ட முடியாத காவியம் ! 
வார்த்தைகளால் சுட்ட முடியாதவர் வானம் போல் 
எட்ட முடியாதவர் ! 

பகை புகுந்த நெஞ்சத்தார் பார்வையில் படாமல் 
குகை புகுந்த குணாளரை 
கதீஜா மணாளரை காத்து நின்றது - ஒரு கருஞ்சிலந்தி ! 
அது - வாய் நூலால் குகைக்கு 
வாய்ப் பூட்டுப் போட்ட அருஞ்சிலந்தி ! 
ஆறறிவிடமிருந்து - ஒரு பேரறிவை 
ஆன்றறிவில்லாத ஒரு மூன்றறிவுக் காத்தது 
அதனால் அதற்கு அழியாப் புகழ் பூத்தது ! 
நபிகளார் பற்றி நாளெல்லாம் சொல்லலாம் 
சொல்லச் சொல்ல இன்னும் 
சொல்லாததாய் இருக்கும் சொல்லலாம் ! .....


.நன்றி:நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007 
நன்றி: அபு ஹாசிமா