ஆயிரம் காலத்துப் பயிரை
ஒரே வாரத்தில் அறுவடை செய்ய
நிகழ்த்தப்படும் திருவிழா,
பெண் பார்க்கும் படலம்...!
சொந்தங்கள் புடைசூழ
சுழிக்கும் உம் புன்னகையும்
வியர்த்த உம் பாதங்களும்
என் வாசலில் வியாபித்திருக்க,
"மாப்பிள்ளை வந்தாராம்"
என்றென் தங்கை ஓடிவர,
தடதடவென்று தடுமாறிப்போனேன் !
அதுவரை இருந்த தைரியம்
அப்போதே கரையத்
தொடங்கிவிட்டது !
இனம்புரியாத நாணம்
இன்றோடு என் கண்களைப்
பூட்டித் திறவுகோலை
உம் கைகளில் திணித்தது !
முதல் முறை புடவை என்
முகத்தையே மாற்றியது ...
நேற்றிருந்த தாவணியும்
சல்வாரும் தலைமறைவாயின ....
உதறிய பாதத்தோடு
உங்களின் முன் உட்காருகையில்
உச்சி வியர்த்து மூச்சுத் திணறிப்
போய்விட்டது....
இருமுறைதான் உரசி இருக்கும்
நம் கண்கள் ,
இருநூறு முறையாயினும்
என் தோழியிடம் பகிர்ந்து
கொண்டிருந்திருப்பேன்
அந்நிகழ்வை ....!
இறைவனின் ஒப்பந்தப்படி
இருமனங்களின் மணத்திற்கான
அஸ்திவாரம்....
நமக்கு நிச்சயதார்த்தம் !
வெகுநாட்களாய் மௌனித்த
என் மகிழ்ச்சித் துணுக்குகள்
உம் வரிசைக்கேள்விகளால்
நிரம்பி கரைபுரண்டு
களித்திருந்தன.....
கேலிப் பேச்சுக்களும்
கிண்டல் ஏச்சுக்களும்
நிறைந்த சபையில்
உங்களின் வெட்கம் ஒரு
மார்க்கமாகவே இருந்தது
எனக்கு.....!
நீங்கள் ஊட்டிய இனிப்பை
இனிப்பை இன்றளவும்
சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
உங்களின் நினைவுகளோடு
சேர்த்து....!
ஒரே நாளில் என் துக்கங்களோடு
தூக்கத்தையும் களவாடிச்
சென்றவரே....
உங்களுக்காகக் காத்திருந்த
என்னிருபது வருடங்கள்
இம்மூன்று மாத இடைவெளியில்
தோற்று நிற்கின்றன....!
தனியே பேசுகிறேன் என்று
வீட்டில் அனைவரும்
கேலி பேசுகிறார்கள்....
ம்ம்ம் .. அவர்களுக்குத் தெரியாது
நான் உங்களிடம் தான்
பேசிக்கொண்டிருக்கிறேன் என்று....!
செய்வதறியாது என் நினைவுகள்
உங்களின் நினைவுகளைச் சுமந்து
தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றன ,
நம் மணநாள் காண...!
-யாரோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக