தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.
மறியல் போராட்டம் அன்று விடியற் காலை 8.30 மணிக்கு ரயில் வண்டியின் முன்னர் படுத்து திருப்பூர் மொய்தீன் அவர்கள் மறியல் செய்தார்கள். இதுவே மறியல் இயக்கத்தின் தொடக்கம். உடனேயே அவர் போலீஸ் சாரால் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சரியாக காலை 8.45 மணிக்கு திருப்பூர் குமரனும் ரயில் முன் படுத்து மறியல் செய்தார். காவல் துறையினரின் தடியடிக்கு மத்தியிலும் சுதந்திர கொடியின் மானத்தை காத்தார். அமரரானார்.
சுதந்திர போராட்ட காலத்தில், தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தளபதி என அழைக்கப்பட்ட பட்டுகோட்டை சிங்கம் அழகிரிசாமி அவர்கள் அன்று நடைபெற்ற அரசியற் கூட்டத்தில் ஒரு திருப்பூர் குமரனுக்கு ஈடாக எமக்கு ஒரு திருப்பூர் மொய்தீன் கிடைத்து இருக்கின்றார். குமரனின் பணியை மொய்தீன் தொடருவார். என குறிப்பிட்டார். அழகிரிசாமி அவர்களின் கணிப்பு சற்றும் பிசகவில்லை. மொய்தீன் அவர்களின் பணி அவ்வாறே அமைந்து இருந்தது.
மொய்தீன் அவர்கள் நாவன்மை மிக்க பேச்சாளர் ஆவார். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தம் சிம்ம குரலால் இயக்க எழுச்சியை ஊட்டினார். ஆங்கில கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் தெளிவுபடுத்த முடியாத சிக்கலான அரசியற் பிரச்சினைகளை எல்லாம் தமக்கே உரிய கம்பீர தொனியில் கேட்போர் நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளக்க வல்ல ஆற்றல் பெற்று விளங்கினார். தான் தோன்றி தலைமை தனத்தை வெறுத்தவர். இயக்க ரீதியான கட்டுபாடுகளுக்கு பணியும் பண்பு உடையவர். சமுதாய பணியையே வாழ்கையின் லட்சியமாக வரித்து கொண்டவர்.
தேசிய போராட்ட காலங்களிலும் சரி, முஸ்லீம் லீகின் அரசியற் பணிகளிலும் சரி மொய்தீன் அவர்களின் தொண்டு தனித்துவ முத்திரை பெற்று திகழ்ந்தது. லீகிற்குள் மிதவாத கொள்கைக்கு மாறுபட்ட தீவிர செயற் போக்கினை ஆதரித்தவர். மக்களுடன் மக்களாக வாழ்ந்து, மக்களுடைய துன்பங்களையும் துயரங்களையும் தெளிவாக உணர்ந்து இருந்தார். இதனால் மொய்தீன் அவர்கள் இடதுசாரி அரசியல்வாதி என்றும் அழைக்கபட்டார்.
மொய்தீன் அவர்களுடைய இந்த தனித்துவ போக்கு 1941 ஆம் ஆண்டிலேயே தூலமாக தெரிந்தது. அவ்வாண்டில் முஸ்லீம் லீகின் தலைமை பதவிக்கு ஜனாப் அப்துல் ஹமீது அவர்களும், கா ஈ தே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களும் போட்டியிட்டனர். அப்துல் ஹமிது இடதுசாரி மனப்பான்மை உள்ளவர் அல்ல. எனினும் மிதவாதி அல்லர். இதன் காரணமாக மொய்தீன் அவர்கள் அப்துல் ஹமீது அவர்களை ஆதரித்தார். அதன் விளைவாக தான் இன்று மொய்தீன் அனுபவிக்கிறார் என்று அவருடைய அரசியல் வாழ்வை கூர்ந்து கவனித்தவர்கள் அபிபிராயபட்டதாகும்.
மொய்தீன் அவர்கள் பணி பயன் பற்றட்டது. பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் சிறிது காலம் செயற் படாமல் இருந்தது. அப்பொழுது கூட மொய்தீன் அவர்களின் பணி பட்டி தொட்டி எல்லாம் தொட்டு பரவியது.
அவருடைய கலப்பற்ற தொண்டு மனப்பான்மையும் , சீரிய நாவன்மையும், பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் முறையாக செயற்படத் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, காயல்பட்டினம் தொல்குடியில் உள்ள மக்கள் மொய்தீன் அவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தகது. 1954 ஆம் ஆண்டில் இதற்காக காயல்பட்டிணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவிலே அவருக்கு வீரவாள் வழங்கபெற்றது. தளபதி என்ற பெயரும் சூட்ட பெற்றது.
இந்தியாவில் முஸ்லிம் லீகின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்கான முயற்சிகள் 1956 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டது. லீகின் அமைப்பாளராக இஸ்மாயில் சாஹிப் தேர்வு செய்யபட்டார். இதே ஆண்டில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. முஸ்லிம் லீக் கலைக்கபடல் வேண்டும் என்றும், அன்றேல் முஸ்லிம் மக்கள் வன்முறையில் பழிவாங்க படுவர்கள் என்றும், பட்டதாரிகளான முஸ்லிம்கள் அச்சம் தெரிவித்தனர். சிலர் லீகை கலைத்துவிட்டு, சுய ஆதாயம் பெறவும் விழைந்தனர்.
எப்படியும் முஸ்லிம் லீக் செயற்படல் வேண்டுமென்ற கொள்கையில் இஸ்மாயில் சாஹிப் உறுதியாக நின்றார். அப்பொழுது அவருடைய கொள்கைகளுக்கு உறுதுணையாக நின்று, அவருடைய முயற்சியில் பக்க பலமாக உழைத்தவர்கள் திருப்பூர் மொய்தீன், கே.டி.எம். அஹ்மத் இப்ராஹிம் சாஹிப், எம். எல். எ. மஜீத், ராஜாகான் ஆகியோர். உழைப்பு பயன் தந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயர் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மறு பெயர் சூட்டப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அரசியற் நிறுவனமாக செயற்படுவது பற்றிய வாக்கு எடுப்பில் ஒன்பது பேர் எதிர்த்து வாக்கு அளித்ததுடன், சிலர் லீகின் உறுப்பினர் பதவிகளையும் துறந்தனர். எதிர்தோருள் சையீத் அப்துல் காதர் அவர்கள் குறுபிடதக்கவர். ஆயினும், அப்பொழுது அதனை அரசியல் நிறுவனம் ஆக்க வேண்டும் என்று வாக்கு அளித்த எட்டு பேருடைய சலியாத உழைப்பினால் 1956 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட கோட்பாடுகளையும், சட்ட திட்டங்களையும் அடித்தளமாக வைத்து 1958 ஆம் ஆண்டளவில் இயக்க ரீதியாக செழிப்புடன் செயற்பட தொடங்கியது.
1960 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீகின் மாநாடு குரோம்பேட்டை இல் நடைபெற்றது. இம்மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் எனில் இந்த மாநாட்டில் தான் பொது தேர்தலில் போட்டி இடுவது என்ற தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது. இத்தீர்மானத்திற்கு அமைய 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொது தேர்தலில், எதிர் கட்சிகள் சிலவற்றின் ஆதரவுடன் லீக் வேட்பாளர் ஏழு பேர் தமிழ்நாட்டில் போட்டி இட்டனர். அந்த தேர்தலில் எந்த வேட்பாளரும் வெற்றி ஈட்டவில்லை. லீகின் ஆதரவுடன் போட்டி இட்ட திராவிட முன்னேற்ற கழகத்தினர் தமிழ்நாடு சட்ட சபையில் ஐம்பது இடங்களில் வெற்றி ஈட்டினர். தேர்தலிலே செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்நாடு மேல் சபைக்கு லீகின் பிரதிநிதி ஒருவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க. முன்வந்தது.
பொது தேர்தலில் போட்டி இட்டு தோல்வி அடைந்த எவரையும் மேற்சபைக்கு வேட்பாளராக நிறுத்துவது இல்லை என்ற முடிவினை லீக் எடுத்து இருந்தது. இதன் காரணமாக மேற்சபைக்கு உறுபினராகும் நல்லதொரு சந்தர்பத்தை திருப்பூர் மொய்தீன் இழக்க நேரிட்டது. இருப்பினும் ராஜ்ய சபைக்கு லீக் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் வாய்ப்பு வரும் பொழுது திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கே முதலிடம் கொடுப்பது என்று அப்பொழுது கொள்கை அளவில் ஏற்று கொள்ளப்பட்டது.
1964 ஆம் ஆண்டில் அத்தகைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. லீகில் புதிதாக சேர்ந்த சில ஆங்கில பட்டதாரிகள், முது பெரும் அரசியல்வாதியான மொய்தீன் அவர்களுக்கு போதிய ஆங்கில அறிவு இல்லை என்பதை காரணமாக காட்டி அந்த பெருமை அவருக்கு கிட்டாதவாறு தடுத்தனர். இது மொய்தீன் அவர்களுக்கு எதிராக லீகின் அங்கத்தினர்கள் இயற்றிய மாபெரும் அநீதியாகும். ஏன் எனில் 1962 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு போட்டி இடும் தகுதி திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கு இருப்பதாக கணித்து, அவரை ஒரு வேட்பாளராக நிறுத்திய லீகின் காரிய சபை, 1964 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு தகுதி இல்லை என முடிவெடுத்தது எவ்வகையிலும் நியாயம் ஆகாது. இந்த செயல் அன்று தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1966 ஆம் ஆண்டில் சென்னை மேற் சபைக்கு காலியாகும் இடம் ஒன்றினை எப்படியும் .மு.க ஆதரவுடன் மொய்தீன் அவர்களுக்கு பெற்று கொடுப்பதாக அப்பொழுது மிகுந்த சமாதானம் கூறபெற்றது. எனினும் இந்த வாக்குறுதி காப்பாற்ற படவில்லை. சென்னை மேற் சபை உறுப்பினர் பதவி தேவை இல்லை . சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவி வேண்டும் என்று ஆம் ஆண்டில் லீக் செய்த தீர்மானம் வேண்டும் என்றே மொய்தீன் அவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கை மோசடி என அன்றைய முஸ்லீம் லீக் பிரமுகர்களே கருத்து கூறினர்.
1967 ஆம் ஆண்டில் பொது தேர்தல்கள் வந்தன. சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதின் பேரில் மொய்தீன் போட்டியிடவில்லை. 1968 ஆம் ஆண்டில் ராஜ்ய சபைக்கு லீகின் வேட்பாளராக மொய்தீன் அவர்களை நிறுத்துவது என வாக்குறுதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு வந்தது. லீகின் காரிய கமிட்டி கூடியது. ராஜ்ய சபைக்கு லீகின் மனு கோரி மொய்தீன் அவர்களுடன் கே.டி.எம்.அஹ்மத் இப்ராஹிம் சாஹிப், எஸ்.எ. காஜா மொய்தீன் ஆகியோர் விண்ணப்பித்து இருந்தனர். திருப்பூர் மொய்தீன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீண்டும் மீறப்பட்டு, யாரை லீகின் வேட்பாளராக நிறுத்துவது என்பதை காரிய சபை வாக்கெடுப்பில் காஜா மொய்தீன், திருப்பூர் மொய்தீன் அவர்களை காட்டிலும் ஐந்து வாக்குகள் அதிகம் பெற்றார்.
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படல், தனக்கு பதவிகள் கிட்டக்கூடிய சந்தர்பங்கள் ஒவொன்றாக கை நழுவியமை பற்றி பாராட்டாது, கவலையோ, ஏமாற்றமோ சிறிதும் கொள்ளாது, தமது அரசியற் பணிகளை சிறப்பாக செய்து வந்தவர். இதுவே மொய்தீன் அவர்களின் சிறந்த பண்பிற்கு உதாரணமாகும்.
அன்றைய சூழலில் ஜனாப். தை.அ. அப்துல் காதர் அவர்களுக்கும் மொய்தீன் அவர்களுக்கும் உள்ள தொடர்பினை குறிப்பிடுதல் சற்று பொருத்தமானதாகும். அப்துல் காதர் அவர்கள் லீகின் பொருளாளராக ஏழு ஆண்டுகள் பணி செய்தவர். முஸ்லீம் லீக் அரசியற் கட்சியாக செய்யற்படுவதில் திருப்பூர் மொய்தீன் அவர்களுடன் இவர் அன்று காலகட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்டு இருந்தார். பின்னர் அவரது வலக்கரமாக இணைந்து உழைத்து வந்தார். சென்னை மேற்சபைக்கு லீகின் மனுகோரி இருவர் போட்டி இட்டனர். ஒருவர் தை.அ. அப்துல் காதர் மற்றவர் ஜானி சாஹிப். தை.அ. அவர்களும் ஐந்து வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார். மொய்தீன் அவர்கள் மீது கொண்டுள்ள பற்று காரணமாக தான் தை.அ. தோற்கடிக்கப்பட்டார் என்று அன்றைய அரசியல் வட்டாரத்தின் கணிப்பாகும்.
திருப்பூர் மொய்தீன், தை.அ. செ. அப்துல் காதர் போன்றோர் சுய பலன் கருதாது பொதுப்பணி புரியும் பண்பினர். லீகின் கட்டுபாடுகளுக்கு, எவ்வளவு நம்பிக்கை மோசடிகள் நடைபெற்ற போதிலும், கீழ்படிந்து பணி புரிந்து, லட்சியத்துடன் வாழ்ந்தவர்.
எந்த அரசியற் கட்சிக்குள்ளும் உள்கட்சி போராட்டம் நடைபெறுவது உண்டு. இந்த உள் கட்சி போராட்டம் கட்சியின் கொள்கை அடிப்படையில் மட்டுமே நடைபெற்றால், வரவேற்கலாம். ஜனநாயக வளர்ச்சிக்கு இந்த உள்கட்சி போராட்டம் உதவியாக இருக்கும். ஆனால் முஸ்லீம் லீகில் அன்று நடைபெற்ற உள்கட்சி போராட்டம் வேறு வகையில் அமைந்து இருந்தது. கோஸ்டி பிரிவினர் ஒருவரை ஒருவர் அழிப்பதற்கும், அடக்கி ஒடுக்குவதற்கும் பயன்படுத்த பட்ட செயல்கள் அன்று முதல் இன்று வரை அக்கட்சி வளர முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணமாகும்.
முஸ்லீம் லீகிற்குள் அன்று புதிதாக இணைந்த ஆங்கில கல்வி பெற்றவர்கள் (அப்துல் சமது ) ஒரு பிரிவாகும், மற்றவர்கள் ஒரு பிரிவாகவும் செயற்பட்டு வந்தனர்.
தமக்கு ஆங்கில அறிவு இருப்பதாக நினைத்து அரசியல் வானில் கொடி கட்டி பறக்க வேண்டிய கர்மவீரர்களை அதற்கு பலிகடா ஆக்கியது மிக பெரிய தவறாகும். இதனால் முஸ்லீம் லீகின் வளர்ச்சி பெருமளவில் பாதிப்பு அடைந்தது. திருப்பூர் மொய்தீன் போன்றோர் அனுபவம் மிக்கவர்கள். மக்களின் நம்பக தன்மைக்கு ஏற்ப உண்மையாக நடந்தார். அவருக்கு தமிழக அரசியல் வரலாற்றில் கிடைத்த மரியாதை இன்றைய இளைய சமூகத்துக்கு தெரியாமல் போனது வேதனைக்குரியதாகும்.
பொது மேடைகள் மூலம் பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட செம்மல்களுள் மூவர் விசேசமாக குறிப்பிட தக்கவர்கள். முதலில் பெரியார் ஈ.வே.ரா.வை குறிப்பிடலாம். அவர் கண்ட மேடைகள் பதினைந்து ஆயிரத்திற்கு அதிகம் என்று கணிப்பர். அடுத்தது திருப்பூர் மொய்தீன். இவர் சுமார் பத்து ஆயிரம் மேடைகளில் உரை நிகழ்த்தி உள்ளார். மூன்றாவது தமிழக முதல் அமைச்சராக இருந்த அண்ணாதுரை சுமார் ஏழு ஆயிரம் என்று கணிக்கப்படுகிறது.
இனிமேல் திருப்பூர் மொய்தீன் அவர்கள் எந்த ஒரு பதவிக்கும் போட்டி இடுவதில்லை என்ற முடிவிற்கு வந்தார். பதவிப் பித்தர்கள் பதவியை அனுபவித்து கொண்டு போகட்டும். நம் வழி பணி செய்து கிடப்பதே என்ற அடிப்படையில் தம் வாழ் நாள் வரை சமுகப் பணி செய்து மறைந்தார்.
ஒரு சமுதாய தலைவரை முஸ்லீம் லீக் மறந்தது மறைத்தது இல்லாமல் தமிழ் (முஸ்லீம்) சமுகம் அவரை நினைவு கூற மறந்தது வேதனையான செயலாகும்.
- அனுப்பி உதவியவர் : ராஜகிரி கஸாலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக