சனி, 10 டிசம்பர், 2011

எல்லாம் அவனே.



எல்லாம் அவன் தஜல்லிய்யாத் வெளிப்பாடுகள்

'அறிந்துகொள் நிச்சயமாக அவர்கள் (மக்கத்து காபிரீன்கள்) அவர்களின் ரப்பாகிய அல்லாஹ்வை சந்திப்பதில் கடுமையான சந்தேகமுடையவர்கள் ஆவர் அறிந்துகொள் நிச்சயமாக அவன் (அல்லாஹ்) ஒவ்வொறு வஸ்துவையும் சூழ்தவனாய் இருக்கின்றான்'.(அல் குர்ஆன் சூறத்து ஹாமீம் அஸ்ஸஜதா 54ம் வசனம்) இவ்வசனத்தின் சுருக்கமான சாராம்சம் என்னவெனில் மக்கத்தில் வாழ்ந்த காபிரீன்கள் ஒருவன் மரணித்தபின் அவன் எழுப்பப்படுவான் என்பதிலும் அவன் செய்த நன்மை தீமைக்கு கூலி வழங்கப்படும் என்பதிலும் கடுமையான சந்தேகமுடையவர்களாக இருந்தார்கள் ஏனெனில் ஒருவன் மரணித்து அவனை எரித்துச் சாம்பலாக்கிய பின் அல்லது அவன் மண்ணில் புதைக்கப்பட்டு அவன் சரீரம் அழிந்து மண்னுடன் மன்னாகியபின் அவனை எழுப்புவதும் அவனுக்கு கூலி வழங்குவதும் எங்ஙனம்? சாத்தியமாகும் என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள் சந்தேகத்திருந்தார்கள் மேற்கூறிய மறைவசனம் ஒரேயொரு வசனம்தான் ஆயினும் அது இரண்டு சொற்றொடர்களில் ஆனாது;

1. அலா இன்னஹும் பீமிர்யத்தின் மின்லிகாயி றப்பிஹிம் “அவர்கள் அல்லாஹ்வைக் காண்பதில் சந்தேகமுள்ளவர்களாயிருக்கின்றார்கள்.

2. அலா இன்னஹு பிகுல்லி ஷையின் முஹீத் “நிச்சயமாக அல்லாஹ்வானவன் ஒவ்வொரு வஸ்துவையும் சூழ்ந்தவாயிருக்கிறான்”


இரு சொற்றொடரினாலான இவ்வசனம் திருமறை வசனமாகையால் அது அல்லாஹ்வினது கலாம் பேச்சென்றாயிற்று. அல்லாஹ்வின்பேச்சு சாமானிய பேச்சாக இருக்க முடியாது அதில் சொல் வளமும் பொருள் வளமும் நிச்சயமாக நிறைந்திருக்க வேண்டும். இன்றேல் அது அல்லாஹ்வின் பேச்சாயிருக்க முடியாது அல்லாஹ்வின் பேச்சு சொல்வளமும் பொருள் வளமும் மிக்கதென்பது திருமறை ஆதாரத்தினால் தரிபட்டதொன்றாகும். ஆதாரத்தின் சுருக்கம் பின்வருமாறு.முஹம்மதே! நீங்கள் சொல்லுங்கள் உலகிலுள்ள கடல்கள் அனைத்தையும் மையாக்கி அந்த மையைக் கொண்டு எனது அல்லாஹ்வின் பேச்சுக்குரிய பொருளை எழுதப்பட்டால் அதன் பொருள் முடிந்துவிடாது. ஆனால் மை முடிந்துவிடும் மீண்டும் அதே அளவு மையைக் கொண்டு எழுதினாலும் கூட அந்தமைதான் முடிந்து விடுமேயன்றி பொருள் முடிந்து விடாது இவ்வாதாரப்படி அல்லாஹ்வுடைய பேச்சின் பொருள் ஆழத்தை இவ்வளவுதான் என்று கட்டுப்படுத்திவிட எவராலும் முடியாது. அல்லாஹ்வின் பேச்சும், மனிதனின் பேச்சும் ஒன்றுக்கொன்று மாறானதேயன்றி வேறானதல்ல.


மாறானதென்ற வகையில் மனிதனின்பேச்சு சகல கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாயும், அல்லாஹ்வின் பேச்சு எந்த ஒரு கட்டுப்பாடுட்டுக்கும் உட்படதாததாயிமிருக்கும். அதேபோல் ஒரு மனிதனின் பேச்சுடைய பொருள் ஆழத்தை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் அல்லாஹ்வுடைய பேச்சில் பொருளாளத்தை கட்டுப்படுத்திவிட எவராலும் முடியாது. “கைதுன்” எனும் கட்டுப்பாடும் “ஹத்துன்” எனும் எல்லையும் அவனுக்கு இல்லை அவ்விரு தன்மைகளும் படைப்புகளுக்கு உரியனவாகும். எனவே மேலே கூறிய திருவசனத்திற்கு அளவற்ற பொருளிருக்க வேண்டும் அந்த பொருள் எனும் கடலில் சிலர் மேல் நீச்சலும், சிலர் உள்நீச்சலும் இன்னும் சிலர் எதிர் நீச்சலும் அடிக்கின்றனர். ஒவ்வோறுவரும் அவரவர் சக்திக்கும் முக்திக்கும் ஏற்றவாறு நீந்தி விளையாடுகிறார்கள். முன்கூறிய வசனத்தின் பொருளில் உள்நீச்சலோ எதிர் நீச்சலோ அடிக்கமாமல் அதில் மேல்நீச்சலடித்து அவ்வசனத்தின் மேல்வாரியான பொருளை மட்டுமாவது அறிதல் அவசியம். எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற தத்துவத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு மேற்கூறிய திருமறை வசனத்திற்கு இங்கு கூறப்படும் பொருள் அவ்வசனத்தின் நேரடியான வெளிப்படைக் கருத்தையே அன்றி அவ்வசனத்தின் பாத்தின் உள்ரங்கமான அர்த்தமல்ல. எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பது அவ்வசனத்தின் வெளிப்படையான பொருள் என்றால் அதன் உள்ரங்கமான பொருள் எத்துனை தத்துவமுடையதோ! இதுதான் அவ்வசன்தின் வெளிரங்கமான ளாஹிர் அர்த்தம் என்றால் இது அல்லாத வேறந்த ‘ளாஹிர்’ வெளிரங்கமான அர்த்தமும் அதற்கு இல்லை என்பது நிரூபனமாகிவிட்டது அது அவ்வசனத்தின் உள்ரங்கமான பொருள் என்று கொள்வதும் முற்றிலும் பிழையானதேயாகும்.


ஏனெனில் அது உள்ரங்கமான கருத்து என்றால் அதற்கு வெளிரங்கமான வேறோரு கருத்து இருப்பது அவசியம் ஆனால் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தல்லாத வேறொரு பொருள் அவ்வசனத்திற்கு உண்டு என்று சொல்ல எந்தவொரு உலமாக்களும் முன்வரமாட்டார்கள் வரவும் முடியாது. ஆனால் போலி ஆலிம்கள் தனது “ஜஹாலத்” எனும் மடமையின் நிமித்தம் அதற்கு வேறு பொருள் இருக்கின்றதென்று சொல்ல நினைப்பார்கள். ஆனால் கனவு கண்ட ஊமையனின் நிலைதான் அவர்களுக்கு ஏற்படும். பின்னால் வரும் விளக்கம் அவர்களின் முகத்துக்கு கரி பூசி, அவர்களை தலைகுனியச் செய்து, பதில் கூறமுடியாத ஊமையர்களாக்கி விடுமென்பதில் ஐயமில்லை. ஏகத்துவ ஞானத்தை ஏற்று, எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தை நம்பி வாழும் சில உலமாக்கள் மேற்கூறிய திருமறை வசனத்திற்கு எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து இருந்தாலும் அது உள்ளரங்கமான கருத்தென்றும், அதை வெளியில் சொல்லக்கூடாதென்றும் கூறுகிறார்கள், இவர்கள் இவ்வாறு சொன்னாலும் கருத்தை சரி காண்கிறார்கள் என்ற வகையில் அவர்கள் நல்லடியார்களேதான் ஆயினும் அவர்களின் வாதம் பிழையானது என்பது பின்னால் நிரூபிக்கப்படும்.


மேலும் அந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களில் வேறு சில உலமாக்கள் அதை அறிஞர்கள் மத்தியில் மட்டும்தான் கூறலாமேயன்றி பாமரர் மத்தியில் கூறக்கூடாதென்கிறார்கள். இவர்களும் முந்தியவர்களைப்போல சரி காண்கிறார்கள் என்ற வகையில் நல்லடியார்களேதான். ஆயினும் அவர்களின் வாதமும் பிழையென்று பின்னால் நிரூபிக்கப்படும்.இவ்விரு சாராரின் வாதமும் அந்த வசனத்தைக் கொண்டே பிழையென்று நிரூபிக்கப்படுகிறது. அவ்விரு சாராரின் வாதமும் நிராகரிக்கப்பட்டாலும் அவ்வசனத்திற்கு எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்துண்டு என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.எல்லாமவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து குர்ஆனின் கருத்தாகவும் அதிலும் வெளிப்படையான கருத்தாகவும் இருக்க அது குர்ஆனுக்கு முரணானது என்றும் அதைக் கூறியவனும், ஏற்றுக் கொண்டவனும் முர்தத் என்றும் கூறும் ஆலிம்கள் ஆரிபீன்கள் ஞானவான்கள் உடைய தப்ஸீர்களை ஞானம் தெரிந்தவர்களின் உதவியுடன் ஆராய்தல் வேண்டும் மேற்கூறிய திருமறை வசனத்தின் வெளிப்படையான பொருளே எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பதாயிருக்க அதற்கு வேறு பொருள் உண்டெனக்கூறி பாமரர்களை ஏமாற்றி வருபவர்கள் அந்த வேறுபொருள் எது என்பதை கூறுவார்களா? பானையில் இல்லாமல் இருக்கும்போது அகப்பையில் வருவது எங்ஙனம்?எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்து அத்திருவசனத்திற்கு உண்டென்பதை ஏற்றுக் கொண்டு அது உள்ரங்கமான அர்த்தம் என்றும் அதை வெளியில் சொல்லக்கூடாதென்றும் வாதிடுகிறவர்கள் எந்த தலீல் ஆதாரத்தைக் கொண்டும் அவ்வாறு வாதிட முடியாது ஏனெனில் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பது அவ்வசனத்தின் வெளிரங்கமான அர்தமாயிருக்க அவ்வர்த்தம் உள்ரங்கமானதென்று வாதிட முடியாது. அது உள்ளரங்கமான அர்த்தம் எனக் கொண்டால் அதற்கு வெளிரங்கமான வேறோர் அர்த்தம் இருக்க வேண்டும் இதுதான் அதன் வெளிரங்கமான அர்த்தம் என்பது உறுதியானதாயிருக்க இதல்லாத வெளிப்படையான அர்த்தம் அதற்கு இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.


