குதாய்கித்மத்கர்: காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் (கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..
“ நான் உங்களுக்கு போலீசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப் போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”
இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.
இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு: தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.
ஏப்ரல் 23, 1930 ல் காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாயினர்.
இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுட மறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுட மறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.
கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.
அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக