ஃபிக்ஹுச் சட்டங்கள் தேவையா ? (பகுதி-2)
மௌலானா அல்ஹாஜ் எச். கமாலூத்தீன் ஹழ்ரத் அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி, வேலூர். கியாஸ் உடைய ஆதாரங்கள்
மாதவிடாய் உடைய பெண்கள் மய்யித்தை குளிப்பாட்டலாமா?இமாம்கள் கியாஸ் செய்து குர்ஆன், கதீஸ்களின் கருத்துக்களை மாற்றி விட்டதாக சிலர் சொல்லித் திரிகிறார்கள். இது தவறு. குர்ஆன் கதீஸில் மறைந்துள்ள உட்பொருளை வெளிப்படுத்தி உள்ளனர். நாம் ஆராயும்போது குர்ஆன், ஹதீஸிலிருந்து இதற்கு ஆதாரம் கிடைக்கின்றது.
"விசுவாசிகளே! தர்மம் செய்யக் கருதினால் நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளிப்படுத்திய (தானியம், கனிவர்கம், முதலிய) வற்றிலிருந்தும் நல்லவற்றையே (தானமாகச்) செலவுசெய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றில் செலவு செய்ய விரும்பாதீர்கள். (ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவற்றை நீங்கள் (வெறுப்புடன்) கண்மூடியவர்களாகவேயன்றி எடுக்க மாட்டீர்கள்". (2.227)
என அல்லாஹ் கூறியுள்ளான்.
இவ்வசனத்தில் கெட்டுப்போனதை நீங்கள் வாங்க விரும்பாததைப் போன்று அதைக் கொடுக்கவும் விரும்பாதீர்கள் எனக்கூறியுள்ளான். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறுவதற்குத்தான் கியாஸ் என்று சொல்லப்படுகின்றது. “தாதுஸ்ஸலாஸில்” என்ற இடத்தில் நடந்த போருக்காக சில ஸஹாபாக்களை றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அது கடினமான குளிர்காலம். அந்த இரவில் அம்ருப்னுல் ஆஸ் (றழி) அவர்களுக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. குளிர் கடினமாக இருந்ததால் அவர் தயமும் செய்து விட்டு தன் சகாக்களுக்கு சுபஹ் தொழுகையை தொழ வைத்தார். பெருமானார் (ஸல்) அவர்களிடம் இந்த விபரத்தை ஸகாபாக்கள் கூறினார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் அம்ரிடம் "அசுத்தமான நிலையில் தொழவைத்தீரோ?" என வினவினார்கள். அதற்கு அவர்கள் “உங்களுடைய ஆத்மாக்களை கொன்றுவிடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கிருபையுள்ளோனாக இருக்கின்றான்” (4.29) என்ற வசனத்தை நினைத்துப் பார்த்தேன். தயம்மும் செய்து தொழவைத்தேன் என்று கூறியவுடன் பெருமானார் (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு எதுவும் கூறாமல் இருந்துவிட்டார்கள். (நூல் அபூதாவுத் தாரகுத்னீ) ஒருவர் கடும் குளிர் நேரத்தில் தண்ணீரில் குளித்து ஆபத்து ஏற்பட்டால் அது தன்னைத்தானே கொலைசெய்வதற்கு ஒப்பாகும் என்று விளங்கிய அம்ரு (றழி) அவர்கள் குளிப்பை விட்டுவிட்டார்கள். அதை பெருமானார் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதுவும் கியாஸ்தான். காரணத்தைக் கொண்டு சட்டம் அமைப்பது.
முன் விபரிக்கப்பட்ட விஷயங்களில் ஒப்பிடுவதற்கான காரணம் வெளிப்படையாகத் தெரிகின்றது. சில சட்டங்களுக்கு காரணம் வெளிப்படையாகத் தெரியாது ஆய்வு செய்து காரணத்தைக் கண்டு பிடித்து இந்தக் காரணம் எங்கெங்கு பெற்றுக் கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் அந்தச் சட்டமும் இருக்குமென்று தீர்ப்புச் செய்வதும் இமாம்களின் பணியாக இருந்தது. இந்த முறையும் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளதுதான். (யுத்த காலத்தில் சிறப்பு மிக்க இந்நான்கு மாதங்கள் முடிந்தபின்) இணைவைப்போரை, கண்ட இடத்தில் வெட்டுங்கள் (9.05) என்று அல்லாஹ் கூறியுள்ளான். ஒரு சமயம் யுத்த களத்தில் ஒரு பெண் வெட்டப்பட்டு கிடந்த்தை நபீ (ஸல்) அவர்கள் கண்டபோது“பெண்களையும் சிறுவர்களையும் வெட்டாதீர்கள்” என்று கூறினார்கள் (நூல் புகாரி) நம்மை யார் வெட்டுகிறார்களோ நோவினை தருகிறார்களோ அவர்களைத்தான் வெட்டவேண்டும். சிறுவர்களும் பெண்களும் அத்தகையோர் அல்லர் என பெருமானார் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள். அதாவது காரணத்தை விளக்கினார்கள். முந்தஹல் அக்பர் என்ற இப்னுத் தைமிய்யாவின் ஹதீஸ் கிதாபுக்கு விளக்கம் எழுதிய ஷவ்கானி அவர்கள்
“வணக்கத்திலேயே ஈடுபட்டிருக்கும் துறவிகளையும், வெட்ட வேண்டாம்"
என்ற ஹதீஸை எடுத்துக்கூறி இந்த ஹதீஸ் ஊர்ஜிதம் ஆவதில் பிரச்சினை இருக்கிறது. என்றாலும் பெண்கள் விஷயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸில் விளக்கப்பட்டுள்ள காரணம் இந்த ஹதீஸையும் உறுதிப்படுத்துகின்றது. ஏனெனில் இத்தகையோரால் இடர் இல்லை எனவே இக்காரணத்தை வைத்து நொண்டி, முடம், குருடர்களையும், வெட்டக்கூடாது என்று விளங்களாம். (நூல்-நைலுல் அவ்தார்) எதற்கெடுத்தாலும் ஹதீஸ் இருக்கிறதா?என்று கூறுபவர்கள் இமாம் ஷவ்கானீ, இப்னுத் தைமிய்யாஹ் போன்றவரக்ளின் ஆய்வுக்கு மதிப்பளிப்பவர்களான அவர்களே காரணத்தை வைத்து சட்டத்தை நிர்ணயிக்கலாம் என்று கூறுகிறார்கள். இல்லாவிட்டால் ஹதீஸில் குருடர், முடவர், ஆகியோர் பற்றி வெளிப்படையாகச் சட்டம் கிடையாது. எனவே, இவ்வாறு ஒப்பிட்டு விளங்கிய விளக்கம் ஹதீஸுக்கு முரணாகாது.
மலம் கழித்தபின் சிறு கற்களால் துப்பரவு செய்வதற்கு கதீஸ்களில் அனுமதியுள்ளது. "(குபா என்ற) அப்பகுதியில் தூய்மையை விரும்புகின்ற ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் அப்பரிசுத்தவான்களை நேசிக்கிறான்.(9.108) என்ற திருவசனத்தில் கற்களால் துப்பரவு செய்தபின் தண்ணீரால் சுத்தம் செய்வோரை அல்லாஹ் புகழ்ந்து கூறியுள்ளான். ஹழ்ரத் அலீ (றழி) அவர்கள் பிற்காலத்தில் மக்களை நோக்கி "நீங்கள் தண்ணீரில்தான் சுத்தம்செய்ய வேண்டும் ஏனென்றால் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தவர்கள் புழுக்கை போன்று மலம் கழித்தனர் நீங்கள் அவ்வாறல்ல" எனக்கூறி கல்லால் துடைத்தற்கு காரணம் கூறி, காரணம் மாறும்போது சட்டமும் மாறும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். (நூல் கன்ஸுல் உம்மால்) ஹதீஸுக்கலை வல்லுனர்களும் ஃபிக்ஹு சட்ட நிபுணர்களின் பால் தேவையுடையவர்களே! முஹத்திஸீன்கள் (ஹதீஸ் ஆய்வாளர்கள்) பெருமானார் (ஸல்) அவர்களின் சொல் செயல்களை மனனம் செய்து அடுத்தவர்களுக்கு எடுத்துக் கூறினர் இவர்களுக்கு ஹதீஸின் வெளிக்கருத்துதான் தெரியும். ஆழ்ந்த கருத்தை உணர்வதற்கு இவர்கள் ஃபிக்ஹுச் சட்ட நிபுணர்களிடம் சென்றாக வேண்டும் ஹதீஸ்களை கற்றுப் புலமை பெற்றிருந்த சிலர் ஃபிக்ஹையும் படித்தார்கள். எனவே அத்தகையோர் தம் திறமைக்குத் தகுந்தாற்போல் ஃபிக்ஹை அறிந்தார்கள்.
