ஆயக்குடி ஆகும்.இங்கேயும் தேவேந்திரர் / மள்ளர் மக்களே ஆதியில் இருந்து இருக்கின்றார்கள்.
நன்றி.
வீ.பீ.திருமுகம்.
தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தில் மூவேந்தர்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சங்க இலக்கியங்களில் மூவேந்தரைப் பற்றியும், குறுநில மன்னர்கள், சிற்றூர்த் தலைவர்கள், அவர்களுக்கு உட்பட்டு வாழ்ந்த மக்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றியும் பல அகச் சான்றுகள் காணக்கிடைக்கின்றன. இவர்கள் அனைவரும் ஒரு மூதாதையரிடமிருந்து வந்தவர் என்பதற்குரிய அகச் சான்றுகளோ சமூகப் புனைகதைகளோ (Social Myth) எவையும் கிடைத்தில. எனினும் ஒவ்வொரு குடிவழியினரும் இந்த நாட்டுக்கே உரிய தொல்பழங்குடியைச் சேர்ந்தவர்களே என்பதற்கும், அவர்கள் வாழ்ந்த ஊர், நகரம் ஆகியன தொன்மை வாய்ந்தனவே என்பதற்கும் அகச்சான்றுகள் பல கிடைக்கின்றன.
ஆவினன் குடி – முருகு. 178
எவ்வி தொல்குடி – புறம்: 202: 14
சீர்மை சிறப்பின் தொல்குடி – கலி.105: 2
தென்திசை ஆய்குடி – புறம். 132: 8
தொல்குடி – முருகு.128
தொல்லிசை நட்டகுடி – கலி.104:15
நல்லிசை முதுகுடி – புறம் 58:5
பண்பின் முதுகுடி – புறம். 391:9
பழங்குடி – அகம்: 290:8
பீடுபெறு தொல்குடி – புறம்: 289: 4
மன்பதை காக்கும் நீள்குடி – புறம்: 335:8
முரசு கெழு முதுகடி – கலி.105:2
வாணன் சிறுகுடி – அகம்.117:18
எனக் குடிகளின் தொன்மையினையும்,
நியம மூதூர் – நற்.45:4
மல்லல் மூதூர் – நற்.319:3
அழியா மரபின் மூதூர் – நற். 311:5
மணல்மலிமூதூர் – நற்.319:3
பெருங்கலி மூதூர் – நற்.321:10
ஆதியருமன் மூதூர் – குறுந்.293:4
கம்பலை மூதூர் – புறம் 4:1
மல்லல் மூதூர் – புறம்: 18.12
நனந்தலை மூதூர் – புறம் 228:4
என ஊர்களின் தொன்மையின்மையும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழகத்துப் பழங்குடிகள் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்பதற்கு எவ்வித அகச் சான்றுகளும் இல்லை. மாறாக இங்கேயே தோன்றி வாழ்ந்தவை என்பதையே மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே, நாடு தழுவிய பொது வரலாறும், பொது மரபும் தமிழ் மண்ணிலிருந்தே உருப்பெறுகின்றன.
– முனைவர் ப.கிருட்டிணன்:
தமிழ் நூல்களில் தமிழ் மொழி தமிழ் இனம் தமிழ் நாடு: பக்கம்: 47-48
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.
திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வளம் மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல.
– கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன்
மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172
தமிழ் இந்தியா
உலகின் மூத்த குடியான தமிழ்மக்கள் தோன்றி, வாழ்ந்த வாழும் பகுதியான ஆசியாக் கண்டத்தை நாம்‘தமிழ்க் கண்டம்’ என்றே அழைக்க வேண்டும். ‘இந்தியா’ என்பது ‘தமிழ்த் துணைக்கண்டக் கூட்டரசு நாடுகள்’ என அழைக்கப்பெற வேண்டும்.அல்லது குறைந்தது ‘தமிழ் இந்தியர்’ என்றாவது அழைக்கப்பட வேண்டும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்:
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம்- ஓர் இனிய கனவு. (தமிழ் ஆட்சிமொழி: பக்கம். 88
புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)
நம் பணத்தில் கொழிக்கும் இந்தியை எதிர்ப்போம்
‘இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம்’ என்று கூறுவதையும் நேருவின் உறுதிமொழியைச் சட்டமாக்க வேண்டும்’ என்று கூறுவதையும் நிறுத்த வேண்டும். நேருவின் உறுதிமொழி என்பது இந்தி முழுமையாக நம் மீது ஏறுவதை ஒத்திப் போடுவதுதானே தவிர, நம்மொழிக்குத் தலைமை வாய்ப்புத் தருவது அன்று. அதுபோல் இந்திமொழி இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தின் அவர்களின் பணத்தில் வளர்க்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நாம் யார்? ஆனால், அனைத்து மொழிபேசுவோரின் செல்வத்தைச் சுரண்டிக் ‘கட்டாயம் இல்லை’ என்ற பெயரில் இந்தி பரப்பப்படுவதும் வளர்க்கப்படுவதும் திணிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட்டாகவேண்டும். அரசு பள்ளிக் கூடங்களில் இருந்து இந்தியை விரட்டி விட்டோம் எனக்கூறித் தனியார் பள்ளிகளிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தி வளர்ச்சிக்குப் பெருஞ்செலவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்தி வளர்ச்சிக்காகத் ‘தட்சிண பாரத இந்தி பிரச்சாரசபை’ மூலம் நமது செல்வம் செலவிடப்படுவதையும் நிறுத்த வேண்டும். இந்தியைப் படிப்போருக்கும் படிப்பிப்போருக்கும் தரப்படும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். இவை மூலமும் நடுவணரசின் பிறதுறை அமைப்புகள் மூலமும் இந்திக்குச் செலவழித்த தொகையை இழப்பீடு போல் தமிழ் வளர்ச்சிக்குச் செலவழிக்க நடுணவரசு தரவேண்டும். தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்பிற்கு இதுவரை செலவழித்தத் தொகையும் தமிழுக்குத் தரப்பட வேண்டும். மேலும் இந்தியை மட்டும் தேசிய மொழி என்றும் பிறவற்றை வட்டார மொழிகள் என்றும் அரசியலமைப்பிற்கு மாறாகக் கூறுவதை எல்லா இடங்களிலும் நிறுத்த வேண்டும். ‘தேசிய ஒளிப்பரப்பு’ என்று சொல்வதை ‘நடுவண் ஒளிபரப்பு’ என்றும் ‘மண்டல ஒளிபரப்பு’என்று சொல்வதை ‘தமிழ்நாட்டு ஒளிபரப்பு’ என்றும் (மாநிலங்களின் பெயர்களில்) குறிக்க வேண்டும். நடுவண் ஒளிபரப்பில் இந்தி நிகழ்ச்சிகள் மட்டும் இடம் பெறுவது நிறுத்தப்பட வேண்டும். அனைத்து மாநில நிகழ்ச்சிகளும் இடம் பெறும் வகையில் இவை அமைய வேண்டும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்:
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம்-ஓர் இனிய கனவு.
(தமிழ் ஆட்சிமொழி: பக்கம். 89 புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)
தமிழ்த் தேவை மதிப்பை உயர்த்துக
அறிவிற்காகக் கல்வி என்றில்லாமல் வேலைக்காகக் கல்வி என்று வந்ததால் பெரும்பாலும் எதுவும் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களே தமிழ் படிக்க முன்வருகிறார்கள். வந்தபின் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வோரும் குறைவு. இவர்கள் ஆசிரியராக மாறும் பொழுது உருவாக்கப்படும் தமிழ் உணர்வும் குறைவு. எனவே தமிழுக்கான தேவை மதிப்பை உயர்த்த மேற்குறித்த செயற்பாடுகளுடன் தமிழ்நாட்டில் அமையக்கூடிய நடுவணரசு அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் சார்பு அமைப்புகளுக்கும் ஆடசித் துறைப்பணிகளுக்கும் தமிழில் உயர்பட்டம் பெறுவதைத் தகுதியாக அறிவிக்க வேண்டும்.
-
- தமிழ்க் கணியன்களை (Software) மிகுதியாக உருவாக்கிக் கணினி வழித் தமிழ் பயன்பாட்டைப் பெருக்குதல், எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழைச் சிதைக்க வரும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியிடுதல், ‘தமிழ்நாடு’ என்று வேண்டுமென்றே கூறாமல், ‘தமிழ்மாநிலம்’ என்று பயன்படுத்துவதையும், ‘அர்த்தால்’, ‘பந்த்’ போன்ற அயல்மொழிச் சொற்களை வேண்டுமென்றே கலப்பதற்கும் தடை விதித்தல், கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் இலங்கையில் உள்ளது போல்,தமிழ் வரிவடிவையே பயன்படுத்தச் செய்தல், கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடுகளைத் தமிழை முதற்பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு மட்டும் வழங்குதல் தமிழ் வழிப் பயில்வோருக்கு மட்டுமே கல்வி உதவித் தொகைகள் அளித்தல் முதலான பல்வேறு நடவடிக்கைகளும் தமிழின் தேவை மதிப்பை உயர்த்தும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்:
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் - ஓர் இனிய கனவு.
(தமிழ் ஆட்சிமொழி பக்கம்.91) புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)
அயல் எழுத்தைச் சேர்க்காதீர்
- பழந்தமிழ்க் காலமுதல் வடசொற்களும் திசைச்சொற்களும் தமிழில் இன்றியமையாதவிடத்து, வழங்கி வந்திருக்கின்றன. ஆனால், அவ்வாறு வருகின்றபோது, அவை தமிழியலுக்கு ஏற்ப உருமாறித் தொழில்புரிய வேண்டுமென்பது ஆன்றோர் வகுத்த தமிழ்மரபு. “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ,எழுத்தொடு புணர்ந்த சொல்லே கும்மே” என்பது தொல்காப்பிய நூற்பா. வடவெழுத்துகளிற் பல,தமிழியலுக்கு முரண்படுதலின் அவற்றை நீக்கி எழுதுவதே முறையென மூதறிஞர் கண்டனர். வடசொற்கள் பெரிதும் வழங்கத்தலைப்பட்ட பிற்காலத்திலும் இவ்வியலுக்கு மாறுபடா வண்ணம் நன்னூலார் வகுத்தனர். சங்க கால முதல் இதுகாறும் தோன்றி வரும் சிறந்த நூல்கள் யாவும் இம்மொழி மரபு வழுவாமல் பாதுகாத்து வருகின்றன. ஒரு சிலர், தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்துள்ளனவென்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றும் கூறுகின்றனர். இலார்டு கிரேக்கர் என்ற ஆங்கிலப்புலவர், தம் மொழியில் எழுத்திலக்கணத்திற் காணப்பெறும் சில குறைகளைத் தொகுத்து ஒரு கவியில் விளக்கியுள்ளார். எனினும், ஆங்கில மொழியின் வளர்ச்சி சிறிதும் குறையவில்லை. அச்சுக் கோப்போரின் துன்பத்திற்காகச் சிலர் தமிழ் எழுத்துகளிற் சிலவற்றை அகற்ற விரும்புகின்றனர். சிலர் ’ஊ’என்ற ஆங்கில எழுத்தையும் தமிழில் இல்லாத பிறமொழி எழுத்துகளையும் தமிழிற் சேர்க்கக் கருதுகின்றனர். இவை எம்மொழியாளரும் கைக்கொள்ளாதவை. வீரமாமுனிவர், போப்பையர் போன்ற அயல்நாட்டவர்கூட இவ்வாறு சொல்லத் துணியவில்லை. வடகலை, தென்கலை உணர்ந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோர், வடநூலார் கொள்கையில் அடிப்பட்டிருந்தும் தமிழ் மரபு இழுக்காவண்ணம் உரைநூல் இயற்றினார்களே. ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய நிரம்ப இடமிருந்தும் அவற்றைத் திருத்தத் துணியாது, தமிழ்மொழியைத் திருத்துவோமென்பது பேதமையாகும். கலைநூல்களில் வழங்கும் குறியீட்டுச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் நூலிலோ,வழக்கிலோ கிடைத்தால் அவற்றைக் கொள்ள வேண்டும்; இல்லாதபோது, தமிழில் ‘படைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் இயலாவிடில், தமிழ் மரபிற்கேற்பத் திரித்து அமைக்க வேண்டும். ஆங்கிலேயர் அரிசி, இஞ்சி என்பவற்றைக் குறிப்பதற்கான சொற்களைத் என ஆக்கிக் கொண்டனர். செர்மானியர்,அறிவுநூற்பொருள்களைத் தம் தாய்மொழியிலேயே ஆக்கிக் கொண்டனர். எனவே, இம்முறையைத் தமிழர்களும் பின்பற்றலாம்.
- தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்:
நெல்லையில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டுத் தலைமையுரை (7.8.32):தரவு: தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் வாழ்வும் பணிகளும்: பக்கம். 98-99
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக