வியாழன், 2 ஜூன், 2011

சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை

இன்றைய நாளில் தமிழை வளம் படுத்துவோமெனத் தலைப்படும் ஒரு சிலர் தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்திருப்பதாகவும், அவற்றை அகற்றுதல் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாததெனவும் கூறுகின்றனர். நூலக வழக்கிலிருக்கும் மொழிகளையும் அவற்றின் எழுத்திலக்கணங்களையும் இக்கொள்கை­யினர் நடுநின்று ஆய்வரெனில், பிற மொழிகளிற் காணும் குறைபாடுகள் சொல்லிறந்தனவென்றும், தமிழ் மொழியில் அத்துணை குறைபாடுகள் இல்லை என்றும் காண்பர். கார்மர் பிரபு (Lord Cormer) என்ற ஆங்கிலப் புலவர் தம் மொழியின் எழுத்திலக்கணத்திற் காணப்பெறும் குறைகள் சிலவற்றைத் தொகுத்து, அவை புலனாகுமாறு இக்கவியில் விளக்குகின்றனர்.

"In the English tongue we speak,

Why is "break'' not rhymed the "freak''?

well you tell me why it is true,

We say sew but likewise "Jew''?

Board Sounds not the same as "heard''

"Cord'' is different from "Word''

And since "pay'' is rhymed with "say''

Why not "paid'' with "said'' pray?

Cow is "cow'', but low is "low''

"Shoe'' is never rhymed with "foe''

And in short is seems to me

Sound and letter disagree''

இன்னோரன்ன குறைபாடுகள் எண்ணிறந்தனவாய் மலிந்திருந்தும் ஆங்கில மொழியின் வளர்ச்சிக்கு குன்றினதாவென உன்னிப்பாருங்கள். கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் ஒருங்கே உடைய ஆங்கிலப் புலவர்கள் தமது எழுத்திலக்கணத்தில் சீர்திருத்த முற்பட்டனரா? ஆங்கில எழுத்திலக்கணத்தில் சீர்திருத்தம் புரிய முற்பட்டவர் தாமும் எய்திய பயனே ஏதேனுமுளதா? மேசன் குயில்காட்டு (Mason Qlcott) எனும் துரைமகனார் தமிழ் கற்பதில் ஆர்வந் தழைக்கின்றார்; தமிழ் இலக்கியங்களைக் கற்பதற்கான அளவு தம் தமிழறிவை வளர்க்க ஒல்லாதெனக் கண்டு, தன் நிலைக்குத் தமிழைக் கொணர்வதே சாலுமென விழைந்து, இன்றியமையாதவை எனத் தாம் கண்ட சீர்திருத்தங்கள் சிலவற்றைச் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்துவிட்டனர். இந்திய நாடு முற்றுமே பயிலக் கூடியவாறு நாகரி உருது போன்றதொரு பொதுவெழுத்தால் தமிழ் நூல்களை எழுத வேண்டுமெனவும் உலகெங்கணும் பயிலுதற்பொருட்டு உரோமன் எழுத்தாலாவது உலகப் பொதுவான ஒலிக்குறி எழுத்தாலாவது International Phonetic Alphabet எழுத வேண்டுமெனவும் கருதுகின்றனர். இலக்கிய நூல்களிற் காணும் செந்தமிழ் வழக்கையொழித்துப் பேச்சு வழக்கிலுள்ள கொச்சை மொழியில் நூல்கள் எழுதப்பட வேண்டுமெனத் துணிகின்றனர். ஆகார, ஐகார, ஒகர, ஓகாரங்கள் ஏறிய மெய்யெழுத்துகள் அனைத்தையும் ஒருபடித்தாய் எழுதாது ணகர, னகர, றகர, லகர, ளகர,ங்கட்கு மட்டும் மாறுபட்ட குறியீடு எற்றுக்கோவெனவும், தந்நகர, றன்னகரங்கள் மிகைப்பட்டவை எனவும் கூறுகின்றனர். அச்சுக்கோப்போரின் துன்பத்திற்கிரங்கி மற்றுஞ் சிலர் இருநூற்றின் மேற்பட்ட எழுத்துகளில் சிலவற்றை அகற்றிவிட விரும்புகின்றனர்; வேறு சிலர் ஞூ என்னும் ஆங்கில எழுத்தையும் அது போன்று தமிழில் இல்லாது பிற மொழிகளிற் காணும் புதிய எழுத்துகளையும் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்க வேண்டுமெனவும் கருதுகின்றனர். இக்கூறிய கொள்கைகள் நாகரிக உலகில் எம்மொழியாளரும் கைக்கொள்ளாதவை என்பது வெளிப்படை. பிறமொழிகளுக்குரிய சிறப்பெழுத்துகளை நாடோறும் தமிழ் நெடுங்கணக்கில் சேர்த்துக் கொள்வதனால், என்றும் முற்றுப்பேறடையதாய்த் தமிழ் நெடுங்கணக்கு தன் பெயரினை­யொப்ப நீள நீண்டு கொண்டேவரும். கன்னித் தமிழெனப் போற்றப்­பெறும் உயர்தனிச் செம்மொழியின் எழில் நலமும் இயல்நலமும் குன்றிக் கேடுற்றுத் தன்னுருவே மாறிவிடும். தமிழின் எழுத்தியல் இப்போதுள்ளவாறே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தும் மொழிப்பயிற்சிக்கோ, மொழி வளர்ச்சிக்கோ இது தடை செய்வதெனக் கூறினாரில்லையே, வீரமாமுனிவர், போப்பையர் ஆகிய அயல் நாட்டவரும் எளிதில் தமிழ்ப்புலமை எய்தி, தமிழரும் புகழத் தகும் இலக்கிய இலக்கண நூல்களை இயற்றித் தமிழ் மொழியின் மாட்சிகளை வியந்து போற்றினாரேயன்றி இக்கூறிய திருத்தங்கள் தேவையெனக் கருதினாரில்லை. ஆரியமும் தென்றமிழும் நன்குணர்ந்த நமது சமயக் குரவர்கள் திருமுறைகளை அருளிச் செய்யும் நமது ஞானக் குரவர்கள் ஒப்புயர்வற்ற ஞானப் பனுவல்களை இயற்றவும் தமிழ் மொழி வளஞ்சுரக்க வில்லையா? வடகலையும் தென்கலையும் நிலை கண்டுணர்ந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகிய உரையாசிரியர்கள் வடநூலார் கொள்கையில் அடிபட்டிருந்தும் தமிழ் மரபு இழுக்கா வண்ணம் உரைநூல்கள் இயற்றினாரன்றோ! வடவெழுத்தைத் தமிழில் பெய்து எழுதும் கொள்கை இன்றியமை­யாதென இவ்வுரையாசிரியர் காணவில்லையே? தமிழன்பர் என்றும், தமிழப் புலவர் என்றும் தமிழை வளம்பெறச் செய்வார் போலவும் தமிழுக்குப் புத்துயிர் அளிப்பர் போலவும், வாய்ப்பாரை சாற்றி ஆங்கிலம் வடமொழி ஆகி பிற மொழிகளில் தமக்குள்ள பெருமதிப்பினால் தமிழ்மொழி மேல் குறைகளை ஏறிட்டுக் கூறியும், தமிழ் மொழியின் சீரினை இழித்துக் கூறியும், மனம் போனவாறெல்லாம் சீர்திருத்தம் பேசத் தலைப்படுகின்றவர் போலித் தமிழரல்லவா? ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் கூறிய கொள்கையின்படி சீர்திருத்தங்களைப் புரிய நிரம்ப இடமிருந்தும் அவற்றைத் திருத்தத் துணியாது மொழியில் மொழியியல் தானும் தாம் உணர்ந்தறியாத தமிழ் மொழியைத் திருந்துவோமென்பது பேதைமதியன்றோ? இத்தமிழன்பர்களின் சீர்திருத்த முயற்சியால், தமிழன்னையின் எழில் நலம் மறுப்படா வண்ணம் பாதுகாப்பது தமிழரின் முதன்மையான கடன் என எண்ணுகிறேன்.

- தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார்


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

1 கருத்து:

  1. அன்புடையீர், வணக்கம். நாட்டிற்குத் தேவையான தமிழவேள் உமா மகேசுவரனாரின் எழுத்துச்சிதைவு குறித்த கருத்தினை நான் பதிந்திருந்தேன். தாங்கள் அதைத் தங்கள் வலைப்பூவில் பதிந்துள்ளதை இப்பொழுதுதான் பார்த்தேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி, எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம்.இனத்தைக் காப்போம்.

    பதிலளிநீக்கு