புதன், 23 ஜனவரி, 2013

நெய்யாக உருகாதோ நெஞ்சம்...


கவிஞர், சிந்தனையாளர் ஜனாப். ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்களின் மீலாது நபி சிறப்புக் கவிதை
நெய்யாக உருகாதோ நெஞ்சம்...



 வாள்முனையில் கொன்றொழிக்க
வந்தவனே நடுநடுங்க
ஆள்வீரம் காட்டுபவர்
அல்லாஹ்வின் திருப்பெயரால்........1.

கல்சுமப்பார், மண்சுமப்பார்,
கடுந்துயரம் பொறுத்திடுவார்
அல்லாஹ்வின் புகழிசைப்பார்
அனைவருக்கும் நலமுரைப்பார்.........2

சிந்தனையை மதித்திடுவார்
செல்வத்தை மதித்தறியார்
எந்தநிலை என்றாலும்
இறைநினைவை இழந்தறியார்.............3

நல்லெண்ணம் கொள்வதற்கே
நாயன்அவன் முதற்தகுதி
உள்ளவனென்(று) உணர்த்துபவர்
உலகிரண்டின் நாயகமே!..........................4

புகழ்கொண்ட சிகரத்தில்
போயிருக்கும் வேளையிலும்
புகழெல்லாம் அல்லாஹ்வின்
புகழ்”என்பார் புனிதரிவர்...........................5

செங்குருதி சிந்திடினும்
சிரத்தில்அடி பட்டிடினும்
வெங்கொடுமை இணைவைப்பை
வீழ்த்திடுவார் நாயகமே!...........................6

அசத்தியத்தை அழித்தஅவர்
அல்லாஹ்வே உவந்தளித்த
நிசத்தைநிலை நாட்டுவதால்
நீணிலத்தை நிமிர்த்திடுவார்....................7

எழுத்தேனும் சொல்லேனும்
இறைத்தூதர் வாயுரைத்தால்
பழுத்ததொரு சத்தியமே!
பயன்கொள்ளும் பாருலகே!!.....................8

அச்சமென ஒன்றறியார்
அல்லாஹ்வுக் கெதிரென்றால்
துச்சமென ஊதிடுவார்
தூயதிரு துணிவுடையார்...........................9

அல்லாஹ்வின் பேரன்பை
அடைந்திடவே விரும்புமவர்
எல்லார்க்கும்-குழந்தைகட்கும்
இதயத்தால் அன்புசெய்வார்......................10

நேரத்தை நிர்வகிப்பார்
நெருக்கடியில் தடுமாறார்;
பாரங்கள் சுமந்தாலும்
பக்தியுடன் தொழுதிடுவார்..........................11

மன்னித்தே தண்டிப்பார்!
மனங்களையே வென்றெடுப்பார்
உன்னிப்பாய் உணர்பவர்கள்
உவந்துவந்து தோற்பாரே.............................12

தன்னடக்கச் சின்னமவர்
தாராள எண்ணமவர்
முன்னெடுக்கும் மாதிரிக்கே
முடிசூடா மன்னரிவர்.....................................13

கடன்பட்டும் அறம்செய்வார்,
கருணையினால் உரம்பெய்வார்
உடன்பட்டார் மீதுயரும் 
உட்பாசம் காட்டிடுவார்!.................................14

பகையறியார், வெறுப்பறியார்
பண்புகளைத் தாமறிவார்
மிகையுரையா மேலவரை
மேவிடுவோம் காலம்வரை...........................15

தவறான நம்பிக்கை
தந்தறியாத் தலைவரிவர்
கவர்வதுபோல் கவர்ந்திடவே
காசினியில் யாருமுண்டோ?........................16

தாம்ஆற்றும் பணியெதிலும்
தடுமாற்றம் ஏதுமிலார்
ஏமாற்றும் வேலைஇலார்,
இவரன்றோ தனித்தலைவர்...!........................17

இன்னாசெய் மக்கள்தமை
எதிர்த்தொழிக்க வாய்ப்பிருந்தும்
நன்னயத்தைச் செய்(து,)அவர்க்கும்
ஞானம்வரச்செய்வாரே!....................................18

உறவினர்தம் நம்பிக்கை
ஒன்றுபடா திருந்தாலும்
பரிவோடே அவர்உறவைப்
பாராட்டும் நாகரிகர்.............................................19

உடன்பிறந்தார் தமைவிடவும்
உவந்(து), உவந்து  நேசிக்கும்
படையொன்றை உருவாக்கிப்
பாரெங்கும் பரப்புபவர்!........................................20

சிறுபறவை சிறகசைப்பில்
சிறப்பெதுவும் இருந்தாலும்
உறும்கல்வி உரைத்திடுவார்
உற்றுணரும் நாயகமே........................................21

சொற்சுத்தம், செயல்சுத்தம்,
சொந்தஉடல் அதுசுத்தம்
பற்சுத்தம் என்றுரைத்த
பலசுத்தம்,பரிசுத்தம்!............................................22

வெற்றிவரும் வேளையிலும்
விருப்பமுடன் கஃபாவை
சுற்றிவரும் அவர்திருவாய்
சொல்வது ’குர் ஆன்’வசனம்................................23

வாள்பலத்தால் தோள்பலத்தால் 
வரக்கூடும் சிலவெற்றி
போல்அல்ல இறையருளால்
புனிதர்இவர் பெறும்வெற்றி...................................24

தீமைக்குத் தீமையினால்
தீர்வில்லை;நன்மையையே
சேமிப்பார்;அருள்செய்வார்
சிறந்தென்றும் விளங்குகிறார்................................25

முந்திஸலாம் உரைத்திடுவார்
முதியவரோ, குழந்தைகளோ
சந்திப்போர் மகிழ்வதிலே
சாதிப்பார் சாந்த நபி!...................................................26

உண்டிடவும் பருகிடவும்
உடல்-உளத்தைப் பேணிடவும்
அன்போடும் பரிவோடும்
அறிவுரைகள் கூறிடுவார்..........................................27

மெய்யான அருட் கொடையாய்
மேதினிக்கு வந்தீரே!
நெய்யாக உருகாதோ
நெஞ்சம்உமை நினைக்கையிலே.... ............................28 



                                                      ---ஏம்பல் தஜம்முல் முகம்மது.
************************************************************************************************************************
1.பாருலகம்,காசினி-உலகம், (2) நம்பிக்கை-ஈமான்


செவ்வாய், 22 ஜனவரி, 2013

அன்பர் அமீர் அப்பாஸின் முகநூல் சிந்தனைகள் -2


அந்த கதவுக்கு பின்னால்தான் 
ஆயிஷா இருக்கிறாள்
கதவுகள் போதாதென
அவள் விரும்பிய வண்ணத்தில் 
திரைச்சீலையும் தொங்குகிறது.
அந்த கதவு இரும்பினால் ஆனது அல்ல .
பழைய மரத்தினால் ஆனது ,வலுவற்றது.
உளுக்கத் துவங்கியிருக்கிறது இப்போதெல்லாம்.
அதைத் தாழிடும் உரிமை 
ஆயிஷாவினுடையதே.... 

அந்த வழியே செல்லும்
கோவில் யானையை
அவளுக்கு மிகவும் பிடிக்கும் .
மதம் கொள்ளும்
சாத்தியங்களுள்ள யானை ,
பொய்ச் சங்கிலியால்
பிணைக்கப்பட்டிருக்கும் சூட்சுமம்
ஆயிஷா அறியாள் .....

என் சொற்பொழிவை கேட்ட நண்பர்களுக்கு தெரியும்.
எல்லா கூட்டத்திலும் தவறாமல் ஒரு வரலாற்றைச் சொல்வேன்.அதை உங்களிடம் 
பகிர்ந்து கொள்கிறேன்.
இராமராஜ்ஜியம் வர வேண்டும் என்று 
பேசிய.. அண்ணல் காந்தியடிகள் 
... 
அதைப்பற்றி குறிப்பிடும் போதெல்லாம்
அந்த ஆட்சி கலீபா உமர் அவர்களின் ஆட்சியைப் போல நீதியாக இருக்க வேண்டும் என்பார்.

நான் கலீபா உமர் அவர்களின்
வரலாற்றைப் படித்தேன்.

ஒரு முறைகலீபா உமர் அவர்கள்
தன் ஆட்சிக்கு உட்பட்டஜெருசலேம் நகருக்கு
அரசு முறைப் பயணம் செல்கிறார்.

அவரை அங்கிருக்கும் தேவாலயத்தில்,
பாதிரியார்கள் வரவேற்கிறார்கள்.
அவர்களுடன் அன்போடு உரையாடுகிறார்
உமர் அவர்கள்.

தொழுகைக்கான நேரம் வந்ததுஉமர் அவர்கள் பாதிரியார்களிடம் கூறி விட்டு
தொழுகைக்கு தயாரானார்.

அப்போது அவர் மீது பேரன்பு கொண்ட பாதிரியார்கள் ”எங்கள் தேவாலயத்தின் ஒரு பகுதியில் கூடமெக்கா நோக்கி.. நீங்கள் தொழுகை செய்யலாமே? ”என்று அன்பினால் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அதை மெளனமாக மறுத்துதேவாலயத்தின் வெளிப்புறம் சென்றுவெட்டவெளியில் தொழுகை செய்கின்றார் உமர் அவர்கள்.

தொழுகை முடிந்துவிருந்துக்கான வேளை வந்தது.பாதிரியார்களுடன் சேர்ந்துவிருந்து உண்டார்.அப்போது ஒரு இளம் பாதிரியார்மனதில் பட்டதைப் போட்டு உடைத்தார்.

இத்தனை அன்பாக சகோதரனைப்போல பழகும்
நீங்கள் வழிபாடு என்று வந்த போது மட்டும்,
வேறுபாடு காட்டினீர்களே ஏன்?” என கேட்டார்.

அப்போது உமர் அவர்கள் பதில் அளித்தார். ”உங்கள் அன்பை மதித்துஒரு வேளை இந்த இடத்தில் தொழுகை செய்திருந்தால்வரலாற்றில் குறிப்பு எழுதப்படும்இது உமர் தொழுகை செய்த பள்ளிவாசல் என்று பெயர் பெறும்.

ஒரு காலம் வரும்நீங்களும் நானும்
உயிரோடு இருக்க மாட்டோம்.
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த
என் மக்களில் சிலர்கேள்வி எழுப்புவார்கள்.

உமர் தொழுகை செய்த இடம்
எப்படி தேவாலயமாக இருக்க முடியும்?
பள்ளிவாசலாக மட்டுமே இருக்க முடியும்” என்று உரிமை கோருவார்கள்.

அதில் சிலர் கோபம் கொண்டுஆயுதம் ஏந்தி இடிப்பதற்கு முனைந்து விடுவார்கள்ஆகவே தான்இந்த சூழலைதவிர்த்துக் கொண்டேன்.வருங்கால தலைமுறையின் சமூக அமைதி கருதினேன்உங்கள் இடத்தில் தொழ மறுத்தேன் என்றார்.

ஒரு ஆட்சியாளன் தன் நாட்டு நலனை மீறிஅடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சிந்திக்க வேண்டும்அதனால் தான்அண்ணல் காந்தி மதச்சார்பின்மையின் முன்னோடியாக உமரின் வரலாற்றை நேசித்தார்.

இத்தகைய நல்லெண்ணம் அத்வானிகளுக்கு இருந்திருந்தால்பாபர் மசூதி உடைக்கப் பட்டிருக்காது.
பொது அமைதிக்கு ஒரு போதும் தீங்கு நேர்ந்திருக்காது.