மாதவிடாயாக இருந்த பெண்மணி ஒருத்திக்கு ஒரு மய்யித்தை குளிப்பாட்டவேண்டிய நிலை ஏற்பட்டது மாதவிடாய் நிலையிலுள்ள மையித்தை குளிப்பாட்டலாமா? என்ற சந்தேகம் அந்த பெண்மணிக்கு ஏற்பட்டது. பள்ளிவாயிலின் ஒரு பகுதியில் ஹதீஸ்களைக் கற்றுக் கொடுப்போர் கூடியிருந்தனர். அவர்களிடம் அப்பெண்மணி சென்று மாதவிடாய் காலத்திலுள்ள பெண் ஒருத்தி மய்யித்தைக் குளிப்பாட்டலாமா? என்று கேட்டாள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் "அவ்வாறு ஏதும் ஹதீஸ் வந்திருப்பதாக நினைவில்லை. “மஸ்ஜிதின் மறுபுறத்தில் ஃபிக்ஹுச் சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் போய்க்கேள். அவர்கள் கூறும் பதிலை எங்களிடம் கூறிவிட்டுப்போ” என்று அப்பெண்மணியிடம் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அங்கு சென்றபோது அபூதௌர் (றஹ்) என்ற ஃபகீஹ் பள்ளியினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அவரிடம் அப்பெண்மணி சட்டத்தை குறித்து வினவினாள். உடனே அவர்கள் “கூடும்” என்று சொல்லிவிட்டு பள்ளியினுள் சென்று விட்டார்கள். அப்பெண்மணி அதை முஹத்திஸீன் களிடம் கூறினாள். உடனே அவர்கள் கூட்டமாக எழுந்து ஃபிக்ஹு சட்ட நிபுணரான அபூதௌர் மற்றும் அவர்களுடைய குழுவினரிடம் சென்று “உங்களின் அறிவுப்படி தீர்ப்புச் சொல்கிறீர்களா?” என்று கேட்டனர். அதற்கவர்கள் “இல்லை, நீங்கள் கூறிய ஹதீஸிலிருந்துதான் சொன்னோம்” என்று கூறினார்கள். அதற்கு முஹத்திஸீன்கள்"அப்படியொரு ஹதீஸை நாங்கள் கூறவில்லையே" என்றனர்.
அதற்கவர்கள். “ஒரு சமயம் பெருமானார் (ஸல்) அவர்கள் பள்ளியினுள் வீட்டை ஒட்டிக்கிடந்த சிறிய பாய் ஒன்றினை எடுக்குமாறு ஆயிஷா (றழி) அவர்களிடம் கூறினார்கள். ஆயிஷா (றழி) அவர்கள் நான் மாதவிடாயாக இருக்கிறேன் என்று பதில் கூறினார்கள். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் உனது மாதவிடாய் உனது கையிலில்லை. அதை எடு” என்று கூறினார்கள்.இதிலிருந்து மாதவிடாய் என்பது ஒருவரை தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்ற நிலையில் உள்ளதல்ல என்று விளங்கலாம்.
அதனால்தான் மாதவிடாயுள்ள பெண் இறந்தவரைக் குளிப்பாட்டினால் அவருடைய அசுத்தம் இறந்தவரை ஒட்டிக் கொள்ளாது. எனவே“குளிப்பாட்டுவது கூடும்” என்று கூறினோம் என்றனர். முஹத்திஸ்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நபீ மொழிகளிலிருந்து அதற்கொப்பானவற்றைப் பகுத்து அறிய வேண்டியது ஃபகீஹ்களின் பணியாகும். இத்தகைய நுட்பமான விளக்கங்களுக்காக முஹத்திஸீன்கள் ஃபகீஹ்களின் பால் தேவைப் பட்டவர்களாகவே இருந்தார்கள்.
"நாங்கள் மருத்துவச் சாமான்களை விற்பவர்கள். நீங்கள் (ஃபகீஹ்கள்) அதைக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள்" என்று முஹத்திஸீன்கள் ஃபகீஹுகளை புகழ்ந்து கூறியுள்ளார்கள். ஹதீஸ் ஆய்வாளர்கள் ஹதீஸ்களை மனனம் செய்து தரம் வாரியாகப் பிரித்து தங்களுடைய கிதாபுகளில் எழுதிவைத்துள்ளார்கள். அவற்றில் மறைவாக உள்ள உட்பொருளை விளங்குவது அவர்களுடைய துறையன்று. அத்தகைய விளக்கம் பெறுவதற்குரிய தனித்துறையாகவே ஃபிக்ஹு விளங்குகின்றது. முஹத்திஸுகள் அத்தகைய விளக்கம் பெற வேண்டுமாயின் ஃபிக்ஹுத்துறையில் பயின்றே ஆகவேண்டும். அவ்வாறு இரண்டையும் படித்தால் இரு திறமையையும் அவர்களுக்கு ஏற்படும். ஃபிக்ஹு இல்லாமலிருந்தால் இஸ்லாமிய மார்க்கம் அறிவுக்குப் பொருத்தமில்லாமல் ஆகியிருக்கும்.
அவர்கள் ஒவ்வொறு சட்டத்திற்கும் காரணங்களைப் பகுத்துக் கூறியதால் நாமும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டவைகளுக்குரிய காரணங்களைக் கூறி அறிவுக்குப் பொருத்தமானது தான் இஸ்லாம் என மார்தட்டிக் கூறிக் கொண்டிருக்கின்றோம். ஹதீஸை கூறா விட்டால் ஃபிக்ஹு கிதாபுகளில் சட்டங்களைக் கூறும்போது அவற்றுக்கான குர்ஆன் வசனங்களையும் ஹதீஸுகளையும் எடுத்துக் கூறுவதில்லை. எனவே, அவையெல்லாம் ஃபகீஹ்களின் சொந்தக் கருத்து என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறு. ஃபகீஹ்களின் போக்கை உணராததால்தான் அவர்கள் அவ்வாறு கருதுகின்றார்கள். ஃபகீஹுகள் குர்ஆன் ஹதீஸிலிருந்து காரணங்களை விளங்கி அதைப் பொதுச் சட்டமாக்கி அதிலிருந்து உட்பிரிவுச் சட்டங்களையும் இயற்றுகின்றனர். ஆயிஷா (றழி) கூறுகிறார்கள்
“ஹதீம் என்ற பகுதி இறையில்லமான கஃபாவின் ஒரு பகுதியாகும். குறைஷிகள் கஃபாவைக் கட்டும் பொழுது அதை விட்டுவிட்டுக் கட்டிவிட்டனர். “ஆயிஷாவே உனது கூட்டத்தினர் சமீப காலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்கள். அவ்வாறில்லாவிட்டால் கஃபாவை இடித்துவிட்டு இப்ராஹீம் (அலை) அவர்களின் அஸ்திவாரத்தின் மீது (ஹதீமைச் சேர்த்து) கட்டிவிடுவேன்” என நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸிலிருந்து பல்வேறு சட்டங்களை ஃபகீஹுகள் எடுத்துள்ளனர்.
1. அரசன் அல்லது ஊர் தலைவன் ஒரு நல்ல பணியை செய்ய நாடுகிறான் ஆனால் அதன் மூலம் மக்களிடம் குழப்பம் ஏற்படுமென்று பயப்படுகின்றான் என்றால் அச்சமயம் அவன் அவ்வேலையை விட்டுவிடவேண்டும்.
2. ஒருவன் ஒரு வேலையைச் செய்யுமுன் அதன் பின் விளைவுகளையும் யோசிக்க வேண்டும்.
3. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் வேலைகளை செய்யக் கூடாது
4. ஒரு நன்மையைச் செய்து அதன் முடிவு தீமையாக ஆகிவிடும் என்ற பயமிருந்தால் தீமை ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த நன்மையை செய்யாது விட்டுவிடுவது சிறந்தது.
புஹாரியின் விரிவுரையாளர் இமாம் ஐனீ (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
“ஒரு வசதியுள்ள பெண் தாய் தந்தையை இழந்து தகப்பன் யாரிடம் பொறுப்புச் சாட்டி சென்றாறோ அவரிடம் வளர்ந்து வருகிறாள். தகப்பனின் சகோதரரின் மகன் சிறிய வயதிலிருந்தே இவளுடன் அன்பாக பழகி வருகிறான் இவளும் அவனை நேசிக்கிறாள். இவள் பருவ வயதடைந்த போது இவளை திருமணம் செய்ய அவன் விரும்புகிறான். வேறு வசதிபடைத்தவனும் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான். அந்தப் பெண்ணை வளர்ப்பவன் செல்வந்தனுக்கு திருமணம் முடிக்க விரும்புகிறான். இப்பிரச்சினை நீதிபதி (காழி) யிடம் சென்றது. அவ்வூர் நீதிபதி ஃபகீஹ்களிடம் ஆலோசனை கலந்தார். பலரும் செல்வந்தனுக்கு திருமணம் செய்து கொடுப்பது பெண்ணுக்கு நல்லது அதைச் செய்ய வேண்டும் என ஆலோசனை பகர்ந்தனர். அபூ முகம்மது
அஸீலி (றஹ்) என்ற ஃபகீஹ் அப்பெண்ணின் சிறிய தந்தையின் மகனுக்குத்தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸை ஆதாரமாக கூறி விளக்கினார்.
அதாவது, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபின் இவர்களின் நேசத்தால் தீமை விளைந்துவிட்டாள் அது மிகவும் விபரீதமாகிவிடும். ஆகவே, இந்த ஹதீஸை ஆதாரமாக ஆக்கி தீமையைத் தடுப்பதுதான் முக்கியம் என்று விளக்கம் கூறினார். நீதிபதியும் இவருடைய விளக்கத்தை ஏற்று அவளை நேசித்த சொந்தக்காரனுக்கே திருமணம் செய்து வைக்கும்படி உத்தரவிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் கஃபாவை புதுப்பிக்காமல் விட்டதற்கு காரணங்கள். “இன்று கஃபாவை புதுப்பிக்கிறார். அடுத்து என்னென்ன செய்வாரோ!” என்று புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு நபீயைப்பற்றி கெட்ட எண்ணம் வந்துவிடக்கூடாது. அவ்வாறு வந்துவிட்டால் அடுத்தடுத்து நபீயின் சொல்லை பின்பற்றுவதில் அவர்கள் பின்னடைந்துவிடுவர். ஈமானிலும் மோசம் வந்துவிடும். ஹதீமை கஃபாவில் சேர்த்து கட்டததால் நட்டம் ஒன்றுமில்லை. அவ்வாறு இணைத்துக் கட்டாதது நமக்கு லாபம் என்றே கூறவேண்டும். நம்போன்றவர் கஃபாவினுள் சென்று தொழமுடியாமல் போன குறையை இது நிவர்த்தி செய்கின்றது அந்த இடமும் கஃபாதான் அதில் தொழுதால் கஃபாவினுல் தொழுததைப் போன்றாகும். எனவேதான், ஆயிஷா (றழி) அவர்கள் அங்கு தொழும்படி கட்டளையிட்டார்கள்.
இங்கு நாம் சற்று சிந்திப்போம் மேற்கூறிய நான்கு சட்டமும் ஹதீஸிலிருந்து விளங்கியவைதான். இதை அடிப்படையாக வைத்துத் தீர்புச் செய்யும்போது அத்தீர்ப்பு ஹதீஸுக்கு முரண் என்று கூறமுடியுமா? இந்த ஹதீஸுடைய உற்கருத்தை விளங்காமல் இத்தீர்ப்பு ஹதீஸில் இல்லை என்று கூறினால் அது அவர்களின் அறிவுக் குறைவைத்தான் காட்டும் ஃபகீஹுகள் ஒவ்வொறு இடத்திலும் தாங்கள் எந்த ஹதீஸிலிருந்து எடுத்தார்கள் என்பதைக் கூறத்தேவையில்லை. அவர்கள் நுட்பமான அறிவு படைத்தவர்கள். அல்லாஹ்வுக்கு பயந்தவர்கள் அவர்கள் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக பேச மாட்டார்கள். அதனை அவர்களின் வாழ்கை நமக்கு புலப்படுத்துகின்றது. எனவே, அவர்களின் சொல்லை ஏற்று நடப்படதும் அவர்களை பின்பற்றுவதும் அல்லாஹ்வையும் அவனது றசூலையும் பின்பற்றுவதாகத்தான் ஆகும். அல்லாஹ் நல்லோர்களைப் பின்பற்றி நடக்கும் பாக்கியத்தை நமக்கு அருள்வானாக. ஆமீன்.
(1987 திருச்சி ஜமாஅத்துல் உலமா மாநாட்டு மலரிலிருந்து)பாரகல்லாஹு லிமன் கதப.