உண்மையான உலமாக்கல் இதல்லாத வெளிரங்கமான வேறு அர்த்தம் அதற்குண்டு என்று கூற முன்வரமாட்டார்கள் இதல்லாத வேறு அர்த்தம் அதற்குண்டென வாதிப்போர் அது என்ன அர்த்தம் என்று விளக்கி வைப்பதற்கு முன்வருவார்களா?இன்னும் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற அர்த்தம் அவ்வசனத்திற்கு இருந்தாலும் அதை வெளியில் சொல்லக்கூடாதென்ற வாதமும் இவ்வசனத்தைக் கொண்டு நிராகரிக்கப்படுகின்றது. ஏனெனில் மேலேகுறிப்பிட்ட திரு வசனத்தின் மூலம் எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்ற கருத்தை வெளிப்படையாகச் சொன்னவன் அல்லாஹ்வேயன்றி வேறுயாருமில்லை. அல்லாஹ் திருமறையில் வெளிப்படையாகக்கூறி கருத்தை வெளியாக்கலாகாது என்று கூறுதல் அல்லாஹ்வுக்கு ஐடியா யோசனை சொல்வதுபோல் இருக்கிறது. திருக்குர்ஆன் அரபு மொழியில் இருந்தாலும் அது எல்லாக் காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருத்தமாக பகிரங்கமாக இறக்கப்பட்டதேயாகும் ஆகையால் அதன் வெளிப்படையான கருத்தை வெளியாக்கலாகாது என்பது அர்த்தமற்ற வாதமேயாகும். அந்தக் கருத்தை அல்லாஹ் குர்ஆனில் வெளியாக்கிச் சொல்லியிருக்கிறானேயன்றி ஜாடையாகவோ மறைத்தோ சொல்லவில்லை. ஜாடையாகச் சொல்லியிருந்தால் அந்தக் கருத்து மேற்கூறிய வசனத்தின் உள்ரங்கமான அர்த்தமாக இருக்கவேண்டும். அது அவ்வாறு இல்லாததினால் ஜாடையாகச் சொல்லப்பட்டதல்ல என்பது தெளிவாகிவிட்டது. மேலும் அந்தக் கருத்து மறைக்கப்படவேண்டியதொன்றாக இருந்தால் குர்ஆனில் அவ்வசனம் இடம்பெற்றிருக்கவே மாட்டாது. எனவே அது அவ்வசனத்தின் உட்கருத்தென்றும் அதை வெளியாக்கலாகாது என்றும் சிலர் விவாதிப்பது மறுக்கப்படவேண்டியதாகும்.


எல்லாம் அவன் வெளிப்பாடுகள் என்பதை ஏற்றுக் கொண்ட வேறுசிலர் அதை பாமரர் மத்தியில் வெளியாக்கலாகாது என்றும் வாதிடுகிறார்கள் இவர்களின் வாதமும் அவ்வசனத்தைக் கொண்டே நிராகரிக்கப்படுகிறது. அதாவது அல்குர்ஆனில் உள்ள வசனங்கள் யாவும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக இறக்கப்பட்ட பொதுமறை வசனங்களேயன்றி படித்தவர்களுக்கென்று மட்டும் சில வசனமும் பாமரர்களுக்கென்று மட்டும் சில வசனமும் அருளப்படவில்லை திருமறை உலகப் பொதுமறையேயன்றி பணக்காரனுக்கென்று சில ஆலிம்களும் ஏழைகளுக்கென்று சில ஆலிம்களும் இருப்பது போலவே திருமறையும் இருக்கிறதென்று அதை ஒருசிலருக்கு மட்டுமுள்ள மறையாக ஆக்கி விடுவது கூடாது. அது குற்றமுமாகும்.


ஆயத்தின் விளக்கம்


மேற்கூறிய வசனத்தில் இடம்பெற்ற இரண்டு சொற்றொடர்களில் காபிரீன்கள் அல்லாஹ்வைக் கானும் விசயத்தில் சந்தேகமுடையவர்களாவர் என்ற சொற்றொடர் மூலம் அல்லாஹ் அவர்களின் சந்தேகத்தைக்கூறி அவன் சகல வஸ்துவையும் சூழ்ந்தவனாயிருக்கின்றான் என்ற இரண்டாவது சொற்றொடறைக் கொண்டு அவர்களின் சந்தேகத்தை நீக்கியுமுள்ளான் அவர்களின் சந்தேகம் நீங்குவதற்கு இரண்டாவது சொற்றொடர் மறுக்க முடியாத ஆதாரமாகவே இருக்கிறது.(தொடரும்.)

இறை கொள்கை என்பது எது?

இறுதிப் பாகம்

அல்லாஹ் வேறு, சிருஷ்டி வேறு என்பதால் இஸ்லாமிய தத்துவம் மாசுபடுகிறதா?

படைத்தல் என்பதன் பொருள் அல்லாஹ் படைத்தான் என்றால் அதிகமனோரின் அபிப்பிராயப்படி அல்லாஹ் என்று ஒருவன் எங்கோ இருந்து கொண்டு ஒவ்வொறு சிருஷ்டியையும் (தட்சன் மேசையைப் படைப்பதுபோல்) படைக்கின்றான் என்று கருதுகின்றனர். இது அக்கீதாவுக்கு மாபெரும் பிழையாகும். காரணம் : நான் அல்லாஹ்வின் ஒளியாக வந்தவன் என்று சொன்னவர்கள் நபீகள் (ஸல்) அவர்களாயிருக்க, நபீகளாரின் ஒளி இறைவனின் aஒளிக்கு எங்ஙனம் வேறாக இருக்க முடியும். இறைவனின் ஒளியை பிரிக்கவோ அல்லது பங்கு வைக்கவோ முடியாது என்பது பொதுவிதி. உண்மை இவ்வாறிருக்க, இறைவனின் ஒளியில் ஒரு பகுதிதான் றசூலுல்லாஹ்வின் ஒளியாக வந்ததென்று சொல்வது மடமையிலும் மடமையாகும். எனவே, படைத்தான் என்றால் அவனே வெளியானான் என்றுதான் நம்பவேண்டும். முஹம்மது நபீயுடைய ஒளியாகவும் இவ்வுலகமாகவும் இவ்வுலகத்தின் எல்லாப் பொருட்களாகவும் அவனே வெளியானான் என்பதுதான் கலிமா கூறும் உண்மையான தௌஹீத்விளக்கமாகும். அல்லாஹ் என்பவன் தான் சிருஷ்டிகளைப் படைப்பதற்கு முன் எவ்வாறிருந்தானோ அதே நிலையில் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமலும் அவன் இருந்தவாறேயிருக்க, முஹம்மதாயும், சர்வ பிரபஞ்சமாயும், வெளியானவன் அவனேதான். இதுவே தவ்ஹீத் என்பதன் அசைக்க முடியாத முடிவாகும். ஒரு பொருள் இன்னோரு பொருளாக வருவதற்கு மூன்று முறைகளுண்டு. 1. ஒரு பொருள் அழிந்து இன்னொரு பொருள் உண்டாதல் 2. பொருள் அழியாமல் மாற்றமடைந்து, விகாரப்பட்டு வேறொரு பொருளாகத் தோற்றமளித்தல். 3. ஒரு பொருள் அழியாமலும், விகாரப்படாமலும் அது எவ்வாறிருந்ததோ அவ்வாறே இருக்க, வேறொரு பொருளாகத் தோற்றல். இம் மூன்று முறைகளிலும் மூன்றாவது முறையே அல்லாஹ்வைப் பொறுத்து உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமேயன்றி, ஏனைய இரு முறைகளையும் எடுக்க முடியாது. காரணம்,

முதலாவது விதியின் படி மாம்பழத்தின் கொட்டையை பூமியில் நாட்டியபோது கொட்டையழிந்து மாமரம் வெளிவருவது போல், அல்லாஹ்வின் தன்ஸீஹ்- அரூப நிலை அழிந்துதான்,தஷ்பீஹ்-ரூப நிலை ஏற்படுகிறது என்று கொள்ள முடியாது. அழிவை ஏற்றுக் கொள்ளக்கூடியது பூரணத் தன்மையுடையதாயிருக்க முடியாது என்பது பொது விதி.ஆகவே, இக்கொள்கையும் தவ்ஹீதுக்கு நேர் மாற்றமான கொள்கையாகும்.

இரண்டாவது விதியின்படி பொருள் ஒன்றுதான் ஆனால் அது அழியாமல் விகாரப்பட்டு காட்சியளிக்கின்றது. உதாரணத்திற்கு சட்டியை எடுத்துக் கொள்ளலாம். சட்டி என்பது மண்ணுடைய வடிவம்தான். மண் தான் சட்டியாக வந்தது. மண் அழிந்து சட்டியாக வரவில்லையாயினும், மண் விகாரப்பட்டு மாற்றமடைந்து சட்டி என்ற பெயரைப் பெற்றிருக்கின்றது. இதேபோன்று அல்லாஹ்வுடைய “தாத்”, வுஜூத் அழியாமல் விகாரமைந்துதான் சிருஷ்டியாக வெளியானதென்பதும் தௌஹீதுக்குப் பிழையானதும், முரணானதுமாகும். இப்படியும் அல்லாஹ் தன்ஸீஹுடைய நிலை விகாரப்பட்டு “தஷ்பீஹ்” என்ற நிலையில் வெளியாகவில்லை என்பது கொள்கை சம்பந்தமான லோயர்களின் ஏகோபித்த முடிவாகும்.

மூன்றாவது விதியின்படி ஒரு பொருள் அழியாமலும், விகாரப்படாமலும், அது எவ்வாறு இருந்ததோ அவ்வாறேயிருக்க வேறொரு பொருளாகத் தோற்றமளித்தல் என்பதற்கு கல்பை (மனம்) உதாரணமாகக் கொள்ளலாம். கல்ப் என்பதை இதயம் என்று கருதலாகாது. இதயம் என்பது மனிதர்களுக்கு இருப்பதைப் போன்று மிருகங்களுக்குமுண்டு. அது மாங்காய் வடிவமானது. ஆனால் மனம் என்பது மனிதனுக்கு மாத்திரம் சொந்தமாக வழங்கப்பட்டது. ஆழ நீள அகலத்தை விட்டும் அப்பாற்ப்பட்டது. மாங்காய் வடிவான இதயம் கட்டுப்பாடையுடையது. கல்பு (மனம்) கட்டுப்பாடற்றதுடன் மனிதனுக்கு மாத்திரம் விஷேடமாய் வழங்கப்பட்டது. இம்மனதை மூன்றாம் விதிக்கு உதாரணமாகக் கொள்ளலாம். நாம் நித்திரை செய்யும்போது எத்தனையோ காட்சிகளை காண்கின்றோமென்றால் அது மனதின் தோற்றமேதான். கனவு காணும்போது செயல்கள் ஒவ்வொன்றும் வேறாகத் தெரிந்தாலும், ஒன்றுக்கொன்று நேர் மாற்றமாகத் தென்பட்டாலும் (உதாரணம்- நாய் கடிக்கிறது, கை வெட்டப்படுகிறது) அது மனதுக்கு வேறானதென்று கூற முடியுமா? எந்த வகையிலும் கூற முடியாது. கனவுக் காட்சிகள் மனதின் தோற்றமேதான் என்பதை பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் உண்மை விளக்கமாகும். இதற்கு மாறாகக் கொள்வது பகுத்தறிவற்ற மிருக ஜாதியுடைய நிலையாகும். மனம் (கல்பு) என்பது இருந்தவாறேயிருக்க, அது அழியாமலும் மாறுபடாமலும் விகாரப்படாமலும் இருந்து கொண்டு, எவ்வாறு பல தோற்றங்களைப் பெறுகின்றதோ அதே போன்றுஅல்லாஹ்வும், தனது (தாத், வுஜூத்) பரிசுத்த நிலை அழியாமலும், விகாரப் பட்டு மாறுபடாமலும் முஹம்மத் நபீயாகவும் ஏனைய சிருஷ்டிகளாகவும் வெளியாகியிருக்கின்றான் என்பது தவ்ஹீத் கூறும் உண்மை ஞானமாகும்.

இக் கருத்தைத்தான் “முஹம்மது இப்னு பழ்லுழ்ழாஹ்” அவர்கள் தங்களது “துஹ்பத்துல் முர்ஸலா” என்ற கிரந்தத்தில் “அன்ன தாலிகல் வுஜூத லைஸ லஹூ ஷக்லுன், வலாஹத்துன், வலாஹஸ்றுன், வமஅஹாதா ழஹற வதஜல்லா பிஷ்ஷக்லி, வல்ஹத்தி, வலம் யதகய்யர் அம்மாகான மின் அதமிஷ்ஷக்லி, வமின் அதமில் ஹத்தி, பல்ஹுவல் ஆன கமாகான அலைஹி” என்று கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவெனில் ‘அந்த தாத், வுஜுதாகிறது அதாவது அல்லாஹ் என்ற வுஜுதுக்கு உருவம் இல்லை, எல்லையில்லை, கட்டுபாடில்லை. ஆயினும் அவனவ்வாறிருப்பதுடன் உருவத்திலும், எல்லையிலும் வெளியாகிருக்கின்றான். இவ்வாறவன் வெளியானாலும் கூட, அவன் முன்பிருந்த நிலையிலிருந்து அழியவோ, மாறுபடவோ, விகாரப்படவோ இல்லை. அவன் மாறுபடப் போவதுமில்லை. அவன் முன்பு எவ்வாறிருந்தானோ அவ்வாறே இப்போதுமிருகின்றான்.’ எனவே இதிலிருந்து நாம் விளங்குவது என்னவெனில், அல்லாஹ் என்பவன் அரூபி-ரூபி இரு தன்மைகளையுடையவனென்றும், இவ்விரு தன்மைகளைக் கொண்டும் நாம் ஈமான் கொள்வதோடு, அவனே இவ்வுலமாகவும், எல்லாப் பொருட்களாகவும், மனதிலூசலாடும் எண்ணமாகவும், ஒலியாகவும், ஒளியாகவும், எல்லாமாய் காட்சிளிக்கின்றான் என்பது தெள்ளதிற் பலனாக, உள்ளங்கை நெல்லிக் கனிபோன்று தெளிவாகின்றது. ஆகவே, அல்லாஹ் சிருஷ்டியைப் படைத்தான் என்றால் சிருஷ்டியாக வெளிவந்தவன் அவனே என்றுதான் நம்ப வேண்டுமே தவிர, மாறாக- தச்சன் கதிரையைப் படைப்பது போன்றுதான் அல்லாஹ் சிருஷ்டியைப் படைக்கின்றான் என்றும், கதிரைக்கு மூலம் தச்சன்தான் என்றும் நம்பிக்கை இருக்கக் கூடாது. கதிரைக்கு மூலப்பொருள் மரம் என்ற கொள்கையே இருக்க வேண்டும். கதிரைக்கு மூலப்பொருள் தச்சன் என்றால், மூலப் பொருளை பிரிக்க வேண்டிய நிலையும், இறைவன் தான் ஒரே மூலப் பொருளாயிருக்க, மூலப் பொருளை பலதாக்க வேண்டிய கட்டங்களும் நாமறியாமலேயே ஏற்பட்டு விடுகின்றன. அது மாத்திரமின்றி, “இன்னழ்ழாஹ அலீமும் பிதாதிஸ் ஸுதூரி” நெஞ்சில் ஊசலாடும் எண்ணங்களையும் இறைவன் அறிந்தவன் என்ற தத்துவத்தையும் ‘வேறு” என்ற கொள்கை உடைத்தெறிந்து விடுகிறது. இக்கருத்தை விளங்க வேண்டும் என்பதற்காக பகுத்தறிவு ஏற்கும் முறையில் கூறுவதென்றால்: கொழும்பில் வாழும் ஒருவன் ஒரு கதிரையைச் செய்கின்றான். (படைக்கிறான்) என்று வைத்துக் கொள்வோம். அவனால் செய்யப்பட்ட கதிரை காத்தான்குடியிலிருக்கிறது. (காத்தான்குடி என்பது இலங்கையில் உள்ள ஒரு ஊர்) இப்போது கதிரைக்கும் அவனுக்கும் தொடர்பிருக்கிறதா? “இல்லை” என்று சொல்வதைத் தவிர “ஆம்” என்று சொல்பவன் பெரும் மடையனாகத்தான் இருக்க வேண்டும். தச்சனே கதிரைக்கு மூலப் பொருள் என்றான் பகுத்தறிவால் ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறது. அவன் கொழும்பில் கதிரை காத்தான்குடியில்! பிரிக்க முடியாத மூலப் பொருளை (எண்ணத்தில்) பிரிக்கப்படுகிறது. கதிரை எங்குள்ளது அதன் தற்போதைய நிலையென்ன வென்பதை பிரிந்திருக்கும் தச்சன் அறிய முடியாதது போல் தச்சனைப் போன்று அல்லாஹ்வை சிருஷ்டியை விட்டும் வேறாக்கினால் அல்லாஹ்வும் நெஞ்சிலாடும் எண்ணங்களையும், சிருஷ்டியின் தன்மையையும் அறிய முடியாது. அறிய முடியாதவன் இறைவனாக இருப்பதற்கு தகுதியற்றவனாகிறான். இது நான் காட்டிய திருமறை வசனத்திற்கு நேர்மாறாகத் தெரிகிறது. ஆனால் குர்ஆனின் கருத்து பொய்யானதல்ல, அர்த்தமில்லாமலும் இறைவன் கூறியிருக்க முடியாது. எனவே, இறைவன் ஒவ்வொறு வினாடியும், சிருஷ்டிகளின் தன்மையை அறிந்தவனாகவே இருக்கின்றான் என்ற கூற்றை ஆதாரமாகக் கொண்டு தச்சன்தான் கதிரைக்கு மூலம் என்ற கொள்கை உடைத்தெரியப்படுகின்றது. அதேவேளை கதிரைக்கு மூலப் பொருள் தச்சனல்லவென்பதும், மரம்தான் கதிரையின் மூலப் பொருளென்பதும், கதிரையுடைய தோற்றத்தில் (சூறத்தில்) வந்தது மரம்தான் என்பதும் தெளிவான ஆதாரமாகிறது. எனவே, கதிரைக்கு மரம் மூலமாக இருப்பதைப் போல், கதிரையை விட்டு மரத்தை வேறாக்கவோ, பிரிக்கவோ, சேர்க்கவோ முடியாமலிருப்பது போல், அல்லாஹ்தான் சிருஷ்டிகளின் மூலப் பொருளென்பதும், அவனேதான் தனது தாத் அழியாமலும், விகாரப்படாமலும் படைப்புக்களாக வெளியாகியிருக்கிறான் என்பதும் அசைக்க முடியாத இறுதியான முடிவாகிறது. இக்கருத்தை வைத்து மேற்கூறிய திருமறை வசனத்தை ஆராய்ந்து பார்த்தால், இஸ்லாத்தின் ஈமான் எனும் தவ்ஹீதின் உண்மைத் தத்துவம் இலகுவாகப் புரியும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லீம்களில் அனேகர், தவ்ஹீதென்றும், இறைவன் எங்கும் நிறைந்தவனென்றும் மூடலாக அறிந்திருக்கிறார்களே தவிர – அதன் விபரம் தெரியாத, கொள்கை விளக்கம் புரியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

உலமாக்கள் என்ற லேபலை ஒட்டிக் கொண்டு வாழும் ஆலிமுஷாக்களுக்கே தவ்ஹீத் (ஏகத்துவம்) தெரியாமலிருக்கும் போது பொதுமக்கள் எங்ஙனம் புரிய முடியம்? “இறைவன் எங்கும் நிறைந்தவன்” என்றால், அவன்தான் நிறைந்திருக்கிறான் என்றால், எங்கே அவன்? அவன்தானே இருக்க வேண்டும்! அவனது சிருஷ்டிகள்தானே பார்க்கும் இடமெல்லாம் இருக்கின்றன. அவனைக் காணவில்லையே? அப்படியாயின் நிறைந்திருக்கின்றான் என்பதன் ஆழமான தத்துவத்தை பொதுமக்களைவிட உலமாக்கள் நல்ல மனதுடன் சிந்தனை செய்து பார்க்கவேண்டும். இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்வதைவிட, “எல்லாமாய் இருப்பவன் அவனே” என்று சொல்வது மிகப் பொருத்தமாகும். எங்கும் என்று சொல்லும்போது அவனை விட்டும் இடத்தை வேறாக்க வேண்டியதாகிவிடும். எனவே, சொல்லலவில் எங்கும் நிறைந்தவன் என்று சொன்னாலும் “இஃதிகாத்” கொள்கை எப்படியிருக்க வேண்டுமெனில் “எங்கும்” என்பதும் அவனே என்ற நம்பிக்கை நெஞ்சிலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தவ்ஹீதுக்கு முரணானதாகவும், இஸ்லாமிய தத்துவத்தை மாசுபடுத்தக் கூடியதாகவும் ஆகிவிடும். ஆகவே, இறைவன் வேறு, சிருஷ்டி வேறு என்பதும், ஒவ்வொறு பொருளிலும் இறைவனிருக்கிறான் என்பதும், எல்லாப் பொருட்களிலும் இறைவன் கலந்து, நிறைந்திருக்கிறான் என்பதும் தௌஹீதுக்கு நேர்மாறானதும், குர்ஆன், ஹதீஸுக்கு முரணானதுமாகும். எனவே தவ்ஹீதின் உண்மையான விளக்கமென்னவெனில், அல்லாஹ் என்பவன் சிருஷ்டிகளை சிருஷ்டிப்பதற்கு முன் எவ்வாறிருந்தானோ, அதே நிலை அழியாமலும் மாறுபடாமலும், விகாரப்படாமலும் அவன் இருந்தவாறேயிருக்க, சர்வ பிரபஞ்சங்களாகவும், சிருஷ்டிகளாகவும் அவனே வெளியாகியிருக்கிறான். ஒவ்வொறு வினாடியும் கோடிக்கணக்கான வெளிப்பாடுகளாக அவனே தஜல்லியாகிறான்., அவனுக்கு வேறான எந்தப் படைப்புமில்லை., அவன் ஒருவனே, பலரல்ல என்பதுதான் “கலிமா தய்யிபா”கூறும் உண்மையான தெளஹீத் விளக்கமாகும். கதிரையென்றும், மேசையென்றும், அலுமாரியென்றும், றாக்கையென்றும், கதவென்றும், கதவு நிலையென்றும், இருப்பவை அனைத்தும் மரம்தான். மரத்தின் கோலங்கள்தான் இவைகள். மரத்தின் வெளிப்பாடுகள்தான் இவையென்று ஒன்றுபடுத்தி சாட்சி பகர்வதுதான் தவ்ஹீத் என்ற சொல்லின் உண்மை அர்த்தமாகும். எனவே, நாமும் இவ்விளக்கத்தை அறிந்து அல்லாஹ்வை அறிந்த ஞானவான்களான அவ்லியாக்களின் அணியில் சேர்வோமாக. ஆமீன்!(முற்றும்)

இல்முல் கயிப் (மறைவான ஞானம்)

இல்முல் கயிப் (மறைவான ஞானம்) – தலைப்பு அறிமுகம்

எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டாயிருந்துதா? ஆம். சந்தேகமின்றி !. எங்கள் நபி நாதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) மீது அருளப்பட்ட இந்த இல்முல் கய்ப், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களில் மிக தலைசிறந்ததும் தனி சிறப்பு பெற்றதுமாகும். இந்த முஃஜிஸாத் எனும் அற்புதம் மற்ற 124000 நபிமார்களுக்கு வழங்கப்பட்ட முஃஜிஸாத்துகளை விடவும் மிக வருசையானதாகும். இல்முல் கய்பிளிருந்து சிலதை இந்த எல்லா நபிமார்களுக்கும் வெவ்வேறான அளவில் ஒவ்வொருவருக்கும் வழங்கப் பட்டாலும் எங்கள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு அந்த எல்லா நபிமார்களுக்கு அருளப்பட்டவைகளையும், இன்னும் ஒப்பிட முடியாத, அளவற்ற ஞானங்களையும் அல்லாஹ் ஸுப்ஹானஹூ வ தஆலா அருளினான். ஆனால் தவ்ஹீது வாதிகள் என்று தம்மை தானே அழைத்துக்கொள்ளும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் இதை மறுக்கிரார்கள். ஏனெனில், எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவாக எண்ணுதல் அவர்களின் பொழுது போக்காயிட்டுதே.!

ஞானம் என்றால் என்ன? அது இரு வகையாகும். முதலாவது .Zஸாத்தீ என அழைக்கப்படும் தானாகவே பெற்ற ஞானம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமாகும். இரண்டாவது அத்தாஈ என அழைக்கப்படும் இன்னொருவரால் வழங்கப்பட்ட ஞானம். அல்லாஹ்வை தவிர மற்றவர்கள் பெற்றிருக்கும் ஞானத்துக்கு பெயர் தான் இது. அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான Zஸாத்தீ எனும் ஞானம் மற்ற எவருக்குமொ உண்டென்றொ அல்லது அல்லஹ்வுக்கும் அத்தாஈஎனும் இல்மு உண்டென்றோ யாராகிளும் ஒருவர் கூறினால் அவன் உடனே இறை மறுப்பவனாக ஆகிவிடுகிரான். இன்னும் அல்லாஹ் தஆலா தன் திரு மறையில் மறைவான ஞானத்தை பற்றி கூறும் போது, அது நம்மை நோக்கி கூறுவதல்லாமல் அவன் அவனை நோக்கி கூறுவதல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், அவன் எல்லாம் அறிந்தவன். அவனுக்கு மறைவான எதுவும் இல்லை.

குர்ஆனில் சிலதை ஒப்புக்கொண்டும் சிலதை மறுப்பது கொண்டும் மிகுதமானோர் வழி தவறி போகின்றனர். அதே போல், நபி நாதரின் இல்முல் கய்பை மறுப்போரும் கிழ்கானும் குர்ஆன் வசனத்தை ஒப்புக்கொண்டாலும்……

قل لا املك لنفسي نفعا ولا ضرّا الا ما شاء الله. ولو كنت اعلم الغيب لاكثرت من الخير وما مسني السوء . ان انا الا نذير وبشير لقوم يؤمنون.

நபியே நீர் கூறுவீராக அல்லாஹ் நாடியதை தவிர எனக்கே எவ்வித நன்மை(யை செய்வதற்க்)கும் தீமை(யை தடுத்துக் கொள்வதற்க்)கும் நான் சக்தி பெற மாட்டேன். மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே நான் அதிகமாக தேடிக்கொண்டிருப்பேன். தீமை என்னை தொட்டிருக்காது. நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும் விசுவாசம் கொண்ட சமூகத்தினருக்கு நன்மாராயங் கூருபவனேயன்றி வேறில்லை. 7/188

கீழ்கானும் இவ்விறை வசனத்தை மறுக்கிறார்கள்…

عالم الغيب فلا يظهر على غيبه احدا. الا من ارتضى من رسول

(என் இறைவனாகிய) அவன் மறைவானவற்றை அறிகிரவன், எனவே தான் மறைத்திருப்பதை ஒருவருக்கும் அவன் வெளிப்படுத்த மாட்டான். தூதரில் தான் (தேர்வு செய்து) பொருந்திக்கொண்டவருக்கே தவிர (72/26)

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவான ஞானத்தை மறுக்குவொர் எழுப்பும் நச்சுக் கருத்துகள் எந்தளவுக்கு மனம் தடுமாறச்செய்யக் கூடியது என்று ஆலோசனை செய்தால், அதே முறையிலே அல்லாஹ்வைப் பற்றி உள்ள இறைவசனங்களையும் புரிய முயர்ச்சித்தால், அது எங்களை படுகுழியில் விழுத்தாட்ட காரணமாகுமென குறிப்பிட தக்கது. (நஊது பில்லாஹி மின்ஹா.- அல்லாஹ் நம்மை காத்தருள்வானாக). அவர்கள் தன் கருத்துகளுக்கு சார்ப்பாக முன் வைக்கும் குர்ஆன் வசனங்களும் , அவர்கள் எவ்வாறு வழி தவறி இருக்குரார்கள் என்பதையும் இவ்வாறு மேற்கொள் காட்டுகின்றோம்.. உதாரணமாக, அல்லாஹ் தன் திருமறையில் கூருகின்றான்.

وما تلك بيمينك يموسى . قال هي عصاي اتوكؤا عليها واهش بها على غنمي ولي فيها مأرب اخرى . فال القها يموسى .فالقـها فاذا هي حيّة تسعى

( மேலும் , மூஸாவே உனது வலது கையில் இருப்பது என்ன? (என்றும் கேட்டான் அதற்க்கவர், இது என் கைத்தடி நான் அதன் மீது சாய்ந்துக் கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு (தழைகுழைகளை மரங்களிருந்து) பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு பல தேவைகளும் இருக்கின்றன. என்று கூறினான் அ(தற்க்கு அ)ல்லாஹ் , மூஸாவே நீர் அதை (த் தரையில்) போடுவீராக. என்று கூறினான். அப்பொழுது அவர் அதனைப் போட்டார். அச்சமயமே அது நெளிந்து செல்லும் ஒரு பாம்பாக ஆயிற்று ) ( 20/18,19,20,21)

وإذ قال الله يعيسى ابن مريم أأنت قلت للناس إنخذواني وامي الهين من دون الله قال سبحانك ما يكون لي ان اقول ما ليس لي بحق أن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت علام الغيوب

( அன்றியும், அல்லாஹ், ( மறுமை நாளில் ஈஸாவிடம்) மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹுவைதவிர என்னையும் எனது தாயையும் இரண்டு நணக்கத்திற்க்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா என்று கேட்பான். (அதற்கு) நீ பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் உரிமையில்லாததை நான்(ஒரு பொதும்) கூறுவதற்க்கு எனக்கு தகுதி இல்லை. அவ்வாரு நான் கூறி இருந்தால், நீ அதனை அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீ தாந் மறைவானவற்றை மிக்க அறிந்தவன்.(5/117)

அவர்கள் இந்த வசனங்களை மேற்கொள் காட்டி இவ்வாறு கேள்வி எழுப்புகின்ரார்கள். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) க்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அவர்களின் கைத்தடி ஒர் பாம்பாக மாற்றப்படும் என அவர்கள் அறிந்திருக்க வில்லையே ! மேல் குறிப்பிடப்பட்ட இரண்டாம் வசனத்தை மேற்கொள் காட்டி . ஈஸா (அலைஹிஸ்ஸலாமு) க்கு மறைவான ஞானம் இருந்திருந்தால், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன். எனக் கூற அவசியமில்லையே !

இனி நாமும் அவர்கள் மோழிபெயர்த்துக் கூறும் முறையிலே கேல்விகளை எழுப்புவோம். மூஸாவின் கையில் ஏது இருக்கிரது என்று அல்லாஹ் கேட்பதின் மூலம் அல்லாஹ்வுக்கும் மறைவான ஞானம் இல்லை என ஒரு நாளில் நீங்கள் கூற மாட்டீர்கள் என்பதற்க்கு என்ன வாக்குறுதி? அது ஒரு கைத்தடி என்று அவன் அறியவில்லையா? அதில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) சாய்ந்திருப்பதாகவும், தன் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பதாகவும் அவன் அறிய வில்லையா?

ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) சம்பந்தப்பட்ட மற்ற வசனத்தில், அல்லாஹ்வை விட்டு விட்டு, அவர்களையும் அவர்களின் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக்கொள்வீர் என மனிதர்களுக்கு கூறினீரா என அல்லாஹ் வினவுகின்றான். அல்லாஹ் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) விடம் அவ்வாறு வினவக் காரணம் அவ்வாறு ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) சொன்னார்களா இல்லையா என அவன் அறிந்திருக்க வில்லை என இன்னொரு நாளைக்கு நீங்கள் கூறமாட்டீர்களா?

இல்முல் கய்பை மறுக்குவோர் எழுப்பும் இவ்வாறான, கற்பனைக்கு பொருந்தாதளவு கேலியான, தொடர்ப்பற்ற, மனதை குழப்பும், தவறான வழிகாட்டும், நச்சுக் கருத்துகள் ஏராளம் உண்டு. உதாரணமாக, நபி நாயகம் அவர்களுக்கு ஒரு தொழுகையில் தொழுதப்பட்ட ரக்அத்துகள் எத்தனை என்று மறந்த சம்பவத்தை மேற்கொள் காட்டி, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு இல்முல் கய்ப்இருந்திருந்தால் அப்படி மறந்திருக்கமாட்டார்களே ? என வினவுகின்ரார்கள். உம்முஹானீ ( ரலியல்லாஹு அன்ஹா) நபிகளாரின் வீட்டுக்கு வந்த வேளையில் அவர்கள் ஒர் திரைக்குப் பின் இருந்ததாகவும், வந்தது யார் என அவர்கள் கேட்டதாகவும் நான் உம்மு ஹானீ என உம்மு ஹானி ( ரலியல்லாஹு அன்ஹா)கூறியதாகவும் புகாரியில் பதிவு செய்யப்படுள்ள ஹதீஸை மேற்கொள் காட்டி, அவ்வாறு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் வந்தது யார் என கேட்க அவசியமில்லையே ? என கேட்கிறார்கள். இன்னும் நஞ்சூட்டப்பட்ட வஜீபனத்தை அருந்தாமல் இருந்திருக்கலாமே எனவும் கேட்கிறார்கள்.

ஆதலால், எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாள்க்கை ஒர் மாயவித்துக்காரனின் வாள்வு போல் அமைந்திருக்க அவர்கள் நாடுகிரார்களோ? அப்படியென்றால் அவர்களின் வாள்க்கை சரிதை எப்படி உம்மத் மார்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். ? அன்று, தொழுகையில் மறதி ஏற்படாவிட்டால் அதைப்பொல் ஓர் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமென செயல்முறையாக காட்டுவது எவ்வாறு? அவர்கள் அன்று நஞ்சூட்டப்பட்ட உணவை அருந்தாமலிருந்தால், அவர்களின் சரிதையில் அந்த அற்புதம் பதியப்பட மாட்டாதே? இஸ்லாம் ஒரு மார்க்கம். அதே போல், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாள்க்கை வழிமுறையுமே. அவர்கள் வாள்வில் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாவிட்டால், எங்களுக்கு அவர்களின் வாழ்க்கை வழிமுறையில் எவ்வாறான விசேஷமும் கிடையாதே. வஹ்ஹாபிகளின் முயர்ச்சியே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எங்களைப் போன்ற சாதாரண மனிதனாக கருதுவதாகும்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிகரான கேள்விகள் நமக்கும் கேட்க்கலாமே!நாங்கள் செய்யும் நல்லமல் களையும் தீமைகளையும் ரக்கீப் அத்தீத் ( அலைஹிமஸ் ஸலாம்) அவர்களால் ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? நாங்கள் எந்த நன்மைகள் எந்த தீமைகள் செய்தோமென அல்லாஹ் அறிய மாட்டானா? முன்கர் நக்கீர் (அலைஹிமுஸ் ஸலாம்) அவர்களால் ஏன் நாம் கப்ரில் கேள்வி கேட்க்கப்பட வேண்டும்.

இந்த மறுமொழி தான் நாங்கள் கொடுப்போமென அவன் அறிய மாட்டானா? மறுமையில் நம்மை ஏன் விசாரணை செய்யப்பட வேண்டும்? இவ்வுலகத்தில் நாம் செய்த நன்மை தீமைகளும் எங்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் பதில்களும் அவன் அறிய மாட்டானா? நம் நன்மை தீமைகளை மீதான்தராசியில் ஏன் நிறுக்கப் பட வேண்டும்? அல்லாஹ் அதன் பாரங்களை அறிய மாட்டானா? ஸிராத்துல் முஸ்தக்கீம் எனும் பாலத்தை நாம் ஏன் கடக்க வேண்டும்? யார் யார் நரகத்தில் விழுவார்கள் என்று எல்லாம் வல்லவனான நாயன் அறியமாட்டானா?‘குன்’ எனும் தனி சொல்லைக் கொண்டு எல்லாம் உண்டாக்க வல்லமை பெற்ற நாயன் ஒவ்வொரு வேலைகளுக்கும் மலக்குகளை சாட்டப்பட்டிருப்பதற்க்கு அவசியம் ஏது?

இவ்வாறான, மீண்டும் ஒரே இடத்தை வந்தடையும் வட்ட வடிவமான தர்க்கங்களால் ஒருவன் வழிகேடில் விழுகிரதைத் தவிர வேறொரு புண்ணியமும் ஏற்படுவதில்லை (நஊது பில்லாஹி மின்ஹா – அல்லாஹ் நம்மை காத்தருள்வானாக) எனவே, மேல் எடுத்துக் காட்டப் பட்ட 2 வது குர்ஆன் வசனமும் கீழ் கானும் வசனங்களும் எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு மறைவான ஞானம் இருந்தது என்பதற்க்கு ஆதாரமால்லவா ?

وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء

மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை ஏனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை (இதனை அறிவிக்க ) தேர்ந்தெடுக்கிறான் ( 3/179)

وانزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما

” (மேலும் அல்லாஹ் இவ்வேதத்தையும் ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான் இன்னும் நீ அறியாதிருந்தவற்றையும் உமக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் உன்மீது அல்லாஹ்வின் பேரருள் மகத்தானதாகவே இருக்கின்ரன. 4/ 113)

நம் நபி நாதர் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மறைவான ஞானமாக எது எதுகளை பெற்றார்களொ, அதெல்லாம் அல்லாஹ்வால் கற்றுக்கொடுக்கப் பட்டதென்பதையும், அந்த ஞானத்தில் நின்றும் எந்த பகுதியானாலும் அறிவிக்கப்படாமல் இல்லை என்பதையும் மேல் கானும் திரு குர்ஆன் வசனங்கள் வலியுறுத்துகிறது. அவர்கள் அறியாவற்றை அவன் கற்றுக்கொடுத்தான் என அல்லாஹ்வே கூறும் பொது, நாயகத்துக்கு அவ்வாறான ஞானம் இல்லை என்று கூறும் வஞ்சகம் நிறைந்த கல் நெஞ்சுடையோரைப் பற்றி கவலை படுகிரதா இல்லா விட்டால் அவர்களை வெறுப்பதா என்பது நமக்குள்ள கேள்விக்குறியாகும். இன்னும் அல்லாஹ் அதை அவனின் பெரும் பேரருள்களில் நின்றும் உள்ளதாக அறிவிக்கின்ரான். அவனின் பேரருளைப் பற்றி அறிவிக்கும் இந்த இறை வசனங்களை யாரால் மறுக்க முடியும்?

ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاء وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ

அது அல்லாஹ்வுடைய பேரருளாகும். அவன் நாடியவர்களுக்கு அதனைக் கொடுக்கின்ரான். மேலும் அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன் (62/3)

இந்த இறை வசனங்களை சரியாக புரிய தேடினாள், இல்முல் கய்ப் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு கீழே உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அவனின் அந்த ஞானத்தை அவனின் அடியார்களில் ஒருவருக்கும் வழங்க மாட்டான் என்றோ அவனின் அந்த ஞான பொக்கிசத்தின் கதவுகள் ஒருவருக்கும் திறக்கப் பட மாட்டும் என்றோ கூறப்பட்டிருக்கிரதா? யாராலும் ஒருவன் அவனின் ஞானத்தை இன்னுமொருவருக்கு அவனுக்கு கொடுக்க முடியாதென கூரினால் அவர் அல்லாஹ்வுக்கு இயலாமை எனும் முஸ்தஹிலான ஸிபத்தெனும் வர்ணிப்பை சூட்டினதற்க்காக அவர் இறை மறுப்பவராக ஆகிவிடுகிரான். இல்முல் கய்பை பற்றி தன் சொந்த கருத்துகள் கூறி வழி தவறி விடாமல் இருப்பதற்க்கு இவ்விசயத்தில் மிக முக்கியமான கவணம் செலுத்த வேண்டுமென்பதை வற்புறுத்துகின்ரோம்.

எனவே, யாராகிலும் ஒருவர், குர்ஆனில் சிலதை ஒப்புக்கொண்டு மற்றும் சிலதை மறுத்து, அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பார்களேயானால், அல்லது சந்தேகிப்பார்களேயானால் அவன் முஸ்லிம் என்ற பட்டியலிருந்து அகன்று விடுகிரான். ஏனெனில், அல்லாஹ்வின் கட்டளைகளை மனப்பூர்வமாகவும் நிபந்தனைகளுமின்றி முற்றாக அடிபனிவதே ஒரு முஸ்லிம் மீது கடமையாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்ரான்…

يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

விசுவாசங்கொண்டோரே ! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் ! அன்றியும் செய்த்தானின் அடிச்சுவறுகளை பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். ( 2/208 )

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுக்கு இல்முல் கய்பெனும் மறைமுகமான ஞானம் உண்டாயிருந்தது என்பதற்க்கு ஆதாரமாக அனேகமான ஹதீஸ்களும் பதியப்பட்டிருக்கிரது. இந்த தலைப்பின் கீழ் அதுகளை நாங்கள் ஒன்றொன்ராக எழுத நாடுகின்றோம். இன்ஷா அல்லாஹ்.

சியாரதுல் குபூர் - மண்ணறைகளைத் தரிசித்தல். தொடர் - 01


மேற்கண்ட தலைப்புத் தொடர்பான விபரங்களை நான் எழுதக் காரணம் என்னவெனில். வஹ்ஹாபிகள் “சியாரதுல் குபூர்” “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று கூறிவருவதும், மண்ணறைகளைத் தரிசிக்க வேண்டாமென்று பிரச்சாரம் செய்து

வருவதுமேயாகும். மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு நபீ ஸல் அவர்கள் “சியாரதுல் குபூர்” என்று பெயர் சொல்லியிருக்க வஹ்ஹாபிகளோ அதற்கு “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று பெயர் சொல்வதிலிருந்து அவர்கள் நபீ ஸல் அவர்களைக் கூடப் பிழை கண்டுள்ளார்கள் என்பதும் மண்ணறைகளைத் தரிசிப்பவர்களை “கப்று” வணங்கிகளென்று அவர்கள் சொல்வதிலிருந்து நபீ ஸல் அவர்களையும் “கப்று” வணங்கி என்று சொல்கிறார்கள் என்பதும் விளங்குகிறதல்லவா?

எனவே, இக்கட்டுரையில் மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரங்கள் எழுதுவதுடன் அந்த வழிகேடர்கள் சொல்வதுபோல் அது எந்த வகையிலும் “கப்று” வணக்கமாகாதென்பதையும், மேலும் மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஏனைய விபரங்களையும் எழுதுகிறேன்.மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஆதாரங்களையும், விளக்கங்களையும் எழுதுமுன் “சியாரதுல் குபூர்” என்ற வசனம் தருகின்ற வெளியரங்கமான, உள்ளரங்கமான கருத்தையும், தத்துவத்தையும் எழுதுகிறேன்.இதைத் தொடர்ந்து மண்ணறைகளைத் தரிசிப்பதன் மூலம் கிடைக்கின்ற பலாபலன்களையும், ஆன்மீக நற்பேறையும் அவ்லியாக்களின் விளக்கத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறேன். சியாறதுல் குபூர் இந்த வசனத்தில் இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று சியாறத் மற்றது குபூர்.சியாறத் என்ற சொல்லுக்கு சந்தித்தல், தரிசித்தல் என்று பொருள்வரும்.

குபூர் என்ற சொல்லுக்குச் சுருக்கமான பொருள் புதைகுழி என்பதாகும். இது “மையித்” பிரேதத்தைப் புதைக்கும் குழியைக் குறிக்கும். இதை மண்ணறை என்றும் சொல்வர். முஸ்லிம்கள் இதற்கு “கப்று” என்ற அறபுச் சொல்லையே பயன்படுத்துவர். “சியாறதுல் குபூர்” என்ற வசனத்துக்கு புதைகுழிகளை, பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைத் தரிசித்தல் அல்லது சந்தித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த வசனம் நபீ ஸல் அவர்களின் அருள் மொழிகளில் பல இடங்களில் வந்துள்ளது.இந்த வசனம் புதைகுழிகளைச் சந்திப்பதைக் குறிக்குமேயன்றி புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திப்பதைக் குறிக்காது. ஆயினும் இதே வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்வதற்கும் இடமுண்டு. புதை குழிகளைச் சந்திப்பதும், அங்குள்ளவர்களைச் சந்திப்பதும் சந்திக்கச் செல்பவனைப் பொறுத்த விடயமாகும்.அவன் அங்கு அடக்கப்பட்டுள்ளவரைச் சந்திக்குமளவு மனவலிமையும், ஆன்மீகப் பலமும் பெற்றவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். சந்திப்பவன் அங்கு அடக்கப்பட்டவரைச் சந்திக்குமளவு ஆன்மீக சக்தி பெறாதவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். நபீ ஸல் அவர்கள் மேற்கண்ட இருவரையும் கருத்திற் கொண்டுதான் இந்த வசனத்தைக் கொண்டு வந்திருக்கலாமென்று கருத இடமுண்டு.எதைச் சந்தித்தாலும் சந்திப்பில் பொதுவாக நன்மையுண்டு என்பது தெளிவாகிறது.இந்த வசனம் நபீ ஸல் அவர்களால்

زياَرَةُ اَهْلِ الْقُبُوْرِ

புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று சொல்லப்பட்டிருந்தால் ஆன்மீக வலிமை பெறாத சாமானிய மக்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டாமற் போய்விடுமென்பதை அறிந்ததினால்தான் உலக மக்களின் அருளான நபீ ஸல் அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.இங்கு இன்னுமொரு உண்மை மறைந்திருப்பது அறிஞர்களுக்கு மறைவானதல்ல. அதாவது புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திக்காவிட்டாலும்கூட அக் குழிகளைச் சந்திப்பது மட்டுமே ஒரு வணக்கமென்றும், அதைக் கொண்டு சந்திப்பவனுக்கு நன்மையுண்டு, ஆன்மீகப் பயனும் கிடைக்குமென்றும் விளங்குகிறது.
ஞானிகள் கூறும் ஆன்மீகப் பயன்

அஷ்ஷெய்கு அபூஉத்மான் அல்மக்ரிபீ றஹ் அவர்கள் சொல்லத் தான் கேட்டதாக அஸ்ஸெய்யித் அபுல் மவாஹிப் அஷ்ஷாதுலிய்யி றஹ் அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு வலீயின் “கப்று” சமாதியைத் தரிசித்தால் அங்கு சமாதி கொண்டுள்ள வலீ தரிசிப்பவரை நன்றாக அறிந்து கொள்கிறார். தரிசிப்பவர் அவருக்கு ஸலாம் சொன்னால் அவர் அதற்கு பதில் கூறுகிறார். தரிசிப்பவர் அங்கு அல்லாஹ்வை “திக்று” நினைத்தால் அந்த வலீயும் இவருடன் சேர்ந்து அல்லாஹ்வை நினைக்கிறார். குறிப்பாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் அந்த வலீ எழுந்திருந்து இவருடன் சேர்ந்து “திக்று” செய்கிறார். இறை ஞானிகளின் உள்ளங்கள் விளக்கமின்றி எதையும் அறிவிக்கமாட்டா.

வலீமார் தமது சமாதிகளில் உயிரோடிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடயமே. அவர்கள் மரணிப்பதானது பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்குக் குடிபோதல் போன்றதாகும். அவர்கள் உயிருடன் இருந்தபோது எவ்வாறு சங்கையுடனும், கண்ணியத்துடனும் இருந்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் இருக்கிறார்கள். அவர்கள் உலகில் வாழ்ந்த போது மற்றவர்கள் அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். ஒரு வலீ இறைநேசர் மரணித்துவிட்டால் அவருக்காக எல்லா நபீமார்களினதும், வலீமார்களினதும் “அர்வாஹ்” உயிர்கள் ஜனாஸஹ் தொழுகை தொழுகின்றன.வலீமார்களிற் சிலர் தாம் உயிரோடிருந்த காலத்தில் தமது “முரீத்” சிஷ்யர்களுக்கு உதவி உபகாரம் செய்ததை விடத்தாம் மரணித்த பின்னர் அவர்களுக்குக் கூடுதலான உதவி உபகாரம் செய்வார்கள். மரணித்தால் அவர்களின் வலிமை கூடுமேயன்றிக் குறையாது.

மனிதர்களிற் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர்களாவர். அல்லாஹ் அவர்களை எந்தவொரு வாஸிதஹ் – ஊடாக உதவியுமின்றித்தானே ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அல்லாஹ் அவர்களைத் தனது வலீ – நேசர்கள் மூலம் ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். அந்த வலீ மரணித்தவராயிருந்தாலும் சரியே. அவர் தனது மண்ணறையில் இருந்து கொண்டே தனது சிஷ்யனை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது சிஷ்யனுடன் உரையாடுகிறார். அவனும் அதைக் கேட்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் எந்த ஓர் ஊடக உதவியுமின்றி நபீ ஸல் அவர்களே நேரடியாகக் கண்காணித்து ஆன்மீகத்தில் வளர்த்து வருகிறார்கள். இதற்குக் காரணம் நபீ ஸல் அவர்கள் மீது அவர்கள் அதிகமாக ஸலவாத் சொல்வதேயாகும்.

தொடரும்...

அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? பாகம்-02 .



படைப்பு என்பது தானிருப்பதற்கு ஓர் இடத்தளவில் தேவையுள்ளதாகவே இருக்கும். இத் தன்மை அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது. அல்லாவுக்கும் இத்தன்மை உண்டென்று வைத்துக் கொண்டால் படைப்புக்குள்ள தன்மையை படைத்தவனுக்குத் தரிபடுத்தினதாகிவிடும். இது ஷிர்க் என்ற இணைவைத்தலை உண்டாக்கிவிடும் ஆதலால் குறித்த திருவசனத்தில் வந்துள்ள இஸ்தவா என்ற சொல்லுக்கு தரிபட்டான், அமர்ந்தான் என்ற அர்த்தங்கள் இருந்தாலும்கூட இவ்வாறான இடத்தில் இந்த அர்த்தம் கொடுக்காமல் அச்சொல்லுக்குள்ள மற்ற இரண்டு அர்த்தங்களில் ஒன்றைக் கொடுத்து றஹ்மான் அர்ஷில் அதிகாரமுள்ளவனானான் என்றோ, றஹ்மான் அர்ஷைப் பூரணப்படுத்தினான் என்றோ கருத்துக் கூறுதல் அவசியமாகும்.
இச் சொல்லுக்கு இவ்விரு அர்த்தங்களில் ஒன்றைக் கொடுக்கும்போது படைப்புக்குள்ள ஒரு
தன்மையை படைத்தவனுக்கு தரிபடுத்துதல் என்ற பிரச்சினைக்கு இடமுமில்லை. ஷிர்க் ஏற்படுவதற்கு வழியுமில்லை. “இஸ்தவா” என்ற சொல்லுக்கு நான் மேலே சொன்னவாறு அர்த்தங் கொள்ளாமல் அந்த இடத்துக்குப் பொறுத்தமற்ற, பிரச்சினைக்குரிய, ஷிர்க் இணையை ஏற்படுத்தக் கூடிய தரிபட்டான், அமர்ந்தான் என்ற அர்த்தங்கொண்டு அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று வஹ்ஹாபிகள் கூச்சலிடுவது அவர்களின் அறியாமையையும், றியால் மீது அவர்களுக்கு உள்ள மோகத்தையும், வேகத்தையும் தெளிவாகக் காட்டுகிறதல்லவா? பல அர்த்தமுள்ள ஒரு சொல் ஓர் இடத்தில் வந்தால் அவ்வர்த்தங்களில் அந்த இடத்துக்குப் பொருத்தமான, பிரச்சினையான விளக்கத்தை தராத அர்த்தம் அச்சொல்லுக்கு கொடுக்க வேண்டுமென்று ,நான் முன்னால் எழுதிக்காட்டியுள்ளேன். இதற்கு இஸ்தவா என்ற சொல்லைக் கொண்டு விளக்கமும் எழுதினேன், இதற்கு இன்னுமோர் உதாரணம் தருகிறேன்.
மூன்று எழுத்துக்களைக் கொண்ட “ஐன்” (عين) என்ற சொல்லுக்கு முப்பதிற்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன. கண், தங்கம், உளவாளி, சூரியன், தலைவன், நீரூற்று என்பன அவற்றில் சில. இச்சொல் ஓர் இடத்தில் வந்தால் இதற்கு ஒரே நேரத்தில் முப்பது அர்த்தங்களும் சொல்லிவிட முடியாது. இச்சொல் வந்துள்ள இடத்துக்குப் பொருத்தமான அர்த்தம் மட்டுமே கொள்ள வேண்டும். உதாரணமாக فى الإنسان عينان - “பில் இன்ஸானி ஐனானி” என்று ஒரு வசனம் வந்தால் இதற்கு மனிதனில் இரு கண்கள் உள்ளன என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமேயன்றி மனிதனில் இரண்டு தங்கம் உள்ளன, மனிதனில் இரண்டு உளவாளிகள் உள்ளனர், மனிதனில் இரண்டு சூரியன் உள்ளன, மனிதனில் இரண்டு தலைவர்கள் உள்ளனர், மனிதனில் இரண்டு நீரூற்றுகள் உள்ளன என்று அர்த்தம் கொள்ள முடியாது. இவ்வாறுதான் “இஸ்தவா” என்ற சொல்லின் கதையுமாகும்.
அதற்குள்ள மூன்று அர்த்தங்களில் அவ்விடத்துக்குப் பொருத்தமான பிரச்சினையையோ, முரண்பாட்டையோ ஏற்படுத்தாத மேற்கண்ட இரண்டு அர்த்தங்களில் ஒன்றை கொள்ள வேண்டுமேயன்றி ,பிரச்சினையையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய தரிபட்டான், அமர்ந்தான், என்ற பொருள் கொண்டு அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்று கூற முடியாது. இவ்வாறு கூறுதல் மேற்கண்ட فى الإنسان عينان என்ற உதாரணத்தில் அந்த இடத்துக்குப் பொருத்தமான கண்கள் என்ற அர்த்தங் கொள்ளாமல் பொருத்தமற்ற, பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய ஏனைய அர்த்தங்கள் கொண்டு மனிதனில் இரண்டு சூரியன்கள் உள்ளன, மனிதனில் இரண்டு தங்கம் உள்ளன என்று கூறுதல் போன்றதாகி விடும். எனவே, அல்லாஹ் அர்ஷில் உள்ளான் என்று வாதிடும் வஹ்ஹாபிகள் பிடிவாதம் விட்டு, இடத்துக்குப் பொருத்தமான, பிரச்சினையையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தாத அர்த்தம் கொண்டு அல்லாஹ் அர்ஷை முடித்தான் என்றோ அல்லது அல்லாஹ் அர்ஷில் அதிகாரமுள்ளவனானான் என்றோ நம்பவும் சொல்லவும் வேண்டும். அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற வாதத்துக்கு ஆதாரமாக வஹ்ஹாபிகள் கூறிவரும்
الرحمن على العرش استوى -
என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுள்ள இமாம்களிற் பலர் தமது நூல்களில் எழுதியுள்ள விளக்கத்தை இங்கு எழுதுகிறேன். இந்த விளக்கம் அல்லாஹ் அர்ஷில் உள்ளான் என்று கூறும் வஹ்ஹாபிகளுக்கு சாட்டையடியாக அமைந்திருப்பது சிந்திப்பவர்களுக்குப் புரியும்.
ஆதாரங்கள்
الرحمن على العرش استوى -
என்ற திருவசனத்திற்கு விரிவுரை எழுதிய “தப்ஸீர் ஜலாலைன்” ஆசிரியர் அர்ஷ் என்றால் அரசனின் கட்டில் அல்லது ஆட்சிபீடம் என்றும், இஸ்தவா என்ற சொல்லுக்கு “அவனின் தகுதிக்கேற்றவாறு” என்றும் விரிவுரை எழுதியுள்ளார்களே தவிர, விளக்கமாக வேறொன்றும் எழுதவில்லை. ஆயினும் அவர்கள் இஸ்தவா என்ற சொல்லுக்கு
إستواء يليق به
“அவனின் தகுதிக்கு ஏற்றவாறு” என்று குறிப்பிட்டதிலிருந்து அல்லாஹ் அர்ஷ் என்ற இடத்தில் ஒரு மனிதன் கட்டிலில் அல்லது கதிரையில் அமர்ந்திருப்பதுபோல் இருக்க வில்லை என்ற கருத்து தெளிவான சிந்தனையுள்ளவர்களுக்கு விளங்கும். உண்மையிலேயே, அர்ஷ் என்ற இடத்தில்தான் அல்லாஹ் இருக்கின்றான் என்றிருந்தால், அவனின் தகுதிக்கு ஏற்றவாறு என்று அவர்கள் விளக்கம் எழுதியிருக்கமாட்டார்கள். அவ்வாறு எழுதத் தேவையுமில்லை. இதிலிருந்து அல்லாஹ் அர்ஷ் என்ற இடத்தில் இருக்கின்றான் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.
பார்க்க - தப்ஸீருல் ஜலாலைன் – பக்கம் -46 இந்த தப்ஸீர் நூல் தொன்று தொட்டு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலுள்ள அறபுக் கல்லூரிகளின் பாடத்திட்டதிலுள்ள ஒரு நூலாகும். இந்த நூலை இரு இமாம்களால் எழுதப்பட்டுள்ளது. ஒருவர் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ ஆவார். மற்றவர் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதீ ஆவார். மேற் கண்ட விரிவுரை நூலை ஜலாலுத்தீன் அல்மஹல்லீ அவர்களே எழுதத் தொடங்கினார்கள்.ஆனால் அதை நிறைவு செய்வதற்கு முன்னர் அவர்கள் மரணித்துவிட்டபடியால் அதை ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதீ என்பவர்கள் நிறைவு செய்தார்கள். இதனால்தான் இந்நூல் தப்ஸீர் ஜலாலைன் இரண்டு ஜலால்களுக்குரியதென்றழைக்கப்படுகின்றது. ஜலாலுத்தீன் அல் மஹல்லீ அவர்கள் கெய்ரோவில் 1388ல் பிறந்து 1459ல் உலகைப் பிரிந்தார்கள்.
“அல்மஹல்லதுல் குப்றா” என்ற இடத்தில் பிறந்தபடியால் “மஹல்லீ” என்றழைக்கப்பட்டார்கள். பட்டு விற்பனை செய்வதில் அதிக காலத்தைக் கழித்தார்கள். பின்னர் அறிவுத் துறையில் இறங்கினார்கள். ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதி அவர்கள் கெய்ரோவில் 1445 ல் பிறந்து 1505ல் உலகைப் பிரிந்தார்கள். இவர்கள் ஓர் அநாதையாகவே வளர்ந்தார்கள். எட்டு வயதுக்கு முன்னர் திரு குர்ஆனை மனனம் செய்து கொண்டார்கள். தப்ஸீர், ஹதீது, பிக்ஹ், நஹ்வு, மஆனீ, பயான், பதீஉ, லுகத் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் பெற்றார்கள். சிரியா, சஊதி அரேபியா, எமன், இந்தியா, மொரோக்கோ ஆகிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்துள்ளார்கள். அவற்றில் தபகாத்துல்ஹுப்பாள், தபகாதுல் முபஸ்ஸிரீன் என்பன மிகப் பிரசித்தமானவையாகும்.
الرحمن على العرش استوى -
என்ற வசனத்திற்கு விரிவுரை எழுதிய தப்ஸீர் ஸாவீ நூலாசிரியர் இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் அஸ்ஸாவீ (றஹ்) அவர்கள் தங்களின் தப்ஸீர் ஸாவீ மூன்றாம் பாகத்தில் தாஹா அத்தியாயத்தின் விரிவுரையில் “அர்ஷ்” என்றால் அரசனின் கட்டில் என்று குறிப்பிட்டு “இஸ்தவா” என்ற சொல்லுக்கு விளக்கம் எழுதுகையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“இஸ்தவா” என்ற சொல்லுக்கு (அவனின் தகுத்திக்கேற்றவாறு) என்று விளக்கம் கொள்வது “ஸலப்” முன்னோர்களின் போக்காகும். அவர்கள் “முதஷாபிஹ்” பல அர்த்தங்களுகுச் சாத்தியமான திருகுர்ஆன் வசனங்களின் அறிவை அல்லாஹ் அளவில் ஒப்படைத்து விடுவார்கள். இதனால்தான் ஸாவீ அவர்கள் அதற்கு அவ்வாறு பொருள் எழுதியுள்ளார்கள். அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்திலுள்ளான் என்பது தொடர்பாக இமாம் மாலிக் (றஹ்) அவர்களிடம் ஒருவர் வினவியபோது
الإستواء معلوم والكيف مجهول والإيمان به واجب والسؤال عنه بدعة أخرجوا عني هذالمبتدع
“அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தில் இருப்பது அறியப்பட்ட விடயமாகும், எவ்வாறிருக்கின்றான் என்பது அறியப்படாத ஒன்றாகும். அதை நம்புவது கடமை. அது பற்றிக் கேள்வி எழுப்புவது “பித்அத்” இவ்வாறு கேள்வி கேட்ட அந்த “பித்அத்” காரனை என்னிடமிருந்து வெளியேற்றிவிடுங்கள்” என்று கூறினார்கள். ஆனால் "ஸலப்” முன்னோர்கள் அதாவது ஹிஜ்ரீ ஐநூறுக்கு முன்னுள்ளவர்கள் மேற்கண்ட வசனத்துக்கு அல்லாஹ் தகுதிக் கேற்றவாறு சரியான வலிந்துரை கொண்டு விளக்கம சொல்லியுள்ளார்கள். அதாவது குறித்த வசனத்தில வந்துள்ள இஸ்தவா என்ற சொல்லுக்கு إستولى இஸ்தவ்லா அதிகாரமுள்ளவனானான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயன்றி ஒரு மனிதன் கதிரையிலிருப்பது போல் அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏனெனில் இஸ்தவா என்ற சொல்லுக்கு மொழியில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
ஒன்று “அமர்தல்” மற்றது “அதிகாரம்” செய்தல்
إستوى السلطان على الكر
என்ற வசனத்தில் வந்துள்ள இஸ்தவா என்ற சொல்லுக்கு முந்தின அர்த்தப்படி அமர்ந்தான் என்று பொருள் கொண்டு அரசன் கதிரையில் அமர்ந்தான் என்றும்
.إستوى بشر على العراق -
என்ற வசனத்தில் வந்துள்ள -إستوى இஸ்தவா என்ற சொல்லுக்கு இரண்டாவது அர்த்தப்படி பிஷ்று என்பவன் இறாக் நாட்டில் அதிகாரம் செய்தான் என்றும், கருத்துக் கொள்ளுதல் வேண்டும். எனவே, மேற்கண்ட திருவசனத்திற்கு அல்லாஹ் அர்ஷ் என்ற இடத்தில் அதிகாரமுள்ளவனானான் என்று கருத்துக் கொள்ளுதல் குறிப்பாகிவிட்டது.
பார்க்க – தப்ஸீர் ஸாவீ – பாகம்-03 ஸாவீ ஆசிரியரின் கருத்து ஸாவீ ஆசிரியர் என்ன சொல்கின்றார்கள் என்றால் “இஸ்தவா” என்ற சொல்லுக்கு அறபு மொழியில் இரண்டு அர்த்தங்கள் இருப்பதால் மேற்கண்ட
الرحمن على العرش استوى –
என்ற திருவசனத்தில் வந்துள்ள இஸ்தவா என்ற சொல்லுக்கு அமர்ந்தான் என்று பொருள் கொள்வது பல சிக்கல்களை ஏற்படுத்துவதால் அதற்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாத அதிகாரம் செய்தான் என்று பொருள் கொள்வதே நல்லது. ஸாவீ தோற்றம் 1775 – மறைவு 1241
الرحمن على العرش استوى –
என்ற சொல்லுக்கு விரிவுரை எழுதிய தப்ஸீறு றூஹில் பயான் ஆசிரிரியர் இமாம் இஸ்மாயீல் ஹக்கீ (றஹ்) அவர்கள் தங்களின் தப்ஸீர் ஐந்தாம் வால்யூம் 16ம் பாகம் 363ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “அர்ஷ்” என்பது அரசனின் கட்டில் அல்லது ஆட்சிபீடம் “இஸ்தவா” என்றால் அமர்ந்தான். மேற்கண்ட திருவசனத்திற்கு – அதில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு “இஸ்தவ்லா” அதிகாரம் செய்தான் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். ஒருவன் ஆட்சியதிகாரத்திலுள்ளான் என்பதைக் குறிப்பதற்காக إستوى فلان على سرير الملك ஆதாரங்கள் தொடரும்..................

அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? பாகம்-01



இறைவன் எங்கே இருக்கின்றான்? என்ற விடயத்தில் முஸ்லிம்களில் நான்கு பிரிவினர் உள்ளனர்.

ஒவ்வொறு பிரிவிலும் “உலமாஉ” மார்க்க அறிஞர்களும் உள்ளனர். மார்க்க அறிவில்லாத “அவாமுன்னாஸ்” சாமானியர்களும் உள்ளனர்.

1) ஒரு பிரிவினர் அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்திலிருக்கின்றான் என்று வலியுறுத்திக் கூறுகின்றனர்.

2) இன்னொரு பிரிவினர் அவன் தூணிலுமிருப்பான், துரும்பிலிமிருப்பான், எல்லாவற்றிலுமிருப்பான் என்று கூறுகின்றனர்.

3) வேறொரு பிரிவினர் அவன் தூணாயுமிருப்பான், துரும்பாயுமிருப்பான், எல்லாமாயுமிருப்பான் என்று கூறுகின்றனர்.

4) மற்றொரு பிரிவினர் அல்லாஹ் எங்கிருந்தாலென்ன?

அந்த விபரம் எமக்குத் தேவையில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கூறுகின்றனர். இந்த நான்கு பிரிவினரில் முதற் பிரிவினரை வஹ்ஹாபிகள், வழிகேடர்கள் என்று நாங்கள் சொல்வோம்.

இரண்டாம் பிரிவினரை “ஹுலூல் இத்திஹாத்” என்ற வழி கெட்ட கொள்கையுடையோர் என்று நாங்கள் சொல்வோம்.

மூன்றாவது பிரிவினரை “முவஹ்ஹிதூன் தவ்ஹீத் வாதிகள்” “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுடையோர், அல்லாஹ்வைச் சரியாக அறிந்து “ஈமான்” விசுவாசம் கொண்டோர் என்று நாங்கள் சொல்வோம். நான்காம் பிரிவினரை தந்தையின் விபரத்தை அறிந்து கொள்ள விரும்பாத துர்பாக்கியவான்கள் என்றும், தமது கருவை அறிந்து கொள்ள விரும்பாத அநீதியாளர்கள் என்றும் நாங்கள் சொல்வோம். இவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தமது வாதத்துக்கு திருகுர்ஆன் வசனங்களையும், நபீமொழிகளையும், இமாம்கள் கூறியுள்ள கருத்துக்களையுமே ஆதாரங்களாகக் கூறுகிறார்கள். இதனால் மார்க்க ஞானமில்லாத பொதுமக்கள் யாரின் கருத்தை ஏற்பது யாரின் கருத்தை விடுவதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர். அல்லாஹ் எல்லாமாயுள்ளான் என்ற கருத்தை நம்பினவர்கள் ஒரு கூட்டமாயும், அவன் எதிலுமிருக்கிறான் தூணிலுமிருக்கின்றான், துரும்பிலுமிருக்கின்றான் என்ற கருத்தை நம்பினவர்கள் இன்னொரு கூட்டமாயும், அவன் “அர்ஷ்” என்ற இடத்தில் இருக்கின்றான் என்ற கருத்தை நம்பினவர்கள் வேறோரு கூட்டமாயும், அவன் எங்கிருந்தால்தான் எமக்கென்ன என்று சொல்பவர்கள் பிறிதொரு கூட்டமாயும் பிரிந்து முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விடயத்தில் பல கூட்டங்களாயும், பல கொள்கையுடையோர்களாயும் காணப்படுகின்றனர்.

இதை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கிடையில் வாக்கு வாதங்களும், அடி தடிகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. எனவே, இறைவன் எங்கே இருக்கின்றான் என்பது தொடர்பாக திருகுர்ஆனையும், நபீ மொழிகளையும் ஆதாரங்களாகக் கொண்டு இமாம்களும் ஞானிகளும் எழுதிய நூல்களிலிருந்து நான் பார்த்தறிந்த விடயங்களையும், இலங்கை, இந்தியா, ஈராக், ஈரான், சிரியா, சஊதி அரேபியா போன்ற நாடுகளில் பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் நான் கேட்டறிந்த விளக்கங்களையும் இங்கு எழுதுகின்றேன். இந்நூலைப் பார்வையிடும் எந்தக் கருத்துடைய “உலமாஉ” மார்க்க அறிஞர்களாயினும், பொது மக்களாயினும் இதில் பிழையிருக்கக் கண்டால் என்னை நேரில் கண்டு அல்லது கடிதம் மூலம் ஆதாரத்துடன் பிழையைச் சுட்டிக்காட்டுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். முதலில் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற வஹ்ஹாபிகளின் கருத்துபற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்பதை நிறுவுவதற்காக வஹ்ஹாபிகள் கூறிவரும் ஒரேயோர் ஆதாரம்

الرحمن على العرش استوى “அர் றஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா” என்ற திருகுர்ஆன் வசனமேயாகும். இது தவிர திருக் குர்ஆன் ஆதாரம் அவர்களிடம் வேறு ஒன்றுமே இல்லை.

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் இது வஹ்ஹாபிகளின் கூற்று .

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று வஹ்ஹாபிகள் வாதிடுகின்றனர். அவர்கள் தமது வாதத்துக்கு ஆதாரமாக திருகுர்ஆன் வசனங்களையும், நபீ மொழிகளையும் இமாம்கள் கூறியுள்ள கருத்துக்களையும் கூறுகின்றார்கள். அவர்கள் தமது வாதத்தை நிறுவக்கூறும் ஆதாரங்கள் சரியானவைதான். அவற்றை நாம் மறுக்கவில்லை. ஆயினுமவர்கள் அவ்வாதாரங்களைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லைஎன்றே நாம் சொல்கின்றோம்.

வஹ்ஹாபிகள் துறை தெரியாமல் தோணி தொடுக்கிறார்கள்.

ஒரு சொல் பல அர்த்தமுள்ளதாயிருந்தால் அவ்வர்த்தங்களில் அச்சொல் வந்துள்ள இடத்துக்குப் பொருத்தமான அர்த்தம் மட்டுமே அதற்குக் கொடுக்க வேண்டும். அத்தோடு கொடுக்கப்படும் அர்த்தம் திரு குர்ஆனுக்கும் நபீ மொழிகளுக்கும், இமாம்களின் ஏகோபித்த முடிவுகளுக்கும் முரணில்லாமலும் இருத்தல் வேண்டும். பல அர்த்தமுள்ள ஒரு சொல்லுக்கு அவற்றில் ஒரு அர்த்தம் மட்டுமே கொடுத்து, இது மட்டுமே இதன் அர்த்தமென்று பிடிவாதம் செய்வதும், ஏனைய அர்த்தங்களை மறுப்பதும் பிழையானதாகும். இவ்வடிப்படையில் “அர்றஹ்மான் அலல் அர்ஷிஸ்தவா” என்ற திருகுர்ஆன் வசனத்தை ஆராய்ந்து பார்ப்போம். الرحمن على العرش استوى இந்த வசனத்தில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு மூன்று ஆர்த்தங்கள் உள்ளன. ஒன்று - استقرّ- “இஸ்தகர்ற” இதற்கு தரிபட்டான், அமர்ந்தான் என்ற அர்த்தம் உண்டு, இந்த அர்த்தங் கொண்டு றஹ்மான் அர்ஷில் தரிபட்டான், றஹ்மான் அர்ஷில் அமர்ந்தான் என்று கருத்துக் கொள்ள முடியும்.

இரண்டு – இஸ்தவா என்று சொல்லுக்கு, استو لى – இஸ்தவ்லா அதிகாரமுள்ளவனானான் என்று அர்த்தம் உண்டு. இந்த அர்த்தம் கொண்டு றஹ்மான் அர்ஷில் அதிகாரமுள்ளவனானான் என்று கருத்துக் கொள்ள முடியும். மூன்று – இஸ்தவா என்ற சொல்லுக்கு استتمّ – இஸ்ததம்ம பூரணப்படுத்தினான், முடித்தான் என்று அர்த்தமுண்டு.

இந்த அர்த்தம் கொண்டு றஹ்மான் அர்ஷின் பேரில் (அர்ஷை) பூரணப்படுத்தினான்- முடித்தான் என்று கருத்துக் கொள்ள முடியும். “இஸ்தவா” என்ற சொல்லுக்கு மேற்கண்ட மூன்று விதமாகவும் அர்த்தம் கூறலாம். குறித்த மூன்று அர்த்தங்களில் எந்த அர்த்தம் கொண்டாலும் அது அச்சொல்லுக்கான நேரடி அர்த்தமேயன்றி அச் சொல்லுக்கான “தஃவீல்” வலிந்துரையாகாது. “இஸ்தவா” என்ற சொல்லுக்கு மேற்கண்ட மூன்று அர்த்தங்களும் கொள்ளச் சாத்தியமாயிருக்கும்போது வஹ்ஹாபிகள் தரிபட்டான், அமர்ந்தான் என்ற அர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு றஹ்மான் அர்ஷில் இருக்கிறான் என்று பிடிவாதம் செய்வது ஒன்றில் அவர்களின் அறியாமை எனலாம். அல்லது சஊதி ரியாலின் மோகம் எனலாம். அல்லாஹு அஃலம். ஒரு சொல்லுக்குரிய பல அர்த்தங்களில் ஓர் அர்த்தம் அச் சொல் வந்துள்ள இடத்தைப் பொறுத்துப் பிரச்சினையையும் முரண்பாட்டையும் தருமாயின் அதற்கு அந்த அர்த்தம் கொடுக்காமல் அதற்குள்ள ஏனைய அர்த்தங்களில் அவ்விடத்திற்கு பொருத்தமான அர்த்தம் கொடுத்தல் அவசியமாகும். உதாரணமாக “இஸ்தவா” என்ற சொல்லையே எடுத்துக் கொள்வோம்.

இச்சொல்லுக்கு மேற்கண்ட மூன்று அர்த்தங்களில் தரிபட்டான் – அமர்ந்தான் என்ற அர்த்தம் கொடுத்து றஹ்மான் அர்ஷில் தரிபட்டான் – அமர்ந்தான் என்று சொல்லுதல் பிழையாகும். ஏனெனில் இந்த அர்த்தம் கொடுத்து றஹ்மான் அர்ஷில் இருக்கிறான் என்று சொன்னால் அல்லாஹ்வுக்கு ஓர் இடத்தை தரிபடுத்த வேண்டிவரும். அல்லாஹ் இடத்தை விட்டும் துய்யவனாவான். இடமென்பது படைப்புக்களுக்குள்ள தன்மையாகும். படைப்புக்களின் தன்மையை விட்டும் அல்லாஹ் துய்யவன் என்பது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடையோரின் தீர்க்கமான முடிவாகும். தொடரும்...

தொடர்ந்து வர இருப்பவை... ----------------------------------------

  • அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?
  • அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் இது வஹ்ஹாபிகளின் கூற்று
  • ஆதாரங்கள்
  • ஸாவீ ஆசிரியரின் கருத்து
  • கவிஞனின் கவி ஆதாரமாகுமா?
  • நூலாசிரியர் பற்றிய சிறு குறிப்பு
  • பிரச்சினைக்குத் தீர்வு
  • இஸ்தவா சொல் பற்றிய சிறு ஆய்வு
  • ஹுலூல் இத்திஹாத்
  • இரண்டும் ஒன்றே
  • தவ்ஹீத்
  • ஐயம் எதற்கு?
  • முஹ்கமாத்-முதஷாபிஹாத், இமாம்கள்
  • ஸலப்-கலப்
  • முஹக்கிகீன்களும், முதகல்லிமீன்களும்
  • அல் இஹாதத் – சூழ்தல்
  • யூனுஸ் நபீ, மூஸா நபீ
  • நாடகம்
  • வஹ்ஹாபிகளின் பாட்டுக்குத் தாளம் போடும் உலமாஉகள்
  • இமாம் சமக்ஷரீ
  • முடிவுரை ...