திங்கள், 11 ஜூன், 2012

இல்லாத ஊருக்கு செல்லாத வழியைக் காட்டுவதால் என்ன பயன்? - கே.எம்.கே.


நடுவண் அரசின் உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங், எல்லா மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். முஸ்லிம்கள் பெருகிவாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு முஸ்லிம் சப் இன்ஸ்பெக்டர் அல்லது ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிபிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தச் செய்தி 7/8-6-2012 மணிச்சுடரில் பிரசுரமாயிருக் கிறது. 8.6.2012 தினகரனில் இதே செய்தி வந்திருக்கிறது. செய்தியைப் படிக்கும்போது இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இதனை எந்த மாநில அரசு நடைமுறைப்படுத்துகிறது? என்ற வினாதான் பெரிதாக எழும்புகிறது.

கேரளாவில் 12 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் பிற்பட்ட வகுப்பினருக்கு இருக்கிறது. தமிழகத்தில் 3.5 சதவீதம் உள்ளது. ஆந்திராவில் 4 சதவீதம், கர்நாடகாவில் 5 சதவீதம், மணிப்பூரில் 4 சதவீதம் என்று இட ஒதுக்கீடு இருக்கிறது.

கேரளம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மணிப்பூர் ஆகிய இந்த ஐந்து மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம்கள் தங்களுக்குள்ள இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் காவல்துறையில் சேர முடியும். இந்த மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம்கள் பெருகிவாழும் பகுதிக் காவல் நிலையங்களில் முஸ்லிம் சப் இன்ஸ்பெக்டர் அல்லது இன்ஸ்பெக்டர் என்று நியமனம் செய்யப்படுவதற்குச் சாத்தியம் இருக்கிறது. இட ஒதுக்கீடு இல்லாத மற்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் வேலை-வாய்ப்பு பெற வழியே இல்லை. பொது பட்டியலில் மிக மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெறுகிறவர்கள் தேர்வு பெறுகிறார்கள். அந்தப் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெறுவது அபூர்வத்திலும் அபூர்வமாகும். இந்த நிலையில் இட ஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் முஸ்லிம் இன்ஸ்பெக்டர் எப்படி நியமிக்கப்பட முடியும்?

மத்திய உள்துறையின் கடிதம் ஓர் அறிவுரையே தவிர, ஆணை அல்ல. உண்மையில், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிம் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டுமானால், அந்த மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தாக வேண்டும். மத்திய உள்துறை மாநிலங்களுக்கு எழுத வேண்டிய கடிதம், முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தாக இருப்பது உசிதமானதாகும்.

மாநில அரசுகளின் கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிடலாமா? என்று சிலர் வினா எழுப்புவர். மத்திய அரசு நியமித்த நீதியரசர் சச்சார் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றிருக்கிறது. அந்தப் பரிந்துரைகளை அமுலாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

அதேபோல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையும் வெளிவந்திருக்கிறது. இந்தக் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சியாகவே மத்திய அரசு எல்லா சிறுபான்மையினருக்கும் என்று 4.5 சதவீதம் இடஒதுக்கீடு மத்திய வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி சேர்ப்புக்கு வழி கண்டிருக் கிறது. இன்று அது நீதிமன்றத்தில் இருந்தாலும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மத்திய அரசு ஏற்று செயல்படுத்தவும் முன்வந்திருக்கிறது.

இதையே மாநில அரசுகளும் பின்பற்றி, முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முன்வரவேண்டும் என்பதை மத்திய உள்துறை வலியுறுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என்று கடிதம் எழுது வது, `கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது� என்று சொல்லும் பழமொழிக்கு ஒப்பானதாகும்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் களுக்குரிய இட ஒதுக்கீடு விரைவாக அறிவிக்கப்பட்டால்தான், மத்திய உள்துறை செயலாளரின் ஆசை நிறைவேறும்.

இல்லாத ஊருக்குச் செல்லா வழியைக் காட்டுவதால் எவ்விதப் பயனும் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக