வியாழன், 28 ஜூன், 2012

கற்பில் கவனம் தேவை



( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )


அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் விடுதிகளிலும், உல்லாச மாளிகைகளிலும் ஒடுங்கிக் கிடந்த விபச்சாரம் இந்நாளில் ‘செல்போன்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சாலையோரத்தில் மாருதி கார்களில் நடைபெறுமளவிற்கு மலிந்து விட்டது. ‘இன்டர்நெட்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அளவு சமீபத்தில் மேலும் பெருகி விட்டது விபச்சாரம். இந்த விபச்சாரம் வெறும் கண்பார்வையால் கூட நிகழாமல் தடுக்கத் தீய ஆசைப் பார்வையை விலக்கிய விந்தை மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
  
ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தம்முடைய பாலியல் ஆசையுணர்வுகளையெல்லாம் கணவனுக்குள்ளேயோ தன் மனைவியர்களுக்கிடையேயோ கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கமான வாழ்வு!” என்பது உலக நீதி ஒத்துக் கொண்ட உண்மையாகும்.         குர்ஆனும் நபி மொழியும் கற்பிக்கும் இத்தகைய ஒழுக்க நெறிக்கு ‘கற்பு’ என்று பெயர்.

     ‘கற்பு’ எனும் சொல் இந்நாளில் பெண்களுக்கு மட்டுமே உரியது போல் பெரும்பாலோரும் எண்ணியுள்ளனர். உண்மை நிலை அதுவல்ல. ‘கற்பு’ எனும் மூன்றடுக்கு மாளிகை, பெண் எனும் ஒரு பாலரின் தனியுடைமையா? இல்லை. இருபாலரின் பொதுவுடைமையாகும். எனவே தான் திருமறை மூலம் இறைவன் நபியை நோக்கி, “(பிற ஆண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தம் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள பெண்களை நோக்கிக் கூறுவீராக!” (குர் ஆன் 24:31) என்று குறிப்பிட்டதுடன் (பிற பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள ஆண்களை நோக்கிக் கூறுவீராக!” என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், “தம் மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும்    (குர்ஆன் 33:35) அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெறுவதற்கு தகுதியுள்ள பத்து சாராரில் ஒரு சாரார் ஆவர்.’ (குர்ஆன் 24:31) என்றுதான் இறைமறை இயம்புகிறதேயல்லாமல் வெறும் பெண்களை மட்டும் தனியாகச் சொல்லவில்லை.
    
ஓர் ஆண், தன் மனைவியல்லாத அந்நியப் பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டு விட்டால் மட்டும் ‘பெண் கற்பழிக்கப்பட்டாள்’ என உலகம் பேசுகிறதே தவிர அந்தப் பெண் காதலன் என்ற பெயரில் அந்நிய ஆணுடன் உடலுறவு கொள்ள இணங்கும்போது ‘அவள் கற்பழிக்கப்பட்டாள்’ என் யாரும் குறிப்பிடுவதில்லை. கணவன் அல்லாதவன் பலவந்தமாக உடலுறவு கொண்டால் அழிகின்ற கற்பு ஒரு பெண்ணின் இசைவோடு நிகழும் உடலுறவினால் மட்டும் அழியாமல் நீடித்திருக்குமா என்ன? மனைவியல்லாத பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய கற்பு அவனாலேயே அழிக்கப்படுகிறதல்லவா? எனவே, ‘ஆண் கற்பழிக்கப்பட்டான்’ என்றும் சொல்வதில்லையே !
   

கற்பு பெரும்பாலும் நான்கு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறதெனக் கணிக்கலாம். தன் ஆசை தணிக்கப்படும் விஷயத்தில் போதிய திருப்தியைக் கணவன் மூலம் அடையவியலாத பெண்களாலும், மனைவியின் மூலம் போதிய திருப்தியை அடையவியலாத ஆண்களாலும் அவரவர் கற்பு அழிக்கப்படுகிறது. இவ்வாறு கற்பை இழப்பதில், பெண்களை விட ஆண்கள்தான் பெரும்பாலும் தீவிரமாக உள்ளனர். திருமணம் புரியும் நிலையிலுள்ள இரு தரப்பைச் சார்ந்த இளைய வயதினர் ‘காதல்’ எனும் காந்தத்தால் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கும் போது புதிய அனுபவத்தினால் பூரிப்படைய தம் கற்பை விடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த கற்பிழப்பில் இரு தரப்பினரும் சமமான பங்கை வகிக்கின்றனர்.
    
வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், வாழ்வில் ஓரளவுக்குக் கிடைக்கும் வசதிகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் பெண்களில் சிலர் தம் கற்பைத் தாமே அழித்து விடுகின்றனர். இத்தகைய நோக்கில் கற்பை இழப்பது பெண்களுக்கிடையேதான் காணப்படுகிறது. ஆசை வெறி பிடித்த மிருகங்கள் அப்பாவிப் பெண்களைச் சில நேரங்களில் அத்து மீறித் தூக்கிச் சென்று பலவந்தமாகக் கற்பழித்து விடுகின்றனர். இம்முறையிலுள்ள கற்பழிப்பு செய்வோர்களோடு மட்டுமே தொடர்புடையதாகவுள்ளது.


     இத்தகைய நான்கு விதமான கற்பழிப்புகளில் நான்காவதாகக் கூறப்பட்ட வகையில் சிக்கிக் கொண்ட பெண்களைத் தவிர ஏனைய அனைத்து வகைக் கற்பழிப்புகளில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் அல்லாஹ்வின் கடுமையான கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்களாவர்.

     ‘விபச்சாரம்’ எனப்படும் இத்தகைய கற்பழிப்பினைக் குறித்து இறைவன் “விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்” நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் அது (பல்வேறு கேடுகளுக்கான) தீய பாதையாகவும் இருக்கிறது” என்று திருமறை மூலம் எச்சரிக்கிறான (குர்ஆன் 17:32) இறைவன் மனிதர்களை நோக்கி “விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில் ’விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்’ என்று விலக்கியிருப்பது எத்துணை அழுத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘நெருப்பைத் தொடாதே!’ என்பதை விட ‘நெருப்பின் பக்கமே நெருங்காதே!’ என்றுரைப்பது வலிவு மிக்கதல்லவா? வார்த்தைச் சித்தர் வலம்புரியார் உவமைப்படுத்துவது போல் ‘விபச்சாரம்’ எனும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்’ என்று மட்டும் இஸ்லாம் கூறாமல் இந்தக் கொசுக்கள் உருவாவதற்குக் காரணமான ‘ஆசைப்பார்வை’ எனும் சாக்கடையையே அகற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘விபச்சாரம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்து விடும் அந்நிய ஆண் – பெண் தனிமையாக இருக்கும் நிலை கூட மேற்கண்ட வசனத்தின் மூலம் மறைமுகமாக விலக்கப்பட்டிருக்கிறது.


     ஒருவன் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் போது அங்கே அவர்களோடு மூன்றாம் நபராக ஷைத்தானும் இருக்கிறான் எனும் நபிமொழி (உமர் (ரளி), திர்மிதீ) மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை மேலும் விளக்குகிறது.


     ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் மிகப் பெரியதாகக் கருதப்படும் பாவம் எது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி, அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அவனை வணங்குவதில் வேறு ஒருவனை அல்லது ஒன்றை அவனுக்கு இணைகற்பிப்பது’ என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் மிகப் பெரியது? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘உன்னோடு உணவருந்துவதை (வறுமையை) அஞ்சி உம் குழந்தையைக் கொலை செய்வது!’ என்றார்கள். ‘இதற்குப் பின் எந்தப் பாவம் பெரியது? என்று அவர் மீண்டும் கேட்டதும், நபியவர்கள் அவரை ‘உம் அண்டை வீட்டாரின் மனைவியோடு நீர் விபச்சாரம் செய்வது பெரிய பாவம்!’ என்று பதிலளித்தார்கள். அந்நேரம் அண்ணலாரின் மேற்கண்ட பதிலை உண்மைப்படுத்தும் நிலையில் – அருளாளனின் நல்லடியார்களான அவர்கள்) அல்லாஹ்வுடன் இன்னொரு இறைவனை வணங்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் விலக்கிய உயிரை அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள்.’ விபச்சாரமும் செய்ய மாட்டார்கள்’ எனும் திருவசனத்தை (குர்ஆன் 25:68) அல்லாஹ் அருளினான். (இப்னு மஸ்வூத் (ரளி), புகாரீ, முஸ்லிம்) அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பொதுவாகக் கொடிய பாவமான விபச்சாரம் அண்டை வீட்டானின் மனைவியோடு அமையும் போது பாவம் இன்னும் கொடியதாகி விடுகிறது எனும் உண்மையினைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில் அண்டை வீட்டானிடம் அணுக வேண்டிய நல்லன்பும் நம்பிக்கையும் இதனால் தகர்த்தப்படுகிறது.


கற்பைக் காப்பவர்கள் சுவனத்தில் கண்ணியப்படுத்தப்படும் எட்டு சாராரில் ஒரு சாரார் என்று குர்ஆன் 23:29 கூறுகிறது. பிர்தவ்ஸ் என்ற உயர் சுவனத்தின் வாரிசுக்காரர்களாய் அமைந்து வெற்றி பெறும் மூமின்களின் ஆறு சாராரில் கற்பைக் காப்போரும் ஒரு சாரார் ஆவர் என்றும் அருள்மறை (23:5) உணர்த்துகிறது. ஒருவர் இரு தொடைகளுக்கிடையில் இருக்கும் இன உறுப்பையும் இரு தாடைகளுக்கிடையில் இருக்கும் நாவையும் (தீய வழியிலிருந்து) காத்துக் கொள்வதாக என்னிடம் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவருக்கு நான், சுவனத்தைப் பெற்றுத் தர பொறுப்பேற்கிறேன்” எனும் நபிமொழியும் (ஸஹ்லிப்னு ஸஃது (ரளி, புகாரீ) மேற்கண்ட மறைமொழிகளும் இம்மையில் கற்பைக் காப்போர் மறுமையில் பெறவிருக்கும் இனிய வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எனவே இம்மையின் அற்ப ஆசைக்காகக் கற்பை இழந்துவிட்டு மறுமையின் அற்புத ஆனந்தங்களை இழக்க நேரிடும் இழிநிலையிலிருந்து நம்மை நாம் காப்போம்! நாயனருள் பெற்றிட முனைவோம்.

நன்றி : சிந்தனை சரம் – நவம்பர் 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக